Sunday, August 2, 2015

ஒருமாவின் கீழரை

கெட்டிமேளத்துக்கப்புறம் ”ஆனந்தம்... ஆனந்தம்.... ஆனந்தமே.. நம்ம ஜானகி மணமகள் ஆனாளே...” என்று கல்யாணத்திற்கே வாசித்துப் பழகிய நாதஸ்வரக்காரர், ப்ரம்மோபதேசம் முடிந்ததும் ஏழு வயசுப் பையனுக்கும் அதையே வாசித்த ஒரு உபநயன வைபவத்தில் ஸ்ரீமதி லலிதா பாலகிருஷ்ணனை தம்பதியாய்ச் சந்தித்தேன். முதல் வரிசையில் பார்த்தவுடன் மரியாதையாகக் கைகூப்பும்படி அவர் பக்கத்தில் பாலகிருஷ்ணன் சார். பேசும் போது ரொம்ப நாள் பழகியது போல அந்நியோன்யம்.

பசங்கள், படிப்பு, மேகி, ஐபிஎல், கிராமத்து வாழ்க்கை என்று பல லோகாயத விஷயங்கள் ஹோமப் புகையோடு பேசிக்கொண்டிருந்தோம். பின்னணி நாதஸ்வரத்தில் “சின்னஞ்சிறு பெண் போலே..” வந்தபோதும் “தாயே யசோதா..” வந்தபோதும் சிரித்துக்கொண்டோம். ”மறை மூர்த்தி கண்ணா”விலும் குறையொன்றுமில்லை. பின் வரிசையில் வடுவை ஆசீர்வதிக்கக் கொடுத்த புஷ்பங்களை கையில் வலுவில்லாத தாத்தாக்கள் எங்கள் தலையில் அர்ச்சிக்க, ஆசீர்வாதங்கள் பிக்ஷா வந்தனம் அன்பளிப்புகள் எல்லாம் முடிந்து பந்திக்கு செல்கையில் ஏற்கனவே முந்தியவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அடுத்த பந்திக்காக காத்திருந்தபோது ”பெரியவாளுக்கு தமிழ்ல நல்ல பாண்டித்யம்...” என்று பாலகிருஷ்ணன் சார் மஹா பெரியவா காளமேகப் புலவர் எழுதிய பாடலை விளக்கியதைக் குறிப்பிட்டார். கச்சி ஏகம்பனைப் பற்றி கவிக்காளமேகம் பாடிய முக்காலுக்கு ஏகாமல் என்கிற பாடல்.
”முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….”

கடகடவென்று பாட்டுப் படித்தார். கொஞ்சம் சிரித்துவிட்டு விளக்கமும் சொன்னார். "வயசானப்புறம் வாக்கிங் ஸ்டிக் வச்சுண்டா அது மூனாவது கால். அந்த நிலைமை வருவதற்குள்... முன்னரையில் வீழாமுன்.... முன்னாடி நரை விழுவதற்குள்ளே... விக்கல் இருமல் என்று அவதிப்படும் முன்... மாகாணி என்கிற இடுகாட்டிற்கு போவதற்கு முன்.. கச்சியில்.. காஞ்சீபுரத்தில்.. ஒருமாவின் கீழரை... ஒரு மாமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பரேஸ்வரரை.. இன்றோது.. இன்றைக்கே தொழுதோது...."
திக்காமல் திணறாமல் தமிழருவியாய்க் கொட்டினார். பின்னர் ஃபேஸ்புக் சம்பிரதாயமாக “க்ரூப்பி வித் ப்ரின்ஸி” என்று இத்துடன் இணைத்திருக்கும் படத்தை எடுத்துக்கொண்டோம். கச்சி ஏகம்பனை வாயாறப் பாடியதும் “வாங்க சாப்பிடலாம்...” என்று வயிற்றுக்கு அழைப்பும் வந்தது.
ஜாங்கிரி, உசிலி, தயிர் பச்சடி, உருளை, தயிர் வடை என்ற விருந்து சாப்பிட்டு விடைபெறும் போது “ஆர்விஎஸ்.. பஞ்சாரண்ய ஸ்தலங்கள் போகலாம்.. ப்ளான்லாம் பண்ணினா சரியாவராது... அப்படியே நினைச்சுண்டா கிளம்பிடணும்....” என்றார் பாலா சார். ஆமாம் கிளம்பணும். சர்வேஸ்வரா! (பால)கிருஷ்ணர் நினைச்சா மாதிரி நடக்கணும். நற்காலையாக அமைந்த ஞாயிறு காலை!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails