Thursday, July 22, 2010

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

duplicateஎங்கு பார்த்தாலும் ஒரே போலி மயம். அசல் எங்கே போனது. அதுவும் டப்பாக்குள்ளே தான் போனது என்று அஜீத் படம் பார்த்து சொல்பவர்கள் நிற்க. சமீப காலங்களில் என்னென்ன போலி வருகிறது என்று பட்டியலிடலாம் என்ற உண்மையான ஆசையில் இந்த பதிவு.  ஒவ்வொரு உபதலைப்பிற்க்கும் போலி முன்னால் சேர்ப்பது வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி அடுக்குவது போலிருக்கும் என்பதால், இங்கே ஒரே போலியோடு ஆரம்பிப்போம். இனி வரும் உபதலைப்பிற்க்கெல்லாம் முன்னால் போலி சேர்த்து படிக்கவும்.

மார்க் ஷீட்: கல்லூரிகளில் சேர்வதற்கு எங்காவது 420 ஆள் பிடித்து காசு கொடுத்து தேத்திக் கொண்டு வரும் பொய்யான மதிப்பெண் பட்டியல். தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் பெண்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிப்பதிலும் முதலிடம் வகிப்பதாக இன்றைய செய்தித்தாளில் படித்தேன். பெருமையாக இருந்தது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே வெற்றி.

பட்டம்: காற்றில் பறப்பது அல்ல, கல்லூரி படிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்கையில் கையில் வாங்குவது. பல பேர் போலி பட்டத்தில் ஆகாயத்தில் பறப்பதாக நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. பாஸ் செய்து பட்டம் பெற்றவனை விட பரீட்ச்சையில் கோட் அடித்து போலிப்பட்டம் பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையில் சில நிறுவனங்களை தூண் போல் தாங்கிக் காப்பதாக இரண்டு மூன்று சிநேகிதர்கள் தெரிவித்தார்கள். இது பரவாயில்லை, பாகிஸ்தானில் நாடாளுமன்ற எம்.பி க்கள் சில பேர் போலி பட்டச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக தெரிய வந்து ஒரே அமளி துமளியானது.  அதற்க்கு அந்நாட்டின் மதியூக அமைச்சர் ஒருவர் போலியாக இருந்தாலும் அதுவும் பட்டச் சான்றிதழ்தானே என்று பேட்டியளித்தாராம். எம்.பி என்ற சுருக்கத்திற்கு முட்டாப் பயல் என்று விரிவு வந்துவிடுமோ என்று ஒரே கலக்கமாக இருக்கிறது. அப்புறம் நாட்டின் இறையாண்மைக்கும் மாட்சிமைக்கும் பங்கம் வந்துவிடும்.

ஜாதிச் சான்றிதழ்: எந்த ஜாதிக்கு சலுகைகள் நிறைய கிடைக்கிறதோ அந்த பேர் போட்டு ஒன்று அடித்துக்கொண்டு அந்த சலுகைகளை அனுபவிக்க ஆசைப்படுவது. இப்படி எல்லோரும் சலுகைகளுக்காக போட்டுக்கொண்டால் நிஜமாகவே அதனால் பயனடைய வேண்டியவர்களுடைய சலுகை மறுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒன்று சர்வ நிச்சயம், எல்லோரும் ஓர் குலம் என்று நிரூபணமாகிறது. இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்  சுடுகாட்டு கொட்டகை ஊழல் வெளிக்கொணர்ந்த புகழ் உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் வேலைக்கு சேரும் போது போலி ஜாதி சான்றிதழ் கொடுத்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஐயையே ஐ.ஏ.எஸ்.

சாமியார்: மாரிக்கால மதராசப்பட்டினத்தின் சாலைப் பள்ளங்களை எண்ண முடியுமா என்று கேட்டால் என்ன பதிலோ அதுதான் இன்றைய போலிச்சாமியார்களின் எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் ஒரு ஆஷ்ரம் அமைத்துவிடுகிறார்கள். ஒரு 'ஜி', 'ஸ்ரீ ஸ்ரீ', '...ந்தா' என்று எதையாவது முன்னாலே அல்லது பின்னாலே போட்டுக்கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்கு செல்வச் சீமான்கள், கதர் சட்டைகள், கார்போரேட்டுக்கள் என்று ப்ரமோட்டர்கள் வேறு. பல நிறத்தில் இருக்கும் கைக்காசை வெள்ளையாக மாற்றி வெள்ளையும் சொள்ளையுமாக நடமாடுவதற்கு கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் யோகா, கொஞ்சம் கீதை, போன்ற கொஞ்சம் கொஞ்சம் மொத்தமாக தெரிந்தவர்களை மேடையேற்றிவிட்டு அவர்களையும் பணக்காரர்களாக்கி தாங்கள் பெரும் தனவான்கள் ஆகி விடுகிறார்கள். அப்புறம் எல்லாம் கொஞ்சம் தெரிந்த, காசு பெருத்த போலிச் சாமியார்கள் யாராவது நடிகையை பார்த்து கொஞ்சப் போய்விடுகிறார்கள். சாமியாரின் இன்ப வெறி என்று இதுவரையில் ஒரு மலையாளப் படம் வெளிவராதது ஆச்சர்யமாக இருக்கிறது.

அப்புறம் சில உதிரி போலிகளாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் போலி முடி(Wig), முன்னழகை கட்டழகாக காண்பிப்பதற்காக போலி ஸ்தன மூடிகள், போலிச் சிகப்பாக அதரங்களை காண்பிப்பதற்காக உதட்டுச் சாயங்கள், தும்பைப்பூ போன்ற தலைக் கேசத்தை கார் முகிலென காண்பிக்கும் தலைச் சாயங்கள். (யாரும் ஆண்டி என்றோ அங்கிள் என்றோ கூப்பிடாமல் அண்ணா, அக்கா என்று கூப்பிடுவதற்க்காகவாம்.) ஐநூறு ருபாய் ஆங்கில புத்தகத்தை பக்கத்துக்கு முப்பத்தி இரண்டு காசு கொடுத்து நகலகங்களில் தயாரிக்கும் போலிப் புத்தகம், போலி நண்பர்கள், போலிக் காதலிகள் (கள்ளக் காதலி வேறு, போலிக் காதலி வேறு என்று வித்தியாசம் அறிக), போலிக் கணவன், போலி பொண்டாட்டிகள், போலி சினிமா சி.டிக்கள், போலி முகங்கள், போலி மருந்துகள், போலி ரூபாய் நோட்டுகள், போலி அன்பு, போலி பாசம், போலி அக்கறை, போலி தலைவன், போலி தொண்டன், போலி பாஸ்போர்ட், போலி ரேஷன் கார்ட், போலி போலிகள் என்று இந்த அசல் போலி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


யார் மாதிரி வேண்டுமானாலும் மேற்கண்ட முகமூடியை கொண்டு உருமாறலாம். ஒபாமா மாதிரி, ரஜினி மாதிரி, கமல் மாதிரி, தமண்ணா மாதிரி என்று. இதில் உள்ள பெரிய அபாயம் என்னவென்றால் ஏதாவது ஒரு வங்கி மேலாளர் மாதிரி இதை வடிவமைத்து ஒரு நாளின் அன்றைய கல்லா கட்டிய கலெக்ஷன் முழுவதையும் யாராவது ஒரேடியாக அடித்துக்கொண்டு போய்விட்டால்? இன்னும் நிறைய இதுபோல உபயோகமான பயன்பாடுகளை அவரவர்க்கு ஏற்ப கண்டுபிடித்து அனுபவிப்பார்கள். எதிர் காலத்தில் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

இவ்வளவு போலிச் சொற்கள் கொண்டு இந்தப் பதிவை அடித்தது ஆர்.வி.எஸ்ஸா அல்லது போலி ஆர்.வி.எஸ்ஸா என்று ஒரு போலி இல்லாத போலிஸ் ஆபிசரிடம் சொல்லி கண்டுபிடிக்கணும்.

பட உதவி: http://lawyermarketing.attorneysync.com/

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails