Sunday, August 2, 2015

வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே!!

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களைப் பற்றி சொல்லிலே கலை வண்ணமாகப் பேசினார் கோபு. சனி மாலை மல்லை மாலையாகியது. மாலை 5:30 மணிக்கு தக்கர் பாபாவிற்குள் நுழைய முடியாது என்பது திண்ணமான போது ”கோபு.. அஞ்சரைக்கே நிச்சயம் ஆரம்பிச்சிடுவீங்களா?” என்று மொபைலில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டேன். “ஒரு பத்து நிமிஷம் கூட ஆகும்....நீங்க வாங்க..” என்ற பதிலில் தெம்பாக ஓட்ட ஆரம்பித்தேன்.

தமிழ் ஹெரிட்டேஜ் அறக்கட்டளையின் மாதாந்திர முதல் சனிக்கிழமை செமினாருக்காகத் தக்கர் பாபா வினோபா ஹாலில் நேற்று மாலை கூட்டம் அலைமோதியது. ப்ரொஃபஸர் ஸ்வாமிநாதன் சாருக்கு எனது மனைவியை அறிமுகம் செய்துவைத்தேன். மகாபலிபுர ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டவர்வகளில் ஸ்வாமிநாதன் சாரும் ஒருவர். வெள்ளையாய் சிரித்தார். திவாகர தனுஜஹா என்ற பெயரில் தமிழில் இலக்கண சுத்தமாகப் பல பாவகைகளில் கவி புனைபவரைக் கண்டு அளவளாவினேன். தமிழ்த்தாயின் ஆசீர்வாதம். ராமசுப்பிரமணியன் ஸ்வாமிநானையும் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. வரவேற்புரை நிகழ்த்திய கிஷோர் மகாதேவனுக்கு ஒரு சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தேன். ஐந்து ஐம்பதிற்கு கோபு அரங்கினுள் நுழைந்த போது ஐரோப்பிய கால்பந்து மைதானங்களில், ஆட்ட இடைவெளியில், ரசிகக் கூட்டம் அலையலையாய் எழும்பி வீரர்களின் பெயரைச் சொல்லி கோரஸாகக் கோஷமிடுவது போல “கோ...பு... கோ...பு... கோ...பு..” என்று பரவசமடைந்தார்கள். அன்புச் சங்கிலி.
லாப்டாப்பில் “மல்லை தொன்று தொட்டு இன்று வரை” என்று தலைப்பிட்ட பவர்பாயிண்ட்டை திறக்கும்போது கண்ணில் பட்டது 106 செய்திப் பட்டைகள். விடிய விடியப் பேசலாம்.

ஓப்பனிங் சீனே அசத்தல். மாமல்லபுரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அங்கே பயணிக்கவேண்டுமல்லவா? எப்படியெல்லாம் பழங்காலங்களில் மாமல்லபுரத்தை சென்றடைந்தார்கள் என்று பார்க்கும் போது திருமங்கையாழ்வார் நடையாய் நடந்தார் என்றும் கர்ணல் நுவெல் காரில் சென்றார் என்றும் காலவரிசைக்கிரமமாக பட்டியல் போட்டார். சேப்பாயியில் நானும் குடும்பத்தோடு சென்று சிற்ப அஞ்ஞானியாக ரசித்ததை அசை போட்டுக்கொண்டேன். சரிப்பா... மஹாப்ஸ் போயாச்சு. மகாபலிபுரத்தை எந்தெந்த வடிவங்களில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்கள்? பாசுரங்களில் ஆரம்பித்து ரயில்வே கைடு வரை அலசியிருக்கிறார்கள்.
ஆயிரத்து எழுநூறுகள் எண்ணூறுகளில் யாரெல்லாம் மகாபலிபுரத்தைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்ற ஸ்லைடில் 1854 நேப்பியர் என்ற பெயர் மட்டும் எனக்குத் தெரியும். சென்னைவாசிகள் உங்களுக்கும் தெரியும். ஆமாம். கூவம்நதிக்கரை ப்ரிட்ஜ் கட்டின ஆளா என்று கோபு சொல்வார். (அறிவுப்பூர்வமாக எனக்கு உதித்த கேள்வி!!)
தங்களது ஆக்கங்களிலும் ஆராய்ச்சிகளிலும் மாமல்லபுரத்தை அலசிப்பார்த்தவர்களின் பட்டியல் 2010 பாலுசாமியிலிருந்து முன்னோக்கி நாகசாமி, கல்கி என்று நீள்கிறது. ”கல்லா பார்க்கிறவனுக்குக் கல்.. செலையா பார்க்கிறவனுக்கு செலே... வாசுதேவப் பெருமாளாப் பார்க்கிறவனுக்கு வாசுதேவப்பெருமாள்..” என்று சாரதா பாட்டி கல்லைக் கல்லாகவும் கலையாவும் கடவுளாகவும் பார்ப்பவர்களைப் பற்றி மன்னை ராஜகோபாலஸ்வாமி கோயிலில் சொல்லியிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்குத் தத்தம் நோக்கில் ஒவ்வொன்றாக தோன்றியிருக்கலாம்.
”இங்கே குழுமியிருப்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...” போன்று சோடா பாட்டில் கையோடு கரகரத் தொண்டை கழகப் பேச்சாளர்கள் போலில்லை கோபுவின் சொற்பொழிவு பாணி. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு ஆதூரமாகப் பேசும் தோழன் போல ஸ்நேக பாவ நடை.
பெறும்பாண் ஆற்றுப்படை மற்றும் பூதத்தாழ்வாரின் பாசுரம் போன்றவைகளில் மல்லையை மற்ற பெயர்களில் தொட்டதை ஸ்லைட் போட்டுக் காட்டிவிட்டு தண்டின் எழுதிய அவந்தி சுந்தரி கதாவில் மகாபலிபுரம் பற்றி குறிப்புகள் இருப்பதைச் சொன்னார். லலிதாலயன் என்கிற சிற்பி ஸ்தல சயனப் பெருமாளின் கை ஒன்றை செப்பனிட்டதையும் அதை மன்னன் ”எந்தக் கையை சீர் செய்தீர்கள்...” என்று கேட்கும் போது “இதுவே எனக்கு வெற்றி...” என்றானாம். மங்கலான ஞாபகம்.
”கள்வா! கடல்மல்லை கிடந்த கரும்பே!
வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே” என்று திருமங்கை மன்னனின் திருவாய்மொழியை நினைவு கூர்ந்தார். கள்வா.. கரும்பே.... ஆஹா.. தமிழமுது.

பிரிட்டீஷ் லைப்ரரியிலிருந்து சேகரித்த 1890ம் ஆண்டு பஞ்சபாண்டவ ரதப் படத்தையும் 2015ல் பஞ்சபாண்டவ ரதத்தையும் முன்னும் பின்னும் ஓட்டிக்காண்பிது இருகாலங்களுக்கும் ஏககாலத்தில் பயணிக்கவைத்தார். 1890களில் எடுக்கப்பட்ட படத்தில் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நின்ற ஆள் யாராக இருக்கும்? துரைகளைப் பல்லாக்கில் தூக்கிக்கொண்டு வந்த ஆளா? டேய் ஆர்விஎஸ்! இங்கே வா... கோபு அடுத்த ரெண்டு ஸ்லைட் போயாச்சு...
ஆங்கில உவேசா என்று காலின் மேகன்ஸீயைக் காட்டினார். முட்டி வரை பூட்ஸ் அணிந்து சேப்புக் கோட்டோடு மூன்று பேர் முண்டாசோடு சூழ்ந்து நிற்க ஒரு ஃபோட்டோ. முதலில் மோகன்ஸீ என்று படித்துவிட்டு, உதட்டைக் கடித்துக்கொண்டு மேகன்ஸீ என்று திருத்திக்கொண்டேன். அவர் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், ஆவணங்கள், சிற்பங்கள் ப்ரியராம். ஆதொண்டை சக்கரவர்த்தி வரலாறு மற்றும் குரும்பர் வரலாறு எழுதியவர்.
ஒரு வெள்ளைக்கார மாமாவும் அவர் மருமானும் 1786லிருந்து 1794வரை இந்தியா முழுவதும் சுற்றிவந்து படம் வரைந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கோரமண்டல் கரையோர மாவலிபுரத்தை...வரைந்த சில படங்களை காண்பித்தார். தத்ரூபம். இப்பதிவில் கோபுவின் பக்கத்திலிருப்பது அந்தப் படமே.பார்த்துக்கொண்டேயிருக்கலாம். நேரம் ஓடுகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளை கோபு மாற்றினாலும் அந்த ஓவியங்கள் என் கண்ணோடு ஒட்டிக்கொண்டுவிட்டன. தேடிக் கண்டுபிடித்து தக்கர்பாபாவில் ஸ்லைடோட்டிய கோபுவுக்கு கோடான கோடி நன்றி.
பேபிங்டன் என்கிற ஆராய்ச்சியாளர் மகாபலிபுரத்திலுள்ள மஹிஷாசுரமர்த்தினி சிற்பம்தான் இந்திய சிற்பங்களிலேயே அதிகமான அசைவுகளை காட்டிய சிற்பம் என்றாராம். அப்படிச் சொன்னபிறகு இப்போது பார்த்தால் சிற்பம் பேசுகிறது, நடக்கிறது, சிரிக்கிறது, சிங்கத்தின் மேலே பயணிக்கிறது..இப்படி பல காட்சிகளாக நம் கண்முன்னே விரிகிறது. அதே பேபிங்டன் தமிழ் சம்ஸ்கிருத லிபிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அட்டவணைப் போட்டிருப்பதைப் பார்த்த போது மெய்சிலிர்த்தது. தெரியாத மொழியில் என்ன ஒரு அர்ப்பணிப்பு!!
தர்மராஜா மண்டபமும் அதிலிருந்த க்ரந்த லிபியையும் தமிழும், ஆங்கிலமும், சம்ஸ்கிருத சந்தஸ் கலையாமல் கலந்து கலந்து கோபு மணிப்பிரவாளமாக பேசும்போது நமக்கு மகாபலிபுரம் கருப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், மணிரத்தினம் பட பி.ஸி.ஸ்ரீராம் கலர் என்று மாறிமாறி வர்ணமயமாகத் தெரிகிறது.
அதிரணசண்ட மண்டபத்தில் ராஜசிம்ஹன் எழுதிய கவிதையைப் படித்துக்காண்பித்தார். அத்யந்தகாமா என்கிற பதத்தை பிரித்து அர்த்தம் சொன்னார். தீரா ஆசைகொண்டவனாம். 1850ல் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிற சரித்திரக்குறிப்பொன்றை சொற்பொழிவின் நடுவே உதிர்த்துவிட்டு ஸ்லாக் ஓவர்களில் பத்து விக்கட்டுகளும் மிச்சமிருக்கும் அணி துவம்சம் செய்வது போல ஸ்லைட் மாற்றி ஸ்லைட் புகுந்து விளையாடினார். ஸ்லைடுகளின் அசுர பொழிவு.
1827ல் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவர் மல்லை ஒரு புத்த ஸ்தலம் என்றாராம். ராஜராஜசோழனின் ”திருமகள் போல பெரு நிலச்செல்வியுந் தனக்கே உரிமை” கல்வெட்டு காண்பித்தார். அதன் பின்னர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல். தமிழ்நாட்டு மன்னர்களின் டைம்லைனை ஸ்லைடாக்கியிருந்தார். சரித்திர ஆர்வலர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நேரக்கோடு.
பழங்கால கோயில்கள் கர்ப்பக்கிரஹம் மட்டுமே இருந்தது. அது பாண்டியர்கள்/பல்லவர்கள் கட்டினது. பின்னர் வந்த சோழர்கள் அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டி இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினார்கள். அதன் பின்னர் ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான் பல கோயில்களுக்கு விண்ணை முட்டும் பெரிய கோபுரமும் பிரம்மாண்டமான மதில்சுவர்களும் கட்டப்பட்டன என்ற தகவலைச் சொல்லும் போது “மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் கோபுரமும் மதிலும் விஜயரகுநாத நாயக்கர் காலத்துல கட்டினதுன்னு சொல்லுவாங்க...” என்றேன் சங்கீதாவிடம். கோயில்கள் வளர்ந்த வரலாறு.
தூபே என்பவர் வேதியல் ஆசிரியர். மல்லை ஆராய்ச்சியில் உந்தப்பட்டு பல்லவர்களைப் பற்றி புஸ்தகம் எழுதுகிறார் மேலும் மண்டகப்பட்டு கல்வெட்டுகளை கண்டறிகிறார். அதில் விசித்திரசித்தன் தான் கட்டிய கோவிலானது செங்கல்லில்லாமல், மரமில்லாமல், சுண்ணாம்புக் காரையில்லாமல், உலோகமில்லாமல் பிரம்மா, ஈஸ்வரன் மற்றும் விஷ்ணுவிற்காகக் கட்டியது என்று எழுதிவைத்திருக்கிறானாம். ஆஹா!
பின்பு பல்வேறு சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து அதன் காலங்கள் வேறுபட்டவையா ஒன்றேவா என்ற ஆராய்ச்சிகளைப் பற்றி பேசினார். மண்டபங்களில் அமைத்திருக்கும் சிம்மங்கள் உட்கார்ந்திருப்பது, நின்றிருப்பது போன்றவைகளை வைத்தும் அதன் காலங்களைக் கணித்திருக்கிறார்கள். சிம்மம் மட்டுமா துவாரபாலகர்களின் உருவம் மற்றும் தோற்றங்களையும் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறார்கள்.
மன்னர்களின் பெயரால் நாம் இதை காலக்கிரமப்படுத்தினாலும் எந்த காலத்திலும் இவ்வளவு நேர்த்தியாக சிற்பம் வடித்த அனானி சிற்பிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவர்களின் மேல் கொண்ட தீராத பாசத்தினால் கோபு தானியற்றிய ஒரு வெண்பாவை வெளியிட்டார். அதை அவரது மும்பாய் பெரியம்மா பாடிக்காட்டினார் என்று சொன்னது நம்மை உருக வைத்த விஷயமாகும். அந்த வெண்பா..
கல்லே தகளியா கற்பனையே நெய்யாக
பல்லவன் கட்டளை இடுதிரியா – மல்லை
ஆழி கரையோரம் உளியால் விளக்கெடுத்தார்
வாழி எம் சிற்பியர் புகழ்

லாக்வுட் சிரோன்மணி சோமாஸ்கந்த உருவங்களை வைத்து அந்த சிற்பங்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம். சிவபெருமானின் எந்தக் கால் கீழே தொங்குகிறது, காலின் அணிகலன்கள், காதில் மாட்டியிருக்கும் அணிகலன், தலையில் சூடியிருப்பவை மற்றும் உமையின் முகம் நம்மைப் பார்த்து இருக்கிறதா அல்லது சிவனை நோக்கியவாறு அமைக்கப்பட்டிருக்கிறதா, முருகனை உமை மடியில் வைத்திருக்கிறாளா, காது அணிகலன்கள் வெண்சாமரம் வீசுபவர்கள் என்றெல்லாம் நுணுக்கமாகப் பார்த்து பல விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
“No one has last word regarding Mamallapuram” என்று நாகசாமி சொன்னாரம். அதையே திரும்பச் சொல்லி கோபு நிறைவு செய்த போது மொத்த கூட்டமும் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தது. காரணம் என்னவென்றால் யாருமே மாமல்லபுரத்திலிருந்து திரும்பவில்லை. சூட்சும சரீரமாக எல்லோரையும் மாமல்லபுரக் கடற்கரையில் உலவவிட்டு கோபு தக்கர்பாபாவுக்குத் திரும்பி வாட்டர் பாட்டிலை வாயில் சரித்துக்கொண்டிருந்தார். அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக திநகருக்கு திரும்பி வந்து கோபுவுக்கு கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
ராதிகா பார்த்தசாரதி மேடம், அன்பு ஆர்.வி, ஜேயார் சார், லதா மேடம், பாலு சார் போன்றோரிடம் ஒரு சின்ன அரட்டையில் ஈடுபட்டு வெங்கடேஷ் க்ருஷ்ணமூர்த்தியுடன் வீடு திரும்பினேன். யாரேனும் இனிமேல் மாமல்லபுரம் செல்ல ஆசைப்பட்டால் கோபுவுடன் செல்வது சாலச்சிறந்தது. கோபு இன்னொரு செமினார்... நீங்கள் சொன்ன அந்த விட்டுப்போன படங்களோடு... மீண்டும்.. மீண்டும்...
பின்குறிப்பு: இதில் விடுபட்டவைகள் இருக்கலாம். மாமல்லபுரத்தை ஒரிரு பக்கங்களில் நிரப்ப நினைப்பது எத்தகைய பேதமை!!


0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails