Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 29: படைவீடு ரேணுகாதேவியின் திருவிளையாடல்கள்

நள்ளிரவு கடந்துகொண்டிருந்தது. விழிகள் திறந்த நிலையில் கணபதி யோகீஸ்வரனாக கம்பீரமாக அமர்ந்திருந்தார். நாற்பது நாள் தவத்தின் பூர்த்தி. சட்டென்று அவரது உடம்பு உதறி சரசரவென்று வளர்வது போல் குறுகுறுத்தது. விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபமெடுத்தது நிற்கிறோமோ என்று நினைத்தார். அப்போது அவரெதிரே ஜிலுஜிலுவென்ற பட்டு வஸ்திரமுடுத்தி, இடுப்பில் சின்னஞ்சிறு தங்க மணிகள் தொங்கும் ஒட்டியாணமும், ரத்ன ஹாரமும் வைர மூக்குத்தியும் மேனியெங்கும் ஸ்வர்ண ஆபரணங்களுமாக தகதகவென்று கோடி சூர்யப் பிரகாசமாய் சுற்றிலும் ஆயிரம் மாத்ருகா கணங்களுடன் தேவி தோன்றினாள். நளினமாக நடந்து வந்து அவர் காலருகே அமர்ந்தாள். அசையாதிருந்த அவரது வலது ஆடுசதையை லேசாய் உரசி....
“கணபதி.. என்னோடு வா...” என்று பாலகனை அதன் தாயார் செல்லமாகக் கூப்பிடுவது போல இருந்தது கணபதிக்கு. அவரை அழைத்த மாத்திரத்தில் மாத்ருகா கணங்கள் இருளில் மாயமாய் மறைந்தன. அந்த நடுநிசியில், ஊர் உறங்க, கணபதியும் தேவியும் மட்டும் கோயிலில் நடமாடினார்கள். மணிகள் சன்னமாக கிண்கிணியென ஒலித்தபடி அவள் முன்னால் செல்ல கணபதி அவள் அடிபற்றிப் பின் தொடர்ந்தார்.
ரேணுகா தேவி கோயிலின் மேற்குபுறமிருக்கும் வில்வ மரத்தடியில் அவள் அமர்ந்தாள். எதிரே நின்றிருந்த கணபதி “நான் யாரம்மா?” என்று தொழுது நின்றார். அவளிடமிருந்து பதிலில்லை. செந்தாமரை பூத்தது போல சிரித்தாள். கணபதி கை கூப்பிய வண்ணம் நங்கூரமாய் நின்றிருந்தார். அவ்விரவில் அதிசயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
அங்கிருந்து எழுந்து மெல்ல நடந்தாள். கணபதி நிழலென அவளைத் தொடர்ந்தார். பக்கத்திலிருந்த குமாரஸ்வாமி சன்னிதிக்குள் சென்றாள். விக்ரஹத்தோடு இருந்த வேலை எடுத்து கணபதியின் கரங்களில் கொடுத்தாள். பின்னர் சிருங்காரமான அன்னநடை நடந்து கர்ப்பக்கிரஹத்திற்குள் சென்று மறைந்துபோனாள். கணபதிக்கு மேனி சிலிர்த்தது. இயல்பு நிலைக்கு திரும்பிய கணபதி அங்கேயே அமர்ந்திருந்தார். நிசப்தமாக இருந்தது. நடந்தவை சொப்பனம் போலத் தோன்றினாலும் அந்த தெய்வீக அனுபவத்தில் தன்னை மறந்திருந்தார்.
சிறிது நேரம் சென்றது. மீண்டும் அவரது மேனி புசுபுசுவென்று வளர்ந்து பெரிதானது. இம்முறை அத்தேவி அவரது இடது ஆடுசதையைத் தொட்டு எழுப்பினாள். அவளது கரம் தனது மேனியை ஸ்பரிசித்த மாத்திரத்தில் இறைசக்தியொன்று மின்சாரமாய் பாய்ந்து உள்ளுக்குள் ஓடியது. முதுகுத்தண்டு சில்லிட்டது. கண்கள் அவளைப் பார்த்து நிலைக்குத்தி நின்றது. ”கண்பதி.. என்னோடு வா..” என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டாள். மீண்டும் வேலாயுதத்தைக் கொடுத்தாள்.
அவள் முன்னே செல்ல கணபதியும் பயபக்தியோடு பின் தொடர்கிறார். இப்பிரபஞ்சத்திலேயே அனைவரும் நித்திரையில் இருக்க தானும் தேவியும் மட்டும் நடமாடுவது போன்று கணபதிக்கு இருந்தது. ரேணுகாதேவி சன்னிதியின் வடப்புறம் இருக்கும் மண்டபத்தில் சென்று அமர்ந்துகொண்டாள். பசுவைத் தொடரும் கன்று போலக் காலடியில் சென்று அமர்ந்தார் கணபதி.
பக்கத்திலிருந்த மடக்கிலிருந்து மருந்து போன்ற ஒன்றை எடுத்து “கண்பதி.. இதை சாப்பிடு...” என்று அன்போடு நீட்டினாள். சந்தோஷமாக அதை உண்டார். ”மகனே.. நீ இன்னும் இருபது நாளைக்கு தொடர்ந்து தவத்தில் அமர்ந்தால் உனக்கு சித்தி கிடைக்கும்” என்று திருவாய் மலர்ந்தாள். கணபதி நெக்குருகி நின்ற வேளையில் அப்படியே மறைந்துபோனாள் தேவி.
தனக்கு பிரக்ஞை திரும்பிய பின்னர் கணபதி சுகமாக உறங்கினார். அதிகாலையில் துயில் களைந்து எழுந்தார். நேற்றிரவு நடந்தவைகளை மெதுவாக மனக்கண்ணில் காட்சிகளாக ஒட்டிப் பார்த்தார். இரண்டு ஆடுசதையிலும் சிறிய சிராய்ப்பு போன்ற புண் ஏற்பட்டிருந்தது. தேவி ஸ்பரிசித்த இடங்கள். நேற்றிரவு நடந்தவை எதுவுமே சொப்பனமில்லை என்று நிரூபனமானது. ரேணுகாதேவியோடு தனக்கு ஏற்பட்ட தெய்வானுபவத்தை எண்ணியெண்ணிச் சிலிர்த்துப்போனார் கணபதி.
குமாரஸ்வாமி சன்னிதி அருகே ஒதுங்கினார். மனசு நிறைந்திருந்தது. நேற்றிரவு தேவியின் திருவிளையாடலை மீண்டும் அசை போட்டார். அவளது நிறைவான புன்சிரிப்பு, கொஞ்சும் கனிவான குரல், தாயின் பரிவோடு தலையாட்டி பேசிய விதம் என்று நிகழ்ந்த மொத்தமும் காட்சிகளாய் கண் முன்னே தோன்றித் தோன்றி அவரை தேவலோகத்தில் மிதக்கச் செய்தது. தேவியின் ஸ்பரிசத்தால் அவரது முதுகுத்தண்டு வஜ்ரமாய் ஸ்திரப்பட்டது. அவள் தந்த சக்தி ஆயுதமானது தண்டுவடமாகவும் மூலாதாரத்திலிருந்து எழும் குண்டலினி சக்திக்கு ஆதாராமாகவும் இருந்தது.
குண்டலியின் ஆறு சக்கரங்களும் ஷண்முகனின் ஆறு முகங்களுக்குப் பொருந்தியும் அதுவே சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்று படிப்படியாக ஏறி துரியத்தில் முடியும் ஆறு நிலைகளைக் காட்டும் யோக தத்துவமாகவும் விளங்குகிறது.
இதில் தேறியவர்களுக்கு உள்ளுக்குள்ளே விளக்கெரிந்து ஜோதி தெரியும். இந்திரனின் ஆயுதமாகிய வஜ்ரத்தையொத்த ருத்ரக்ரந்த்தியெனப்படும் புருவமத்தியில் நரம்பு முடிச்சு அவிழும். அதில் எழும் அமிர்தநாடியானாது இருதய நடுவில் லயிக்கச்செய்யும். இந்த அமிர்தநாடியே ஒருவனை "நான் யார்?” என்கிற புரிதல் ஏற்படும் நிலைக்கு இட்டுச்செல்லும். அதுவே ஏக முக குமாராஸ்வாமியின் அம்சமாக யோகேந்திரியர்களுக்கு காட்டப்படுகிறது.
இந்நிலையை எட்டியவர்கள் சித்தி எனப்படும் அமிர்தபானம் பருகிறார்கள்.
சித்தியடைவதின் முதல் பகுதியாக ருத்ரக்ரந்தியின் முடிச்சவிழ்வதை கணபதியின் அருளாகக் கருதப்படுகிறது. அவரது துதிக்கை வஜ்ராயுதமாகவும் சூக்ஷும நாடியோடும் முதுகுத்தண்டுவடம் குண்டலினியைக் கபாலத்திற்குக் கடத்துகிறது. இரண்டாவது பகுதி கஜமுகனின் தம்பி சுப்ரமண்யனின் அருள். அவருடைய வேலாயுதம் அமிர்த நாடி. அறியாமை அபிலாஷைகள் என்கிற புறவயமான கசடுகளைக் கணபதி களைந்தெறிவதாகவும் அலைபாயும் மனதில் ஏற்படும் அஞ்ஞானத்தை தம்பி குமாரஸ்வாமியின் அருளால் வென்று சித்தியடையலாம் என்றும் உணர்ந்துகொண்டார்.
நாயனாவுக்கு சட்டென்று ஒன்று உரைத்தது. பற்றறுத்தலும் அறியாமை அகலவும் சித்திக்கான வழிமுறைகள் என்பது ஸ்ரீரமணரின் உபதேசங்கள். இதன் பயனாக வரும் “நான் யார்?” என்னும் சுயமறிதலுக்கான வழிகள் என்ன? கேள்வியில் ஆழ்ந்து கரைந்து போனார் கணபதி.
நேற்றிரவு நடந்தவைகள் அனைத்தும் குண்டலினியோடும் அதன் மூலம் சித்தியடைவதையும் நேர்க்கோட்டில் நிறுத்தின. இவைகளில் அவர் தன்னை மறந்து லயித்திருந்த போது ஜடாமுடியுடன் தொந்தியளவு தாடியுடனும் குமாரஸ்வாமி சன்னிதிக்குள் சென்றார். ஆச்சரியமாக கணபதி பார்த்துக்கொண்டிருக்கும் போதே வேலாயுதத்துடன் வெளியே வந்தார். அவரை ஊன்றிப் பார்த்தார். பின்னர் மறைந்து போனார்.
அப்போது ரிக் வேதத்தில் ப்ருஹுதி ஸ்ருதியில் இருக்கும் ஏனைய சுக்தத்திலிருந்து வேறுபட்டுத் தனியாக நின்ற விராட் ஸ்ருதியில் இருக்கும் சுக்தம் ஒன்று படாரென்று நினைவுக்கு வந்தது. அது “ராயஸ்காமோ வஜ்ரஹஸ்தம் ஸுதக்க்ஷிணம் புத்ரோ ந பிதரம் ஹுவே” இம்மந்திரத்தின் அர்த்தபாவங்களுக்குள் நுழைந்தார் கணபதி. தான் தேடும் அஸ்திர மந்திரம் இதுவே என்று கண்டுகொண்டார். பரசுராம அவதாரம் இம்மந்திர சக்தியின் ஆதாரம். இதுவே பரசுராமரை அவரே அறிந்துகொள்ளவும் உதவியது.
பரசுராமர் தனது தாயான ரேணுகாவின் தலையைக் கொய்தபோது அறிவுரையாக இது உச்சரிக்கப்பட்டது. வசிஷ்டருக்குப் பிறகு கணபதிக்கு இது தெரிந்ததால் அவர் வசிஷ்ட கணபதி. இந்த மந்திரத்தில் மொத்தம் இருபது அக்ஷரங்கள் உள்ளன. புராணங்களில் இருபது முறை ரேணுகாதேவி மார்பை அடித்துக்கொண்டு அழுதாள் என்று குறிப்பிடுகிறார்கள்.
கணபதிக்கு எல்லாம் நொடியில் புரிந்தது. ரேணுகாதேவியின் சன்னிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். தனது குரு ஸ்ரீரமணருக்கு மானசீகமாக குருவந்தனம் செய்தார்.
படைவீட்டிலிருந்து வேலூருக்கு ஓய்வெடுக்க கிளம்பினார். அங்கு....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails