Thursday, October 15, 2015

சில்லு..


ரங்கரத்னகோபுவீகேயெஸ்வல்லபானன்யாமஹாதேவஜெயகமலா சகிதம் நாரதகான சபாவில் நானும் சங்கீதாவும் சில்லு பார்த்தோம். ஏழு மணி மாலைக் காட்சி. வெங்கட்சுப்ரமணி அம்மாவுடன் வந்திருந்தார். மேடைக்குப் பின்னே க்ரீன் ரூம் வாசலில் எழுத்தாளர் இரா.முருகனை தரிசித்துவிட்டுதான் உள்ளே நுழைந்தோம். ”என்ன திருப்புகழ் மணி.. எப்படியிருக்கீங்க?” என்று திருப்புகழ் பாடும் என் புதல்வியரைப் வாயாரப் போற்றினார் முருகனார். நாடகம் துவங்க விளக்கணைத்த அரங்கத்தினுள் கீழே குனிந்து வாட்ஸப், ஃபேஸ்புக் என்று ஸ்மார்ட் ஃபோனில் மும்முரமாக மூழ்கியவர்களின் முகங்கள் மட்டும் பிரகாசித்தன. சோஷியல் ஒளிபடைத்த பார்வையாளர்கள்.
ஏழுன்னா டான்னு ஏழுமணிக்கு திரை தூக்கிவிட்டார்கள். இல்லை. இல்லை. திரை உடனே எழும்பவில்லை. ரிமோட் ப்ராப்ளமா.... எப்படா திரைவிலகி மேடை தெரியும் என்று கண்கள் பூக்க சித்த நாழி அனைவரும் காத்திருக்கும் தருணத்தில் கலக்கல் ம்யூசிக் வாசித்துக் காட்சி துவங்கினார்கள்.
திரையை இரண்டாக வகுந்தெடுத்து காட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. இடது புறம் ஒரு சீன். வலது புறம் அடுத்த சீன். காட்சி மாற்றங்களின் போது அரங்க அமைப்பாளர்களுக்கு ரொம்பவும் வேலை வைக்காத மேடையமைப்பு பாராட்டத்தக்கது. ஹ்யூமனாய்ட் ரோபோட் ஒன்று ஒரு ஹ்யூமனுக்காக உயிர் துறந்து தியாகி ரோபோட்டான கதை. ”அடிப்பொடி” என்று சேவகம் செய்யும் ரோபோட்டுக்கு பெயர் வைத்ததை யாராலும் சிலாகிக்காமல் இருக்கமுடியாது. சோஃபா செட்டுகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களிடையே புகுந்து அடியடியாக அளந்து நடக்கும் நடையும், ட்ரேயில் அன்னபானங்களை எடுத்து வரும் அழகும், ஸ்டைலாக பேசுவதும், “ஆல்கஹால் லெவல் ஜாஸ்தியாயிருக்கு... இன்னிக்கி ரெண்டு காஃபி சாப்பிட்டாச்சு.. இதுக்கு மேல கிடையாது....” என்று அவர்களுக்கு அவ்வப்போது அறிவுருத்துவதும் என்று மேடையைக் கலக்குகிறது அடிப்பொடி.
மேடையோரத்தில் ரசிகர்கள் பார்வைபட வைத்திருக்கும் ஒரு பூச்சட்டி பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அடிப்பொடிக்கு ஹ்ருதயம் இருக்கிறது என்று காண்பிப்பது “அடே!” போடவைக்கும் உத்தி. கடைசியில் வளர்ந்த செடியையும் காண்பித்து “ஆஹா” பெற்றனர் நாடகக் குழுவினர்.
காஸ்ட்யூம் ரொம்ப சிம்பிள். 2066ல் எல்லோருக்கும் சர்க்காரே சலுகையில் கொடுத்த யூனிஃபார்ம். யூவி தாக்குதலிலிருந்து தப்பிக்க அரசாங்கமே அளித்த சில்வர் கலர் சீருடை. வரவேற்பரையில் சர்க்காரின் அறிவிப்புகள். தம் உடம்புக்கு தேவை தேவையில்லததை தீர்மானிக்கும் ஹ்யூமனாய்ட்ஸ், கண்கொத்திப் பாம்பாய் கவனிக்கும் அரசு என்று நொந்து வெந்துபோகும் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு சில்லு பொருத்தப்படும் என்கிற அறிவிப்பு. அவரவர்கள் பயோடேட்டா அடங்கிய சிப்பை மேனியில் பொருத்தி கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சில்லோடு வா நிலவே! என்று குழந்தைக்கு தாலாட்டு பாடலாம். அடிப்பொடி அதையும் செய்கிறது.
பயோ சில்லுவில் டாட்டா ஃபீட் செய்யும் பணியில் இருப்பவர் செய்த தவறினால் ஜெண்டர் ஃபீல்டில் பெண் என்று குறிக்கப்பட்ட ஆண், சாண்டா என்கிற சந்தானகிருஷ்ணன். அரசாங்கத்துறையில் வேலை பார்ப்பவன். இரத்தமும் சதையுமாக இருக்கும் இன்னொரு பெண்ணை லவ்வி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆரம்பகாலத்தில் பொருத்தப்பட்ட சிலது buggy சில்லுகள். அவைகளில் ஒன்று சாண்டாவின் உடலில். கூடிய சீக்கிரம் அவன் உயிர் பிரிந்துவிடும் என்கிற நிலை. அதிலிருந்து அவன் பிழைப்பதுதான் க்ளைமாக்ஸ்.
சில்லுத்துறை அமைச்சகத்தில் ”வாய்யா... போய்யா..” என்று அதிகாரிகளைப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அமைச்சரும் இருக்கிறார். எக்காலத்திலும் மாறாத தமிழக அரசியல்வாதிக்கான அடிப்படை உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில்லாத குறையை அவர்களின் பேச்சில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பிறந்தகுழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் நடைபெறும் சீன் அள்ளுகிறது. கணவனும் மனைவியும் சீருடைக்கு மேலேயே வேஷ்டிபோல துண்டை சுற்றிக்கொண்டும் புடவை போல தாவணியைச் சுற்றிக்கொண்டும் அமர்ந்திருப்பது க்ளாஸ். ரோபாட் அடிப்பொடியே கனபாடிகளாக மந்திரம் சொல்லும் மோடுக்கு பட்டன் அமுக்கி மாற்றப்பட்டு “ம்.. ஆசமனம் பண்ணிக்கோங்கோ...” என்று சொல்லும் இடம் கைதட்டல் பெறுகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிப்படை. சில்லு வேண்டாம் என்று போராட்டம். தப்படித்துக்கொண்டு கட்டியம் சொல்லிக்கொண்டு திரைக்கு முன்னே வந்து ஆடுகிறார்கள். பாட்டும் ஆட்டமும் தொடர் வசன மழைகு ஓய்வு கொடுத்தது ஒரு ரிலாக்ஸ் மோடுக்கு பார்வையாளர்களை மாற்றுகிறது.
ஹ்யூமனாய்டுகள் மலிந்துவிட்ட காலத்தில் பாரி என்ற ஒரு மனுஷ்யனுக்கு வேலை வாங்கித்தருகிறேன் என்று சாண்டாவின் அப்பா உதவும் காட்சி ரோபோட்டுகள் யுகத்துக்கான மாதிரிக் காட்சியாக அமைத்திருந்தாலும் கதையின் ஓட்டத்திற்கு கொஞ்சமே ப்ரேக் போடுகிறது. கதையின் கருவை ரசிகர்களுக்குச் செட் செய்ய அடித்தளம் போடும் ஆரம்பக் காட்சிகளில் இன்னும் தாராளமாக நகைச்சுவையைக் கலந்திருந்தால் கொஞ்சம் தொய்வாக இருந்திருக்காதோ என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
நாடகம் காட்சிகளாய் எழுதுவதும் வசனம் பேசி லைவ்வாக நடிப்பதும் ஒப்பனையும் மேடையை அலங்கரித்து அரங்கேற்றுவதும் மேரு மலையில் ஒற்றைக் கையால் ட்ரெக்கிங் செய்வதற்கு ஒப்பானது. இப்படி இரண்டு வரி விமர்சிப்பது மகா பாபம். ஷ்ரத்தா டீமிற்கு என் பாராட்டுகள். வசனமெங்கும் முருகன் தமிழ் தெரிகிறது.
எக்காலத்திலும் இதுதான் சர்க்கார், இப்படிதான் அரசியல்வாதி, இவன்தான் புருஷன், இவதான் மனைவி, இது புரட்சி, இதுவேதான் லவ்வு என்று தீர்மானமாக இருந்தாலும் இயந்திரத்தின் இருதயத்தை மையமாகச் சொன்ன நாடகம் சில்லு. ஜில்லென்று ஞாயிறும் சில்லு உண்டு. சென்னையில் இருப்பவர்கள் தவறாமல் கண்டுகளிக்கவும்.
அடிப்பொடியின் அடிப்பொடி நான்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails