Saturday, February 22, 2014

மூன்று மணி மூன்று திருத்தலங்கள்


பூந்தமல்லி தாண்டி வரும் காட்டுப்பாக்கமருகே ஹாரனடித்து மூர்க்கத்தனமாக வருபவர்களுக்கு வழி கொடுத்துவிடுங்கள். கொஞ்சம் மெதுவாக போங்கள். வலதுபுறம் மஞ்சள் கலரில் எம்ப்பீ டிஸ்ட்டிலரீஸ் பில்டிங் ஒன்று தெரியும். அங்கே பச்சையாய் ஹைவேய்ஸ் டிப்பார்ட்மெண்ட் பேரம்பாக்கம், மப்பேடு என்று வரிசையாய் எழுதி போர்டு வைத்திருப்பார்கள். சிக்னல் இல்லாத திருப்பம். பார்த்துவிட்டு திரும்புங்கள். இந்தச் சாலைக்குள் நான்கு அற்புதமான க்ஷேத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக வரிசையாகச் செல்வோம். வாருங்கள்.

திரும்பின இடத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டரில் வரும் முதல் கோவில் மப்பேடு. இடதுபுறம் வாலிபால் நெட் கட்டி ஒரு க்ரௌண்ட் வரும். அதன் பின்புறம் சிங்கீஸ்வரர் ராஜகோபுரம் தெரியும். ஆஞ்சநேயர் இங்கு வந்து சிவனைப் பாடி பூஜித்தாரர். ஆஞ்சநேயர் சிங் பண்ணியதால் சிங்கீஸ்வரராகியிருக்கலாம் என்று கோக்குமாக்காக யோசிக்கக்கூடாது. சிங்கி என்னும் நந்தி வழிபட்டதால் சிங்கீஸ்வரர் ஆனாராம். வண்டியிலிருந்து இறங்கிய உடனே “பக்கத்துலேயே சித்தர் சமாதியிருக்கு. அதையும் பாருங்க..” என்று நெற்றியில் நீரு பூசிய ஒருவர் ரெக்கமண்ட் செய்தார்.

நல்ல ஆகிருதியான லிங்கம். ஆதித்த கரிகாலனால் கட்டப்பட்ட கோயில் இது. ஆயிரத்து ஐநூறு வருஷத்திய கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகமாகியிருந்தது எண்ணெய் பூசிக்கொள்ளாத கற்தூண்களின் பளிச்சில் தெரிந்தது. சிங்கீஸ்வரர் சன்னிதியில் “நமஸ்தே அஸ்து பகவன்...” கோஷ்டியாகச் சொன்னோம். பொதுவாக இதுபோன்ற கோவில்களில் குருக்கள் மட்டுமே சிவபெருமானுடன் தனியாகப் பேசிக்கொண்டிருப்பார். இன்று எங்களோடு இன்னும் ரெண்டு பேர் வந்திருந்தது மனசுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது. அம்மனுக்கு தனி சன்னிதி. விநாயகர், ஆதிகேசவப் பெருமாள், புஷ்பகுஜாம்பாள் என்று வலம் முடித்து வருகையில் வாகன மண்டபத்துக்குப் பக்கத்தில் தூண் சிற்பமாக வீணையேந்திய ஆஞ்சநேயர் காட்சியளித்தார். அவருக்கு எதிரே வீரபாலீஸ்வரர் சன்னிதி. ஆஞ்சநேயருக்கு முன்னால் அமர்ந்து “நினைத்த்தெத்தனை...” திருப்புகழ் பாடினர் என் மக்கட் செல்வங்கள். இந்த வாலீஸ்வரர் 5000 வருடத்து சன்னிதி என்று போர்டு வைத்திருந்தார்கள். கர்ப்பக்கிரஹத்துக்குள் டைல்ஸ் போட்டு அழகுபடுத்தியிருந்தார்கள்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். மூல நட்சத்திரக்காரர்களுக்கு இது விசேஷமான தலமாம். அரையில் பச்சைப் பெல்ட் கட்டிய குருக்கள் சொல்லச் சொன்னார்.

இரண்டாவதாக திருவிற்கோலம் என்று பாடல் பெற்ற ஸ்தலமான கூவத்துக்கு வந்தடைந்தோம். பக்கத்திலிருந்தௌ அக்னி தீர்த்தத்தில் கால் அலம்பிக்கொள்ளச் சென்றோம். வயற்புறங்களால் சூழப்பட்டிருக்கும் இத் திருக்குளத்தில் தவளைகளே கிடையாது. பிடித்துவிட்டாலும் ஓடிவிடும் என்று வாசலில் நின்ற ஒருவர் அதிசயத் தகவல் கூறினார். “எதுனாச்சும் குடுப்பா..” என்று கையேந்திய பாட்டிக்கு “வரும் போது தர்றேன்” என்று வாக்குறுதியளித்துவிட்டு ஆளைத்தூக்கும் காற்றை மீறி உள்ளே நுழைந்தோம். கொடிமரத்தில் கட்டியிருந்த வெங்கல இலைகள் ஆடியாடி சங்கீதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. “ஓம் நமசிவாய..ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்” என்று பஜித்திருந்தால் அந்த இலைகளில் ஓசை ஜால்ராவாக இருந்திருக்கும்.

திரிபுராந்தகர் இருவண்ணங்களில் காட்சி தருபவர். அதிக மழை வெள்ளம் வரும் காலங்களில் வெண்மை நிறத்திலும் போர்க் காலங்களில் சிகப்பு நிறத்திலும் மாறிக் காட்சியளிப்பவர். திருஞான சம்பந்த ஸ்வாமிகள் திருவிற்கோல தேவாரப் பதிகத்தில் இதை கீழ்வருமாறு பதிந்திருக்கிறார்.

ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே
.

ஆம். நீங்கள் நினைப்பது சரியே. இப்போது மழை பொழிந்துகொண்டிருப்பதால் வெண் நிறத்தில் அருள்பாலித்தார். திவ்ய தரிசனம். ”குருக்களய்யா வந்துருவாருங்க...” என்று கையை நீட்டிக் காசு கேட்டுக்கொண்டிருந்த ஆள் சொன்னாலும் எங்கிருந்தோ வந்த ஒற்றைப் பூணல் மடப்பள்ளி பையன் தீபாரதானை காட்டினான். ஸ்பஷ்டமாக ஸ்லோகம் சொல்ல வரவில்லை. திரிபுராந்தகர் காப்பாற்றுவாராக என்று மனதார வேண்டிக்கொண்டேன். அச்சிறுத்த விநாயகரை பிரகாரத்தில் தரிசித்துக்கொண்டு கடைசியில் தன்னுடைய வாகனமான நாய் இல்லாத அதிசய பைரவரை தரிசித்தோம்.

மூன்றாவதாக தரிசித்த திருத்தலம் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மர். கோமண ரோட்டில் பயணித்து ஊருக்குள் வந்தால் நடுநாயகமா இருப்பது லக்ஷ்மி நரசிம்மர் கோயில். சென்ற இரு சிவத்தலங்களைப் போலில்லாமல் சொற்ப கூட்டமிருந்தது. வண்டியிலிருந்து காலைக் கீழே வைக்கும் முன் ரெண்டு மூன்று பேர் கையில் அர்ச்சனைக் கவரும் துளசியும் போடு விற்க முண்டியடித்தார்கள். இதுபோன்ற சிற்றூர்களில் இவ்வகையான விற்பனையாளர்களிடம் பேரம் பேசாமல் அர்ச்சனை செய்வது அடியேனுடைய வழக்கம். ஒரு கோயிலைச் சுற்றி உழைப்பதற்கு உட்கார்ந்தாலே காசு கிடைக்கும் என்று மக்களுக்குப் புரிய வேண்டும்.

ஆறடிக்கு இருந்தார் நரசிம்மர். க்ரீடமும் அபய ஹஸ்த கரங்களும் மின்னின. மடியில் அமர்ந்திருந்த லக்ஷ்மி பக்தர்களைப் பார்த்த வண்ணமிருந்தார். இங்கே லக்ஷ்மி நரசிம்மர் சாந்தமாக இருப்பதால் தாயார் பெருமாளைப் பார்த்துக்கொண்டிராமல் பக்தர்களுக்கு தன் அருட்பார்வையை வீசுகிறாளாம். எங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவரின் நட்சத்திரங்களையும் பொறுமையாகக் கேட்டு அர்ச்சனை செய்தார். இன்னும் என்னைப் பார்த்துக்கொண்டே இரு என்று லக்ஷ்மி நரசிம்மரும் தாயாரும் சொல்வது போலவே இருந்தது. துளசியோடு பச்சைக்கற்பூரம் ஏலக்காய் தட்டிப் போட்ட தீர்த்தத்தைச் சாதித்த போது மன்னார்குடி ராஜகோபாலன் மனசுக்குள் வந்துவிட்டார். சடாரி வாங்கிக்கொண்டு மரகதவல்லி சன்னிதியிலும் அர்ச்சனை செய்தோம். திவ்யமான தரிசனம்.

டீக்கடை வாசலில் நின்றிருந்தவரை “இலும்பையன்கோட்டூருக்கு இந்த ரோடு போகுங்களா?” என்று கேட்டதற்கு நேர் ரோட்டைக் காட்டாமல் வலம் இடமாகச் சுற்றிவிட்டார். ஒரு முறை வண்டியோடு சுற்றிவிட்டு மீண்டும் நேர்வழியில் இலும்பையங்கோட்டூருக்கு பயணித்தோம். கர்ப்பஸ்த்ரீக்கள் ஒரு முறை பயணித்தால் சுகப்பிரசவம் நிச்சயம். குண்டும் குழியுமாக இருந்த ரோடு முடிந்துவுடன் நல்ல ரோட்டைப் பார்த்து நீங்கள் வண்டியை விரட்டினால் இலும்பையன் கோட்டுர் கோயிலைத் தாண்டிவிடுவீர்கள். நிதானமாக வநதால் இடதுபுறம் போர்டு வைத்திருக்கிறார்கள். எனதுரையை தனதுரையாக என்று ஞானசம்பந்தர் பாடிய அற்புதத் திருத்தலம். ”தேனுமாய்... அமுதமாய்த் தெய்வமாய்..” என்ற பதிகத்தைப் பார்த்துவிட்டு கோயிலுக்குள் நுழைவோம்.

தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.


சின்ன சிமெண்ட் ரோடு. நேரே ஓடிப்போய் கோயிலில் முடிகிறது. பெரிய க்ரில் கதவு மூடியிருந்தது. சின்ன கோயில். ஆறு வருடங்களுக்கு முன்னால் வந்த போது வேத சம்ரக்ஷணம் செய்துகொண்டிருந்த வேதபாட சாலை இப்போது மூடியிருந்தது. டூ வீலரில் வந்த ஒரு தம்பதி கையில் அர்ச்சனைக் கவருடன் ஐயரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். “வந்தாருங்களா?” என்று விஜாரித்தால் “தெர்லீங்க” என்று அப்பாவியாகப் பார்த்தார்கள். ஆடு மேய்க்கும் ஆத்தா ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. “ஐயிரு காலேலே ஏளு மணிக்கெல்லாம் வந்துட்டு போய்டுவாருங்க...” என்றார்கள். “சாவி யாருகிட்டேயிருக்கு?” என்ற என் கேள்விக்கு “அங்கே...”ன்னு ஆகாயத்துக்கு கை காண்பித்தது. வெளியிலிருந்தே தரிசித்தோம். மூலவர் தீண்டாத் திருமேனி. கண்களால் தீண்டித் தரிசித்தோம். அர்ச்சகர்கள் கூட பானம், ஆவுடை என்று எதையும் தொடமாட்டார்கள். வேஷ்டி கட்டி விடுவது கூட விசிறி போர்த்திவிட்டு மேலும் கீழும் இழுத்துவிடுவார்கள்.

போன தடவை அர்த்தஜாமத்திற்கு வந்திருந்தேன். ருத்ர உச்சாடனம் செய்து தீபாராதனை காண்பித்தான் குடுமி வைத்த ஒரு வேதபாடசாலைப் பையன். குரல் கணீரென்று இருந்தது. இப்போது கண் முன்னே அந்தக் காட்சி விரிந்து என்னைத் திருப்திப்படுத்தியது. முள்ளும் கல்லும் மெத்தையாக வலம் வந்து இன்னொரு க்ரில் கேட்டுக்குப் பின்னால் சின் முத்திரையை நெஞ்சில் பிடித்து அமர்ந்திருக்கும் ஞானயோக தெக்ஷிணாமூர்த்தி நிறைவாக இருந்தது. அம்பாள் கனக குஜாம்பாள் சன்னிதி கொஞ்சூண்டு தெரிந்தது. மஹாபெரியவாள் ஒரு மண்டலம் இந்த க்ஷேத்திரத்தில் முகாமிட்டு ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை பண்ணியிருக்கிறார். இப்போது யாருமில்லாத அந்த இடம் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

தக்கோலம் கூட போயிருக்கலாம். மதியம் பனிரெண்டுக்கு மேலாக ஆகிவிட்டபடியால் சென்னைக்கு வண்டியை விரட்டினோம். ஸ்வாமி பார்த்த குஷியில் நாங்களும் சேப்பாயியும் பறந்து வீடு வந்து சேர்ந்தோம். இத்திருத்தல யாத்திரையில் எங்களோடு பயணித்த ஸ்ரீநிவாசன், மஹாதேவன், வல்லபா, அனன்யா மற்றும் அஜ்ஜு அனைவரும் பக்தி ரசத்தை ருசித்திருப்பார்கள் என்பது அவர்களது சந்தோஷம் பொங்கிய முகத்திலிருந்து அப்பட்டமாகத் தெரிந்தது.

ஈஸ்வர க்ருபையில் இதுபோன்ற ஸ்தல யாத்திரைகள் நீடிக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்வியாசத்தை பூர்த்தி செய்கிறேன். நம: ஸிவாய:

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails