Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 6 : காசியில் கணபதி

எதிரே குபுகுபுவென்று வெண்புகை கிளம்பியது. முழுநீள தாடியுடன் அவ்வெண் புகையில் நனைய மசமசவென்று கண் முன் தோன்றிய அந்த உருவம் கணபதியைப் பார்த்து தமிழில் சரளமாகப் பேச ஆரம்பித்தது. “நான் பத்ரகா. நீ கணகா. உனக்கும் எனக்கும் முன் ஜென்மாந்திர தொடர்பு உண்டு. நீயும் நானும் முற்பிறவில் சகதபஸ்விக்கள். இப்பிறவியிலும் நீ தவ வாழ்வில் ஈடுபட வேண்டும்.” அவ்வளவுதான். செய்தி தெரிவிக்கப்பட்டது. அவ்வுருவம் பட்டென்று மாயமாய் மறைந்துவிட்டது. சூழ்ந்த புகை விலகியது.

கணபதி தமிழ் பக்கம் போகாதவர். ஆனால் எம்மொழிக் கிரந்தமானாலும் அக்ஷரம் பிசகாமல் நினைவில் நிறுத்திக்கொள்ளும் அபார நினைவாற்றல் இருந்தது. கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு தமிழ் தெரியும். அவரிடமிருந்து பத்ரகா சொன்னதை தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டார். அப்போதிலிருந்து கணபதியின் மனஸ் தவமியற்ற தவியாய்த் தவித்தது.

இதற்கிடையில் நந்திகிராமம் சென்றிருந்த கணபதியின் தம்பி சிவராம சாஸ்திரி தந்தைக்கு ஒரு லிகிதம் எழுதினார். அதில், கணபதி ஒரு பிரம்ம தேஜஸான தவ சிரேஷ்டருடன் ஐராவதத்தின் மீதேறி எங்கோ தவமியற்றப் போவது போன்று கனவு கண்டதாக எழுதியிருந்தார். நரசிம்ம சாஸ்திரி தனது மகன் ஒரு அபூர்வச் செயலுக்காக இப்புவியில் பிறந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டார். கணபதி தவமியற்ற போவதற்கு ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். ”தங்களது கட்டளை என்ன?” என்று தாள் பணிந்து கேட்டார் கணபதி. “நான் அழைக்கும் போது உடனே நீ திரும்பிவிட வேண்டும்.” சங்கரருக்கு ஆர்யாம்பாள் இட்ட கட்டளை போன்ற கேள்வி. கணபதி ஒத்துக்கொண்டார்.

கணபதி தவமியற்றித் திரும்பும் வரையில் விசாலாக்ஷி பிறந்தகத்திலேயே இருக்க ஏற்பாடாயிற்று. தனது இருபதாவது பிறந்தநாளில் (18-11-1897) தந்தையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் காசி க்ஷேத்திரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

புண்ணிய காசியை வந்தடைந்து வைத்தியநாத சாஸ்திரியுடன் ஸ்நேகிதரானார். அவரின் ஸ்நேகிதர் கைரேகை சாஸ்திர விற்பன்னர். கணபதியின் உள்ளங்கையில் ஓடிய ரேகைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு “ரேகைகளில் சங்கு சக்கர அடையாளங்கள் தெரிகிறது. தெய்வாம்சம் பொருந்திய ரேகைகள்” என்று கண்கள் விரிய அதிசயித்தார்.

வைத்தியநாத சாஸ்திரியிடம் சொல்லிக்கொண்டு அங்கவஸ்திரத்தில் கொஞ்சம் அவலை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு கங்கையைத் தாண்டிவிட்டார். அங்கிருக்கும் சங்கமாதவ கோயிலின் மண்டபத்தில் தவமியற்ற சம்மணமிட்டார். ஆளரவமற்ற நிசப்தமான பகுதி. எப்பவாவது பட்சிகள் எதாவது சப்தமிடும். காற்று வீச கிளைகள் அசையும் அரவம் கேட்கும். மற்றபடி எவரும் தொந்தரவு செய்யாத இடம். கண்களை மூடி இரவு முழுவதும் ”நமசிவாய... நமசிவாய....” என்று சிவ பஞ்சாட்சரம் ஜெபித்தார்.

கண் விழித்த போது பொழுது விடிந்திருந்தது. அவரது கம்பளி, வேஷ்டி துண்டு மற்றும் வைத்திருந்த சொற்ப அனாக்களும் காணாமல் போயிருந்தன. இராவேளையில் நடமாட்டம் இல்லாத அந்த இடத்திற்கு தனியாளாக எவரும் நுழைந்திருக்க சாத்தியம் இல்லை. அவசியமும் இல்லை. கடைசியில் அங்கே மீதமிருந்தது அவரது கமண்டலமும் ஒரே ஒரு வேஷ்டியும். மனிதர்கள் யாரும் வரவில்லை என்றால் எப்படி மற்றவையெல்லாம் காணாமல் போயிருக்கும்? கணபதிக்கு இதில் ஆச்சரியமேதுமில்லை.மெலிதாக புன்னகைத்தார். இது கடவுளின் லீலை. தன்னை பரீட்சிக்கும் சோதனை.

அது உடல் விரைக்கும் குளிர் காலம். பனிக்கட்டியாய் ஜில்லிட்ட கணபதி விடாமல் தவமியற்றினார். கையில் கொண்டு சென்ற அவல் பத்து இரவுகளின் பசியை ஆற்றியது. பகற்பொழுதில் வாயில் எதையும் போடாமல் தவ வேள்வியில் ஈடுபட்டார். பத்து நாட்கள் தொடர் தவத்திற்கு பிறகும் தெய்வாதீனமாக எதுவும் நடக்கவில்லை என்றதும் குந்துமணியளவு மனம் குன்றினார். கங்கைக்கு அருகில் கடவுளைத் தேடும் சிலருக்கு இதன் ரகஸியம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தார். கங்கைக் கரையில் தனியனாய் இங்குமங்கும் அலைந்து திரிந்தார்.

சதா சர்வகாலமும் இறை சிந்தனையோடு பல மைல்கள் நடந்து ஒரு ஆசிரமக் குடிலை அடைந்தார். அங்கு தொங்கு தாடியுடன் இருந்த சிரேஷ்டர் ஒருவர் கணபதிக்கு இலை போட்டு பிராம்மண போஜனம் அளித்தார். சற்றுநேரம் அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவரும் இறை தரிசனத்திற்காக இங்கே தவமிருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு நாளிரவு மட்டும் அங்கு தங்கினார். காலையில் மீண்டும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

அப்போது எதிர்புறம் வந்த ஒரு பிரம்மச்சாரி தவம் செய்வதற்கு தோதான ஒரு இடத்தைக் காண்பிப்பதாக அழைத்துச்சென்றார். அவர் ஹம்ஸ தீர்த்தத்தைக் காட்டினார். அயோத்தி மஹாராஜா நிர்மாணித்த சமஸ்க்ருத ஆசிரமப் பள்ளியும் அங்கு இருந்தது. அப்பள்ளியின் இலக்கண ஆசிரியர் கணபதியின் முகப்பொலிவைக் கண்டு பரம சந்துஷ்டியோடு குளிருக்கு ஷாலும் சில துணிமணிகளும் கொடுத்து உதவினார். மீண்டும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து தவமியற்றினார். பின்னர் கணபதிக்கு அவ்விடம் கசந்தது. அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஆனது.

சூரியகிரஹணத்திற்காக அந்த ஆசிரமவாசிகளும் மற்றவர்களும் காசிக்குப் பயணப்படவேண்டும். கிரஹணத்திற்கு இன்னும் ஒரு மாசம் இருந்தாலும் அதற்கு முன்னரே உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓயாமல் ஆரவாரம் செய்தார்கள். கணபதியின் தவத்திற்கு இது இடைஞ்சலாகி முட்டுக்கட்டைப் போட்டது.

காசிக்குப் புறப்பட்ட அவர்களுடன் கணபதியும் படகில் ஏறிக்கொண்டார். விந்தியமலைச்சாரலை அப்படகு வந்தடைந்தவுடன் அதிலிருந்து இறங்கினார். அங்கே தவம் செய்யலாம் என்று ஒரு உத்வேகம் அவருக்குள் ஏற்பட்டது. விந்தியமலைச்சாரலின் பிரதான தெய்வம் நந்த தேவி. நந்ததேவியை வணங்கிவிட்டு அன்றிரவு உக்கிரமான ஜபத்தில் ஆழ்ந்தார். ஜபத்தின் ஊடே அவரது உடம்புக்குள் ஏதோ புகுந்து கொண்டது போல அவரது மேனி தடதடவென்று உதறியது. சம்மணமிட்டக் கால்கள் தூக்கித் தூக்கி போட்டு படபடவென்று அடித்துக்கொண்டது. கண்கள் மேலே சொருகியிருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

அவரை ஏதோ ஒரு சக்தி அப்படியே அலேக்காக ஒரு பதினைந்து அடி தூரம் தரையிலிருந்து தூக்கியது. சில வினாடிகளில் மீண்டும் ஒரு புஷ்பம் போல மெதுவாகதரையில் இறக்கி வைத்தது. இந்த புதுவித அனுபவத்தில் கணபதி ரொம்பவும் ஆடிப்போனார். உடம்பு ஒருவித பயத்தில் வெடவெடவென்று நடுங்கியது. அப்போது அவர் ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தார்.

அவந்த்யா விந்த்யா பூமி ப்ருத்
ததால்யா தயாவதி
விசார தௌத சேடஸம்
இயம் பயம் வ்யபோஹது
[வளமிகுந்த விந்தியமலைச்சாரலில் அமைந்திருக்கும் கோயிலில் உறையும் அன்னையே..உனது அருளாலும் உன் கருணா விசாரணையால் உன்னைத் துதிப்பவரின் மனோ பயங்கள் துடைக்கப்படட்டும் என்ற அர்த்ததில் எழுதப்பட்ட ஸ்லோகம். சமஸ்கிருத ஸ்லோகத்தை தமிழில் என்னல் இயன்றளவுக்கு எழுதியிருக்கிறேன்]

தெய்வ சிந்தனைக்கு எதிரான தீயசக்திகள் நடமாடும் இடம் போலிருப்பதாக எண்ணி அது தவமியற்ற ஏற்ற இடமல்ல என்று அங்கிருந்து அகன்றார் கணபதி முனி. மறுநாள் அங்கிருந்து நாராயணபுரம் என்ற கிராமத்தை வந்தடைந்தார். நாராயணபுரத்திலிருந்து ஒன்பது மணிநேரங்கள் நடையாய் நடந்து வ்யாஸ காசிக்கு(ராமநகர்) வந்தார். அங்கே கடைவீதியில் அவருடைய அங்கவஸ்திரத்தைஇரண்டு அனாக்களுக்கு விற்றார். ஒரு அனாவிற்கு வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டார். இன்னொரு அனாவை படகுக் கட்டணமாகக் கொடுத்துக் கங்கையைக் கடந்து காசி வந்தடைகிறார்.

காசியில் வசிக்கும் ஆர்யசோமயாஜுலு பவானி சங்கரம் என்ற பெரியவர் கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரியின் தாய் மாமன். அவர் வீட்டில் தங்கினார். அன்று அன்னபூரணி மற்றும் காசி விஸ்வநாதர் தரிசனம் கிட்டியது. காசி நகரை ஒரு வலம் வந்தார். ஓரிடத்தில் மக்கள் ஆர்வம் ததும்ப திரளாக கூடியிருந்தனர். ”இங்கே என்ன நடக்கிறது..” என்று கணபதி எட்டிப் பார்த்தபோது.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_6‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails