Wednesday, July 21, 2010

ஆப்புப் பலகை

டோக்கன் போட்டால் காபி டீ கொடுத்தார்கள், அப்புறம் கொஞ்சம் அட்வான்ஸ்டாக போய் ரயில் மற்றும் விமான நிலையங்களில் காசு போட்டால் புத்தகத்தை தொப் என்று வெளியே போட்டார்கள். பார்த்திபன் அவருடைய ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் காயினை வெட்டி நூல் கட்டி காசு போட்டு பேசும் தொலைபேசி தொழில்நுட்பம் பற்றி பேசவே வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். காபி, டீ,  தொலை பேசுதல், புத்தகம் வெளியே வீசுதல் போன்ற வாழ்க்கையின் இன்றியமையாத அத்தியாவசிய தேவைகளுக்கு டோக்கேன் முறை அறிமுகப்படுத்தினார்கள். அதெல்லாம் பரவாயில்லை, அதற்க்கப்புறம் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கண்டபடி முழு மூச்சாக இறங்கிய இந்திய அரசு காசு போட்டால் காண்டம் கொடுக்க ஆரம்பித்தது. பாதி பேர் கடைகளில் வாங்க கூச்சப்(?)படுகிறார்கள் ஆகையால் இந்த முறையை செயல்படுத்தி நாட்டின் அசுர வேக மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தபோகிறோம் என்று மார் தட்டி சோதனை முயற்சியாக சில இடங்களில் விநியோகிக்கும் இயந்திரம் வைத்தார்கள். முன்பாவது கடைகளில் யாரும் இல்லா சமயத்தில் கேட்டு வாங்கிச்சென்றவர்கள் வெளியே இயந்திரம் வைத்ததும் பக்கத்தில் போகவே பெருங்கூச்சம் அடைந்து வாங்குவதை மட்டும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது. ம.தொகை கட்டுப்பாட்டில் ஒன்றும் மாற்றத்தை காணோம்.
parkbench
இந்த காசு போட்டு டோக்கேன் போட்டு இயந்திரம் வெளியே துப்பியதை கையில் பொறுக்கிக்கொண்டு போகும் முறையை முற்றிலும் புதிதாக வேறு ஒரு திசைக்கு பயணிக்க வடிவமைத்திருக்கும் ஒன்று தான் நாம் "பார்க்"கபோவது. இப்போது பீச், பார்க் போன்ற இடங்களுக்கு சென்று காலார  நடந்து, கண்ணார கண்டு ( இயற்கையை!) இன்புற்று மகிழ்கிறோம். இப்படி எப்போது பார்த்தாலும் ஜன சமுத்திரங்களாக எல்லா பொது இடங்களிலும் மக்கள் பொங்கி வழிவதால் பார்க், பீச் போன்ற இடங்களில்..... அதிர்ச்சி அடைய வேண்டாம்... ... மெல்லிய இதயம் படைத்தவர்கள் இத்தோடு திரும்பி போய் விடுங்கள்.... பெஞ்சில் உட்காருவதற்கு காசு போட்டு உட்கார்ந்து இளைப்பாறி  நேரம் முடிந்தவுடன் அது சத்தம் இட்டவுடன் எழுந்து ஓடிவிட வேண்டும். இல்லையேல் ஆப்புதான். சாதாரண ஆப்பு இல்லை இரும்பு ஆப்பு. என்ன கொடுமை சரவணன் இது? என்று சந்திரமுகி பிரபு மாதிரி கேட்போருக்கு, ஆசைக்கு ஆஸ்த்திக்கு என்று சொல்லி ஒன்று இடுப்பிலும் ஒன்று கையிலும் பிடித்துக்கொண்டு திரியாமல் எப்படியாவது ஜனப்பெருக்கத்தை குறைத்தால் இதுபோன்ற சமூக பொறுப்புள்ள பல புதிய கண்டுபிடிப்புகளிலிருந்து நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்றலாம்.


PAY & SIT: the private bench (HD) from Fabian Brunsing on Vimeo.

பொது இடங்களில் யாராவது ரொம்ப வம்பு பண்ணினால் அல்லது வாலாட்டினால் போலீசில் எல்லாம் சொல்ல வேண்டாம், காசு போட்டு இந்த பெஞ்சில் உட்காரவைத்து அசையமுடியாமல் கட்டிப்போட்டுவிட்டால், உட்காரும் நேரம் முடிந்தவுடன் ஆட்டமேடிக் ஆப்பு தன் கைவரிசையை காண்பித்து ஏற்ற வேண்டிய இடத்தில் ஏற்றி முடிவாக இறக்கி விடும். தண்டனை முடிந்தவுடன் ஆப்புப் பலகையிலிருந்து நாம் அந்த நபரை இறக்கி விட வேண்டியிருக்கும்.

நம்மூரு ஆட்கள் கையில் ஒரு மரப்பலகை எடுத்துக் கொண்டு போய் ஆப்பு மேலேயே ஆசனம் அமைத்து உட்கார்ந்துவிடுவார்கள். அல்லது யாராவது காசு போட்டு உட்காரும் போது, ரயிலில் முன்பதிவு செய்த பொட்டிகளில் ஏறி சகல உரிமையோடு நகர்ந்து உட்காரச் சொல்லி உட்காருவது போல, முதலில்  தன் பிருஷ்ட்டத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பெஞ்சில் வைத்து ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல காசு போட்டு உட்கார்ந்தவரை விரட்டிவிடுவார்கள். 

வர வர எந்த இடத்தில் எந்த ஆப்பு யாருக்கு இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும் போலிருக்கிறது. ஆப்புக்குள்ளே உலகமடா...

பட உதவி: terraformearth.wordpress.com

1 comments:

Madhavan Srinivasagopalan said...

ஆஹா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails