Saturday, February 22, 2014

மணிநூபுரதாரி ராஜகோபால...தஞ்சையில் டின்னர் சாப்பிட்டதோடு கடைசியாக சென்ற வாரத்தில் யாத்திரைத் தொடரை முடித்திருந்தோம். இதோ சேப்பாயியைக் கிளப்பிவிட்டேன். ஓடிவந்து ஏறிக்கொள்ளுங்கள்.... அடையுமிடம் மன்னார்குடி.
தஞ்சையிலிருந்து வடுவூர் வழியாக மன்னைக்குச் செல்வது கண்ணை மூடிக்கொண்டு பழகின தெருவில் டயர் உருட்டுவது மாதிரி. பட்டுக்கோட்டை சாலை பிடித்து பொட்டு விளக்கில்லாமல் வழி போர்டு இல்லாமல் துக்கிரித்தனமான ரோடாக இருக்கும். இடதுபுறம் லாவகமாகத் திரும்பவேண்டும். ஒரத்தநாடு 18 கி.மீ என்றெல்லாம் போர்டு நட்டு வைத்திருப்பார்கள். ஆனால் மன்னார்குடிக்கு இதுதான் வழி என்று அம்புக்குறி போட்டு எழுதியிருக்கமாட்டார்கள். ஓரவஞ்சனை. இப்போது வண்டி ஓட்டுபவனுக்குப் பலநாள் பழக்கமாதலால் ஓடுவதும் அவனிச்சையாகத் திரும்பியது.

மாமிச மலைகளாக மோதிக்கொள்ளும் ரெஸ்ட்லிங் வீரர்கள் போல முக்கால்வாசி தூரம் இருபுறமும் பரட்டையாய் விரித்த கிளைமுடித் தலையை முட்டிக்கொண்டு ரோட்டுக்குக் கூரையாய் நிற்கும் அடி பெருத்த புளியமரங்கள். காரின் முக விளக்கை அணைத்துப் போட்டால் வெளிச்சம் முடியுமிடத்தில் தெரிவதுதான் இப்புவியின் அந்தம் போலவும் கீழே பாதையில் தொடரும் தார்ரோடே ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொண்டு அபாயகரமாக அவ்வெளிச்சம் எட்ட முடியாத இடத்தில் முடிந்ததுபோலவும் ஒரு அந்தகார இருட்டு. வழியில் எல்லா ஊரும் அடங்கிவிட்டது. தஞ்சை ஜில்லாவின் இரவு நேர கிராமங்களில் ட்யூப் மினுக்கும் சில ஓட்டு வீட்டு வைக்கல் போர் வாசலை சன் மற்றும் ஏர்டெல் டிடிஹெச்சுகளின் தட்டுகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. முள்வேலி கம்பத்தில் கட்டிய மாடுகள் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தன.

உள்ளே தமிழ்மாலையோ மானாட மயிலாடவோ நடந்துகொண்டிருக்கலாம். கிராமங்களின் முடிவில் இருபுறமும் வயற்காடு. மீண்டும் இன்னொரு ஊர். இன்னொரு வயற்காடு. இந்த சீன் ரிப்பீட் ஆனது. வடுவூர் ஏரியில் பிரமாதமாக ஒன்றும் தண்ணீரில்லை. ராமர் கோவில் ராஜகோபுரம் தெரிந்தது. கம்பளி போர்த்திக்கொண்டு வயசாளிகள் இருவர் கடைத்தெரு ஏடியெம் வாசலில் பீடியும் கையுமாக சூடேற்றிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ”ராமா...ராமா..”ன்னு வடுவூராரை மனதில் இருத்தி ஆக்ஸிலை அழுத்தினேன். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................ஏக் தம். மன்னார்குடியின் எல்லையை அடைந்தோம்.

காளவாய்க்கரை முருகன் கோயிலுக்குப் போகும் சந்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு சாந்தி தியேட்டர் பக்கம் வண்டி திரும்பியது. சாந்தியில் பிரியாணி போட்டிருந்தார்கள். எதிர்த்தார்போல மாரீஸ் டைலர்ஸ் கடையைக் காணோம். ராஜு டீக்கடையைக் காணோம். ரோட்டோர டிஃபன் கடை ஸ்டூல்களில் ஒன்றிரண்டு பேர் அமர்ந்து இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். தட்டிலிருந்து ஆவி பறந்தது. கோபாலன் கோபுரம் விண்ணை முட்டி நின்றுகொண்டிருந்தது. தேரடி. ஃபயர் சர்வீஸ். தாஸ் கடை. ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல். சின்ன கான்மெண்ட். முக்கு திரும்பியதும் “ஹோ...”வெனப் பரந்திருந்த ஹரித்ராநதி தெரிந்தது. குளமும் கரையோர மக்களும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒலி எழுப்பி இம்சிக்காமல் புலியாய்ப் பாயும் சேப்பாயியைப் பூனையாய்ச் செலுத்தி நுழைந்தேன்.

ஜேயீ வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். பாலுவுடனும் ஜேயீயுடனும் சுருக்கமாக ஊர்வம்பு பேசிவிட்டு படுத்ததும் இமையிரண்டும் இழுத்து படக்கென்று மூடிக்கொண்டன. மறுகணம் உள்ளம் விழித்துக்கொண்டது. தென், மேற்கு, வடக்கு, கிழக்கு என்று கரை கரையாக நண்பர்களும் தெரிந்தவர்களும் கடை கன்னிகளும் ஞாபகத்துக்கு வந்து கும்மாளமடித்தார்கள். எப்போது தூங்கிப்போனேன் என்று தெரியாமல் ”கோபாலனைப் பார்க்க போக வேண்டாமாடா?” என்று என் சிற்றன்னை எழுப்பும் போது மன்னையின் பொழுது விடிந்திருந்தது. வாசலில் மென் பனியில் வாண்டுகளும் வயதானவர்களுமாய் அரைக்கு வேஷ்டியுடனும் தோளுக்கு ஒரு முழம் மல்லிப்பூவுடனும் பஜனை கோஷ்டிச் சென்றது. அந்த நேரத்திலும் காசித்துண்டுடன் இருவரைக் குளம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. குளக்கரைக் குளிரில் மேனி குடைக்கம்பியாய் ஜில்லிட்டது.

சுறுசுறுப்பாகக் கிளம்பிச் சென்ற முதல் இடம் “மணி நூபுரதாரி ராஜகோபால...” ஸ்வாமி கோயில். தங்கக் கலசங்கள் மின்னும் வானுயுர்ந்த கோபுரவாசலில் சிறிய திருவடி அனுமன் சன்னிதி. சுவாதீனமாகத் தலையைக் கலைத்துப் போட்ட காற்றை அனுபவித்துக்கொண்டே வாயுபுத்திரனை தரிசிக்க படியேறினோம். ஜெம்பகேசன் சார் இருந்தார். “வாப்பா...எப்படியிருக்கே... வாங்கோ டீச்சர்... சௌக்கியமா இருக்கேளா?” என்று நலம் விஜாரித்தார். “நன்னா தரிசனம் பண்ணிக்கோங்கோ.... ஐந்திலே ஒன்று பெற்றான்..ஐந்திலே ஒன்றைத் தாவி...” என்று கம்பனின் ஒத்தாசையோடு கோபுரவாசல் அனுமனை ஆராதித்தார். ஒரு வயதான தம்பதியினர் அந்த உயர்ந்த படியில் கவனமாக ஏறுவதற்காகப் “படி..படி...அப்பயும் படி படின்னேன்.. இப்பயும் படி படிங்கிறேன்...” என்றார். சன்னிதிக்குள் ஏறிய ஒரு தம்பதிக்குப் புரியவில்லை. “அவர் தமிழாசிரியரா இருந்தார்...அதான் சிலேடை...”ன்னு சொன்னேன். சிரித்தார்கள்.

செங்கமலம் முதுமலை புத்துணர்வு முகாமிற்கு சென்றிருக்கிறாளாம். காலுக்குக் கட்டும் சங்கிலி மட்டும் தூணோடு கட்டியிருக்க யானைவாசனை மிஸ்ஸிங். மணவாள மாமுனிகள் சன்னிதியும் நேரெதிரே அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபமும் இன்னமும் “பாட்டி...” என்று கொஞ்சம் சத்தமாக முனகினால் கூட அவள் போய்ச்சேர்ந்த கைலாயத்திற்கே கேட்கும் படி திரும்பத் திரும்பக் கூப்பிடுகிறது. அனவரதமும் அரையிருட்டில் இருக்கும் இடம். கோவிலுக்கு சைட் அடிக்க மட்டும் வருபவர்களுக்கு இது புண்ணியமான ஸ்பாட். இங்கே “தம்பி.. படி பார்த்துச் சொல்லுடா..”ம்பா பாட்டி. எம்பளது வயசுல புறப்பாடு பார்க்கவும் ராப்பத்துக்கும் ஆளாய்ப் பறந்து ஓடிவருவாள். முதல்நாள் இரவு ”காலெல்லாம் வின்வின்னுன்னு கடுக்கறதுடா..” என்று சர்வரோக நிவாரணி, பெயின் பாமான அந்தக்கால தென்னமரக்குடி எண்ணெய் தேய்த்துவிட்டுக்கொண்டு மறுநாள் காலை சர்வீஸுக்குப் போய்ட்டு வந்த ஃபியட் கார் போலத் தயாராகிவிடுவாள்.

பெருமாள் சன்னிதி துவஜஸ்தம்பம் தாண்டி இடதுபுறம் தாயார் சன்னிதி போகும் வழியில் சென்றோம். “தாயார் தான் பெருமாள்ட்ட நமக்காக ரெக்கமண்ட் பண்ணுவா...நாமெல்லாம் தாய்க்குச் சேயில்லையா... அவளைத்தான் மொதல்ல தரிசனம் பண்ணனும்”ன்னு வேளுக்குடியார் உருகுவார். தாயார் சன்னிதிக்கு முன்னாலிருக்கும் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் ஸேவை பார்த்து ரசித்திருக்கிறோம். தாயார் சன்னிதி துவஜஸ்தம்பத்திலிருந்து இடதுபுறமிருக்கும் பிரம்மாண்டமான துளசிமாடத்தை வலம் வந்து செம்பகலக்ஷ்மி தாயார் சன்னிதியை அடைகிறோம். ஏகாந்த தரிசனம். ஒரு குங்குமார்ச்சனை செய்தோம். உள் பிரகார பிரதக்ஷிணம் முடித்துக்கொண்டு ராஜகோபாலன் சன்னிதிக்கு முன்னால் இருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம். வாய் பேச முடியாத ஆனால் கண்களாலும் சமிக்ஞைகளாலும் பேசும் ஃப்ரெண்ட் பட்டர் இருந்தார். கையாலேயே குசலம் விஜாரித்துவிட்டு ரெண்டு பட்டை புளியோதரைப் பிரசாதம் தந்தருளினார். அந்தப் பிரதேசமே மடப்பள்ளியானது. அப்பவே கையை வைக்க புளியோதரை வாசனை அள்ளியது. கோபாலனைப் பார்த்துவிட்டு சாப்பிடலாமென்று அனுமனடியில் கிடந்த ப்ளாஸ்டிக் கவர் கேட்டு வாங்கி பத்திரமாகப் பிரசாதத்தை இட்டுக்கொண்டு ராஜகோபாலன் சன்னிதியில் இருந்தோம்.

பார்க்கப்பார்க்க பரவசமூட்டும் அழகு ராஜகோபாலனுடையது. ஏக வஸ்திரதாரி. இடுப்புக்கும் தலைக்கு முண்டாசுமாய் ஒரே வஸ்திரத்தில் பசுக்களை மேய்க்கும் கண்ணனாகத் திருக்கோலம். வேத்ரபாணியாக கையில் சாட்டையுடன் புன்னகை தவழ நிற்கிறார். பின்னால் மூலவர் பரவாசுதேவப்பெருமாள். ஸ்ரீதேவி பூமா தேவி நாச்சியார்களுடன் தங்கக் கவசத்தில் ஜொலித்தார். ஸ்ரீராம், பிரசன்னா, துவாரகா என்று தெரிந்தவர்கள் யாரும் சன்னிதியில் இல்லை. இருந்தவர் வடுவூர்க்காரராம். முன்னால் சொன்ன மூன்று பெயர்களுக்கு நல்ல மவுசு இருந்தது அவரது விஸ்தாரமான அர்ச்சனையில் தெரிந்தது.

கோபாலனை ஒரு பத்து நிமிஷங்களுக்கு அனைத்து திருநாமங்களையும் சொல்லி அர்ச்சித்தார். மனசு குளிர்ந்தது. “தக்ஷிணத் துவாரகை, பரவாசுதேவபுரிங்கிறது இந்த க்ஷேத்ரப் பேர்.. மூலவர் பரவாசுதேவப்பெருமாள், ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக ஏக வஸ்திரதாரியா, கையிலே சாட்டை, இடுப்பிலே ச்சாவிக்கொத்து, பசு மாடு கன்னுக்குட்டிகளோட உற்சவரா சேவை சாதிக்கிறார். பக்கத்துல சந்தான கோபாலன். கையில வாங்கி பிரார்த்தனை பண்ணிக்கிறது விசேஷம். சந்தான பாக்யம், தொழில் அபிவிருத்தி, ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யம்னு இஷ்டகார்யங்கள் பூர்த்தியாறது...”ன்னு தீபாராதனை காண்பித்தார்.

”கரார விந்தேனே பதார விந்தம்... முகார விந்தேன வினிவே ஸ்யந்தம்... வடஸ்ய பத்ரஸ்ய புடேசயானம்.. பாலம் முகுந்தம் மனஸாஸ்மராமி..”ன்னு சந்தான கோபாலனைக் கையில் தூக்கிக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவரது கம்பீரமான ”கரார விந்தேனே...” சன்னிதியை விட்டு வெளியே வந்து உள்பிரகாரத்தில் வைஷ்ணவராக மதம் மாறிய சிவனின் மூத்த பிள்ளை தும்பிக்கையாழ்வாரைத் தரிசித்துப் பின் விஷ்ணு மாயா என்றழைக்கப்படும் துர்க்கையையும் கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியே துவஜஸ்தம்பத்தருகே நமஸ்காரம் செய்கின்ற வரை கூடவே வந்தது. காதெல்லாம் ”கரார விந்தேனே...பதார விந்தம்..” திவ்யமாகக் கேட்டுக்கொண்டேயிருந்தது. தாமரைப் போல கையும் தாமரைப் போல கால்களும் கொண்டு முகமாகிய தாமரையில் உள்ள செம்பவள வாயினால் கால் கட்டை விரலைச் சுவைத்துக்கொண்டு ஆலிலை மேல் படுத்துக்கொண்டிருக்கும் குழந்தை கிருஷ்ணனை மனமார நினைத்துப் பூஜிக்கிறேன்.

பதினெட்டு நாள் பங்குனி உற்சவத்தில் பல்லக்கிலும் வாகனத்திலேயும் முழுசாகக் குடியிருப்பார். ஊரெங்கும் ஜிங்ஜிங்கென்று ஒய்யார விஸிட். வெண்ணெய்த்தாழியில் கையில் குடத்துடன் தவழ்ந்த திருக்கோலத்தில் மேனியெங்கும் ஊரார் அடித்த வெண்ணெய். குதிரை வாகனத்தில் செட்டித்தெருவில் வையாளி ஓடுவார். சூர்யப்ரபை, சந்திரப்ரபை, பஞ்சமுக ஆஞ்சநேயர், கண்டபேரண்ட பக்ஷி, புன்னைமர வாகனம், பந்தலடியில் குறவன் குறத்தி, கீழராஜவீதி மேலராஜவீதியெங்கும் நாகஸ்வர மேளக் கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று மன்னார்குடியே திமிலோகப்படும். டிவிகள் சமுதாயத்தை சீரழிக்காத இரவுகள் அவை. வீதியெங்கும் கூட்டம்.

கோவிலை விட்டு வெளியே வந்தோம். அடுத்து ஆனந்த விநாயகர் கோயில். சாமி தியேட்டர் கலரெல்லாம் உறிந்து களையிழந்துவிட்டது. கல்யாணம் ஆன புதிதில் சங்கீதாவுடன் சாமியில் முதல்வன் படம் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏ ரோவில் உட்கார்ந்து பார்த்தோம். “இதான் உங்கூர்ல ஃபர்ஸ்ட் க்ளாஸா?” என்றார்கள் பட்டணத்து அம்மணி. “ஆமாம்..” என்றேன் இளித்துக்கொண்டே அசடாட்டம். உட்கார்ந்த இடத்திலிருந்து இரண்டு பிரி நார் எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு திரையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சாமியைக் கடக்கும் போது ஒரு தசாப்தத்துக்கும் முன்னால் நடந்தவைகள் மன ஸ்கீரினில் ஓடியது.

ஆனந்த விநாயகர் கோயில் குளத்தை கால்வாசிக்கு வகுந்து மண் நிரப்பியிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு தண்ணி டேங்க் பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனை வாங்கிக்கொண்டு திரும்பிய போது வாசலில் அமர்ந்திருந்த திருவாளர் பிச்சையிடம் ”ஏன் மண்ணு போட்ருக்காங்க?” ன்றதற்கு “காசு போடுவியா” பார்வை பார்த்தார். வினாயகர் கோயில் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கும்பாபிஷேகம் ஆகியிருந்தது. சுவற்றில் பெயிண்ட் வாசனை வந்தது. சன்னிதிக்குள் செகப்புக் கலர் கடப்பாக் கல் திருப்பணி வழக்கம் போல ஆர்.ஆர். ட்ராவல்ஸ் செய்திருந்தார்கள். நேஷனல் ஸ்கூல் யூனிஃபார்மில் கூடுதலாகக் கழுத்துக்கு டை சேர்ந்திருக்கிறது. நேஷனல் பையன் விபூதியை நெற்றிக்கு இட்டுக்கொண்டு கழுத்தில் டைக்கும் கொஞ்சம் பூசிக்கொண்டதில் டையின் நடைமுறை உபயோகம் தெரிந்தது. நிறைய பேர் ஆனந்தவிநாயகர் கோவிலில் அன்னதானம் செய்வதாகக் குருக்கள் சொன்னார். “உங்க அப்பா இங்க இருக்கறச்சே....” என்று சிற்றன்னையிடம் என் தாத்தா ஸ்ரீநிவாசனைப் பற்றிச் சிலாகித்தார். எனக்கு பக்கத்திலிருக்கும் நேஷனல் ஸ்கூல் ஜன்னலில் தெரியும் பதினோரம் வகுப்பும் என் சித்திக்கு அவளது அப்பா ஸ்ரீநிவாசனின் ஞாபகமும் ஃப்ளிம் சுருளில் அடித்த வெளிச்சம் போல கோவில் சுவற்றில் படமாய் ஓடியது.

புனரமைக்கப்பட்ட சுதர்ஸன் காஃபியைப் பார்த்துக்கொண்டே கம்மாளத்தெரு முக்கில் இருக்கும் காமாக்ஷியம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே தரிசனம். குருக்கள் நண்பர் ப்ரகாஷ் கோவிலில்லில்லை. உழவாரப் பணிக்காக ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியின் நந்திக்குப் பக்கத்தில் விளக்கமாற்றால் ஒரு பையன் பெருக்கிக்கொண்டிருந்தான். கண்ணப்பன் நந்தியின் மாஸ்டர் மேலே காலையே வைத்தான். இந்தப்பன் பக்தியில் விளக்கமாற்றால் நந்திக்கருகில் பெருக்கக்கூடாதா என்ன? ஒரு குழு பிரகாரத்தில் கெஜ்ரிவால் கட்சி ஆட்கள் போல கையில் விளக்கமாற்றோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள். வலம் வந்து கம்மாளத்தெரு வழியாக மேலராஜவீதியுள் நுழைந்தோம். ஜீவா பேக்கரி துரைக்கு காரிலிருந்தே ஒரு ஹாய் சொன்னேன். துரைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ரெடிமேட்ஸ்ஸில் கணேஷ் இல்லை. குஞ்சான் செட்டியார் பலகாரக் கடை மூடியிருந்தது. சோழனிலும் வீராவிலும் சொற்ப கஸ்டமர்கள் உப்பு புளி டிடெர்ஜெண்ட் சோப்பு வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். மன்னை கடைத்தெருவில் சேப்பாயி அன்னநடை பயின்றாள்.

கோபாலன் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே மீண்டும் ஹரித்ராநதி அடைந்தோம். தக்ஷிணத்துவாரகை என்று போற்றப்படுவதால் தெப்பக்குளத்தை யமுனா நதியாகப் பாவித்து ஹரித்ராநதி என்று பெயர் சூட்டிக்கொண்டது. செம்பகாரண்ய க்ஷேத்திரமாக இருந்த பொழுது இங்கே வசித்து வந்த கோபில கோப்பிரளயர் என்ற இருமுனிவர்கள் கண்ணனைக் காண துவாரகைக்குப் பயணப்பட்டனர். வழியில் நாரதர் தோன்றி க்ருஷ்ண பரமாத்மா பூவுலகை விட்டு வைகுண்டம் சென்றுவிட்டதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மூர்ச்சையுற்றனர். நாரதர் அவர்களை செம்பகாரண்ய க்ஷேத்திரத்திலிருக்கும் ஹரித்ராநதியில் நீராடி கண்ணனை நினைத்து தவமிருந்தால் காட்சியளிப்பார் என்று அருளினார். அப்படி அவர்கள் தவத்தில் மெச்சி வசுதேவராகவும் க்ருஷ்ணனாகவும் மற்றும் தனது அனைத்து லீலைகளை இக்குளத்தில் காண்பித்தார் என்பதுவும் புராண கதை. க்ருஷ்ணன் ஆடிய அந்தக் குளக்கரையில் இந்த ஆர்.வி.சுப்ரமணியனும் விளையாண்டிருக்கிறான் என்பது விசேட செய்தி...

மூன்று மணிக்கு மேலே மன்னையிலிருந்து கிளம்பிச் சென்று தரிசித்த மூன்று அற்புதமான சிவஸ்தலங்களைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் பதிவு தொடரும்... நரசிம்மர் சிற்பப் படம் ஒன்றை சில நாட்கள் முன்னர் டைம்லயனில் பகிர்ந்திருந்தேன்... அந்தக் கோயில் பற்றியும் அடுத்த பதிவில்.....

(யாத்திரை தொடரும்....)

1 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆஞ்சநேயர் தரிசனம். வாய் பேச முடியாத ஆனால் கண்களாலும் சமிக்ஞைகளாலும் பேசும் ஃப்ரெண்ட் பட்டர் இருந்தார். //

நாங்களும் ஆச்சரியப்பட்டோம் ..

கரார்விந்தேன - இன்னமும் காதில் ஒலிக்கிறது ..அருமையான மன்னார்குடி தரிசனம் ..

பாராட்டுக்கள்..!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails