Saturday, February 22, 2014

அமி ராக்ஸ்!

அமி ராக்ஸ்!
=========
டிஃபன் சாப்பிட்ட கையின் ஈரம் காய்வதற்குள் அசோகமித்திரனின் 1945ல் இப்படியெல்லாம் இருந்தது... என்ற புஸ்தகத்தைக் கையிலெடுத்தேன். முன்னட்டையில் ஈரம் பட்டதும் வேஷ்டியில் கையைத் துடைத்துக்கொண்டு கடைசி அட்டையைப் பிரித்தேன். ”அமுதசுரபி, பிப்ரவரி 2011” என்று கடைசி வரியில் போல்டாக அச்சிட்டிருந்தார்கள். அமியின் சிறுகதைத் தொகுப்பு.

புது மாப்பிள்ளையை மலைப்பாம்பு விழுங்கக் காத்திருக்கும் ஜோதிட கர்ண பரம்பரைக் கதையைப் படித்தேன். ஒரு நிமிடம் படித்ததை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மாப்பிள்ளையைக் காப்பாற்றிய அந்த மணப்பெண்ணின் புத்தி சாதுர்யத்தை கதையாக வடித்திருந்தது அற்புதமாக இருந்தது. அவளும் இன்னொரு ஜோதிடரின் மகள்.

சிரித்துக்கொண்டு பின்பக்கமாகவே அடுத்த கதைக்குள் சுதந்திரமாக நுழைந்தேன். அது “குழந்தைகள் இறக்கும் போது..” என்கிற துக்கக் கதை. சம்பகம் என்கிற சம்பூர்ணம் குழந்தையாகவே இறந்து போகும்போது அவளுடைய அண்ணா தங்கைகளை அறைக்குள் போட்டு பூட்டிவைத்த அம்மாவை அண்ணனாகிய மணி கடைசியில் கட்டிக்கொள்வதோடு கதை முடிந்தது. குழந்தையிலே சம்பகம் வியாதியால் பட்ட பாடும் அம்மா அப்பாவின் பரிதவிப்பையும் எழுதியிருந்தார். மனம் கனத்தது.

அப்படியே அதற்கு முன்னாலிருக்கும் கதையின் கொல்லைப்புறம் வழியாக இன்னும் கொஞ்சம் தூரம் புரட்டினேன். யாரோ தாயாதிகள் அனுபவிக்கும் தன்னுடைய கிராமத்து வீட்டிற்கு வருபவருடைய கதை. தங்குவதற்கு இடமளிக்கிறார்கள். சாப்பாடு போடுகிறார்கள். ஸ்வாதீனமாக அங்கே இருக்க முடிகிறது. வீட்டில் தனக்கும் பங்குண்டு என்று எப்படிச் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். மீண்டும் ஊருக்குக் கிளம்புவதற்கு முன்னர் ஊர்க்கோடியிலிருக்கும் கோயிலுக்கு செல்கிறார். கோயில் இருளோ என்று கிடக்கிறது. வெளிப்பிரகாரம் சுற்றுகிறார். கடைசி பிரகாரம். அப்பிரதக்ஷிணமாக யாரோ எதிரில் வருகிறார்கள். பஞ்சகச்சம் கட்டியிருக்கிறார்கள். எதிரில் வருபவர் இவர் மேலே மோதுவது போல வருகிறார்.

பக்கத்தில் வந்தவுடன் நெற்றி சுருங்கி யாரென்று பார்க்கிறான். கன்னத்தில் அறைந்தது போல அடையாளம் தெரிந்தது என்று அமி எழுதியிருக்கிறார். யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அவருடைய செத்துப்போன அப்பா!

”கோயிலாக இருந்தாலென்ன? பழைய கட்டடத்துக்கெல்லாம் தனியாக போகக்கூடாது” என்று சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள் என்று முடிக்கிறார்.

தனக்கு பங்குண்டு என்று இவர் வந்திறங்கிய வீடு பழைய வீடுதான். பழைய கட்டடந்தான்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails