Thursday, October 15, 2015

சப்தங்கள்.... சலனங்கள்....

இரவு ஒன்பதரைக்கு கோயம்பேடு பாரத் பெட்ரோலியத்தில் சேப்பாயியின் வயிற்றுக்கு டீசல் வார்த்துக்கொண்டிருந்தேன். “கும்மோணம்.. மன்னார்குடி...கும்மோணம்... மன்னார்குடி...” என்கிற கிளிப்பையன் ஏலமிடும் குரல் அப்படியே கவ்விக்கொண்டு போய் பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் உட்கார வைத்து என்னை மன்னைக்கு இட்டுச் சென்றது. துல்லியமாக இரண்டு நிமிடத்தில் சென்னைக்கு திரும்பினேன்.

இரவு பதினோரு மணிக்கு மேல் ”அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி....” என்று எம்மெஸ் அம்மா ’க்ருஷ்ண உத்சவ்’ சிடியில் பாரதியைப் பாடும்போது தெளிந்த பயம் ”உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம்சக்தி..சக்திஓம்...சக்திஓம்”மில் மாயமாய்க் கரைந்துபோனது. ஐந்து நிமிடத்தில் கிடைத்த நம்பிக்கை.
இரவு பதினொன்னரை அடித்த பின்பு “கிணிங்...கிணிங்...” என்ற மணியடிக்க குல்ஃபி ஐஸ் வண்டி தள்ளிக்கொண்டு போன வடக்கத்தி பையனிடம் ஒன்று வாங்கி சாப்பிடால் அவன் வயிறு குளிருமே என்று நினைத்த மாத்திரத்தில் ஷிஃப்ட் முடிந்து திரும்பிய யுவன் புல்லட் நிறுத்தி வாங்கியதில் எனக்கு மனசு ஐஸ்கட்டியாய்க் குளிர்ந்தது. இருபது விநாடிகள் கொடுத்த ஜில் மகிழ்ச்சி.
இதோ பன்னிரெண்டு அடிக்க பத்து நிமிஷத்தில் லாப்டாப்பை மூடிவிட்டு நித்திரைக்குப் போகலாம் என்றால் “பீய்ங்....பீய்ங்...பீய்ங்...” என்று பிகிலடிக்கும் நேபாளி கூர்க்கா. மாதம் தவறாமல் முதல் தேதி சித்தியிடம் பணம் வாங்கும் போது அடிக்கும் சல்யூட் தலைக்கு மேலே துளித் துளி முட்டைகள் தோன்றி கடைசி பெரிய முட்டையில் அவர் சீருடையில் தெரிந்தார். இரண்டு செகண்ட் அள்ளித் தந்த திருப்தி.
இரண்டு நாட்களாக அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத்பாகவதம் கேட்டுக்கொண்டிருப்பதன் பயனாக இதை தட்டச்சிக்கொண்டிருக்கும் போது காதுகளில் வேணுகானம் கேட்கிறது. போதும். இதோடு நிறுத்திவிடுகிறேன். “பகவத்குணம் கேட்க ஆரம்பிச்சாலே.. சர்வேஸ்வரன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கேட்கறவாளோட மனசுக்குள்ள வந்து குடியிருப்பன்..” என்றது அவரது வெங்கலக்குரல். இப்போது புல்லாங்குழலிசையும் சேர்ந்து கேட்கிறது. கேட்கக் கேட்க பரமானந்தம். நெஞ்சு பஞ்சாகிறது.
சரி.. மிச்சக் கச்சேரி நாளைக்கு வச்சுப்போம். குட்நைட்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails