Saturday, July 3, 2010

சனிக்கிழமை சங்கதி - எந்திரன்

எந்திரனின் மூன்று விதிகள்

முதல் விதி: எந்திரன் யாரையும் காயப்படுத்தாது அதே நேரத்தில் ஹிம்சை செய்ய வரும் எவரையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
இரண்டாம் விதி: முதல் விதியை மீறாமல், எந்திரன் மனிதர்களின் கட்டளை மற்றும் ஏவல்களுக்கு கட்டுப்படும்.
மூன்றாம் விதி: முதல் மற்றும் இரண்டாம் விதிகளை மீறாமல், எந்திரன் தன்னை தற்காத்துக்கொள்ளும்.

இந்த மூன்று விதிகளையும் ஒரு முறை நமக்கு புரியும்படி சொல்லிப்பார்ப்போம். 

முதல் விதி மிகவும் நேரடியான ஒன்று. எந்திரன் சமர்த்தானது. சாதுவானது. நாம் சீண்டினால் அதுவும் நம்மை தொந்தரவு செய்யும். விட்டுவிடுவோம். 

இரண்டாவது விதியை எடுத்துக்கொள்வோம். எந்திரனை கூப்பிட்டு யாரையாவது ரெண்டு தட்டு தட்டச் சொன்னால், அது அதை செய்யாது.  ஏனென்றால் அது ரொம்ப சமத்து யாரையும் காயப்படுத்தாது. 

இப்போது மூன்றாவது விதிக்கு வருவோம். ஒரு கூலிப்படை அமைத்து எந்திரனை காலி பண்ணச் சொன்னால் அது தன்னை தற்காத்துக் கொள்ளும். சரி. ஸ்கூல் வாத்தியார் "நமக்கு நாமே" திட்டத்தின் படி தலையில் பத்து குட்டு வைத்துக்கொள்ளச் சொல்வது போல, மனிதர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ( இரண்டாவது விதி), யாரையும் விட்டு தீர்த்துக் கட்ட சொல்லாமல்(முதல் விதி), தனக்குத் தானே  தீ மூட்டி அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னால் செய்யுமா?

இந்த எந்திர விதிகளை வகுத்தவர் இசாக் அசிமோவ் என்னும் ரஷிய சயின்ஸ் பிஃக்ஷன் படைப்பாளி. 1950 - ல் வெளிவந்த இவருடைய I, Robot என்ற புத்தகம் மிகவும் பிரசித்தம். வில் ஸ்மித் நடித்து இந்தப் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டப் படத்தின் ட்ரைலர் கீழே..



ஷங்கர் "முதல்வா"  பாடலில் கிராபிக்ஸ் மூலமாக நிறைய இயந்திர மனிதர்களை ஊர்வலமாக நடமாடவிட்டு காண்பித்திருப்பார். அவருடைய அந்த ஆசை ஐஸ், ரஜினி கொண்டு இயக்கும் படத்தலைப்பையே ஆக்கிரமித்துவிட்டது. ஹாலிவுட்டில் எப்படி என்று மேலே ஓடிய ட்ரைலர் காண்பித்தது.

கடைசி இரண்டு பதிவுகளாக மதுரை ஸ்ரீ பெஸ்ட் முனியாண்டி விலாஸ், தலப்பாக் கட்டு, அஞ்சப்பர் போன்ற இடங்களில் நுழைந்தது போலிருந்ததாக நண்பர்கள் வட்டாரம் ஒரேயடியாக அனத்தியது. எல்லோரும் குமுறியதால், இன்று சனிக்கிழமையாதலால் ஒரு நல்ல சைவ ஐட்டமாக போட்டாயிற்று. நல்லா இருக்கா?

பின் குறிப்பு: இந்தப் பதிவிற்கு ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியின் எந்திரன் படம் போட்டதற்கு ப்ளாக் உலகம் என்னை மன்னிக்கக் கடவது.  ஜூலை பதினாறாம் தேதி வாக்கில் ஆஸ்கார் நாயகன் இசையில் அமைந்த பாடல்களின் ரீலீஸ் என்ற செய்தி அடிபட்டது. நன்றி.

பட உதவி:http://www.endhiran.org

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails