Wednesday, September 17, 2014

மன்னார்குடி டேஸ்: குரங்கு பிடித்த பிள்ளையார்

"பாழும் நெத்தியா போகாமே... நெத்திக்கு ஒத்தையாணும் இட்டுண்டு போய்ட்டு வா..”ன்னு காலங்கார்த்தாலே எழுப்பி காஃபி கொடுத்துக் கையில் ஒரு ”பலகா”வோடு தெருமுனைக்கு அனுப்புவாள் பாட்டி. ”பலகாவைத் தொடச்சுக் குடுடீ”. ரெட்டை மாட்டு வண்டியில் களிமண்ணோடு முண்டாசு கட்டியவரின் கையெல்லாம் மண்ணாக தெருவோடு போகும். இதையே வாங்கலாமேன்னுதிரும்பிப் பார்த்தால் ”வாசல்லே வரவன் கூடச் சொல்லுவன்டா. ஒரு நடை போய்ட்டு வாடா... ம்.. ஜல்தி..ஜல்தி..” என்று விரட்டிவிடுவாள்.

மன்னையில் கிழக்குத் தெரு முனையில் தெற்குத் தெரு குளத்தாங்கரையோரமாக,, ஃப்யர் சர்வீஸ் பக்கத்தில் காம்பௌண்ட் சுவரோரம் அப்படியே இன்னும் கொஞ்சம் தூரம் போனால் தேரடியில் ரெங்கசாமி முதலியார் லைப்ரரி எதிர் திடலில் என்று பிள்ளையார் சகல இடங்களிலும் வியாபித்திருப்பார். கொஞ்சம் லேட்டானால் மேலுக்கு ஒரு காசித் துண்டும் அரைக்கு வேஷ்டியுமாகக் கையில் ’பலகா’வோடு மாமாக்களின் க்யூ நீண்டுவிடும். ”சல்லிசா வேணுமின்னா சந்தைப்பேட்டைக்கிட்டே கொட்டிக் கிடக்கு...அஞ்சு ரூவாய்க்கு ரெண்டு புள்ளையார் தரான்...” என்று போக்குக் காட்டி அலைபாயும் மனதுடையவர்களைக் கும்பலிலிருந்துக் கலைப்பவர்களும் உண்டு.

அஞ்சு ரூபாய்க்கு ஆஜானுபாகுவான புள்ளையார். வலது கையால மண்ணை பசக்கென்று வார்ப்பில் அழுத்தி இடது கையால “இந்தா புள்ளையார்”ன்னு எடுத்துத் தராமாதிரி டெம்ப்ளேட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பிள்ளையாரும் விசேஷமாகக் கையால் செய்தவை. துதிக்கை செய்யும்போது மண்ணைக் கைகளால் உருட்டி பிரிசணலால் இடம் வலமாக வருடி விடுவார். அசல் தும்பிக்கை மாதிரியே வரிவரியா விழும். தொந்திக்கு ஒரு உருண்டை. தலைக்கு ஒரு உருண்டை. கொசுறா இரண்டு காதுக்கு பிடிச்சுட்டு ரோட்டை பராக்குப் பார்த்துட்டு கீழே பார்த்தால் நிமிஷத்தில் தயாராயிடும். கால் கையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பிள்ளையாருக்கு முளைக்கும். கடைசியாக உளுத்தங்கொழக்கட்டை மாதிரி பிடிச்சு மூஞ்சுருவாய் பிள்ளையார் காலடியில் ஒட்டி “இந்தாங்க..”ன்னு பலகையில் ஏற்றிவிடுவார். அப்போதெல்லாம் பிள்ளையாருக்குக் குடை பிடிக்கும் பழக்கம் கிடையாது.

பாமணி ஆத்தங்கரை போற வழியில் ரதசப்தமிக்கு எருக்கம் இலை பறித்துக்கொண்டு வருவோம். அங்கே ஓடிப்போய் எருக்கம்பூவும் அருகம்புல்லும் பறித்துக்கொண்டு வீட்டிற்கு போனால் “குந்துமணி பறிச்சுண்டு வந்தாலும் ப்ரயோஜனம் உண்டு.. புள்ளையாருக்கு கண்ணா வைக்கலாம்.. அருகம்புல் ஆத்துலேயே மண்டிக் கிடக்கு. இதுக்காக போய் ஊர் சுத்திட்டு வரியா? பூஜை ஆரம்பிக்கவேண்டாமா?” என்று விக்னேஸ்வரனுக்குப் பதிலாக எனக்கு அர்ச்சனை பண்ணுவாள். ஒரு தடவை குந்துமணி பறிக்கும் போது லேசாக நக்கி டேஸ்ட் பார்த்தவனை “ஐயோ.. அது விஷம்டா... சாயந்தரத்துக்குள்ள உனக்குப் பரலோகம்தான்..” என்று கலாய்த்து பீதி கிளப்பிவிட்டோம். அன்று முழுவதும் கொழக்கட்டையைக் கூட வாயில் வைக்கப் பயந்து மதில்கட்டையில் தேமேன்னு அமர்ந்திருந்தான் அந்த ப்ரஹஸ்பதி. கண்களில் மரண பயம்.

வடக்குத் தெரு கிழக்குத் தெரு என்றும் புலியும் சிங்கமுமாய் தனித்தனியே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த அணிகள் ஈசான்ய மூலை பிள்ளையார் கோயிலில் ஒரு சதுர்த்தியில்தான் இணைந்தது. பிரசாதமாகக் கிடைத்த கொ.கடலை சுண்டலை பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்பி பல காலம் மன்னையில் ஹெச்சிசி(Haridhranadhi Cricket Club) என்று கோலோச்சினோம். 3333, 2222, 1111 என்று எண்ணெற்ற ரிப்பீட் நான்கிலக்க பரிசுகள். பிள்ளையார் உம்மாச்சியின் பரிபூர்ண ஆசீர்வாதம்.

நானாவித கொழக்கட்டைகள், பாயஸம், சுழியம் என்று விதவிதமான சாப்பாட்டிற்குப் பிறகு சமூகப் பட்டிமன்றம், கவர்ச்சி நடிகை கால்மேல் கால் போட்ட பேட்டி, சிறப்புத் திரைப்படம் என்றெல்லாம் பொட்டி முன்னாடி உட்காரும் பழக்கமில்லை. அப்போது இல்லவும் இல்லை. தெருவில் இறங்கிக் கிரிக்கெட் விளையாடப் போய்விடுவோம். பிள்ளையார் கிரிக்கெட் ரெண்டும் நினைவில் நிரடினால் ஹமீது ஞாபகம்தான் பொத்துக்கொண்டு ஊற்றும். நேஷனல் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் எங்களுக்குக் கேப்டன். ஆறடி. மூக்குக் கண்ணாடி. முதுகில் அஞ்சு டிகிரி கூன். பதினோராம் வகுப்பு மாடியிலிருந்து ஆனந்த விநாயகர் கோயில் தேங்காய் எறி தூரம். தீபாராதனைத் தட்டோடு குருக்கள் வருவது நாம் தொட்டு ஒற்றிக்கொள்ளுமளவுக்கு பக்கத்தில் தெரியும். பள்ளிக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஹமீது சம்பந்தக் குருக்களிடம் விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு பக்திபாயாய் பள்ளிக்குள் மான் போலே துள்ளி வருவது கண்ணில்படும்.

அந்த வருஷ விநாயகர் சதுர்த்திக்குப் களிமண் பிள்ளையார் வாங்க நான் லேட். வீட்டில் வழக்கமாக சார்த்தியிருக்கும் இடத்தில் பலகாவைக் காணலை. அங்கே மளிகை சாமான் வாங்கும் ஒரு ஒயர்க் கூடை கிடந்தது. பாட்டி திட்டுவதற்குள் ஓடு. மூளைக்குள்ளிருந்து கட்டளை. கூடையை ஹாண்டில் பாரில் மாட்டிக்கொண்டு ஓடினேன். சோதனையாகக் கீழ்கரை முக்கில் யாரும் கடை விரிக்கவில்லை. சைக்கிளை பேயாய் மிதித்து தேரடிக்குப் போயாச்சு. ரெண்டு பேர் முன்னாடி. களிமண் பிடித்துப் பிள்ளையார் வடித்தவருக்கு சதாபிஷேகம் ஆகியிருக்கலாம். ஒத்தாசைக்கு யாருமில்லையே. நேரம் பறந்தது. என் முறை வந்தது. அவசரவசரமாக வாங்கிக்கொண்டு பாட்டி ஹரித்ராநதியில் ஸ்நானம் செய்துவிட்டு மங்கம்மா படித்துறை ஏறுவதற்குள் வீட்டிற்குள் ஆஜர். ஒயர்க் கூடையிலிருந்து பிள்ளையாரை எடுத்தால் யாரோ கசையடி கொடுத்தது மாதிரி மேனியெங்கும் வரிவரியாய் கோடுகள். ஈரமாய் இருந்த பிள்ளையாரின் மேல் ஒயர்க்கூடையின் உபயம்.

பஞ்சகச்சம் பரபரக்க வாத்தியார் புயலென நுழைந்தார். சப்ளாங்கால் போட்டு கீழே உட்காருவதற்குள் “ம்..குட்டிக்கோ...சுக்லாம் பரதரம்... மொதத் தெரு வேற போகணும்...”ன்னு வாட்சைப் பார்த்துக்கொண்டே ரன்னிங் கமெண்ட்டரியாக பூஜையை ஆரம்பித்துவைத்தார். விமரிசையாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சிரமபரிகாரம் செய்துகொண்டிருக்கும்போது பக்கத்தாத்து ரமா பாட்டி வந்து சாம்பிளுக்கு வெல்லக் கொழக்கட்டை ருசி பார்த்தார். வெல்லக் கொழக்கட்டையின் பூர்ணத்தின் அதிருசியில் ”என்னாச்சு.. உங்காத்து புள்ளையாருக்கு உடம்பெல்லாம் தடிச்சிருக்கு....”ன்னு படு கேஷுவலாகக் கேட்டார். என் பாட்டி பதிலுக்கு ஆராதனையாகச் சொன்னாள் “அதுவொன்னுமில்லைக்கா... இது...” போன ’இது’க்கப்புறம் மீதியை இப்பதிவின் தலைப்பை ஒட்ட வைத்து வாசிக்கவும்.

சென்னைக் குறிப்பு: களிமண் காய்ந்து போய் வீட்டிற்கு வர எப்போதும் ரெடியாக இருக்கிறார். டெம்ப்ளேட்டட். பிள்ளையாருக்குக் குந்துமணி வைத்துக் கண் திறந்து கொடுக்கிறார்கள். ஐம்பது ரூபாய். கலர்க் கலர் குடை. ஒரு பிரி அருகம்புல் அஞ்சு ரூபாய். முழம் நூலில் பத்து எருக்கம்பூ தாராளமாய்க் கோர்த்துப் பத்துரூபாய். “கொடை குத்தறத்துக்கு கைப்பிடி மண் கொடுங்களேன்” என்று கேட்டால் அவர்கள் சொத்தை எழுதிக் கேட்டாற் போல ”வண்டி மண்ணு எவ்ளோ தெரியுமா?” என்று மண் எக்கனாமிக்ஸ் பேசுகிறார்கள்.

‪#‎மன்னார்குடி_டேஸ்‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails