Thursday, October 15, 2015

‎நாயுடு ஹாஹ்ஹால்‬

பூர்வ ஜென்மத்தில் மடி பெருத்த நாலு காராம் பசுக்களை சிணுங்காமல் தானம் செய்திருந்தால் மட்டுமே பாண்டி பஜார் நாயுடு ஹால் வாசலில் கார் பார்க்கிங் கிடைக்கும். நான் செய்திருக்கிறேன் என்று இன்று ருசுவானது. திருவிழாக்கோலம் பூண்டிருந்த கடைக்குள் வெட்கம் பிடிங்கித் திங்க காலால் கோலம் போட்டபடி தூணோடு தூணாக சர்வ ஜாக்கிரதையாக நின்றுகொண்டிருந்தேன். அறியாப் பெண் யாராவது தனக்குத் தேர்வாகாத நைட்டியைத் தோளில் மாட்டிவிடும் அபாயம் இருந்தது. அதனால் அவ்வப்போது குனிந்த தலை நிமிராமல் பெண்டுலமாய் சிரசாடிக்கொண்டிருந்தேன். நடுநடுவே ரெவ்வெண்டு நொடிக்கொருதரம் இனிய இம்சையாக கட்டைவிரலை கெட்டவிரலாக்கி ஃபேஸ்புக் ஸ்க்ரால்.
“ஹாஹ்ஹா..” என்ற அதிர்வேட்டுச் சிரிப்பு என்னுடைய முகப்புஸ்தகத் தவத்தைக் கலைத்தது. ஆம்பிளைச் சிரிப்பாக இருந்ததால் மனதில் தெகிரியத்தை வரவழைத்துக்கொண்டு ”நிமிரலாம்” என்று நிமிர்ந்தேன்.
பல்வரிசையில் பாதி காலியாகி “டெண்டல் கேர்” ஆசுபத்திரிக்குக் கிடைத்த பொக்கிஷமாக, பூர்ணாயுசை எக்கிப் பிடிக்கும் வயதில் ஒரு பெரியவர். திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். கொள்ளுப் பேத்தி கல்யாணத்திற்கு சீர் முறுக்கு சாப்பிடமுடியாது என்கிற குறையைத் தவிர சம்பூர்ணமாக இருந்தார். எதிரில் பெர்முடாஸ் மற்றும் குறுந்தாடியில் மேதாவிலாசம் காட்டும் அமெரிக்க ஆக்ஸண்ட் மாமா. மீனம்பாக்கத்திலிருந்து இறங்கி நாயுடு ஹால் தள்ளுபடிக்காக வந்து இறங்கியிருக்கும் மோஸ்தரில் பளபளத்தார்.
”நாம இங்கதான் அடிக்கடி பார்த்துக்கிறோம்...” என்று பெ.மாமா என்னமோ இருவரும் அந்த ஃப்ளோரில்தான் அனுதினமும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டு உள்ளாடை வாங்கி மாட்டிக்கொள்வது போல வெற்றிச் சிரிப்பில் தேமேன்னு நைட்டி பார்த்துக்கொண்டிருந்த நான்கு குடும்ப ஸ்த்ரீகளை தன் பக்கம் பார்க்க வைத்தார். சுவாரஸ்யமாக ஏதும் ஆம்புடும் என்று காதைத் தீட்டிக்கொண்டு தீனிக்காக காத்திருந்தேன்.
“போன வாரம் வந்தீங்கல்ல...” பெரிசு ஆரம்பித்தது.
“ஆமா... நீங்க வாசல்ல மல்லிப்பூ வாங்கிக்கிட்டிருந்தீங்க...” ஷார்ப் மெமரி.
“உங்களைப் பார்த்தேன்.. நீங்க திடுதிப்பு மேலே ஏறிட்டீங்க....”
“ஆமாமா... துப்பட்டாவுக்கு மேட்ச்சிங்கா பாட்டம் வாங்கணும்னு வீட்ல சொன்னாங்க... அதான்..”
“ஓ.. நீங்க நைட்டி வாங்கதான் வரீங்கன்னு நினைச்சேன்..”
”யோவ் பெர்ஸு! நைட்டி என்ன மாசாந்திர சாமானா?” என்கிற லுக் விட்டார் பெர்முடாஸ். பெரியவர் லேசில் விடுவதுமாதிரி இல்லை.
“லோகத்துல துப்பட்டாவே யாரும் போட்டுக்கிறதில்லை.. அதுக்கு ஏன் பாட்டம் வாங்கணும்?” என்கிற க்ரூப் ஒண் கேள்வி மூலம் கிடுக்கிப்பிடி போட்டார்
பெர்முடாஸ் சிரிப்பதை நிறுத்திவிட்டு “எங்க வீட்ல போட்டுப்பாங்க சார்...” என்று காமெடிக்காட்சியிலிருந்து நழுவி க்ளைமாக்ஸ் காட்சியாய் சீரியஸானார்.
“எங்க வீட்ல நாந்தான் போட்டுப்பேன்” என்று ஒரே போடாய்ப் போட்டார் பெரிசு. ஏதாவது மரணக்கடியாக ரம்பம் போடுவாரோ என்று அச்சப்பட்டேன்.
இப்படி வாராவாராம் நாயுடுஹால் வந்ததன் பலனாக (கோயில்...குளம்னு பிரதக்ஷிணம் வந்தால் கிட்டும் பலன் போல) அவர் துப்பட்டாவும் இவர் ஃப்ரீ சைஸ் நைட்டியும் மாட்டிக்கொள்வதற்கு சித்திக்கும் என்று நினைத்துக்கொண்டேன். பெர்முடாஸ்காரருக்கு புதிரில் கண்கள் இரண்டும் கோலிக் குண்டாகி இரு புருவங்களை மேலே உயர்த்தி தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரின் ”ஆஸ்ச்சரிய பாவ” அபிநயத்தோடு “என்ன சொல்றீங்க?” என்று பதறிக் கேட்டார்.
தோளில் சுற்றியிருந்த துண்டை படையப்பா ரஜினி போல சுழற்றி எடுத்து “இதைச் சொன்னேன்... இதில்லாம நான் வெளிய வர்றது இல்லை...” என்றார். அவர் அடித்த அந்த மொக்கை ஜோக்குக்கு பெர்முடாஸ் சிரித்த சிரிப்பில் நாயுடு ஹால் அஸ்திவாரம் பலவீனமாகி எந்தநேரமும் உட்கார்ந்துவிடும் என்று நினைத்தேன். எங்கள் குலதெய்வம் திருவேங்டமுடையானின் அனுக்கிரஹத்தால் அப்படியாகப்பட்ட அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
சிறிது மேயட்டும் என்று அவரை விட்டுவிட்டுப் போன திருமதி “போலாமா...” என்று முதுகைத் தட்டிக் கூப்பிட்டார். அது என் காதில் மன்னையில் வெங்கடாசலம் தனது ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவது போல “ஹை..ஹை...” என்று டிகோட் ஆகி விழுந்தது. “வரேன்...” என்று பெரிவரை க்ஷண நேரத்தில் அறுத்துக்கொண்டு பெண்டாட்டியின் கையைப் பிடித்துக்கொள்ளாத குறையாகக் கிளம்பிவிட்டார். பார்ட்டிக்கு மந்திரம் அப்படி அனுபூதி ஆகியிருக்கிறது.
இப்போது பெரியவரின் நிலை என்ன என்று பார்க்க என்னை விட என் கண்ணுக்குள் ஆர்வம் முட்டியது. பெரியவர் பட்டிணம் பொடி ஆசாமி போல. ”ஹச்” என்று நிலமதிரத் தும்மி நான்கடி சதுரத்துக்குள் இருந்த அனைவருக்கும் ஜலதோஷத்தை பரிசாகக் கொடுத்துவிட்டு துண்டால் “புர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று மூக்கை துடைத்துக்கொண்டார். சாரி.. அவரது வெள்ளை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டார்...
ஆனால் வீடு வரும் வரை ஒரே ஒரு கேள்வி மட்டும் மூளையை ஓவர் டைம் செய்யச்சொல்லி வற்புறுத்தியது. அவஸ்தையை அடக்கமுடியாமல் தர்மபத்னியிடம் இந்த இராமாயணத்தைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.
”மெனக்கெட்டு எல்லா வீட்டு வேலையையும் விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் ஏன் கடமையாய் அடிக்கடி நாயுடு ஹால் வர்றாங்க?”
நான் கப்சிப்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails