Wednesday, September 17, 2014

சிறுவாபுரி


முருகன் அழகன். ”முருகா..” என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் எளியோன். வேலாயுதத்தைத் தோளில் சாய்த்தபடி மன்னார்குடி வீட்டில் ஒரு குழந்தை முருகன் படம் ஹாலில் மாட்டியிருக்கும். “யாமிருக்க பயமேன்” என்ற அபயஹஸ்த முத்திரையோடு இருக்கும் படம். அண்ட்ராயர் காலத்தில் வாங்கிய ஒரு முருகனை நவராத்திரி கொலு, வீட்டு அலமாரி, விளக்கு மாடம் என்று மன்னார்குடி வீட்டின் எல்லா இடத்திலும் வைத்து அழகு பார்த்திருக்கிறேன். போன வாரமே வல்லபாவின் தந்தை “அடுத்த வாரம் சிறுவாபுரி போவோம்...” என்று திருக்கழுக்குன்றத்தில் சொன்னார். அந்த சிறுவாபுரிக்கு நானும் வீகேயெஸ்ஸும் குடும்பத்துடன் சென்றோம்.

செங்குன்றம் புழல் ரோட்டில் ஸ்பீடோமீட்டர் 90 டிகிரியில் நெட்டுக்க நிற்க ஓட்டினால் சடுதியில் சிறுவாபுரியை அடையலாம். ஞாயிற்றுக்கிழமை. சாலையில் அதிக நெரிசல் இல்லை. பச்சை பசேலென்று வயல்வெளிகள் தெரிந்து மாயவரம் லோகேஷனை சென்னைக்கு மிக அருகில் கொண்டு வந்தது.

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோயில். சின்ன ராஜகோபுரம். கோபுரவாசலில் கீரை, நிலக்கடலை, கத்தரிக்காய், பச்சைக் காய்கறிகள் விற்கும் கிழவிகள். அர்ச்சனைத் தட்டு கூவி விற்கும் வியாபாரிகள்.

முருகன் இன்று ஏகாந்த தரிசனம் தந்தான். பக்தர் கூட்டம் அதிகமில்லை. நின்ற திருமேனிக்கு சந்தன காப்பு. விபூதி மணத்தது. சந்தன அலங்காரத்தில் பட்டு வேஷ்டி கட்டியது மாதிரி ஜரிகை இழை இழையாக ஒட்டியிருந்தார்கள். திவ்ய தரிசனம். ராஜகோபுர வாசலிலிருந்து ரோஜாப்பூ மாலையாக தொடர்ந்து சன்னிதிக்கு வந்தது. முருகனுக்கு சார்த்தி கொண்டு வந்தவர்கள் கழுத்துக்கு திரும்ப வந்து அருளேறி சென்றுகொண்டிருந்தது.

உற்சவ வள்ளி மணவாளன் கொள்ளை அழகு. வள்ளியின் கைத்தலம் பற்றி சிரித்த முகத்துடன் மனதைக் கொள்ளை கொள்ளும் சிலா ரூபம். அந்த இடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.

வலம் வருகையில் அண்ணன் கணபதி மரகதமாக வீற்றிருந்தான். பக்கத்தில் ஸ்தல விருட்சம். “அண்ணே..அண்ணே.. வீடு கட்டுங்க.. வீடு கட்டுங்க..” என்று நாலு உடைந்த செங்கல்லை கையில் திணித்தான் டவுசர் பையன் ஒருவன். குச்சியாக இருந்தான். “இதுக்கு எவ்ளோ காசு கேட்பே”. “நீங்க எவ்ளோ கொடுத்தாலும் வாங்கிப்பேன்...”. சிரிப்பில் முருகனாய்த் தெரிந்தான். பத்து ரூபாய்த் தாளை கையில் திணித்துவிட்டு “இதுக்கு என்ன வாங்குவே..” என்றேன். “பேனா வாங்குவேன்..” என்று சமயோஜிதமாக பதில் சொன்னான். பிடித்திருந்தது. பக்கத்திலிருந்த கல் வைத்திருக்கும் இன்னொரு வளர்ந்த பையன் “பொய் சொல்றான்...” என்று கொக்கரித்தான். அவனைப் பார்த்தும் சிரித்தேன். இவனிடம் “எத்தனாவது?” “அஞ்சாவது...” என்றான்.

பின்னால் ஆதிமூலவர் சன்னிதி. முனீஸ்வரன் சன்னிதியும் இருந்தது. வலது புறத்தில் நாகர் சன்னிதி. பாம்பு படமெடுத்தால் இருக்கும் உசரத்தில் இருந்தது. நவக்கிரகத்திற்கு ஒரு சுற்று. கொடிமரத்தருகில் தம்பதியாக நமஸ்கரித்தேன்.
கோபுரவாசலில் கத்திரிக்கா, கடலை வாங்கிக்கொண்டோம். முருகனுக்கு மனதிற்குள் ஒரு அரோகரா. “அப்பா.. பத்து ரூபா காசு வாங்கிண்ட பையன் அந்தப் பக்கம் ஓடறான்...” பெரியவள் கூவினாள். “என்ன பண்றான்..”. “கையில தண்ணி பாக்கெட் வச்சுருந்தான்...”. தாகம் தீர்க்கப் பயன்பட்ட பத்து ரூபாய் என் கையிலிருந்து அவனுக்குச் சென்றது. ”பேனா வாங்க இனி யார் காசு தருவார்?” என்ற சிந்தனையில் வீடு திரும்பினேன்.

அருணகிரியாருக்கு முருகன் காட்சி தந்த தலம். நான்கு திருப்புகழ் பாடியுள்ளார். லவன் குசன் இருவரும் சிறுவர்களாய் ராமபிரானுடன் அம்பு தொடுத்து போரிட்டு வெற்றிப் பெற்ற தலமாம்.

இதை தட்டச்சும்போது அருணகிரிநாதர் அருளிய சிறுவாபுரி திருப்புகழ் தேடினேன். இதோ..

கௌமாரம் இணையதளத்தில் திருவாளர் கோபால சுந்தரம் எழுதிய விளக்கவுரையை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி..

வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள்
மேவின பாதகர் ... வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட
கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும்
பாதகிகள் ஆவர்.
வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர் ... வந்தவரிடம் வீணாகப்
பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை
பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர்.
வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி
ஆசையிலே உழல் சிறியேனும் ... பரத்தையர் எனப்படும் இவர்கள்
இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம்
கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும்,
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன்
ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம்
மறவாதே ... திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள்,
இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற
உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல்,
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி
வினாவுடனே தொழ ... நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை
விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி
அறிவுடன் தொழுது,
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே ... வாழும்
வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி
அருள்வாயாக.
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி
பூரணி ... நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள்,
கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள்,
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி ... சிறந்த ஐந்தாவது
சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை
அணிந்தவள், உமையவள், காளி,
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக ...
அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள்,
சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே,
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச ... கங்கை
நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய
முருகேசனே,
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா
நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே ...
ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று
வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற
இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம்* என்னும் தலத்தில்
விளங்கும், திருமாலின் மருகனே,
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே
நிறைவான ... பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள்,
கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே. ... அழகிய சிறுவாபுரியில்**
வீற்றிருக்கும் பெருமாளே.

ரொமான்ஸ் குறிப்பு: இத்துடன் இணைத்திருக்கும் வள்ளி மணாளன் திருவாசி இருதய வடிவத்தில் இருப்பது மேலும் சிறப்பு.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails