Wednesday, September 17, 2014

நீலா டீச்சர்!

அனாமதேய நம்பரிலிருந்து ஒரு அழைப்பு.

”ஹலோ..”

"இது நீலா டீச்சர் வீடுங்களா?”

“ஆமா. நீங்க..”

“நானு ரேணுகா பேசறேங்க.. நெடுவாக்கோட்டையிலேர்ந்து..”

“யாரு நீங்க?...”

“நானு அவங்ககிட்டே படிச்சவங்க.. அவங்களோட பிரிவு உபசார விளாவுல ஒரு கவிதை எளுதி கண்ணாடி ப்ரேம் போட்டுக் கொடுத்தேங்க.. ரெண்டு பக்கமும் மயில் வரைஞ்சு.. பார்டர் கட்டி... பார்த்திருப்பீங்களே....”

“ம்... பார்த்தா மாதிரி இருக்குங்க... “

”இப்ப ஊர்லயே மகளிர் சுய உதவிக் குளுவுல இருக்கேன்.. அவங்க கிட்டே கொஞ்சம் பேச முடியுங்களா? பக்கத்துல இருக்காங்களா?”

“இல்லீங்க..”

“பக்கத்துல இல்லீங்களா?”

“பக்கத்துல இருக்காங்க.. ஆனா பேச முடியாதுங்க..”

”உடம்புக்கு சுகமில்லீங்களா?”

“ஆமா..”

“நாளிக்கு பேசச் சொல்றீங்களா?”

“இல்லீங்க நாளைக்கும் பேசறது கஷ்டம். எப்பவுமே கஷ்டம். அவங்க ரொம்ப முடியாம இருக்காங்க...”

“ஏன்.. என்னாச்சுங்க...”

“அவங்களுக்கு டிமென்ஷியா. பார்க்கின்ஸன்ஸும். சாப்பிடறதுக்கு வாயைத் திறக்கறத்துக்கே அசந்து போயிடறாங்க... ஃபோன்ல பேசறதெல்லாம் முடியாதுங்க....”

“அவங்களை அடுத்த மாசம் ஊருக்கு அளைச்சுக்கிட்டு வரமுடியுங்களா?”

“என்ன விஷயம்னு சொல்லுங்க...”

“சின்னபிள்ளையா இருந்தப்ப நாங்க படிச்ச வாத்தியாருங்களுக்கெல்லாம் ஃப்ரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து ட்ராபி கொடுக்கறோம். பவானந்தம் சாரு.. பிச்சைக்கண்ணு சாரெல்லாம் வர்றாங்க... சென்னையிலேர்ந்து தைரியம் டீச்சர் கூட வர்றாங்க...”

“ஓ... பவானந்தம் சார் வர்றாறா? என்னைத் தெரியும். கேட்டதாச் சொல்லுங்க..”

“நாங்களே வந்தானும் கூட்டிக்கிட்டுப் போறோம் சார்... வருவாங்களா?”

“வண்டிக்காக இல்லீங்க.. அவங்களால ரெண்டு அடி கூட தனியா எடுத்து வைக்க முடியாது.. யாராவது தாங்கிப் பிடிச்சுக்கணும்.. ரொம்ப தூரம் பிரயாணம் பண்றதுக்கு சான்ஸே இல்லை. மூளைக்கு இரத்தம் கொண்டு போற நரம்பு சுருங்கிப் போயி.... சரி.. அதை விடுங்க..”

”.....”

“ஹலோ...”

“....”

“ஹலோ.. லைன்ல இருக்கீங்களா?”

(எதிர்முனையில் சன்னமான விசும்பல் சத்தம்)

“ஹலோ...”

“சார்.. அவங்களோட போட்டோவை அனுப்ப முடியுமா? ட்ராஃபியில ஒட்டணும்..”

“ம்.. நிச்சயமா தரேன்..”

“அட்ரெஸ் தரட்டுங்களா?”

“நேர்லயே வரேன்...”

”ம்.. சரி...” கூட சொல்லமுடியமால் துக்கம் தொண்டையை அடைக்க ரேணுகாவால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வீட்டை அடைந்து ஷூவைக் கழட்டிக்கொண்டே கேட்டேன். டிவியில் வம்சம் படுத்திக்கொண்டிருந்தது. ”சித்தி! யாரோ ரேணுகாவாம். பேசினாங்க...”

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து மையமாகப் பார்த்தாள். பின்பு தலையைத் தூக்கி விட்டத்தைப் பார்த்தாள். தேமேன்னு பரப் பிரம்மமாய் உட்கார்ந்திருந்தாள்.

சிறிது இடைவெளிக்குப் பின்னர் கொஞ்சம் சத்தமாக “நெடுவாக்கோட்டையிலேர்ந்து...” என்றேன்.

சட்டென்று கண்கள் அகல விரிந்தது. “எ...ன்...ன..வா..ம்..” என்று வார்த்தைக்கு வார்த்தை ஸ்பீட் ப்ரேக்கர் போட்டுத் திக்கித் திணறிக் கேட்டாள்.

“ரிட்டயர்ட் ஆன டீச்சருக்கெல்லாம் ட்ராஃபி தர்றாங்களாம்.. போறீங்களா?”

“ம்...போ...ரே..ன்...” என்று நடக்கத் துடிக்கும் குழந்தை மாதிரி காலை ஆட்டினாள்.

இப்போது எனக்கு கண்களில் நீர் முட்டியது. நீலா எனது அம்மாவின் தங்கை. என்னை தக்குணூன்டிலிருந்து சாதம் ஊட்டி தூக்கி வளர்த்தவள். புடவையின் அன்பு வாசனை நிறைய முதுகுக்குப் பின்னாலிருந்துக் கட்டியணைத்துக் கையைப் பிடித்து “அ”..”ஆ” எழுதச் சொல்லிக்கொடுத்தவள். நீலா சித்தியின் கையெழுத்து முத்து முத்தாகக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கும்.

ஆசிரியர் தின வாழ்த்துகள் அவளுக்குச் சொல்ல மறந்துவிட்டேன்.

“ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நீலா டீச்சர்!”

4 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
இது நிஜமாய் இருக்கவும் வாய்ப்புண்டு
ஏனெனில் பழைய நட்புக்கும் பழைய நினைவுகளுக்கும்
நிச்சயம் அந்த அசுர சக்தி உண்டு
மனம் கவர்ந்த கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

... I don'd find any word to comment on this post.. my GOD...

but, y this post on 17th Sep.... ie 2 weeks after teachers' day..

சிவகுமாரன் said...

கண்களில் நீர் அரும்புகிறது.

V Mawley said...

இரண்டு வாரம் முன்பு (,நீங்கள் மன்னை சென்றிருந்த அன்று,) தங்கள் தாயாரிடம் பேசும் வாய்ப்பு

கிட்டியது ; அப்பொழுது நீலா டீச்சரை பற்றி விசாரித்த்துதெரிந்து கொண்டென்;தங்களின் இந்த பகிர்வு

மனசை உலுக்குவதாக அமைந்துவிட்டது ..படித்த்து முடிக்கும்போது கண்களில் குளம்...

மாலி

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails