Thursday, August 6, 2015

கணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்

கணபதியின் ஸ்லோகங்களில் உள்ளம் கரைந்து போன ரமணர் மூடிய கண்களை மெதுவாய்த் திறந்து “நாயனா” என்று செல்லமாக அருகில் அழைத்தார். கணபதிக்கும் அன்றிலிருந்து “நாயனா” என்ற பெயர் நிலைத்துவிட்டது. தெலுங்கில் நாயனா என்றால் அப்பா... என்று அர்த்தம். எத்துனை சிஷ்யர்களுக்கு வழிகாட்டுதலில் அப்பாவாக இருந்திருக்கிறார் கணபதி!

தனது பரம சிரேயஸான ஒரு குருவை சந்தித்துவிட்டதாக தந்தைக்கும் மனைவிக்கும் கடிதம் எழுதினார். அடுத்த இரண்டு நாட்களில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா. விஸாலாக்ஷி வேலூரிலிருந்து கணபதியின் சீடர்களோடு வந்திறங்கினார். அனைவரும் நேராக விருபாக்ஷி குகைக்குச் சென்று ரமணரை நமஸ்கரித்தனர். கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது பகவான் ரமணரோடும் கணபதியோடும் இருந்தது அவர்களுக்கு மன சந்துஷ்டியாக இருந்தது. குரு பக்தியின் உச்சத்தில் அந்த இடம் மிளிரிந்தது.
தீபத் திருவிழா முடிந்த அடுத்த நாள் விஸாலாக்ஷி வேலூர் திரும்பினார். நாயனா ரமணரிடம் தனது தவம் புரிய ஏதுவான இடம் கேட்டார்.
“மாமர குகை சென்று தவமியிற்று” என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல் நாயனாவை வழிநடத்தி தன்னுடன் அழைத்துச்சென்றார். குகையில் இருவரும் தனித்து பல மணி நேரங்கள் அமர்ந்திருந்தனர். மௌனமாக பல விஷயங்களை நாயனாவிடம் பரிமாறிக்கொண்டார் ஸ்ரீரமணர்.
ரமணருக்கும் தினமும் உணவு சமைத்து எடுத்து வருபவர் ஈச்சம்மாள். அப்போது அவருக்கு அணுக்கமான பக்தராக, சிஷ்யனின் அனைத்து யோக்யாதம்சங்களோடு ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். நாயனாவிற்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர ஆரம்பித்தார். இருவரும் தினமும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். ஒன்றாக உணவருந்தினர். சில நாட்கள் கடப்பதற்குள் ஈச்சம்மாள் நாயனாவிற்கும் பக்தையானார்.
அருணாசலேஸ்வரரைப் போற்றி “ஹர சகஸ்ரம்” என்ற ஆயிரம் பாடல்களை நாயனா ஏற்கனவே இயற்றியிருந்தார். ஆன்மிக ஒளியில் பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு உன்னத குருவை தனக்கு காட்டியமைக்காக இப்போது இன்னும் இருபது நாட்களில் உண்ணாமுலையைப் போற்றி ஆயிரம் பாடல்கள் இயற்ற சங்கல்பம் செய்துகொண்டார். உமையம்மையைப் போற்றித் துதித்து எழுதுவதால் அதற்கு “உமா சகஸ்ரம்” என்று பெயரிட்டார்.
ஸ்ரீரமணரிடம் தனது இந்த அவாவைச் சொல்லி விக்னமில்லாமல் அதை பூர்த்தி செய்ய அவரிடமிருந்து ஆசி பெற்றார். 1907, நவம்பர் 26ம் தேதி நாயனா மாமரக் குகையில் அமர்ந்து உமா சகஸ்ரம் இயற்ற ஆரம்பித்தார். ரமணர் அடிக்கடி சென்று நாயனாவைப் பார்த்து அவருக்கு ஆன்மிக பலத்தை அளித்து அவருக்கு தெம்பூட்டினார்.
ஒரு நாள் கணபதிக்கு காலையிலேயே பசி வயிற்றைக் கிள்ளியது. என்றைக்குமே இதுபோல அவருக்கு இருந்ததில்லை. எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டு யோகா செய்ய அமர்ந்துவிட்டார். அங்கே வீட்டினில் சமைத்துக்கொண்டிருந்த ஈச்சம்மாளின் முன் ஒரு பெண் திடீரென்று தோன்றினாள். “அம்மா... கணபதிக்கு பசிக்கிறது. சீக்கிரம் சென்று உணவு பரிமாறு” என்று சொல்லிவிட்டு அலையலையாய் காற்றோடு மறைந்து போனாள். சமையலை சுருக்க முடித்துவிட்டு பக்கத்து வீட்டு சிறுவனைக் கூப்பிட்டார் ஈச்சம்மாள்.
“இந்தச் சாப்பாட்டைக் கொண்டு போய் மாமரக் குகையில் உமாசகஸ்ரம் எழுதிக்கொண்டிருக்கும் கணபதி குருஜியிடம் கொடுத்துவிடு....”
கையில் சாப்பாட்டுடன் அவசரமாய்க் கிளம்பியவனைத் தடுத்து “அவரிடம் இன்று காலையில் ஏதேனும் விசேஷமாக நடந்ததா என்றும் விசாரித்துக்கொண்டு வா” என்று சொல்லியனுப்பினார். சிறுவன் குகை நோக்கி ஓடினான். யோகத்தில் ஆழ்ந்திருந்த கணபதியிடம் சாப்பாட்டைக் கொடுத்தான். அவர் அதைப் பிரிக்கும் முன் ஈச்சம்மாள் கேட்ட கேள்வியைக் கேட்டான்.
“ஆமாம். இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பசித்தது” என்று கணபதி சிரித்தார்.
உமா சகஸ்ரம் வேகமாய் வளர்ந்துகொண்டிருந்தது. சோதனையாக பதினைந்தாம் நாள் கணபதிக்கு வலது கைக் கட்டை விரலில் நகச்சுத்தி வந்து வீங்கிவிட்டது. இனி எழுதுவதைத் தொடர முடியாது என்று நிறுத்திவிட்டு ஜபத்தில் இறங்கிவிட்டார்.
பதினாறு, பதினேழு, பதினெட்டு என்று நாட்கள் ஓடின. ஒரு அக்ஷரம் கூட எழுத முடியாமல் ஜபதபங்களில் கணபதி ஈடுபட்டார். பத்தொன்பதாவது நாள். முக்கால்வாசி எழுதி முடித்தாகிவிட்டது. கால்வாசியில் அம்பிகை திருவிளையாடலைக் காட்டிக்கொண்டிருந்தாள். அன்றிரவு புண்ணியகோடி என்ற மெட்ராஸ் மருத்துவரின் கனவில் அம்பிகை தோன்றி ”திருவண்ணாமலையிலிருக்கும் ஒரு தபஸ்வியை உடனே சென்று சொஸ்தப்படுத்து” என்று கட்டளையிட்டாள்.
மறுநாள் காலையில் விருபாக்ஷி குகையை வந்தடைந்த டாக்டர் புண்ணியகோடி, ”இங்கே சன்னியாசி யாரேனும் சுகவீனமாக இருக்கிறார்களா?” என்று விசாரித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் கணபதியின் நகச்சுத்தியைப் பற்றி அவரிடம் சொல்லி மாமரக் குகைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கேயே கணபதிக்கு ஆபரேஷன் செய்தார். கைக்குக் கட்டுப் போட்டுவிட்டு அவரை நமஸ்கரித்துச் சென்னை திரும்பினார். இருந்தாலும், பேண்டேஜுடன் எப்படி எழுதுவது?
அது இருபதாம் நாள். இன்று எப்படியாவது ஆயிரம் ஸ்லோகங்களை முடித்துவிட கங்கனம் கட்டிக்கொண்டார் நாயனா. அன்றிரவு நாயனாவின் ஐந்து சிஷ்யர்கள் எழுது பொருட்களுடன் மாமரக் குகையை அடைந்தனர். குரு ரமணர் கணபதியின் அருகில் ஆதரவாக அமர்ந்துகொண்டார். மகாபாரதத்தில் வியாஸ பகவான் கணபதிக்கு ஸ்லோகங்களைச் சொன்னது போல இந்த கணபதி ஐந்து சிஷ்யர்களுக்கும் ஸ்லோகங்களை வர்ஷித்தார். ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தத்திலும் வெவ்வேறு பொருள்படியும் அமையுமாறு அவர் சொன்னதுதான் அதில் விசேஷம்.
நள்ளிரவு கடப்பதற்குள் இருநூறு ஸ்லோகங்கள் மூச்சுவிடாமல் பாடியிருந்தார் கணபதி. உமாசகஸ்ரம் நிறைவடைந்திருந்தது. அதுவரை கண்கள் மூடி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ரமணர் இமை திறந்தார். அங்கே எழுதியவர்களைப் பார்த்தார். “இதுவரை நாயனா பாடிய அனைத்து ஸ்லோகங்களையும் சரியாக எழுதினீர்களா?” கேட்டார்.
அப்போதுதான் கணபதிக்கு உரைத்தது. இதுவரை அங்கே நடந்து அனைத்தும் தன் சத்குருநாதனின் அருளாலே என்று. குருவருள் இல்லையெனில் உமாசகஸ்ரத்தை அன்றிரவு முடித்திருக்கமுடியாது என்று எண்ணி பரவசமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக உடனே ரமணரைப் புகழ்ந்து ஒரு ஸ்லோகம் எழுதினார்.
யதஸ்ய மஹத: காலே
பாரம் யாதோஸ்மி கர்மண:
அனுக்ரஹோயம் ஆசார்ய
ரமணஸ்ய மஹாத்மன:

”இந்த மஹா கார்யத்தை நிச்சயத்த காலத்திற்குள் பூர்த்தி செய்தது என்னுடைய ஆசார்யனான மஹாத்மா ரமணரின் அனுக்கிரஹமே” என்பது இதன் பொருள்.
உமா சகஸ்ரம் தெய்வக் கவி கணபதியின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக எழுதப்பட்டது. ஆன்மிக வழி நடப்பவர்களின் சோதனைகளைக் களையும். அவர்களது உள்ளத்தில் ஆன்மிக ஒளி ஏற்றும். அம்பிகையின் பல ரூபங்களையும் அவளது அருளையும் போற்றி இயற்றப்பட்டது. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதை அவர்களுக்கு சித்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. மனிதர்களின் சிந்தனைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட அரிய பலன்களை தரவல்லது.
உமா சகஸ்ரம் இயற்றிய பின்னர் நாயனா தனிமையில் தவமியற்ற விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம்......

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பக்கத்தில் பகிர்வு பார்க்கிறேன்...
நல்ல பகிர்வு அண்ணா....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails