Thursday, October 15, 2015

‪குடியைக்_கடிதல்‬

”தெனமும் குடிச்சுட்டு வராருண்ணே... சின்னோண்டு பொட்டப் புள்ளைய வச்சுக்கிட்டு நா எப்படி நிம்மதியா வீட்டுக்குள்ள இருக்கமுடியும்.. குடும்பம் நடத்த முடியும்... சொல்லுங்க...” டேபிளுக்கு அரையடி கீழே கையை பொட்டப்புள்ளையின் உயரமாகக் காண்பித்தாள் அந்தப் பெண்.
அடித்துப்போடும் உறுதியான குரல். இருவருமே முப்பதுகளில் இருக்கும் தம்பதி போலத் தெரிந்தது. ஃபுட் கோர்ட்டில் காஃபி அருந்தும் மாலையில் எனக்கு முன்னால் இருந்த டேபிளில் சொம்பில்லாமல் ஆல மரத்தடிக்கு போகாமல் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பெண் கூப்பிட்ட “அண்ணே” ஆசாமி ஏற்கனவே ரெண்டு ஃபுல் அடித்த ஜோரில் மிதப்பதுபோல இருந்தது. அப்பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திராணியில்லாமல் வெறும் வாயை மென்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கேள்விக் கணைகள் அதிகமாகும் போது அந்தப் பையன் மௌனத்தை கேடயமாகப் பிடித்தான். “சொல்லுப்பா...” என்று அபூர்வமாக அண்ணன் க்ராஸ் எக்ஸாமினேஷன் பண்ணும் போது பம்மிப் பம்மி டேபிள் தாண்டாத அடிக்குரலில் பேசுகிறான். நடுவில் நாட்டாமை அண்ணே ஓசி காஃபி உறிஞ்சிய சத்தத்தில் அவனது பதில் தேய்ந்து அமுங்கிவிடுகிறது. குடிப்பவன் குடும்பம் வீதியிலே என்பது லேசாகத் திருத்தம் கண்டு கடையிலே என்று தோன்றியது.
”அன்னிக்கு ஒரு நாளு பொண்ணுக்கு கால்ல அடிபட்ருச்சு... பின்னாடி வாங்கன்னு சொல்லிட்டு... தனியாளா டாக்டர் க்ளினிக்குக்கு தூக்கிக்கிட்டு ஓடறேன்... என்ன பண்ணாரு தெரியுமாண்ணே...”
எங்களுக்கு காஃபி வந்துவிட்டது. இதுவரை அந்த ஃபுட்கோர்ட்டில் ஜோடிகள் முகத்தோடு முகம் பார்த்து பருகியதை... அதாவது ஜூஸ், காபசினோ வகையறாக்களைப் பருகியதைப் பார்த்திருக்கிறேன். இது புதுசு. புருஷனை அருகில் அமர்த்திக்கொண்டு மூன்றாவது மனுஷனிடம் பஞ்சாயத்துப் பேசுவது நிச்சய்ம் புதுசு. ”அப்படி என்ன பண்ணாரு?” என்கிற ஆர்வம் அந்த பஞ்சாயத்து அண்ணனை விட எனக்கு மேலோங்கியது. காது மூன்று மடங்கு கூர்மையாகி முயல் போல விடைத்துக்கொண்டு நின்றது.
கண்ணை அரிப்பது போல ஒரு முறை தேய்த்துக்கொண்டு கண்ணீரைக் கன்னத்தில் வழியவிடாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்து மிகவும் பரிதாபப்பட்டேன். சோகத்திலும் சுயமரியாதை. அழுதால் தன்னை தேற்றும் ஆறுதல் மொழி கேட்டு கோபம் குறைந்துவிடுமோ என்கிற எச்சரிக்கையுணர்வு. கம்பீரம்.
“டாக்டர் அடிபட்ட இடத்தை க்ளீன் பண்ணி.. மருந்தெல்லாம் வச்சிக் கட்டி... ஒரு ஊசி போட்டு.. மாத்திரை எளுதிக் கொடுத்துட்டு வாசல்ல பணம் கட்டச் சொன்னாரு... அந்த நர்ஸ்கிட்டே சில்லறை எண்ணிக் கொடுக்கும் போது உள்ள வந்தாரு... “
“என்னம்மா.. கொஞ்சம் லேட்டா வந்தான்... அவ்ளோதானே.. டாய்லெட் எதுனா அர்ஜெண்ட்டா வந்திருக்கும்... போய்ட்டு வந்துருப்பான்...” பெருசு தன்னுடைய நியாயத் தராசின் நடு முள்ளை நேர் கோட்டில் காட்டுவதற்கு அந்த மிஸ்டர். குடிகாரனுக்கு வக்காலத்து வாங்கியது. பெருசும் அந்தப் பையனோடு குடித்து தொப்பை வளர்க்கிறதோ என்று எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம்.
”அப்படியிருந்தா நா ஏன் உங்ககிட்ட நாயம் கேட்கப் போறேன்... காலேல போட்டுக்கிட்டுப் போன பேண்டு கசங்கின சட்டையை அயர்ன் பண்ணி... மடிப்புக் கலையாம போட்டுக்கிட்டு க்ளினிக்குக்கு வராரு.. இவருக்கெல்லாம் என்ன பனிஷ்மெண்ட் குடுக்கலாம் சொல்லுங்க......” பனிஷ்மெண்ட் வார்த்தைச் சொல்லும் போது டெஸிபல் எகிறியது.
அண்ணனுக்கு பேச வார்த்தையில்லை. ”அட ஜந்துவே!” என்கிற ஈனப் பார்வை பார்த்தார். அந்த பிரகிருதிக்கு இதெல்லாம் பொருட்டாகவே தோன்றவில்லை. விட்டால் நேரே டாஸ்மாக் போய் ஃபுல் மப்புல திரும்ப வந்து “நா இனிமே குடிக்கமாட்டேன்.. இந்த க்ளாஸ் மேலே சத்தியம்..” செய்வார் போலிருந்தது.
“எங்கப்பா என்னை ஸ்கூல் விட்டு அளச்சுக்கிட்டு வர்றத்துக்கு ஆல்டோலதான் வருவாரு... இந்தப் பொண்ணை கூட்டி வர்றத்துக்கு நான் நடந்து போறேன்.. எனக்கு எப்படியிருக்கும்.. சொல்லுங்கண்ணே... “ குரலில் அதட்டல் இருந்தது.
நாம எதாவது சொல்லி அந்தப் பெண் கூச்சலிடப்போகிறாள் என்று அந்த அண்ணனுக்குப் பயம். வரிந்துகட்டிக்கொண்டு மத்யஸ்தம் பண்ண வருபவர்கள் லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த அரசியல் பட விஜயகாந்த் போல வாய் அசராமல் பேச வேண்டும். இரு தரப்பு பேச்சுகளுக்கும் மௌன சாட்சியாக இருப்பது தப்பு செய்தவர் தட்டிக் கேட்பவர் இருவரையும் சூடேற்றி வெறுப்பேற்றும். இருவரும் சேர்ந்து அண்ணனை மொத்தி விடுவார்களோ என்று பயந்தேன்.
குடியர்களுக்கு வாக்கப்பட்டவர்களின் ஆதங்கமும் துக்கமும் அந்தப் பெண்ணிடம் நன்றாகத் தெரிந்தது. அவன் தினக்கூலி இல்லை. படிக்காதவன் இல்லை. ஏதோ கார்ப்போரேட்டில் மிடில் மேனேஜ்மெண்ட் அந்தஸ்தில் இருப்பவன் போலத் தெரிந்தது. ஹெல்மெட் அணிந்து தனது தலையைக் காத்துக்கொள்ளத் துடிப்பவனுக்கு மானத்தை காப்பாற்றத் தெரியவில்லை. மானத்துக்கு ஹெல்மெட் உண்டா?
காஃபி குடித்து முடித்துவிட்டோம். அண்ணனின் தீர்ப்பு என்னவாகயிருக்கும் என்ற கிளைமாக்ஸ் சேரை விட்டு எழும்பவிடாமல் கட்டிப்போட்டது. அண்ணன் இதுவரை இது போன்ற வழக்கில் முன்னோர்கள் எடுத்த தீர்ப்புகளை மனசுக்குள் அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார். சரி... புறப்படுவோம்.. என்று கிளம்பிவிட்டோம்.
அவர்களது டேபிளைக் கடக்கையில் மூக்கை உறிஞ்சும் சப்தம் கேட்டது. இரும்பு போல உறுதியாய் இருந்த அந்தப் பெண் உடைந்து போய் அழுகிறாளா? பாரதி கண்ட புதுமைப்பெண் என்றல்லவா நினைத்தோம். ஆர்வம் மேலிட லேசாகத் தலையைத் திருப்பினேன்.
அந்த நாட்டாமை அண்ணன் தேம்பி அழ பக்கத்தில் குடிகாரப் பையன் அவரைத் தோளில் தட்டித் தேற்றிக்கொண்டிருந்தான். வெளங்கிரும்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails