Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 13 : சதுரங்க ஆட்டம்: அஷ்டதிக்கஜர்கள்

... அது ஒரு மாலைப் பொழுது. தொடுவானத்தில் பொன்னிறமாக தங்கம் மலர்ந்து மனதை மயக்கும் அமைதியான சூழல். இடையறாத சிவபஞ்சாட்சர ஜபத்திற்கு பின் லேசாகக் கண்ணிமைகளைத் திறந்தார் கணபதி. பக்கத்துத் தூணோரத்தில் சார்த்தியிருந்த அவரது மூட்டை முடிச்சுகள் கலைந்து கிடந்தன. அதில் சொருகி வைத்திருந்த சொற்ப பணத்தையும் யாரோ சுருட்டியிருந்தார்கள். இடுப்பு வேஷ்டியில் முடிந்திருந்த கால்காசு அரைக்காசு சில்லரைகளும் பழைய வேஷ்டி அங்கவஸ்திரங்களும்தான் மிஞ்சின. சதாசர்வகாலமும் சர்வேஸ்வரனின் ஸ்மரணையிலே இருப்பவருக்கு பணம் காசில் துளிக்கூட நாட்டமில்லை. திரும்பவும் கண்கள் தானாக மூடியது. வாய் “நமசிவாய” என்று ஜெபிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிஷ்டைக்குப் போய்விட்டார்.

வைத்தியநாத் கோயிலுக்கு அன்றாடம் ஸ்வாமி தரிசிக்க வருபவர் சுரேஷ் மித்ரா. தீர்க்கமான கண்களுடன் தேஜஸ்வியாக ஊரார் வணங்கும்படியான தோற்றம். கோயிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கணபதி அனுதினமும் மும்முரமாக ஜெபம் செய்வதைப் பார்ப்பார். அவருடன் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு அருகிலேயே சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். கணபதி பகல் பொழுதுகளில் ஒரு பொட்டுக் கூட இமை திறக்கவே மாட்டார். நித்யமும் இப்படியே சென்றதால், ”இன்று இவரைப் பார்த்துப் பேசியே தீரவேண்டும்” என்று தீர்மானம் பண்ணிகொண்டு ஒரு நாள் இரவு வரை அங்கேயே அசையாமல் வைராக்கியத்துடன் உட்கார்ந்திருந்தார். கணபதி கண்ணைத் திறந்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சில நாட்கள் பழகியபின் “இராப்பொழுதுகளில் இங்கே மண்டபத்தில் படுத்து உறங்குவதை விட என் வீட்டில் நீங்கள் தங்கிக்கொள்ளலாமே!” என்று உபசாரமான அழைப்பு விடுத்தார். “சரி” என்று ஒப்புக்கொண்டு சுரேஷ் மித்ரா வீட்டில் சில இரவுகளைக் கழித்தார் கணபதி.

சுரேஷ் மித்ரா அம்பாள் உபாசகர். தீவிர சாக்தர். அவருக்கு காணும் யாவையும் சக்தி மயம். மந்த்ர மஹோததியில் தாராவின் வழிபாட்டு மந்திரங்களை தப்பும்தவறுமாக போட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு சக்தி வழிபாட்டில் கரை கண்டவர். வம்சாவளியாக அவர்கள் தாராவைத் துதித்துக்கொண்டிருக்கும் ஒரு ரகஸிய மந்திரத்தை கணபதிக்கு உபதேசித்தார். அவரது வீட்டில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் கணபதியின் கனவில் ஈஸ்வரன் பிரசன்னமானார். ஆனால் அவர் அப்போது என்ன சொன்னார் என்பது கணபதிக்குப் புரியவில்லை.

இந்த ஈஸ்வரானுக்கிரக சொப்பனத்திற்குப் பிறகு காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவரை நெட்டித்தள்ளியது. ஆனால் கையில் தம்படி காசில்லை. ஈஸ்வரனை நம்பித் தொழுவோரை அவன் லேசில் விட்டுவிடுவானா? காசிக்குப் போக காசுக்கு புதிய வழிபிறந்தது. கணபதி காசிக்கு காசு சம்பாதித்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

வைத்தியநாத்திற்கு அருகில் கார்வல் என்ற சிற்றூரில் ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் ஒரு செஸ் பைத்தியம். அவருடைய பங்களாவில் எட்டு செஸ் ஆட்டக்காரர்களை ஜாகை வைத்து போஜனம் போட்டு சம்பளம் கொடுத்து அஷ்ட திக்கஜாஸ் என்று பெயரிட்டு சர்வ மரியாதைகளோடு போஷித்தார். அனைவரும் ஆட்டத்தில் விற்பன்னர்கள். சதுரங்கப் பலகையில் ரதகஜதுரகபதாதிகளுடன் குட்டி ராஜ்ஜியமே நடத்துபவர்கள். அந்த அவையில் நுழைந்த கணபதியை “இந்தக் கவிச்சிங்கத்திற்கு சதுரங்கம் ஆடத்தெரியுமா?” என்று சாதாரணமாகக் கேட்டார் அந்த ஜமீன்தார். ”ம்..பார்க்கிறேன்..” என்ற கணபதியிடம் “என்னுடைய அவையை அஷ்டதிக்கஜாஸ் என்று எட்டு சதுரங்க விற்பன்னர்கள் அலங்கரிக்கிறார்கள். அவர்களில் ஒரே ஒருவரோடு போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அது போதும்..” என்று கொக்கிப் போட்டு இழுத்தார். பதிலுக்கு “எட்டு பேருடனும் ஒரே சமயத்தில் விளையாடுகிறேன்...” என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார் கணபதி. ஜமீன்தாரால் நம்ப முடியவில்லை. ”மெய்யாகவா?” என்று மீண்டும் மீண்டும் ஐந்தாறு முறை கணபதியுடன் உறுதியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு தயாரானார்.

ஜமீன் ”யாரங்கே?” என்றதும் அவைக்கு நடுவில் எட்டு சதுரங்கப் பலகை கொண்டு வரப்பட்டு கீழே அமர்ந்திருந்த கணபதியைச் சுற்றி வைக்கப்பட்டது. பலகைக்கு ஒருவராக அஷ்டதிக்கஜாஸ் அலங்காரமாக எதிர்புறம் அமர்ந்தார்கள். எட்டு பேருடன் சுழன்று சுழன்று காய் நகர்த்தி சதுரங்கமாடினார் கணபதி. முதல் பலகையில் கறுப்பு ராஜாவுக்கு ஆடினால் அடுத்த பலகையில் வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். இப்படி பலகைக்குப் பலகை வித்தியாசமாக இருந்தது. எட்டு பலகையிலிருந்தும் ஒவ்வொரு சுற்றுக்கும் காய்கள் வெட்டப்பட்டு தரையில் உருண்டன. அரை நாழிகையில் அத்தனை பலகையிலும் எதிராளியின் ராஜாவுக்கு செக் வைத்திருந்தார் கணபதி. நிமிர்ந்து ஜமீனைப் பார்த்தார். அவை ஸ்தம்பித்தது. அந்த ஜமீன்தார் ”இப்படி ஒரு திறமையா?” என்று விழிகள் விரிய ஆச்சரியப்பட்டார்.

எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்ய, ராஜா “கணபதி! நீங்கள் ஒரு அபூர்வ பிறவி. இப்படியொரு அசாத்திய திறமைசாலியை நான் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. எனது சமஸ்தானத்தில் இப்படி ஒரு போட்டி நடைபெற்றதும் இல்லை. இனிமேலும் நாங்கள் இதுபோலப் பார்க்கப்போவதுமில்லை. இந்த சிறிய சன்மாணத்தைஏற்றுக்கொண்டு எங்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்று கையிலிருக்கும் பித்தளை தாம்பாளம் நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பரப்பி பணிவாக நின்றார்.

கணபதி புன்னகைத்தார். பணம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இல்லறத்தில் இருந்தாலும் தீவிர ஜபம் கடும் தவம் என்று முனிசிரேஷ்டராக வாழ்ந்துகொண்டிருப்பவர். ”மன்னிக்கவும்...” என்று இரு விரல்களால் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டார். அதுதான் அந்த இடத்திலிருந்து காசிக்கு ரயில்பயணச் சீட்டின் தொகை. ”நன்றி. நான் புறப்படுகிறேன்” என்று காசிக்கு கிளம்பினார் கணபதி. இதுவரை நடந்தவைகளை நம்பமுடியாமல் அனைவரும் கணபதி சென்ற திக்கையே அதிசயமாக பார்த்துக்கொண்டே நின்றனர்.

இம்முறையும் காசியில் தவம் செய்வதற்கான அனுகூலமான சூழ்நிலையில்லை. காசியில் தன் மாமா தாத்தா பவானி சங்கரத்துடன் அயோத்திக்குக் கிளம்பினார். அயோத்தியை நெருங்கும்போது பவானி சங்கரத்திற்கு கடும் வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. காசியில் உயிரை விட்டால் முக்தியடையலாம். ஆனால் அயோத்தியில் பிராணனை விட்டுவிடுவோமோ என்று தவித்தார் பவானிசங்கரம். பவானி சங்கரத்தை காசியில் விட்டுவிட்டு கான்பூருக்கு சென்று மூன்று மாதங்கள் தொடர் தவத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் ஒரு உன்னதமான மனிதரைச் சந்தித்தார். அவர் பெயர் லக்ஷ்மண சாஸ்திரி. பொதுஜனத்திற்கு சித்த ஸ்வாதீனமில்லாதவர் போல இருந்தாலும் அனைத்தும் கற்றுணர்ந்த மஹா ஞானி.

ஆன்மிகத்தில் உச்ச நிலையை எட்ட நிறைய குறிப்புகளை கணபதிக்கு பாடமாகப் புகட்டினார். “இவ்வுலகில் எந்த வஸ்துவைப்பார்த்தாலும் அதை பரப்பிரம்மமென உணர்” என்று அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்து அருளினார்.

தான் எங்கு இருந்தாலும் அந்த முகவரியை தந்தைக்கு அனுப்ப தவறியதில்லை கணபதி. ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி தனக்கு கண் பார்வை மிகவும் மங்கி வருவதாகவும் உடனே கிளம்பி கலுவராயிக்கு வரும்படியும் லிகிதம் எழுதியிருந்தார். ஊருக்கு திரும்புவதற்கு போதிய பணமும் அனுப்பியிருந்தார். கலுவராயிக்குத் திரும்பிய கணபதிக்கு ஒரு ஆச்சரியம். மந்தேஸா மகாராஜா பல பரிசுகளோடு நரசிம்ம சாஸ்திரியிடம் கணபதியின் காவ்ய கண்ட சான்றிதழை பத்திரமாகச் சேர்ப்பித்திருந்தார். தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தந்தையாக குளிர்ந்திருந்தார் நரசிம்ம சாஸ்திரி.

உத்தர பாரத தீர்த்தயாத்திரைகளை முடித்துக்கொண்டு கணபதி வீடு திரும்பிய வருடம் 1900. கலுவராயி கிராமத்தில் அவரைக் காண ஒரே தள்ளுமுள்ளு. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று சூழ்ந்து கொண்டார்கள். அவருடைய தீர்த்தயாத்திரை மற்றும் காவ்ய் கண்ட பரீக்ஷையின் கதைகளை விரும்பிக் கேட்டார்கள். ஆர்ப்பரித்தார்கள். மாலையிட்டார்கள். வணங்கினார்கள். வாழ்த்தினார்கள். ஆசீர்வதித்தார்கள். நரசிம்ம சாஸ்திரி பெருமைக் கடலில் மூழ்கினார். மனைவி விசாலாக்ஷி மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. கொஞ்ச காலம் கலுவராயி திருவிழாக்கோலம் பூண்டது.

மந்தேசா மஹாராஜா கணபதியை தனது தர்பாரிலேயே தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பினார். இங்கே நரசிம்ம சாஸ்திரி கண் பார்வை மங்கி ரொம்பவும் கஷ்டப்பட்டார். கணபதி அந்திமக்காலத்தில் இருக்கும் தன் தகப்பனாருக்கு சேவை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜா விடுவதாகயில்லை. பால்யத்திலேயே பெற்ற தாயை இழந்த கணபதி தந்தையை இறுதிக்காலத்தில் தவிக்கவிடக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருந்தார். பதினைந்து மாதங்கள் அவருக்கு அருகாமையில் அமர்ந்து அனுதினமும் பணிவிடைகள் செய்தார். அந்த நேரத்தில் பொழுதை வீணடிக்காமல் ஆயுர்வேதத்தைப் படித்துக் கரைத்துக் குடித்தார். தந்தையின் கண் நோய்க்கு மருந்தும் கண்டுபிடித்து சொஸ்தப்படுத்தினார்.

இதில் தேறிய நரசிம்ம சாஸ்திரி “அப்பா கணபதி! நீ உன் மனைவியுடன் நந்திகிராமத்திற்கு சென்று ஒரு வாரம் க்ருஷ்ணம்மா நாயுடுவோடு தங்கு. அப்புறம் அங்கிருந்து மந்தேசா சென்று எதிர்வரும் தெலுங்கு வருடப் பிறப்பை ராஜாவோடு விமரிசையாகக் கொண்டாடு” என்று ஆசீர்வதித்து இருவரையும் அனுப்பிவைத்தார். கணபதியும் விசாலாக்ஷியும் மார்ச் 1902ம் வருடம் மந்தேசாவை வந்தடைந்தார்கள்.

மந்தேசா அரண்மனையில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_13‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails