நீ வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டாய்.
அது ஒரு கார் விபத்து. ஒன்றும் பெரியதாய் சொல்வதற்கில்லை. அவ்வளவு பெரிய விபத்து இல்லைதான், ஆனால் நீ உன்னுடைய ஒரு மனைவி குழந்தைகளை தவிக்கவிட்டு இறந்துவிட்டாய். தீவிர சிகிச்சை பிரிவில் முயன்று பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை. விதி. நீ சின்னாபின்னமாகி விட்டாய். ஒன்றும் தேறவில்லை.
அப்போது தான் நீ என்னை பார்த்தாய்.
நீ கேட்டாய் "என்ன ஆச்சு.. என்ன நடந்தது... நான் எங்கே இருக்கேன்?"
"நீ இறந்து விட்டாய்" நான் சொன்னேன்.
"ஒரு ட்ரக் முன்னால் வந்தது, ஒரு கார் காரன் ஹார்ன் அடிச்சிக்கிட்டே பின்னாடியே வந்தான்.. அப்புறம்.... அப்புறம்.."
"ஆமாம்"
"நான்..? நான் செத்துட்டேனா?"
"ஆமாம்.. கவலைப்படாதே எல்லோரும் ஒரு நாள் சாகணும்"
நீ திரும்பி சுற்றும்முற்றும் பார்க்கிறாய். ஒரே மயான அமைதி. ஒரு அகண்ட பெருவெளி. "இது என்ன இடம்?" "இது தான் வாழ்க்கைக்கு அப்புறம் உள்ள வாழ்விடமா?" என்று கேட்டாய்.
"கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளேன்" நான் சொன்னேன்.
"அப்ப.. நீ என்ன கடவுளா?" நீ கேட்டாய்.
"ஆமாம்..நான் கடவுள். " நான் சொன்னேன்.
"அப்ப என் பசங்க.. பொண்டாட்டியெல்லாம்..." நீ கேட்டாய்.
"அவுங்களுக்கென்ன இப்ப..." நான் கேட்டேன்.
"நான் இல்லாம அவங்கெல்லாம் சௌகரியமா இருப்பாங்களா" நீ கேட்டாய்..
"அதத் தான் நான் பார்க்கனும்னு ஆசைப்படறேன்.. நீ செத்துட்டே இங்க வந்துட்டே .. உன் குடும்பத்தை பத்தி கவலைப்படற... ஆனா அவுங்க நல்லாத்தான் இருப்பாங்க. நீ இங்க வந்துட்டியே."
நீ ரொம்ப வித்தியாசமாக என்னைப் பார்த்தாய். உனக்கு நான் கடவுள் மாதிரி இல்லாமல் இருக்கலாம். வேட்டி துண்டு உடுத்திய ஒரு சாதாரண ஆம்பிளையாக தெரியலாம், ஏன் ஒரு நீண்ட குச்சி வைத்து மிரட்டுகிற கண்ணாடி போட்ட ஸ்கூல் டீச்சர் போல் கூட நீ என்னை நினைத்துப் பார்க்கலாம்.
"கவலைப்படாதே, உன் பசங்க உன்னை பத்தி எப்போதும் நினைச்சுகிட்டே இருப்பாங்க. உன்னை வெறுப்பேற்றவோ அலட்சியம் செய்யவோ இனிமே அவங்களால முடியாது. உன் பொண்டாட்டி ஊருக்காக அழுவா... ஆனா உள்ளுக்குள்ள ஒரு சர்வ சுதந்திரப் பறவை போல குஷியா வாழ்க்கையில் ஏற்ப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து விடுபட்ட மகிழச்சியில ஜாலியா இருப்பா..." நான் சொன்னேன்.
"ஓ", "இப்ப நான் சொர்க்கத்துக்கு போணுமா, இல்ல நரகத்துக்கா, இல்ல வேறெங்காவதா.." நீ கேட்டாய்.
"எங்கேயும் இல்லை..நீ மறுபிறப்பு காணப்போகிறாய்". நான் சொன்னேன்
"ஓ அப்ப நா ஒரு ஹிந்து.."
"சே சே.. எல்லா மதமும் ஒண்ணுதான் இங்க. வா என் பின்னாடி" என்றேன் நான்.
நாம் இருவரும் வேகவேகமாக சென்றோம். "நாம எங்கே போறோம்" நீ கேட்டாய்.
"எங்கேயும் இல்லை. சும்மாதான்.. பேசிக்கொண்டே நடப்பது மிகவும் சுகமாய் இருக்கிறது" நான் சொன்னேன்.
"அப்புறம் என்ன இருக்கு. நா திரும்பவும் பிறக்கும்போது ஒரு வெற்றுக் காகிதம் போல..இந்தப் பிறவியில படிச்சது, சம்பாதிச்சது, வசதி வாய்ப்புகள், அதிகாரங்கள் அப்படி இப்படின்னு என்ன என்ன தகுதிகள் இருந்ததோ எதுவுமே இருக்காது. சரியா" நீ கேட்டாய்.
"எல்லாமே உன்கிட்ட இருக்கு. உன்னுடைய ஆன்மா மலையளவு இருக்கும் சாதனைக் கிடங்கு. மனிதனா பிறந்தப்புறம் நமக்கு தான் எதுவுமே அதைப் பற்றி தெரியறதில்லை..." நான் சொன்னேன்.
"என்னவென்று நீதான் சொல்லேன்.." நீ கேட்டாய்.
"530 AD ல நீ ஒரு சீன தேசத்து பிச்சைக்காரி.." நான் சென்னேன்.
"ஓ..."
"போன பிறவியை விட அந்தப் பிறவியில நீ இன்னும் சந்தோஷமா இருந்தே" நான் சொன்னேன்.
"என்னை இப்போ அந்த காலத்திற்கு அழைச்சிக்கிட்டு போகப்போறியா?" நீ கேட்டாய்.
"ம்ம்ம்... இல்லை. ஆனா காலம்தான் எப்போதுமே நிலையானது. காலத்திற்கு அழிவு கிடையாது. உனக்கு எனக்கு சகலருக்கும் பொதுவானது காலம்தான். ஆனா என்னோட உறைவிடத்தில எல்லாமே வித்தியாசமா இருக்கும்"
"அது எந்த இடம்"
"அது ஒரு இடம். ஒரு விசேஷமான இடம். தனி இடம். வேறு உலகம். என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிற இடம். உனக்கு சொன்னா புரியாது" நான் சொன்னேன்.
"சரி. எனக்கு ஒரு சந்தேகம். இது போல எனக்கு பல பிறவிகள் இருந்தா.. நானே என்னை ஒவ்வொரு பிறவியிலும் பார்த்திக்கிட்டு வந்திருப்பேன் இல்லையா" நீ கேட்டாய்.
"ஆமாம். ஆனா ஸ்தூல சரீரத்தில இருக்கும்போது நம்மோட பௌதீக உடம்பை நாம்ப மட்டும் தான் பார்க்க முடியும் போது , இன்னொரு உடம்புல இருக்கிற நம்மளை நாமளே எப்படி பார்க்கமுடியும்" நான் சொன்னேன்.
"அப்புறம் எதுக்கு இதெல்லாம்"
"நிஜமாவா? நிஜமாவேவா கேட்கிற?.... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்ன்னு" நான் சொன்னேன்.
"ஆமா. நான் கேட்டது நல்ல கேள்விதானே.." நீ கேட்டாய்.
நான் உன்னை தீர்க்கமாக பார்த்து அழுத்திச் சொன்னேன் "இந்த லோக மாய வாழ்க்கையின் அர்த்தம், இந்த உலகத்தை படைத்தது, உன்னை சிந்திக்க வைத்தது இப்படி எல்லாமே நீ வளர்ச்சி அடையணும். அதற்காகத்தான்."
"நான் வளர்ச்சி அடையணுமா இல்லை இந்த மானுட சமுதாயமா?" நீ கேட்டாய்.
"நீதான். இந்த உலகத்தை உனக்காகத்தான் படித்தேன். உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் படிப்படியாக நன்றாக வளர்ந்து உன் அறிவை மேம்படுத்தி, புத்திசாலித்தனத்தை மெருகூட்டி, இன்னும் இன்னும் பெரிய ஆளாக வளரவேண்டும், உயர வேண்டும், முதிர்ச்சி அடையவேண்டும், வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காக.." நான் சொன்னேன்.
"நான் மட்டுந்தான் வளரணுமா? மத்தவங்களெல்லாம் எங்கே? அவங்கெல்லாம்...." நீ கேட்டாய்.
"இந்த அண்டசராசரத்தில் வேறு யாருமே எங்குமே கிடையாது. நீயும் நானும் மட்டும் தான் தனியா இருக்கோம்" நான் சொன்னேன்.
சுற்றிலும் ஒரு வெத்துப் பார்வை சுழலவிட்டு "அப்ப பூமியில இருக்கிற எல்லோரும்...." நீ கேட்டாய்.
"எல்லாம் நீ தான். எல்லோரும் உன்னுடைய அவதாரங்கள் தான். அம்சங்கள்தான்.."
"நிறுத்து நிறுத்து நிறுத்து நானா எல்லோரும்..எல்லோரிலும் நானா?"
"இப்ப உனக்கு புரிந்தது.. " நீ புரிந்து கொண்டதற்கு அடையாளமாக நான் உன்னை செல்லமாக பின்னால் தட்டினேன்.
"இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகிற எல்லா உயிர்களும் நானா?"
"ஆம்" நான் சொன்னேன்.
"அப்ப நான் காந்தியா?"
"ஆமாம். கோட்சே கூட நீதான்" நான் சொன்னேன்.
"நான் ஹிட்லரா?"
"ஆமாம். ஹிட்லர் கொன்ற கோடானு கோடி மக்களும் நீதான்"
"நான் ஜீசஸ்ஸா?"
"ஆமாம். அவரை பின்பற்றுபவர்களும் நீதான்"
நீ அமைதியாகி விட்டாய். உனக்கு முற்றிலும் விளங்கிவிட்டது.
"ஒவ்வொரு முறையும் யாரையாவது நிந்தித்துவிடுகிறாய்" நான் சொன்னேன் "உன்னையே.. உன்னை நீயே.. ஒவ்வொருவரையும் அன்பு செலுத்தும் போது அப்போது உனக்கும் அதை செய்து கொள்கிறாய். எந்த நேரத்திலும் சுகம் மற்றும் துக்க தருணங்களை மனித சமுதாயத்தில் யார் உணர்ந்தாலும் அதை நீயும் உணர்கிறாய்..." நான் சொன்னேன்.
உன்னுடைய நீண்ட யோசனைக்குப் பின்..
"ஏன்?" ஏன் இப்படியெல்லாம்...?" நீ கேட்டாய்.
"ஏனென்றால், என்றைக்காவது ஒருநாள் நீ என்னைபோல ஆவாய். நீ என்னைபோல ஒருவன். என்னுடைய குழந்தை.."
சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த நீ கேட்டாய்.. "அப்ப நானும் என்ன உன்போல கடவுளா?"
"இல்லை இல்லை இன்னும் இல்லை.. இப்போது நீ கருவில் வளரும் மனிதனின் முதல் நிலையில் இருக்கிறாய். நிறைய மனிதப் பிறவிகள் நீ பிறந்து இளைத்தபின் முற்றிலும் கருவில் வளர்ந்து என்னைப்போல் பிறப்பதற்கு, வெளி உலகிற்கு வருவதற்கு தயாராகிவிடுவாய்" நான் சொன்னேன்.
"அப்போ நான் இருக்கும் இந்த உலகம்..." நீ கேட்டாய்.
"ஒரு முட்டை" என்று நான் சொன்னேன்.
"நீ அடுத்த பிறவி எடுக்க நேரம் வந்துவிட்டது. நீ போகலாம்." நான் சொன்னேன்.
உன்னை வழி காண்பித்து அனுப்பிவைத்தேன்.
நெட்டில் கிடைத்த கதை இது. மிக சுவாரசியமாக மூன்று நான்கு அனானிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டுக்கதை இது. தமிழ் மொழியாக்கத்தில் சில சில இடங்களில் என்னுடைய சொந்த சரக்கின் சேர்க்கை இருக்கிறது. சரக்கின் தரம் உங்கள் முடிவில். கடவுளும் மனிதனும் ஒன்று என்று சொல்லும் சில இடங்களில் இந்தக்கதை பேசுவது அத்வைதமோ?.
மேலே படித்ததின் ஆங்கில மூலம் இங்கே: http://i.imgur.com/VlwP6.jpg
பட உதவி: http://community.livejournal.com/ru_foto/42034316.html
பட உதவி: http://community.livejournal.com/ru_foto/42034316.html
1 comments:
When did you become translator.
nice anyhow..
Post a Comment