Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 14 : கணபதியைக் காப்பாற்றிய இந்திரன்

ராஜகுடும்பம் வசிக்கும் மந்தேசா அரண்மனை கூட கோபுரங்களும் அலங்கார மாடங்களும் நிறைந்து பிரம்மாண்டமாகக் காணப்பட்டது. எழில் நிறைந்தது. உலகத்தின் ஒட்டுமொத்த வசதிகளையும் உள்ளடக்கியது. இம்மென்றால் நான்கு பேர் ஓடி வந்து உபசரிக்கவும் உம்மென்றால் ரெண்டு பேர் கைகட்டி நிற்கவும் என்று பெரிய ஆட்படையே குற்றேவலுக்குக் காத்திருந்தது.

உபாஸனை, ஜபம் தபம் போன்றவைகளை நித்யானுஷ்டங்களாகச் செய்துகொண்டு ஏனைய லௌகீக வாசனைகளிலிருந்து தள்ளியே இருப்பவர்களுக்கு இந்தமாதிரியான படாடோப அரண்மனை வாசம் சுத்தமாகப் பிடிப்பதில்லை. மந்தேசாவில் ராணிமார்கள் விசாலாக்ஷியை உள்ளங்கையில் வைத்துக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் இதில் இம்மியளவும் இஷ்டமில்லாத விசாலாக்ஷி அதிவிரைவில் தனது பிறந்தகம் திரும்பினார்.

கணபதிக்கும் இந்த டாம்பீக வாழ்வு சீக்கிரத்தில் கசந்தது. அவரும் மூட்டையைக் கட்டிக்கொண்டு தனது தம்பி சிவராம சாஸ்திரியுடன் புவனேஷ்வர் சென்றார். அளவுக்கதிகமான உபசாரத்தில் அன்பான குருவையும் அவரது மனைவியையும் அரண்மனையை விட்டு விரட்டிவிட்டோமோ என்று சந்தேசாவின் ராஜகுடும்பம் மனம் வருந்தியது.

புவனேஷ்வரில் ஒரு மாத காலம் ஜபதபங்களிலும் உக்கிரமான விரதங்களினாலும் கழிந்தது. அங்கே தந்தவாணி ராஜா கணபதியை அவரது தர்பாருக்கு கணபதியை அழைத்து மரியாதை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜாவின் நெருங்கிய ஸ்நேகிதர் இவர். அடிக்கடி லிகிதம் எழுதி பேசிக்கொள்வார்கள். மந்தேசா மகாராஜா கணபதியைப் பற்றி தந்தவாணி அரசருக்கு எழுதியிருந்தார். ஆகையால் அவர் கூப்பிட, அந்த மரியாதைக்கு கணபதியும் அவரது தம்பி சிவராம சாஸ்திரியும் அங்கு விஜயம் செய்தார்கள். விருந்திற்கு பின்னர் தன்மண்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

மாலை மங்கி இரவு தொடங்கும் நேரம். ரயில் தண்டவாளங்கள் பக்கத்தில் இருவரும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ யோசனைகள். திடீரென்று பேய்க் காற்று வீசியது. எங்கிருந்தோ வந்த கருமேகங்கள் சூழ்ந்து அந்தப் பிராந்தியமே பிரளய காலம் போல கும்மிருட்டாக ஆகியது. பளிச் பளிச்சென்று அக்கொன்றும் இங்கொன்றுமாக மின்னல் வெட்டியது. பல விஷயங்களை சிந்தித்துக்கொண்டே தண்டவாளத்தோடு நடந்தவர்கள் இன்னும் நான்கடியில் எதிரில் வரும் ரயில்வே பாலத்தைக் கவனிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பின்னால் ஒரு சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறார்கள். ரயில் நெருங்கிவிட்டது. இருவரும் இன்னும் கவனிக்கவில்லை. ஆபத்து. அப்போது....

அவர்களது சிந்தனையைக் கலைத்து இழுத்து வருவது போல அந்தப் பிரதேசமே ஒளிரும் வண்ணம் பயங்கரமான மின்னல் ஒன்று ஆகாயத்தில் சடசடவென்று கிளைவிட்டுப் பிரிந்து கோடி சூர்யப் ப்ரகாசமாய் வெட்டி அணைந்தது. அதைத் தொடர்ந்த காது கிழியும் இடியோசையால் அண்டப் பெருவெளியே அதிர்ந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் எதிரே பாலமும் பின்னால் வெகு அருகில் சரக்கு ரயில் வருவதையும் கவனித்துத் தண்டவாளத்திலிருந்து விலகி ஓடி தப்பித்துக்கொண்டார்கள். “தேவேந்திரன் இன்று தனது வஜ்ஜிராயுதத்தை எறிந்து காப்பாற்றினான்..” என்று இதழோரம் புன்னகை பூக்க தம்பியிடம் சொன்னார் கணபதி.

ரயில்வே ஸ்டேஷனில் எக்கச்சக்க கூட்டம். கல்கத்தா செல்லும் வண்டிதான் முதலில் ப்ளாட்ஃபார்முக்கு வருவதாக இருந்தது. அதற்கு பயணச்சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் தென் திசை ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். கல்கத்தா வண்டி சென்றபின்னர் தான் தென் திசை ரயிலுக்குப் பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என்றதால் ரயில்வே ஸ்டேஷனின் மரபெஞ்சில் வெறுமனே அமர்ந்திருந்தார்கள். சிவராம சாஸ்திரி “அண்ணா! நாம் பிரயாகை செல்லலாமே!” என்று அதிரடியாக பயணத் திட்டத்தை மாற்றினார். கணபதி ”வேண்டாம்.. ஊருக்குச் செல்லலாம்..” என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அவசரவசரமாக கல்கத்தாவுக்கு பயணச்சீட்டு வாங்கி பிரயாணப்பட்டார்கள்.

அபூர்வமாக மனைவியைப் பார்க்கவேண்டும் என்று ஊருக்கு செல்ல ஆசைப்பட்ட அண்ணாவை திசை மாற்றி கல்கத்தாவுக்கு அழைத்து வந்துவிட்டோமே என்று மனம் வருந்தினார் சிவராம சாஸ்திரி. கணநேரமும் தாமதிக்காமல் உடனே மீண்டும் அங்கிருந்து ஸ்ரீகாகுளத்திற்கு பயணப்பட்டு அங்கிருந்து பொடிநடையாக ஊருக்கு சென்றுவிட தீர்மானித்து வந்து சேர்ந்தனர். ஸ்ரீகாகுளத்தில் இருவரும் கால் வைக்கும்போது மழை பொத்துக்கொண்டு கொட்டியது. வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட கணபதியின் மனம் இப்போது குளிர்ந்து மாறியது.

தென்பகுதியில் இருக்கும் எதாவது ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்று தவமியற்ற விரும்பினார். சிவராம சாஸ்திரி விரைந்து சென்று விஜயவாடாவிற்கு டிக்கெட் எடுத்தார். அதற்குள் அங்கிருந்து கிளம்பிய விஜயவாடா செல்லும் ரயிலில் ஓடிப்போய் ஏறிய சகோதரர்கள் இருக்கையில் அமர்ந்ததும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஏதோ ஒரு இறை சக்தி தங்களை இவ்விதம் இயக்குகிறது என்ற பொருள் அந்த சிரிப்பில் தொக்கி நின்றது.

ரயில் சிறிது தூரம் நகர்ந்ததுமே கணபதி முனி சடசடவென்று மேல் பர்த்தில் ஏறி சிவபஞ்சாட்சர ஜபம் செய்யத் துவங்கிவிட்டார். மறுநாள் பொழுது விடிந்தபோது விஜயவாடாவில் இறங்கி க்ருஷ்ணா நதிதீரத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தார்கள். அப்படியே கனகதுர்க்காவை தரிசித்தார்கள். அங்கேயிருந்த சிவகங்கை மடத்தில் தங்கினார்கள். கணபதியின் முக தீட்சண்யத்தைப் பார்த்து சிவகங்கை மடத்தின் தலைவர் அவர் ஒரு அறிஞர் என்று இனம் கண்டுகொண்டார். அவரைச் சிறப்பித்து அங்கிருந்து வழியனுப்பினார்.

விஜயவாடாவிலிருந்து காலஹஸ்தி ரயிலேறினார்கள். காலஹஸ்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பிறகு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கும் சகோதரர்கள் இருவரும் பயணித்தார்கள். ஏகம்பரேஸ்வரரின் அருட் தரிசனம் கிட்டியது. கோயிலிலிருந்து வெளியே வந்து காஞ்சீபுரம் கடைவீதியில் நாராயண ஜோஸ்யர் என்பவரை அகஸ்மாத்தாக சந்திக்கின்றனர்.

சிறிது நேர சம்பாஷனையில் நாராயண ஜோஸ்யர் கணபதியின் கூர்மையான ஜோதிடப் பாண்டித்தியத்தைக் கண்டு அசந்து போனார். “தயை கூர்ந்து தாங்கள் எனக்கு ஜோதிஷ சாஸ்திர நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும்” என்று கணபதியைப் பணிந்தார் நாராயண ஜோதிடர். பிரதி உபகாரமாக கணபதிக்கு அன்னபானங்கள் கொடுத்து அனுதினமும் கவனித்துக்கொண்டார். ஆற்றங்கரையோரமாக இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் சூரியன் மறையும் வரை கடும் தவம் புரிவார். இரவு நேரங்களில் நாராயண ஜோஸ்யருக்கு ஜோதிட நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பார். இப்படி தவத்திலும் ஜ்யோதிஷ உபாத்தியாயத்திலும் காஞ்சீபுரத்தில் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி பணம் அனுப்பி வீட்டிற்கு வரும்படி இருவரையும் அழைத்தார். இம்முறை கணபதிக்கு வீடு திரும்ப ஆர்வமில்லை. தம்பி சிவராம சாஸ்திரி ”கணபதி நீயும் கூட வருவதாக இருந்தால் வீட்டிற்கு செல்லலாம்” என்று வைராக்கியமாக இருந்தார்.
இரவு ஜ்யோதிஷ சந்தேக நிவர்த்தி வகுப்பு முடிந்து சாப்பிடும்போது நரசிம்ம சாஸ்திரி ஊருக்கு அழைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. “நீங்கள் இருவரும் பஞ்சபூதத் தலங்களில் இரண்டை தரிசித்துவிட்டீர்கள். மீதமிருக்கும் மூன்றையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புங்களேன்” என்று திருப்பிவிட்டார் நாராயண ஜோதிடர்.

“இன்னும் பார்க்கவேண்டியவை எவை?” என்று கேட்டார் சிவராம சாஸ்திரி.

“திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரம் அப்புஸ்தலம், திருவண்ணாமலை அருணாசலம் தேயுஸ்தலம், சிதம்பரம் ஆகாயஸ்தலம்”

“இதில் இங்கிருந்து பக்கத்தில் இருப்பது எந்த க்ஷேத்ரம்”

“திருவண்ணாமலை அருணாசலம்” என்றார் நாராயண ஜோதிடர்.

அருணாசலம் பெயரைக் கேட்டவுடனேயே கணபதியின் உடலில் ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது. உள்ளம் பூரித்து உவகை பொங்கியது. பக்திரசம் ததும்ப ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி தன்னை அந்த திக்கில் இழுப்பதாகத் தோன்றியது. இலையில் இருப்பதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு அதற்கு மேல் சாப்பிட தோன்றாமல் கை அலம்பினார்.

ஜோதிடர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது ”அருணாசலத்திற்கு செல்வோம்.. வா” என்று தம்பியின் தோளைத் தொட்டார் கணபதி. இருவரும் ஊரடங்கிய அந்த இரவில் திருவண்ணாமலைக்குக் கிளம்பினர்.

*
கணபதி தனது தம்பியுடன் அருணாசலத்தில் வந்து இறங்கியது ஒரு நவராத்திரி பண்டிகைக் காலம். கடைசி நாள். சிவாகம சம்பிரதாயத்தில் சிவன் கோயில்களில் இறைவனைத் தரிசித்த பின்னரே இறைவியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது. அதுபோல அண்ணாமலையிலும் அருணாசலேஸ்வரரைத் தொழத பின்னர் அபீதகுஜாம்பாளைத் தரிசிக்க வேண்டும். ஆனால் ஒரு சக்தி கணபதியைக் கொக்கி போட்டு இழுக்க நேராக அபீதகுஜாம்பாள் சன்னிதிக்கு விரைந்தார்.

புஷ்பாலங்காரத்தில் கர்ப்பகிரஹத்தில் ஜெகஜ்ஜோதியாக அருள்பாலித்தாள் அம்பாள். திருவிளக்குகள் சிந்திய ஒளியில் அபீதகுஜாம்பாள் தங்கக் கிரீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதருவது தெரிந்தது. மல்லியும், ரோஜாவும், சாமந்தியும், சம்பங்கியும் மாலை மாலையாக அணிந்திருந்தாள். இந்தத் திருக்கோலத்தைக் கண்டு தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் கணபதி. அப்போது அம்பிகையின் கழுத்திலிருந்த சில மாலைகள் கழன்று பூமாரியாக பொழிந்தது. அது நல்ல சகுனமென்று பேரானந்தத்தில் திளைத்தார் கணபதி. மனசு கரைந்து கண்கள் ஊற்றெடுத்து கன்னங்கள் வழியாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அசைவற்று அங்கேயே இருந்த கணபதி கொஞ்ச நேரத்திற்குப் பிறகு உமையம்மையை விட்டு விலக மனமில்லாமல் ஸ்வாமி சன்னிதி சென்றார்.

அங்கே நின்ற சிறிதுநேரத்தில் பட்டென்று வெளியுலகத் தொடர்பு விட்டுப்போய் பக்தியெனும் பேரின்பசாகரத்தில் மிதந்தார். இதுவரையில்லாத அளவிற்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. “சிவராமா! நான் இந்த ஸ்தலத்தை விட்டு வருவதாக இல்லை. இங்கே தான் இனிமேல் தவமியற்றப்போகிறேன். என் தவத்திற்கான பலனை நான் இங்கு அடைவேன் என்று மனசு சொல்கிறது” என்று நெகிழ்ந்தார். அருணாசலேஸ்வரர் அவர் சன்னிதியை விட்டு அகலாதவாறு கணபதியைக் கட்டிப்போட்டார். எவ்வளவு நேரம் நிற்கிறோம் என்ற கால அளவில்லாமல் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட நிஷ்டையில் இருப்பது போல புறம் தவிர்த்து அகத்தில் குளிர்ந்தார்.

சிவராம சாஸ்திரிக்கு வயிறைக் குடைந்து பசித்தது. ஆனால் கணபதி அண்ணாமலையார் சன்னிதியை விட்டு வெளியே வருவதாக இல்லை. “பசியில் பிராணன் போய்விடும் போலிருக்கிறது...” என்று கணபதியை சுரண்டினார் சிவராம சாஸ்திரி. இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில்லரையை எடுத்துக்கொடுத்து “எதாவது வாங்கி சாப்பிடு...” என்று கோயிலுக்கு வெளியே அனுப்பி வைத்தார். முன்னிரவு நேரம். கொடுத்த காசிற்கு ஒரு பழக்கடையில் நான்கு பூவன் பழம் வாங்கி சாப்பிட்டார். தீராப் பசி. பழத் தோலிலிருக்கும் நரம்பை உரித்துச் சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. இதற்குள் கோவிலிலிருந்து தரிசனம் முடித்து வெளியே வந்த கணபதியிடம் “அண்ணா.. இன்னும் அசுரப் பசியாக இருக்கிறது.,.” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டார். கணபதி கவலையுற்றார். ”சத்திரம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்...” என்று சொல்லிக்கொண்டே வீதியில் இறங்கினார்.

வழியில் பார்த்த ஒரு சத்திரம் ஆளில்லாமல் காற்றாடியது. வாசலில் ஒத்தையாளாய் அமர்ந்திருக்கும் பரதேசியிடம் ஏனென்று கேட்க வாயெடுக்கும் வேளையில் “ஓ! இன்றைக்கு ஏகாதசியப்பா... அன்னசத்திரம் எதுவும் இனிமேல் திறந்திருக்காது...” என்றுவிட்டு இன்னும் கொஞ்சம் சில்லரையைக் கையில் அழுத்தி பழங்கள் வாங்கிச் சாப்பிடக் கொடுத்தார். இந்த முறை எட்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டார். அப்போதும் சிவராம சாஸ்திரியின் அகோர பசி தீர்ந்தபாடில்லை. மீனாட்சி கல்யாணத்தில் குண்டோதரனுக்கு வந்த பெரும் பசியைப் போல அவருக்குப் பசித்தது. கோயிலைச் சுற்றிய சன்னிதித் தெருக்களில் “இந்தச் சிறுவனுக்கு யாரேனும் உணவிடமுடியுமா?” என்று யாசிக்க ஆரம்பித்தார். தம்பியின் பசி வேதனை அவரை போவோர் வருவோரிடம் கையேந்த வைத்தது. அன்று ஏகாதசியாக இருந்ததால் பல வீடுகளில் இராச் சாப்பாடில்லை. விளக்கணைக்கப்பட்டு கதவு அடைத்துவிட்டார்கள்.

சிவராம சாஸ்திரியின் கண்களில் பசி தெரிந்தது. இது என்ன திருவிளையாடல்? இப்போது என்ன செய்வது? என்று செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றார் கணபதி.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_14‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails