Monday, July 25, 2011

காதல் கணினி - III

முன்கதைச் சுருக்கம்:
மணா ஒரு மத்தியத் தர வாழ்க்கை நடத்தும் குடும்பத்திலிருந்து மென்பொருள் தயாரிக்கும் பொறியாளனாக திருச்சியிலிருந்து வந்து பட்டிணத்தில் மேன்ஷன் வாழ்க்கை நடத்துபவன். தன்னுடன் வேலைப் பார்க்கும் மிருதுளா என்ற கும்பகோணத்துப் பெண்ணை லவ்வி சினிமாவிற்கு அழைத்து வருகிறான். அவனுடன் அஜய் என்னும் அவனுடைய அலுவலக நண்பனும் சினிமா பார்க்க வருகிறான். பாதி சினிமாவில் யாரோடோ வண்டியேறிப் போன மிருதுவைக் காணவில்லை. ஒரு வாரம் கழித்து அவள் இறந்துவிட்டதாகக் கூறி போலீசார் மணாவை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இனி.......

 **********மூன்றாவது மாட்யூல் ***********

எதிர் முனையில் கேட்ட விஷயத்தால் ஒரு கணம் துணுக்குற்றார் மோகன். தன்னுடைய இருபது வருட காக்கிச் சட்டை வாழ்வுக்கு களங்கம் வந்து விடுமோ என்று அச்சப்பட்டார். கொடுவா மீசையை ஒரு முறை அனிச்சையாக புசுபுசு ரோமக் கை தடவிக் கொடுத்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் யாருக்கோ அலைபேசினார்.

"உம்... யாரு கன்ஃபர்ம் பண்ணினா?"

"......."

"அடச்சே! பேரென்ட்ஸை கூப்பிடுங்கய்யா”

"......"

"எந்த இடம்.."

"....."

"யோவ்! இது தாம்பரம் தாண்டி கிடைச்ச பாடிய்யா. சொதப்பாதீங்க.."

அலைபேசி உரையாடல் நடக்க நடக்க மணா வியர்த்திருந்தான். அவனுக்கு மீண்ட உயிர் சொற்ப ஆயுளில் தொலைந்து போனது. தொப்பியைக் கழட்டி மடியில் வைத்திருந்த பின் சீட் கான்ஸ்டபிள் விறைப்பாகி அவசராவசரமாகத் தலையில் கவிழ்த்துக் கொண்டார்.

"அரைகுறையா ந்யூஸ் குடுக்கறானுங்க.. டிபார்ட்மெண்டுக்குள்ள ஒரே ந்யூசென்ஸாப் போச்சு. எல்லாப் பயலும் யாராவது மந்திரி, மந்திரி பொண்டாட்டின்னு கையக் காலப் பிடிச்சு காசு கொடுத்து வேலைக்கு வந்துடறானுங்க... வந்து ஒன்னும் தெரியாம நம்ம தாலிய அறுக்குறானுங்க...ச்சே..." என்று அலுத்துக் கொண்டார்.

"வண்டிய நேரா பாடியைக் கண்டுபிடிச்ச இடத்துக்கு விடுப்பா" என்று டிரைவருக்கு உத்தரவிட்டு சிக்னல் மீறி சாலை விதிகளை முறித்து சீறிப் பாயும் வண்டிகளையும், பாதி ரோட்டில் வண்டி நிறுத்தி பெட்டிக் கடையில் சிகரெட் பிடிக்கும் அழிச்சாட்டிய ஜென்மங்களையும் பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தார்.

வழவழ வாழைத்தண்டுக் கால் தெரியா சாக்ஸ் அணிந்த குட்டைப் பாவாடைப் பணிப்பெண்களை சுமந்த கிங் ஃபிஷர் ஒன்று மீனம்பாக்கத்தில் இருந்து மேலே ஜிவ்வென்று ஏறியது. அடுத்த மாதம் மணாவுக்கு ஆன்-சைட் அசைன்மென்ட் ஒன்று இருக்கிறது. கனத்த இதயத்தோடு அண்ணாந்து பார்த்து புள்ளியாக வானத்தில் மறைந்து போன விமானத்தின் வாலைத் தேடிக்கொண்டிருந்தான். தாம்பரம் தாண்டும் முன் ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீயும் ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கட்டும் சாப்பிட்டார்கள். மணாவும் பல் விலக்காமல், வாய் கொப்பளித்து சத்தம் போட்ட வயிற்றை அடக்கினான். அவன் பர்ஸ் பிரித்து பணம் கொடுப்பதை தடுத்து மோகன் சில்லரைக் கொடுத்தார். ஜெயிலில் களிக்கு முன்னால் இப்பொது டீயில் ஆரம்பிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது மணாவிர்க்கு. காட்டாங்குளத்தூர் பெட்ரோல் பங்க் தாண்டி ஜீப் போன வேகத்தில் தலைக்கு குல்லா இல்லாமல் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் மோகன் தலையும் மணாவின் தலையும் பிய்ந்து போகும் படி சிகை சிறகடித்துப் பறந்தது.

மெயின் ரோடிலிருந்து இடது பக்கமாக ஒரு செம்மண் ரோடில் புழுதியோடு இறங்கியது போலீஸ் ஜீப். ஒரு இருநூறு மீட்டரில் கருவேல முட்புதர்கள் காடாக மண்டியிருந்த இடத்தில் கொசகொசவென்று கூட்டம் மண்டியிருந்தது. விஷயம் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்திலிருந்து பிணம் பார்க்க ஆர்வமாக கூடியிருந்தார்கள். ஒரு பனியன் ஆள், ரெண்டு மேல் சட்டை போடாத கைலி ஆட்கள், வயல் வேலை செய்யும் பெண்கள், நாலைந்து கிழவி, ரெண்டு ஆட்டுக்குட்டி, ஒரு தெரு நாய் என்று அனைத்து புறநகர் ஜீவராசிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லோக்கல் போலீசார் இருவர் காவலுக்கு நின்று “நவுரு.. நவுரு... போ... அந்தாண்டை... நவுரு...” என்று லத்தியாட்டி விலக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஜீப்பிலிருந்து மணாவை இறக்கி அழைத்துச் சென்றார்கள். வழியில் நின்ற ஒரு காது வளர்ந்த கிழவி மணாவைக் கொலைகாரன் போல ஊடுறுவிப் பார்த்தது. அவனது வெறித்த பார்வை அந்தப் புதரையே மையம் கொண்டிருந்தது. அகன்று பரந்த அந்தத் தரிசு நிலத்தில் வாயுபகவானைத் தடுக்கும் கட்டிடங்கள் இல்லாததால் ஆளைத் தூக்கும் காற்று வேகமாக அடித்தது. மேல் சட்டை படபடவென்று அடித்துக் கொண்டு அவனிடமிருந்து விடுதலைக்கு போராடியது. மோகன் அவரின் அரசாங்க அத்தாட்சியான சிங்கம் பதித்த தன் காக்கித் தொப்பியை பறக்காமல் இருக்கப் பிடித்துக் கொண்டார்.

இவ்வளவு காற்று அடித்தும் மணாவிற்கு பயத்தில் உடம்பெல்லாம் சொட்டச் சொட்ட வேர்க்க ஆரம்பித்தது. கர்சீஃப் எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். அவனது உடம்பில் அட்ரிலின் அதிகமாக சுரக்க ஆரம்பித்ததன் அடையாளமாக கால்கள் சற்றே பின்னின. கைகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. குற்றம் புரிந்தவனுக்கு உள்ளுக்குள் ஏற்படும் இராசயன மாறுதல்கள் அவனுக்குள்ளும் தோன்றியது.


கருவேலப் புதர் நெருங்க நெருங்க ஒரு துர்வாடை குப்பென்று அடித்தது. மோகன் கர்ச்சீப் எடுத்து மூக்கை மறைத்துக் கொண்டார். மணாவிற்கு வயிற்றைப் புரட்டியது.

“பாடி டீகம்போஸ் ஆயிடுச்சா...”

“ஆமாம்.. சார். நிச்சயம் அஞ்சு நாளாவது ஆகியிருக்கும் போலருக்கு...” கொஞ்சம் விவரம் தெரிந்த அனுபவம் வாய்ந்த போலீஸ்காரர் ஒருவர் அட்டென்ஷனில் பதிலலித்தார்.

“யாரு முதல்ல பார்த்தா”

“ஒரு ஆடு மேய்க்கற பையன் சார்”

“எத்தன மணிக்கு”

“காலையில ஆறு மணிக்கு சார். ஆட்டுக்குட்டியோட கழுத்துல கட்டின கயிரு கருவேலப் புதர்குள்ள மாட்டிகிச்சு போலருக்கு. “ம்மே ம்மே”னு கத்தியிருகு. இவன் போய் இழுத்துப் பார்த்திருக்கான். வரலை. அப்படியே பக்கத்துல போய் எட்டிப் பார்த்தா, டெட் பாடியோட ஜீன்ஸ் பேண்ட் பெல்ட்டுல கயிரு சிக்கியிருந்துருக்கு, ஆடுத் திமிறித்திமிறி இழுக்க இழுக்க பாடி அசஞ்சிருக்கு. பய பயந்து “ஓ”ன்னு அலறியடிச்சுகிட்டு ஓடிவந்துட்டான்.”

“அந்தப் பய பாடியைத் தொட்டானா?”

“இல்ல பயந்து போய் வெடவெடத்து நின்னுருக்கான்.. பின்னாடியே மீதிக் கொஞ்சம் ஆடு மேய்ச்சுகிட்டு வந்த அவங்க அப்பாரு இவனோட கூப்பாட்டைக் கேட்டு ஓடி வந்து பார்த்திருக்காரு. குலை நடுங்க பெல்ட்லேர்ந்து கயிரை மட்டும் மெதுவா எடுத்து விட்டு ஆட்டை ஓட்டிக் கிட்டுப் போயிருக்காங்க....”

“ நீங்க பாடியைப் பார்த்தீங்களா சார்”

“ஏன்... இன்னும் இல்லை...” என்று புருவம் சுருக்கினார் மோகன்.

அவ்வளவு நேரம் புதர்க்கு அருகில் நின்று விசாரித்துக் கொண்டிருந்த மோகன் பக்கத்தில் சென்றார். டெட் பாடியைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். அவருக்கு பார்க்கவே அருவருப்பாக இருந்தது. கர்சீப்பால் தன் முகத்தை மூடியிருந்தாலும் அவர் சுளித்த முகம் கண்களில் எதிரொலித்தது.

“அந்தாளைக் கூப்பிடுங்க...” என்று மணா இருக்கும் திசையில் கைக் காட்டினார்.

கான்ஸ்டபிள் சென்று மணாவை பக்கத்தில் அழைத்து வந்தார். மணா யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் விடுவிடுவென்று பக்கத்தில் சென்றான். பார்த்துவிட்டு சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். வெளியே சொல்ல முடியாத ஒரு வித உணர்வில் விருட்டென்று திரும்பியவனின் சட்டையை கருவேல முள் குத்தி இழுத்து டர்ரென்று கிழித்தது.

அதைப் பற்றி கவலையே படாமல் மோகன் கொண்ட கொள்கையில் உறுதியாய் “இவ தான அந்தப் பொண்ணு” என்று  மணாவைப் பார்த்து தலையாட்டினார்.

எதுவும் சொல்வதற்கு மணாவிற்கு வாய் எழும்பவில்லை. கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தது. ஒரு மாதிரியாக மயக்கம் வரும் போல இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. பேச்சு எழும்பவில்லை.

“சொல்லு....” கொஞ்சம் அதட்டி மிரட்டலாய்க் கேட்டார் மோகன். பக்கத்தில் நின்றிருந்த ஒரு வெள்ளை வேஷ்டி சட்டைப் பொதுஜனத்திர்க்கு தூக்கி வாரிப் போட்டது.

“தெரியலை சார்! பனியனும், பேண்டும் அன்னிக்கி அவ போட்டுருந்தது தான்...”

“இன்னொரு தடவை மூஞ்சியப் பார்த்துட்டு சொல்லு..”

நெஞ்சுரத்தோடு மீண்டும் புதர் பக்கத்தில் சென்றான் மணா. முகம் மொத்தமும் பெரிய பெரிய கொப்பளங்களாக தண்ணீர்க் கோர்த்துக் கொண்டு உருத்தெரியாமல் இருந்தது. தீப் புண்ணில் ஜலம் கோர்த்தது போல முகம் முழுக்க சிறிதும் பெரிதுமாய் உருண்டைகள். ஈக்கள் மொய்த்தன. ஆசிட்டால் முகத்தைச் சுட்டுக் காய்ச்சியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

“என்னய்யா... அது மிருதுளாதானே” பின்னாலிருந்து குரல் கொடுத்தார் மோகன்.

“அது மா...தி..ரி..த்..தா...ன் சார் இருக்கு” என்று திக்கினான் மணா.

“ஃபாரென்ஸிக் டீமுக்கு சொல்லிட்டீங்களா?” வாயிலிருந்து கர்சீப்பை எடுக்காமல் பக்கத்தில் இருந்த ஒரு காக்கியிடம் கேட்டார் மோகன்.

“ஆன் தி வே சார்”

“அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ்”

”சொல்லியச்சு. இன்னேரம் வந்துருக்கனும். பார்க்கச் சொல்றேன் சார்”

மோகன் மிகவும் கலவரமானார். அருகில் நிற்கும் மணாவைப் பார்த்தால் அவ்வளவு கொடூரமானவனாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தக்  கேசில் தெரிந்த சாட்சியம் அவன் ஒருவன் தான். முகம் கன்னாபின்னாவென்று உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் யாராவது மன நோயால் பீடிக்கப்பட்டவனது அகோரக் கொலையாக இருக்குமோ? என்றும் இது தொடருமோ என்றும் சந்தேகித்தார்.

பாரன்சிக் டிபார்ட்மெண்ட் வண்டி வந்து நின்றது. ஒரு நீலக் கலர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இரண்டு ஆபீசர்கள் நடந்து வந்தார்கள். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரைக்க இரைக்க வெள்ளை பனியன் ஆளை இழுத்துக் கொண்டு வரும் கருப்பு மோப்ப நாய் வந்து இறங்கியது. பணிரெண்டு மணிக்கு சுள்ளென்று சுட்டெரித்தான் ஆதவன்.

“ஏம்ப்பா! ஆம்புலென்ஸுக்கு ஃபோன் பண்ணியாச்சா” திரும்பவும் யாரையோ ஏவினார் மோகன்.

“வரேம்மா.. கட்டாயம் சீக்கிரம் வரேன்.. “ வீட்டிலிருந்து எதற்கோ அவரை அழைத்தவர்களுக்கு சமாதானமாகப் பொய் ப்ராமிஸ் செய்தார். இன்னும் கொஞ்சம் தள்ளி ஓரமாக இருக்கும் ஒரு மாமரத்தடியில் போய் ஒதுங்கினார். சிகரெட் ஒன்றைத் தட்டி பற்ற வைத்தார். மூளை கசங்கியது. உள்ளுக்குள்ளே ந்யுரான்களின் போராட்டம் நடந்தது. ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். கடை எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

மோப்ப நாய் இரண்டு முறை செத்த மிருதுளாவைச் சுற்றி ப்ரதக்‌ஷிணம் வந்தது. பின்பு நேரே ஒரே பாய்ச்சலாக மணாவின் மீது இரண்டு கால்களைத் தூக்கிக் கொண்டு ஏறியது. பதறிப் போய் விலகினான் மணா. அப்புறம் காவலர்களை இழுத்துக் கொண்டு ஹைவே வரை குனிந்துகொண்டே தரையை மோந்து ஓடியது. தார் சாலையோரத்தில் சிறிது நேரம் தரையை மோந்து பார்த்துவிட்டு வலது புறம் திரும்பி ஒன்வேயில் பெட்ரோல் பங்க் வரை சென்றது.

 நாய் இங்குமங்கும் பலமுறை ஓடியது.  நண்பகல் தாண்டியும் அலைந்தது. ஃபாரன்ஸிக் ஆட்கள் கிளவுஸ் மாட்டி பவுடர் தூவி சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடிப்பதற்கும் ஆம்புலன்ஸ் வந்து நின்று ஸ்ட்ரெக்சர் இறக்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

”அட்டாப்ஸி முடிஞ்சதும் என்னை மொபைல்ல கூப்பிடுங்க” என்று சொல்லியனுப்பினார். வெறும் கொலையாக இல்லாமல் முகத்தை சுத்தமாக சிதைத்திருந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் எழுப்பிய ஓலமும் அவரை மிகவும் சங்கடப்படுத்தியது. கும்பகோணத்திலிருந்து வாடகை இண்டிகாவில் வந்திருந்த அவர்களும் ஆம்புலன்ஸை தொடர்ந்தார்கள்.

எவரும் இல்லாத; ப்ளாட் போடாத; வெற்றிடமாக இருந்த அந்தத் தரிசு நிலத்தை மணாவும் மோகனும் ஒரு முறைச் சுற்றி வந்தார்கள். அவர்கள் மெயின் ரோடு ஏறும் போது ஒரு சில்வர் கலர் இன்னோவா ஒன்று அந்த செம்மண் ரோடில் வேகமாக இறங்குவதைப் பார்த்தார். ஜீப்பை நிறுத்தச் சொல்லி அவர் கீழே குதித்து போலீசின் ஒரிஜினல் ஸ்டைலில் இறங்கினார். இன்னொவாவிலிருந்து முன்னிரண்டு கதவுகளைத் திறந்து இறங்கினர் ஜெயந்த்தும், விஜய்யும்.

“வணக்கம் சார்!” குனிந்து சீன வணக்கம் சொன்னான் விஜய். கொஞ்சம் விளையாட்டானப் பேர்வழி. விஷயாதி. ஜெயந்த்தின் ஜூனியர். இருவரும் ஜெயவிஜய லீகல் கன்சல்ட்டன்ஸியின் லாயர்ஸ். “ஒரு ரெண்டு நிமிஷத்ல கால் பண்றேன்” என்று சொல்லி வேறு கிளையண்ட்டை கட் செய்தான் ஜெயந்த். இன்ஸ்பெக்டர் மோகனுக்கு ஒரு பணிவான சல்யூட் வைத்தான்.

“நீங்க எங்க இங்க?” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘ங்”ஙினார் மோகன்.

“இப்ப நாங்க மணாவோட லாயர்ஸ் சார்!”

வெருட்டென்று திரும்பி மணாவை சுட்டெரிக்கும் தீ போல பார்த்தார் மோகன்.

”சார்! அவரை உங்க மூனாவது கண்ணால எரிச்சுடாதீங்க. பஸ்பமாகிடப் போறாரு. அவருக்கும் எங்களைப் பற்றி ஒன்னும் தெரியாது. அவரோட கம்பெனியில் முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்னை அவருக்கு அசைன் பண்ணி இருக்காங்க. அதுக்கு அவர் ரொம்ப முக்கியமாம்.  அவங்க கம்பெனியோட ஹெச்.ஆர். குயில் ஒன்னு பறந்து எங்க ஆபீசுக்கு வந்து சிறகை ஆட்டி எங்க கிட்ட உதவி கேட்டுது. பாருங்க.. நான் கூட அகில உலக சூப்பர் ஸ்டாரி ஷகிலாவோட “ஒன்னும் தெரியாத பாப்பா” படம் பார்த்துகிட்டு இருந்தேன். என்னை ஒரே அனத்தா அனத்தி இங்க கூட்டிகிட்டு வந்துட்டார் எங்க பாஸ். பாதியிலயே விட்டுட்டு வந்துட்டேன். குளிச்சு முடிச்சு துவைட்டிகிச்சோ இல்லையோ! பாப்பாவுக்கு ஜலதோஷம் வந்துடும்னு ரொம்ப கவலையா இருக்கு எனக்கு”

“விஜய் கொஞ்சம் அடங்கிறியா” என்று முறைத்தான் ஜெயந்த்.

“சார்! ஐ அம் வெரி ஸாரி. இப்போதைக்கு இவரை நீங்க ரிமாண்ட் பண்ணாதீங்க. கையில பேப்பர்ஸோட வந்துருக்கோம். இந்தாங்க..”

பரபரவென்று பிரித்துப் பார்த்தார். காற்றில் சடசடத்துப் பறந்த பேப்பர்களை கான்ஸ்டபிளிடம் தந்தார்.

”இவரை இங்கேயிருந்தே அப்படியே நேரா உங்க கார்ல அழைச்சுகிட்டு போய்டறீங்களா.. இல்ல ஸ்டேஷனுக்கு வந்து.....” குரலில் ஒரு கடுப்பு இருந்தது.

”இல்ல.. சார்.. இவரை இப்படியே ரிலீஸ் பண்ணி எங்ககிட்ட விட்டுடுங்களேன். ராயப்பேட்டா வரைக்கும் பேசிக்கிட்டே போனோம்னா கேசை ஒரு தடவ அலசி ஆராய்ஞ்சுடுவோம்.” சிரித்துக்கொண்டே கேட்டான் விஜய்.

ஒரு தடவை தோளைக் குலுக்கினார். “இவர் தான் முக்கியமான சாட்சி. சாட்சியா குற்றவாளியான்னு இன்னும் முடிவாகலை. பத்திரமா பார்த்துக்க...”

“...வேண்டியது எங்கள் பொறுப்பு. கவலைப்படாதீங்க...” என்று மோகன் ஆரம்பித்ததை விஜய் முடித்தான்.


விஜய்யின் நேர்த்தியான ட்ரைவிங்கில் ஹைவேயில் வழுக்கிக்கொண்டு சென்னையை நோக்கிப் பறந்தது இன்னோவா. இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞிகளைக் கண்டுவிட்டால் சுருளிராஜன் குதிரை போல இன்னோவா, ”நோ நோ” என்று ஓட்டத்தைக் குறைத்துக் கொண்டது. முன்னாலிலிருந்து திரும்பி உட்கார்ந்து மணாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான் ஜெயந்த். முழு கேஸ் ஹிஸ்டரியையும் சைதாப்பேட்டை தாண்டுவதற்குள் மணாவின் வாயிலிருந்து பிடிங்கிவிட்டான். “ம்..ம்...” என்று மணா இழுக்கும் போதெல்லாம் நிறைய கதை சொல்லி அவனிடம் இருந்து செய்தியைப் பறித்தான்.

சைதையிலிருந்து நேராக அடையார் பக்கம் வண்டியை செலுத்தினான் விஜய். கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் தாண்டும்போது வலது கைப்பக்கம் கண்ணைக் காண்பித்து

“பாஸ்.. இதுக்கு ஏன் தெரியுமா சில்ட்ரண்ஸ் பார்க்குன்னு பேரு?”

“ஏன்”

“ஜோடி ஜோடியா வந்து வருங்காலத்துல சில்ட்ரண்ஸ் எப்படி பெத்துக்கரதுன்னு ப்ரத்யேக பயிற்சி எடுத்துக்கறாங்களாம். அதனாலத்தான்...”

“ நீ அடங்க மாட்டே,....”


“பாஸ் நேரா ஆபீஸா... இல்லைன்னா தலைவரோட மேன்ஷனா?”


”மேன்ஷனுக்கு போ. காலையிலிருந்து அலைஞ்சி ரொம்ப ஓய்ச்சலா இருப்பாரு..”

“என்னோட மேன்ஷன் உங்களுக்கு தெரியுமா?” என்று அப்பாவியாய் கேட்டான் மணா.

“உங்க கூட வேலைப் பார்க்கிற பொண்ணுங்க ஹாஸ்டல் கூட எங்க இருக்குன்னு நாங்க விவரமா விரல் நுனியில புள்ளிவிவரம் வச்சுருக்கோம்...உங்க ஆபீஸ் பத்மா எங்க இருக்கா சொல்லட்டா..”

“விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

ஈவினிங் சில தாத்தாக்களும், தாத்தாவாகப் போகிறவர்களும் அருகம் புல் ஜூஸ் குடித்துவிட்டு லொங்கு லொங்குவென்று நடையாய் நடந்து கொண்டிருந்தார்கள். பனியன் குலுங்க செல்வாக்கு மிக்க ஒரு மாது ஓடி அண்டம் அதிர வைத்தாள். ஞாயிறு மாலையில் ஞாயிறு மெல்ல மறைந்து கொண்டிருந்தான். மஞ்சள் தங்கமென ஜொலித்தான். தன்னுடைய காரை எடுக்க முடியாதபடி குறுக்கால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டுப் போன ப்ரகிருதியை தேடிக்கொண்டிருந்தார் ஒரு குடும்ப இஸ்திரி. அந்தம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


“பாஸ்! அங்க ஜோடியா கைக்கோர்த்துகிட்டு போறதோட அங்க லட்சணங்களைப் பார்த்தா போன கேஸ்ல புருஷனைக் கொன்ன புண்ணியவதி அந்த கிரோம்பேட்டை பார்வதி மாதிரி இல்ல.” என்று வெளியே ஒரு வாலிபனோடு ஒட்டிக்கொண்டு ஜோடியாக மெரீனா உள்ளே கடலில் கால் பதிக்கப் போன ஒரு இளம் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.

“விஜய். ஒரு அரை மணி நேரத்தில ஐம்பது நாள் உன் கடைவாய் ஓரம் வழிய வேண்டிய ஜொள்ளு விட்டுட்டே. நேரே ரோடைப் பார்த்து வண்டி ஓட்ட மாட்டே!! இன்னும் அடங்க மாட்டியா?” என்றான் ஜெயந்த்.

”சரி பாஸ்” என்று இரண்டு கையையும் விட்டுவிட்டு ஒரு கை மடக்கி இன்னொரு கையால் வாயைப் பொத்திக் கொண்டான் விஜய். சீரியஸாக பார்த்துக் கொண்டே கண்ணகி சிலை சிக்னலில் வண்டியை எடுக்கும் போது பின் சீட்டில் இருந்து மணா காது கிழிய 

“சா.....ர்....ர்.......” என்று திக்கினான்.

ஜெயந்த் திரும்பி அவனைப் பார்க்க அவன் கண்ணகி சிலை தாண்டி கடலிருக்கும் திசையில் கையைக் காட்டி.....

“சா...ர்....ர்.... அங்க....அங்க.....”

“என்னப்பா.....”

விஜய் கண்களை கடற்கரை ஓரம் அலை பாயவிட்டான்.ஒன்றும் புரியாமல்

“குச்சி ஐஸ் வேணுமா?” கிண்டலடித்தான் விஜய்.

“இல்ல சார்... அங்க போறா சார்.......அங்க.... யார் கூடவோ......”

“யாரு...எங்க....”

“அங்க...அங்க... அது மிருதுளா....”

ஜெயந்த்தும் விஜய்யும் திகைத்துப் போனார்கள்!!!
தொடரும்....

பட உதவி: www.dinamalar.com

27 comments:

ஸ்ரீராம். said...

கணேஷ் வசந்த் ஸாரி ஜெயந்த் விஜய் உள்ளே வந்தாச்சு கதை களை கட்டிடும்....மிருதுளா இருந்தா என்ன செத்தா என்ன...எனக்குக் கவலை இல்லை...அதெல்லாம் மாதவன் கவலை...!

சக்தி கல்வி மையம் said...

நான்தான் முதலா?

எல் கே said...

அட்டகாசம்,., சடான இன்னொரு திருப்பம். சீக்கிரம் போடுமைய்யா

இராஜராஜேஸ்வரி said...

ஜெயந்த்தும் விஜய்யும் திகைத்துப் போனார்கள்!!!//

நாங்களும் !!!!!!

Madhavan Srinivasagopalan said...

//ஸ்ரீராம். said...

கணேஷ் வசந்த் ஸாரி ஜெயந்த் விஜய் உள்ளே வந்தாச்சு கதை களை கட்டிடும்....மிருதுளா இருந்தா என்ன செத்தா என்ன...எனக்குக் கவலை இல்லை...அதெல்லாம் மாதவன் கவலை...! //

:-)

RAMA RAVI (RAMVI) said...

அதென்ன தொடர்கதைனாக்க இன்னும் ஒரு வரி சேர்த்து எழுதக்கூடாதா? சஸ்பன்ஸலதான் விடனூமா?
அப்பறம் இவங்க இரண்டு பேரும்தான் உங்க கணேஷ் ,வசந்த் தா? நன்றாக இருக்கு சார் கதை.
அடுத்த அத்தியாயத்தை சீக்கிரம வெளியிடுங்க..

பத்மநாபன் said...

நல்லாவே திருப்பறிங்க கதையை...

அப்பாதுரை said...

அடையார் பக்கமா என்ன மெரினா?

Yaathoramani.blogspot.com said...

காதல் கணிணி மூன்று பதிவுகளையும்
நேரமின்மையால் இன்றுதான் சேர்ந்தார் போலப் படித்தேன்
தேவையானால் மட்டுமே கதாபத்திரங்கள் பேச வேண்டும்
என்ற கொள்கையுடைய மகேந்திரன் அவர்களும்
சினிமா என்றாலே ஒளியால் எத்தனை சிறப்பாக
எழுத முடியுமோ அத்தனை சிறப்பாக எழுதுவது என்பதில்
சரியாக இருக்கிற பாலு மகேந்திரா அவர்களும்
திரைக்கதைக்கெனப் பிறந்த பாக்கியராஜ் அவர்களும் சேர்ந்து
ஒரு கதை எழுதினால் எப்படி இருக்குமோ உண்மையில்
அப்படி இருக்கிறது இந்தக் கதை
தங்கள் கதையை யோசிப்பது கூட திரைக்கதையாளர்கள்
யோசிப்பதைப்போல கட் ஷார்ட்களாக யோசிக்கிறீர்கள் என்பது
தங்கள் கதையைக் கவனித்துப் படிப்பவர்களுக்குப் புரியும்
(இதனை முழுமையாக விளக்கி என்னால் ஒரு
பதிவு கூடப் போடட முடியும் எனவே பின்னூட்டத்திற்காக
எழுதப்பட்டது என எண்ண வேண்டாம்)
கதை சொல்வதில் கைதேர்ந்தவராய் இருக்கிறீர்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

இளங்கோ said...

Super :)

RVS said...

@ஸ்ரீராம்.
ச்சே..ச்சே அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. மிருதுளா மேல உங்களுக்கு அக்கறை இல்லையா?

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
இல்ல.. இருந்தாலும் வருகைக்கு நன்றி. :-)

RVS said...

@எல் கே
சரி. எல்.கே. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
வேற ஒன்னும் சொல்ல வரலையா மாதவா... :-)

RVS said...

@RAMVI
கணேஷ் வசந்த் அளவுக்கு எழுத முடியுமான்னு தெரியலை.. ஏதோ எழுத முயற்சி பண்ணுவோம். கருத்துக்கு நன்றி மேடம். :-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! :-)

RVS said...

@அப்பாதுரை
சைதையிலிருந்து அடையார் வழியாக மெரினா போகலாம். :-)

RVS said...

@Ramani
சார்! உங்களுடைய இந்த நீண்ட புகழுரைக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த ஊக்கம் இன்னும் என்னை செம்மைப்படுத்தும். நன்றி. :-)

RVS said...

@இளங்கோ

Thanks. :-)))

சாந்தி மாரியப்பன் said...

கதை களைகட்டிடுச்சு..

சத்ரியன் said...

//ஒரு தடவை தோளைக் குலுக்கினார். “இவர் தான் முக்கியமான சாட்சி. சாட்சியா குற்றவாளியான்னு இன்னும் முடிவாகலை. பத்திரமா பார்த்துக்க...”

“...வேண்டியது எங்கள் பொறுப்பு. கவலைப்படாதீங்க...” என்று மோகன் ஆரம்பித்ததை விஜய் முடித்தான்.//

இந்த “லொள்ளு” மிக்க தொடர் உரையாடலில் புலப்படுகிறது உங்களின் நகைச்சுவைத்திறன்.

கதை சுவாரஸ்யமா இருக்கு. பாவம் சார் மிருதுளா.அவலை விட்டு வையுங்க..!

சூப்பர்!

ரிஷபன் said...

கதை ஜெட் வேகம்..

எங்களையும் திகைப்பில் ஆழ்த்தி.. ‘தொடரும்’ போட்டுவிட்டீர்கள்..

RVS said...

@அமைதிச்சாரல்
இன்னும் விறுவிறுப்பா கொண்டு போகனும்னு முயற்சிசெய்கிறேன்! பார்க்கலாம் சாரல்.. :-)

RVS said...

@சத்ரியன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க ப்ரதர். :-)

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! அடிக்கடி எழுத நேரம் வாய்க்க மாட்டேங்குது.. :-)

சிவகுமாரன் said...

சத்தியமா சுஜாதா தோற்றார் போங்கோ. கணேஷ் வசந்த் இன் மருபிறப்புக்களா விஜயும் ஜெயந்தும் ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails