Monday, February 1, 2016

வடகிறுக்குப் பருவமழை

இப்போதான் இதை எழுத கை ஒழிஞ்சுது. 

மூன்று தினங்களுக்கு முன்னர் ஆஃபீஸில் உக்கிரமான வேலை. எட்டு மணி வாக்கில் வெளியே எட்டிப் பார்த்தால் கும்மிருட்டு. சாரல் திருவிழா மாதிரி மழை பிசுபிசுவென்று பூமியைக் கிச்சுக்கிச்சு மூட்டித் தரையிறங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கன்னத்தில் வைத்து சூடுபடுத்திகொள்ளத் தூண்டும் ஜிலீர் சீதோஷணம். உள்ளுக்குள் மனசு பூத்திருந்தது. ”நாலு நாலரை மணி வாக்குல சரி போடு போட்டுச்சு...”. பேசிக்கொண்டே எங்கள் பேட்டையாட்கள் இரண்டு மூன்று பேரோடு எட்டரை மணிக்கு சேப்பாயியைக் கிளம்பினேன். 

டீஸல் முள் தரையைத் தொட்டிருந்ததால் சேப்பாயியின் வயிற்றுக்கு விருந்தளித்து அ. எஸ்டேட்டிலிருந்து பயணமானோம். எப்பாடு பட்டேணும் பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடித்து கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், கத்திப்பாரா, நங்கை மார்க்கமாக நான் கூடடைய வேண்டும். நேர் வழி.

எரிபொருள் நிலையத்திலிருந்து வெளியே வந்த போதே ரோட்டோரங்களில் ஆங்காங்கே சலசலப்பு. சிற்றாறுகள் அடக்கமாக ஓடிக்கொண்டிருந்தன. 

“சாயங்காலம் நல்ல மழை... வானம் பொத்துக்கிட்டு ஊத்திச்சு...” என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது சிற்றாறு இன்னும் நாலைந்து தோஸ்த் ஆறுகளோடு சங்கமித்து வற்றாத ஜீவநதி போல நடுரோட்டில் அலையடித்துக்கொண்டிருக்க முண்டா பனியனோடு கைலி கட்டிய ஒரு பரோபகாரி “லெப்ட்ல போங்க சார்...” என்று ஒரு குட்டிச் சந்தைக் காட்டினார். அவர் பின்னால் பாதாள சாக்கடைத் திறக்கப்பட்டு நம் தேசத்தவர்கள் ப்ரேக் டவுன் அடையாளமாகக் கையாளப்படும் மரக்கிளை இலைகளோடு செருகியிருந்தது. அக்கிளையின் நாற்புறமும் ஊற்று போல குபுகுபுவென்று தண்ணீர். கொஞ்சம் கறுப்புத் தண்ணீர். கறுப்பா தண்ணீ இருக்குமா? ம்.. சரி.. அது SKT. [கமெண்ட்டில் ”அதென்ன எஸ்கேடி?” என்று நீங்கள் ஆர்வமாகத் தலையை நீட்டுவதற்கு முன்னர் எஸ்ஸுக்கும் டீக்கும் அர்த்தம் சொல்லிவிடுகிறேன். S= ஸர்வ, T=தீர்த்தம், K= ? ]

காரின் இரண்டு பக்கமிருந்த ரியர் வ்யூ மிரரிலிருந்து இரண்டு விரற்கடை இடைவெளியில் இல்லங்களின் சுவர் முட்டும் சந்து. கீழே அரை சக்கரங்கள் மூழ்குமளவிற்கு ஜலம் இருக்கிறது என்று எதிரே கணுக்கால் வரை புடவையை உயர்த்திக்கொண்டு வந்த பெண்மணி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சமுத்திரத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அலறி ஆக்ஸிலை அழுத்தினால் பக்கவாட்டில் திறந்திருந்த ஜன்னலிலிருந்து ”மேல தண்ணி அடிச்சுட்டுப் போறாம் பாரு பேமானி..” என்று ஹஸ்கி வாய்ஸில் அர்ச்சனை செய்தால் கூட நமக்குக் கேட்டுவிடும். 

“முருகா காப்பாத்து..” என்று ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு திரும்பிவிட்டேன். முன்னால் போன குட்டி யானை (டாட்டா ஏஸ்) தப்பாக முட்டிக்கொண்டு பிருஷ்ட பாகத்தை ஆட்டும் நிஜ குட்டியானை போல ஆட்டியாட்டி திரும்பிக்கொண்டிருந்தது. அதுவரை தண்ணீரில் காத்திருக்கும்போது தற்காலிக வெனிஸாக மாறியிருந்த அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பொடியன் நேரே வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, முகம் பிரகாசிக்க, நீல ட்ராயர் தூக்கிச் சர்வ சுதந்திரமாகப் பிஸ்ஸினான். அவன் பங்குக்கு 0.00000000000001 மடங்கு ரோட்டுத் தண்ணீரை உயர்த்தினான்.

இரண்டு லெப்ட், இரண்டு ரைட், ஒரு ஷ்ட்ரெயிட் என்று கார் ஸ்டியரிங் கார்ட் வீலாகச் சுழல தலைசுத்தும் அளவிற்கு சந்துகளுக்குள் சிந்துபாடிக்கொண்டிருக்கும் போது திரும்பவும் பூ.நெடுஞ்சாலையை அடையவேண்டும் என்ற ஞாபகம் திடுமென வந்தது. “சார்... பூந்தமல்லி ஹை ரோடு..” என்று இழுத்தவுடன் ”நேரே லெஃப்டு... அப்புறம் ஒரு ரைட்டு.. கொஞ்சம் வளைஞ்சாப்ல போய்ட்டு....ஷ்ட்ரெயிட்டு.. அப்புறம் ஒரு லெஃப்ட்டு...” என்று இன்னமும் முன்னால் கையை சுளுக்கும் வரை ஆட்டியாட்டி நீட்டி திசைகள் எட்டையும் ஆகாயத்தில் வழி போட்டுக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் பவ்யமாக நன்றி சொல்லிவிட்டு தோராயமாக சோத்தாங்கைப் பக்கமாகவே வளைத்துக்கொண்டு போய் பூ.நெடுஞ்சாலை அடைந்துவிட்டோம். 

இதற்குள் இரண்டு முறை கைகால் அலம்பிக்கொண்டாள் சேப்பாயி. கூகிள் மேப்ஸால் வழி கண்டுபிடித்து தப்பிக்கலாம் என்றால், பிரளய வெள்ளக் காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்கள் காட்டுமளவிற்கு அதற்கு திறமை இன்னும் புகட்டப்படவில்லை. நம்மூரு சுந்தர் பிச்சை இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கூகிள் மேப்களில் தண்ணீரடித்துக் காண்பிக்க ஆவன செய்யுமாறு திடீர் வெள்ளத்தில் மிதப்போர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சாமர்த்தியமாக கோயம்பேடு பாலம் ஏறியாகிவிட்டது. இடதுபுறம் திரும்புவதற்கு வாகன பேதமின்றி நமது பிராந்தியத்தின் பிரதான பழக்கமான “ஒருவர் மீது... ஒருவர் ஏறி....” ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார்கள். சீட்டுக்கட்டை ஒன்றன் மீது ஒன்றாக தரையில் சார்த்தி வைத்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகன வரிசை. அந்த வழியில் சென்றால் திரும்ப முடியாது என்று இன்னும் கொஞ்ச தூரம் நேரே சென்று கோயம்பேடு பக்கம் திரும்பும் இன்னொரு சந்தில் வண்டியை விட்டோம். “நேரே போ... சின்னோண்டு லெஃப்ட் வரும் பாரு...” என்ற வழிகாட்டி சத்யாவிடம் “நாம... இப்ப மட்டும் என்.ஹெச் 45 ல வரோமா?”ன்னேன். சிரித்தேன். இதுவரை பயணத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்தது. 

கண்ணைக் கட்டிக் கடத்துவது போல இடது வலதாக அழைத்துக்கொண்டு போய் “அதோ பாரு... வந்திடுச்சு..” என்று மெயின் ரோட்டை தூரத்தில் நிலா காண்பித்து குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போலக் காட்டினார் சத்யா. அங்கு ஒரு சவால். அந்த மெயின் ரோடு அடைவதற்கு சேப்பாயியின் கழுத்தளவு நீரில் நீஞ்சிக் கடக்கவேண்டும். போனெட்டில் அடித்து கார்க் கண்ணாடியைக் கழுவுமளவிற்கு தண்ணீர். நெஞ்சுரம் மிக்க ஓட்டுனர்கள் மட்டுமே களம் காண முடியும் என்கிற போராளி நிலைமை. அதைக் கடப்பதற்கான சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தொடை வரை வேஷ்டியைத் தூக்கிக்கொண்டு செக்ஸியாக வரும் மாமாவின் மேல் தண்ணீர் தெளிக்கக்கூடாது

2. அயராது உழைத்துக்கொண்டிருந்த போலீஸ் மேல் நீர் பாய்ச்சக்கூடாது. ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம். 

3. தோண்டி வைத்திருக்கும் பள்ளத்தில் விழுந்து ஸ்டியரிங்கில் அடிபட்டு பல்லு மொகரை பேந்தாலும் கெட்டியாகப் பிடித்த ஸ்டியரிங்கை விடக்கூடாது, 

4. மூளையும் கண்களும் சேர்ந்து உழைத்து காம்பஸின் திறன் கொடுத்து வாய் பிளந்த சைஃபன் இருக்கும் திசை அறிய வேண்டும். ஓடும் தண்ணீரில் சுழி பார்க்கத் தெரிந்தால் தப்பித்துவிடலாம்.

ஏக் தம். க்ளட்சை அழுத்தி ஒரு முறை ”ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்”மென்று உறுமினேன். ஃபர்ஸ்ட் கியர். ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார். உடையும் வரை மெறி. ஆறு செகண்டுகளில் வண்டியில் இருந்த அனைவருக்கும் புனர் ஜென்மம் கிடைத்தது போல மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
திரும்பியதும் தெரிந்துவிட்டது. வாகன சமுத்திரம். ”விடியும்போது வீட்டுக்கு பால் வாங்கிக்கொண்டு போகலாம்...” என்று ஃபோனில் சத்யாவின் கிண்டல் வேறு. “பாய்ங்.. பாய்ங்..” என்ற ஆம்புலன்ஸ் சத்தம்தான் என்னை மிகவும் இம்சை செய்தது. வண்டிக்குள் தவிப்பவருக்குக் காலனின் காலக்கெடு எதுவரையோ? 

ஷுகர் குறைய ஆரம்பித்ததில் க்ளட்ச் மிதத்த கால் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்தது. அடுத்த இலக்கு ஏதோ ஒரு ஆகாரம் வேண்டும். தேடு. சுற்றிலும் தேடு. இரை தேடு. மணி இரவு 9:45. அரும்பாக்கம் ஸ்டேஷன் மூலையில் தெரிந்தது. இடதுபுறம் குளிருக்கு இதமாக டாஸ்மாக்கில் ஹாட் விற்பனை நடந்துகொண்டிருந்தது. பக்கத்தில் பொட்டிக்கடை. மிச்சர் பாக்கெட்டும் கடலை மிட்டாயும் காரக் கடலையும் கட்டாயம் விற்பனையாகும் இடம். ”நாலைஞ்சு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக்கோங்க... வண்டி நகர்ந்தாலும் நீங்க நடந்து வந்து பிடிச்சுடலாம்...” என்று ஒருவரை தைரியமூட்டிக் கடலை மிட்டாய் வாங்க இறக்கிவிட்டேன்.

பத்தடி நகர்வதற்குள் அன்னநடை நடந்து வந்து ஏறிக்கொண்டார். ஷுகர் பிரச்சனை தீர்ந்தது. வயிற்றுக்கும் ஈந்தாகிவிட்டது. நோ ப்ராப்ளம். ரெண்டு கடலை மிட்டாயில் இருண்ட கண்களுக்கு ஒளி வந்தது. அரும்பாக்கம் ஸ்டேஷன் தாண்டி பெரியார் பாதையில் வெள்ளம். இரண்டு பாடிகளை ஒட்ட வைத்த ஒரு நீண்ட பஸ்ஸின் பின்னால் வால் பிடித்துக்கொண்டு இன்ச்சிக்கொண்டிருந்தேன். ஆட்டோவாலா ஒருவர் இண்டு இடுக்கில் புகுந்து எங்கள் தொடர்பை அறுத்தார். சட்டென்று ஆட்டோ ரைட்டில் ஜகா வாங்க என் முன்னே “ஹோ...”வென்று சமுத்திரம் போல தண்ணீர். பஸ்ஸும் போய்விட்டது.

முன்னால் செல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “நேரே போகமுடியுமா? இல்லை.. மேலே போய்விடுவோமா?” என்று தடுமாறி திக்குத் தெரியாமல் திணறி நின்றார்கள். இந்த அமளிதுமளியில் டவேராவை இடதுபுறம் ஓரங்கட்டி ஒய்யாரமாக ட்ரைவர் சீட்டில் சாய்ந்து கொண்டு ஜன்னல் அனைத்தையும் ஏற்றிவிட்டு ஒருவர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞன். பராக்கு பார்க்காமல் சாலையைப் பார்த்தேன். நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை சேப்பாயிக்கு துணிச்சலான வேலை. மனதில் ஆஞ்சநேயரை துணைக்காக நிறுத்திக்கொண்டேன். இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் மீடியேட்டர் வரை ஒரு ஆர்க் அடித்து திரும்பினேன். ”பளக்... பளக்...” என்று தண்ணீர் வண்டியின் ஜன்னல்களிலும் கண்ணாடியிலும் மோதும் சப்தம் பயங்காட்டியது. 

வெற்றிவீரனாக இரண்டாவது கடலையும் தாண்டியபிறகு சாலை வெறிச்சென்று இருந்தது. வடபழனி சிக்னலில் வலம் இடமாக பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். அவைகளை இலகுவில் கடந்து அசோக் நகர் சிக்னலில் சுமாராக இழுப்பு இருந்தது. காசி தியேட்டர் தாண்டியவுடன் வரும் அடையாறு பாலத்தில் கொட்டும் மழையில் நின்று கொண்டு வெள்ளம் ரசித்த ஆள் இதுவரை தண்ணியில்லாக் காட்டில் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனின் கிருபையினால் கத்திப்பாராவை அடைந்தோம். பாலமும் ஏறி இறங்கியாச்சு. உதிரியாய் ஒன்றிரண்டு வாகனங்கள். சந்தோஷம். இன்னும் பத்து நிமிஷத்தில் வீடு சேர்ந்து டாங்க் க்ளியர் செய்துவிடலாம். ஆத்திரத்தை அடக்கினாலும்..... என்கிற ஃபேமஸ் வசனம் உங்களுக்கு இப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியாது. மணி இரவு பதினொன்று.

வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரும் என்பதற்கு அடையாளமாக அடுத்த நூறு மீட்டரில் மீண்டும் மழை வெள்ளத்தைத் தோற்கடிக்கும் வாகன வெள்ளம். சின்னக் குழந்தை ஒன்றை ட்யூஷன் பேக்கோடு நனைய நனைய பின்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மீண்டும் “ஹொய்ங்..ஹொய்ங்...” என்று ஆம்புலன்ஸ் சப்தம். ஊஹும். ஒரடி விலகி இடம் கொடுக்க முடியாது. திடீரென்று மின்னலென மழை நின்றுவிட்டது. கோபாலன் கோவர்த்தனகிரியைப் பிடித்துவிட்டானா? என்று ஆச்சரியப்பட்ட போது மெட்ரோவிற்காகப் போடப்பட்ட பாலமே கோவர்த்தன கிரி என்று புரிந்தது.

மீண்டும் வானத்தைப் பொத்துக்கொண்டு மழை கொட்டத் துவங்கியபோது சாலையின் எதிர்புறத்திலிருந்து கணுக்கால் அளவு இந்தப் பக்கம் கால்வாய் போல நீர்ப் பாயத்துவங்கியது. சுற்றிலும் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனாதிகள் வண்டி உருட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். யாராவது சங்கிலித் திருடர்கள் ஓடிவந்து கழுத்திலிருந்து அறுத்துக்கொண்டு போனால் கூட அவர்களைக் கண்டு கொள்ளாமல் இன்னும் இரண்டு அடி நகர்ந்துவிடுவோமா என்பதைப் பற்றிய தீவிரச் சிந்தனையோடு காத்திருந்தார்கள். மழையின் ”தொரதொர....”த்தவிர வேறு சப்தமில்லை. பிரளய கால இராத்திரி போல இருந்தது. எரிபொருள் தீர்ந்துபோன நான்கு சக்கரங்களை சாலையோரத்திலேயே விட்டிருந்தார்கள்.

இராப்பூரா கோயம்பேட்டிலிருந்து கிண்டி வரை முட்டியளவு தண்ணீரில் நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். தண்ணீரிலும் மழையிலும் ஒரு சிங்கிள் டீக்குக் கூட வழியில்லாமல் மணிக்கணக்காக ரெகுலேட் செய்தது நெக்குருக செய்தது. நங்கைநல்லூர் சப்வேயில் நுழைந்துவிட்டால் பண்ணின பாவத்திற்கான கருடபுராண தண்டனை அனுபவித்தாகிற்று என்று நினைத்திருந்தது வீணாய்ப் போனது. “மீனம்பாக்கம் கேட் வழியாப் போயிடுங்க...” என்று ரெயின் கோட் போட்டும் முழுவதும் நனைந்திருந்த நற்காவலவர் ஒருவர் கைகாட்டினார். அப்போது மணி நடுநிசி 12:00. 

அங்கிருந்து ரொம்ப தூரத்தில் (< 1 KM) இருந்த மீனம்பாக்கம் கேட் திரும்பி வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நங்கையைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்தும் சத்யா ”கெக்கக்கே”கென்றது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் சொன்னது இந்த பதிவின் கடைசி வாக்கியம்.

“மாமா... புயலையெல்லாம் விட பருவமழை நல்லா பிடிச்சுக்கிச்சு... மும்மாரிக்கு பதிலா முப்பது மாரி பொழிஞ்சுடுச்சு...”

“என்ன பருவமழை?” (”என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா?” வடிவேலு தோரணையில்...)

“இல்லை மாமா.. நார்த் ஈஸ்ட் மான்சூன்.... வடகிழக்குப் பருவமழை ( மேஜர் மாதிரி இங்கிலீஷிலும் தமிழிலும் புரட்டிப் புரட்டிப் பேசினேன்)

“போய்யா.... இது... வடகிழக்கு இல்லை.... வடகிறுக்குப் பருவமழை.....”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails