Thursday, October 15, 2015

தேவதானம்


”இன்னிக்கி புரட்டாசி சனிக்கிழமை... பெருமாள் கோயில் எங்கியாவது போலாமா?”
“இங்க... சென்னைக்குப் பக்கத்துல ஒரு ரங்கநாதர் இருக்காராம்... ”
”அதென்ன... ரியல் எஸ்டேட் அட்வர்டைஸ்மெண்ட் மாதிரி.. சென்னைக்குப் பக்கத்துல....”
”ச்சே... எதையெடுத்தாலும் நக்கல்.. வட திருவரங்கம்னு பேராம்.... பேங்குக்கு வரும் மாமா ஒருத்தர் சொன்னார்..”
“எங்க இருக்கு?”
“மீஞ்சூர் பக்கத்துல...ஆயிரம் வருஷம் பழமையான கோயிலாம்....”
கூகிள் மேப்பை பார்த்தேன். வெற்றிலையில் மை போட்டது போல அந்த இடம் தேவதானம் என்று காட்டியது. உடனே கிளம்பியாச்சு. பெருமாள் தரிசனத்திற்குப் போகிறோம் என்றவுடன் ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் ஞாபகம் வந்தார்.
”போலாமா?” என்று கேட்பதற்கு முன்னர் “ம்.. ரெடி போகலாம்..” என்றார் வல்லபா சமேத வீகேயெஸ்.
மீஞ்சூர் என்பது சென்னையோடு ஒட்டி உறவாடும் தூரத்தில் இருக்கிறது என்று யாரோ திக்குத் தெரியாத மாலுமி உங்களிடமும் சொல்லியிருக்கக்கூடும். “இதோ.. இங்கதான்... பாரீஸ் தாண்டினப்புறம்... அப்புறம்.. அப்படியே திருவொற்றியூர்.. அப்படியே எண்ணூர்....அப்புறம்.... அப்படியே மணலி.. அப்படியே....” என்று வாயால் வடைசுடுவதைப் போல ”அப்படியே..” ரோடு போடுவது மிகச் சுலபம்.
பாரீஸ் தாண்டியவுடன் பீச் ரோடில் நிற்கும் லாரிகளைப் பார்த்தாலே சேப்பாயிக்கு உதறல் எடுத்துச் சக்கரங்கள் பின்னிக் கொள்ளும். எங்கள் தெரு நீளத்துக்கு ஊர்ந்து செல்லும் லாரிகள் மரவட்டை போல இடதும் வலதும் தலையைத் திருப்பும் போது ஐந்து நிமிடங்கள் ரோட்டிலிருந்து இறங்கி நிறுத்தி டீயும் வடையு சாப்பிட்டுதான் கிளம்பவேண்டும். நூற்றியெட்டுக் கால் லாரியின் ட்ரைவர் இந்த பூமிப்பந்தையே எதிர் திசையில் திருப்ப எத்தனிப்பது போல ஸ்டியரிங் ராட் ஒடிய ஒடிப்பார். லாரி ஓட்டுவது எப்படி? என்பதற்கான பாடாந்திரங்கள் கிடைக்குமிடம்.
கூகிள் மேப்ஸில் தேவதானத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு ஓட்டினாலும் சரியாக தப்பாக ஒரு இடத்தில் திரும்பி எண்ணூர் கடைத்தெருவிற்குள் விட்டு லேலண்ட் ஃபாக்டரிகளின் கேட் 4, கேட் 7 என்று பல கேட்களைப் பார்த்துக்கொண்டே சென்றோம். தொன்னூறு சதவிகித ரோடுகள் வழவழவென்று மொசைக் போட்டது போல இருப்பது தமிழகத்தில் வரம்.
மீஞ்சூரில் ரயில்வே கேட் தாண்டி போய் எட்டு கி.மீ உள்ளே சிங்கிள் பெட் ரோடில் செல்லவேண்டும். நிறைய ஆட்டோக்கள் பக்தர்களை பிதுக்கிக்கொண்டு ட்ரிப் அடிக்கிறது. விரைவுச் செல்வம் பார்க்க விரும்புவோர் நிலமெல்லாம் எல்லைக் கல் நட்டு ஃப்ளாட் போட்டும், மானுட சமூகத்திற்கு தொண்டாற்ற உழைப்பவர்கள் உழவுத் தொழிலும் செய்கிறார்கள். ரோடோர பெரிய அரசமரமும் முள்வேலிக்குள் இருக்கும் குடிசைகளையும் சாலையெங்கும் சாணி போட்டு கன்றோடு மேயும் ஆவினங்களையும் பார்த்துக்கொண்டே வண்டியை விட்டால் வருவது தேவதானம். தேவதானம் ஒரு அழகிய குக்கிராமம். கோயிலே பிரதானம். சின்னக் கோயில். வண்டியை நிறுத்திவிட்டுக் கோயில் உள்ளே செல்வதற்கு முன்னர் ஸ்தல புராணம் பார்த்துவிடலாம்.
ஸ்ரேயஸ்பதியான வைகுண்டவாசன் ஒருமுறை பூலோகத்தில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது தேவதானத்தில் மலையென நெற்குவியல்கள் கிடந்தது. தானே மரக்கால் எடுத்து அவ்வளவு நெல்லையும் அளந்து கொடுத்தார். கை அசர நெல் அளந்த களைப்பு மேலிட மரக்காலையே தலைக்கு தலையணையாக சொருகிக்கொண்டு அங்கேயே காலை நீட்டிப் படுத்துவிட்டாராம். சாளுக்கிய மன்னன் ஒருவன் இவரை ஸ்ரீரங்கநாதராக பாவித்து அங்கே ஒரு கோவில் கட்டினான். வட திருவரங்கம் என்று பெயரும் சூட்டினான். தேவர்கள் தானமாகக் கொடுத்ததால் தேவதானமாம்.
இதோ.. அரசமரத்துக்கப்பால் அந்த மூன்று நிலை ராஜகோபரம் தாண்டி கொடிமரத்தருகில் வருகிறோம். புரட்டாசிக்காக இருபது இருபத்தைந்து பேர் கோணலும்மாணலுமான வரிசையில் நின்றிருந்தார்கள். சாதாரண நாட்களில் பட்டரும் பெருமாளும் ஏகாந்த தரிசனம் தருவார்கள். வலது புறம் புளியோதரை பிரசாத விநியோகம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. பிரகாரத்திலேயே மிளகாவை எடுத்து வீசிவிட்டு உள்ளே தள்ளிக்கொண்டிருந்த மத்திம வயதுக்காரர் விரதம் போலிருக்கிறது. உள்ளூர்க்கார பெண்கள் இருவர் ”யாராவது திட்டப்போறாங்கடி...” என்று தர்மம் பேசிக்கொண்டே வரிசையை அறுத்துக்கொண்டு உள்ளே புகுந்து நின்றார்கள். எனக்கு இரண்டு நிமிடங்கள் முன்னர் பெருமாளின் அருள் அவர்களுக்குக் கிடைக்கும்.
துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே செல்லும் போது வலது புறம் சுவற்றில் திருப்பணியில் பங்குகொண்ட உபயதாரர்களின் பெயர் பொறித்தக் கல் பதித்திருந்தார்கள். அதில் ஒரு “அண்ணாதுரை” ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் குறைச்சலாக திருப்பணி செய்து லிஸ்டில் ஃபர்ஸ்ட்டாக இருந்தார். இப்படியும் சில அண்ணாதுரைகள்.
பெருமாள் பதினெட்டரை அடி தூரத்திற்கு சயனத் திருக்கோலம். ஐந்தடி உயரம். பெருமாளின் திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கல் கலவையில் வடிக்கப்பட்டிருக்கிறது. தலைக்கு கீழே மரக்காலும் குடையாய் ஆதிசேஷனும். திருவடியில் திருமகள் கால் பிடித்துக்கொண்டிருக்கிறாள். கூடவே பூதேவியும் அமர்ந்திருக்கிறாள். நாபிக்கமலத்திலிருந்து பிரம்மன். ஆதிசேஷனுக்கும் திருமுடிக்கும் திருவடிக்கும் தங்கக்காப்பு ஜொலிக்கிறது.
“துளசி மட்டும் இங்க தாங்க... அர்ச்சனை மத்ததெல்லாம் உற்சவருக்கு...” என்று ஜருகண்டி சொல்லாமல் பதமாகச் சொன்னார் பட்டர்பிரான். இரண்டு முறை தீபம் காண்பித்தார். திவ்யமான தரிசனம். பிரகாரத்தில் ரங்கநாயகி சன்னிதிக்கு பூட்டு போட்டுவிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள். என்னிடம் தட்டு வாங்கியவர் அப்பரெண்டீஸ் போல் தெரிந்தது. ஓம் என்று முடியும் வரிகளை அர்ச்சித்து பிரசாதமும் தீர்த்தமும் கொடுத்தார். ஆண்டாளுக்கு நேர்த்தியாகப் புடவை கட்டியிருந்தார்கள். நேரே நின்றாற்போலத் தோற்றம். சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் புற்று வடிவில் நாகராஜா சன்னிதிகளும் உண்டு. ஏழு சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துயர்களும் அகலும் என்பது நம்பிக்கை.
கொடிமரமருகே நமஸ்கரித்து சூரியனின் கடைசி கிரணமும் மறைவதற்குள் கிளம்பினோம். கோயிலுக்குச் செல்லும் போது ஐயாயிரம் லாரிகள் பார்த்தோம். அது குட்டிப் போட்டு வரும் போது ஐந்து லட்சம் லாரிகளாக சாலையெங்கும் இடது ஓரத்தில் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருந்தது. இசகுபிசகாக மாட்டிக்கொண்டால் திங்கட்கிழமை ஆஃபீஸ் போவதற்குதான் வீட்டுக்கு திரும்பமுடியும். சமயோஜிதமாகவும் போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் திறம்பட காட்டிய வழிகாட்டுதல்களிலும் பாரீஸ்கார்னரை அடைந்து....ஒரே மெறியில் வீடு வந்து சேர்ந்தேன்.
பெஸ்ட் ஆஃப் கர்னாடிக் ம்யூசிக் என்றொரு சிடி கைப்பட எரித்து (CD BURN) வைத்திருக்கிறேன். அதில் தாஸேட்டன் “என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்... ஸ்ரீ ரங்க நாயகன்...” பாடியதோடு சேப்பாயி ஷெட்டிற்குள் சென்றாள். அந்தப் பாடலில் கேஜே ஜேசுதாஸின் வெல்லக் குரலில் “ஹரி...ஹரி..ஹரி.. என தினம் ஸ்மரி...” என்ற வார்த்தைகள் தொடர்ந்து ரீங்காரமிடுகின்றன.
ஹரி ஓம்!

1 comments:

மோகன்ஜி said...

அடுத்த முறை அங்கு வரும்போது தேவதானம் சென்றுவர ஆவல். சுவாரஸ்யமான பயணக் குறிப்புகள் ஆர்.வீ.எஸ்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails