மகாபாரதத்தில் வரும் நகுஷனின் கதாப்பாத்திரம் ஒரு பேருண்மையை உலகிற்கு சொல்ல வந்த ஒன்று. புலன் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நகுஷன். மிகப்பெரிய பேரரசனான நகுஷன் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி என்னும் ஐம்புலன்களும் தரும் இன்பத்தை மறுத்து வாழ்ந்தவன். உலகத்தில் அரசர்கள் யாவரும் அனைத்து இன்பகளையும் அசாதாரணமாக அனுபவித்து வாழ்ந்து வருகையில் நகுஷன் எந்தவிதமான இன்பங்களையும் நுகராமல் வாழ்வது கண்டு அவனது அமைச்சர்கள் கவலையுற்று நகுஷனிடம் புலனின்பங்கள் நுகராமல் அவன் வாழ்வது எதற்க்காக என்று கேட்டார்கள். அதற்கு நகுஷன் இனி மானிடப்பிறவியே தனக்கு வாய்க்கக்கூடாது என்ற காரணத்தால் இப்படி வாழ்வதாக கூறினான். அதற்க்கு அவனுடைய அமைச்சர்கள் இவ்வளவு நாட்கள் புலனடக்கி அவன் பெற்ற புண்ணியம் அனைத்தும் ஒன்று கூடி, இந்திரப் பதவியை நகுஷன் அடைந்தால் இந்த மானிடப் பிறவியிலிருந்து விடிவு பெறலாம் என்று கூறினார்கள். இந்திரப் பதவி தான் அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்டவனுக்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அந்தப் பதவியை அடையலாம் என்று கூறினர் அவனது அமைச்சுகள்.
நூறு அஸ்வமேத யாகங்களை வெற்றிகரமாக செய்து முடித்த நகுஷனை இந்திர உலகிற்கு அழைத்து செல்வதற்காக பல்லக்கோடு சப்த ரிஷிகளான ஏழு முனிவர்கள் வந்து சேர்ந்தனர். ஏழு முனிவர்கள் தன்னை தோளில் தூக்கிப் போவதற்கு வந்ததால் மிகவும் கூச்சமுற்றான் நகுஷன். இப்படி அவர்கள் தோளில் தான் ஏறித்தான் இந்திர லோகம் போக வேண்டும் என்று முன்னமே தெரிந்திருந்தால் தான் நூறு அஸ்வமேத யாகமே செய்திருக்க மாட்டேன் என்று சொன்னான் நகுஷன். முனிவர்கள் நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவனை சுமப்பது எங்களுக்கு பெருமை. நீ இதைப் பற்றி கவலைப்படவேண்டாம் ஏறி உட்கார் நாம் செல்லலாம் என்று அவனை ஏற்றி பல்லக்குள் உட்காரவைத்து சுமந்து கொண்டு ஒரே சீராக சென்றனர். போகும் வழியெல்லாம் முனிவர்கள் மீதேறிப் போகிறோமே என்ற கூச்சத்தில், மரியாதையில் அவர்கள் சிரமப் படுகிறார்களோ என்றெண்ணி "மெதுவாக மெதுவாக" என்று சொல்லிக் கொண்டே வந்தான். முனிவர்களும் "நகுஷா நீ ஒன்றும் கவலைப்படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நாங்கள் மெதுவாகவும் போகவில்லை வேகமாகவும் போகவில்லை. ஒரே சீராகத்தான் செல்கிறோம்" என்று சொன்னார்கள். இருந்தாலும் முனிவர்கள் மேல் கொண்ட பற்றினால் அவ்வப்போது "மெதுவாக மெதுவாக" என்று வழிநெடுக வேண்டிக்கொண்டே வந்தான். முனிவர்களும் "எங்கள்பால் உன் அன்பை கண்டு மெச்சினோம். இருந்தாலும் நாங்கள் வேகமாகவும் போகவில்லை மெதுவாகவும் போகவில்லை. நீ ஒன்றும் கவலைப்படாமல் வா" என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
பல்லக்கு ஏறக்குறைய இந்திரலோகம் அடைந்து இந்திரனின் அரண்மனை வாசலாக சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது இந்திராணி உப்பரிகையில் நின்று நீண்ட தலைமுடியை பறக்கவிட்டு தலை கோதிக் கொண்டிருந்தாள். அதுவரை பூஉலகத்தில் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பங்கள் வேண்டாம் என்று இருந்த நகுஷன், மண்ணுல இன்பங்கள் அனைத்தையும் மறுத்த நகுஷன் இந்திராணியின் அழகைக் கண்டவுடன் அளவற்ற ஆசை கொண்டான். அந்த ஆசையும், அவள்பால் கொண்ட மோகத்தின் காரணமாகவும் இப்போது பல்லக்கு மெதுவாக செல்வதுபோல் அவனுக்கு தோன்றியது. ஏன் மெதுவாகப் போகிறது என்று இப்போது ஆராய்ந்து பார்த்த நகுஷன் ஏழு முனிவர்களுள் அகத்தியர் சற்று உயரம் குறைவானவர். அவருடைய தோள்கள் பல்லக்கு காம்பில் சரியாக பொருந்தவில்லை. ஆகையால் பல்லக்கு மெதுவாகப் போகிறது என்று காரணம் எண்ணிக்கொண்டான். உடனே தன் கையில் இருக்கும் பிரம்பை கொண்டு அகத்தியரை "சர்ப்ப.. சர்ப்ப" என்று அடித்தான். சர்ப்ப சர்ப்ப என்றால் ஓடு ஓடு என்று அர்த்தம். அதுவரை பொறுமையாகவும் எப்போதும் ஒரே சீராகவும் பல்லக்கு தூக்கிக்கொண்டு வந்த அகத்தியர் சினம் கொண்டு சர்ப்ப சர்ப்ப என்று பிரம்பு கொண்டு நீ தீண்டியதால், எல்லோரையும் தீண்டும் சர்ப்பமாக போகக்கடவது என்று சாபமிட்டார். தன்னுடைய யாகத்தினாலும் விரதங்களினாலும் இந்திரலோகம் வரை சென்ற நகுஷன் பாம்பாக மாறி கீழே விழுந்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, புலவர் கீரனின் "வில்லி பாரதம்" மீண்டும் கேட்டேன். கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது அவருடைய செந்தமிழ். அவர் கதை சொல்லும் பாங்கே தனி. அந்த ஏற்ற இறக்கங்கள்.. அப்பப்பா.. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதில் அவர் சொன்ன இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்தேன். நீண்ட நேரம் யோசித்து பார்த்ததில் புலன் இன்பங்களே இல்லை என்று சொன்ன நகுஷ மகாராஜா , இந்திராணியின் அழகைக் கண்டு மயங்கி அகத்தியரை சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி அடித்து பாம்பானான். பூஉலக வாழ்வில் புலன் இன்பங்கள் ஏதும் அனுபவிக்காமல் இருந்த நகுஷனே இந்தக் கதிக்கு ஆளானான் என்றால், மாநிலத்துக்கு மாநிலம், ஜில்லாக்கு ஜில்லா, ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி ஆசிரமம் அமைத்து ஆடம்பர கார்களில் பவனி வந்து, மாதம் ஐந்தாறு நாடுகள் பறந்து ஆன்மீக சேவை வியாபாரம் செய்யும் இக்கால திடீர் சாமியார்களுக்கு இந்திராணிக்கு பதில் ஒரு சினிமாராணி போதாதா என்ன?
பட உதவி: www.ondacero.es
3 comments:
புலவர் கீரனின் "வில்லி பாரதம்"
எப்படி கேட்டீர்கள்?வட்டிலா அல்லது யூடூபிலா?
vattil dhaan kumar.
anbudan R.V.S
நல்ல ரசனை,அழகான இடுகை.அடியேனும் புலவர்
கீரனை தேடித் தேடிக் கேட்டவன்.அவர் சொல்லாட்சியும் கோர்வையும் அபூர்வமானவை.
Post a Comment