Wednesday, September 17, 2014

மன்னார்குடி டேஸ்: ஜீவா துரை

”சாமீ.. எப்படியிருக்கீங்க?”

”நல்லாயிருக்கேன்.. நீங்க எப்டி இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்... ப்ளம் கேக் தரவா? சாப்டவா? வீட்டுக்கா?”

“வீட்டுக்குத்தான்...”

“பிள்ளைங்க வந்துருக்குதா?”

“ம்.. அதோ வண்டியில இருக்காங்க.. ”

”உள்ற வரச்சொல்லுங்க.. வண்டி எங்க நிக்கிது?”

“ஊஹும். எட்டிப் பார்த்தா தெரியாது. ட்ராஃபிக்கா இருக்குன்னு எஸ்பிஐ வாசல்ல நிறுத்தியிருக்கேன்... பிஸ்கெட்டெல்லாமும் குடுங்க... அஸார்ட்டடா.. சரியா?”

“கால் கிலோ போடட்டா? அரைக் கிலோவா?”

இப்படித் தொணத்தொணவென்று கேள்வி கேட்கும் இவர் பெயர் துரை. கால்கள் சக்கரமாய்ச் சுழல ஓடியாடி எல்லா கண்ணாடி சீசாவின் மூடியைத் திறந்து ரெவ்வண்டு பிஸ்கட் எடுத்து எடை போடுகிறார். ”டிங்..டிங்..” என்று சீசா மூடியின் ஜலதரங்க பின்னணி இசையுடன் அசார்ட்டடும் இன்ன பிற பேக்கரி ஐட்டங்களும் அவர் எடை போட்டு முடிப்பதற்குள் கடை வாசலிலேயே நின்று ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டுவோம்.

இவர் மன்னையின் ஜீவா பேக்கரிக்காரர். மேலராஜவீதியில் குள்ளப்ப முதலியார் ஜவுளிக்கடைக்கு ரெண்டு கடை தள்ளி கீழண்டை கடை. ஜீவா பிஸ்கட் பேக்கரி. ஆதிகாலத்திலிருந்து ஜீவாவும் க்ருஷ்ணா பேக்கரியும் மேலராஜவீதியின் தீனி அடையாளங்கள். க்ருஷ்ணா பேக்கரி வாசலில் கறுப்புச் சட்டைக்காரர்களின் சைக்கிள்களின் ஆதிக்கம் அதிகம். எடமேலையூர் சேகர் கறுப்புச் சட்டையானாலும் எனக்கு நெருக்கமானவர். அவருக்கு க்ருஷ்ணா என்றால் எனக்கு ஜீவா. ஜீவா துரை மிதவாதி. ஒரு கன்னத்தில் கொடுத்தால் அடுத்த கன்னத்தைக் காட்டுமளவுக்குச் சாந்தமாக இருப்பார். காலையில் நான் குளித்து வாசலில் நிற்கும்போது ஹரித்ராநதியில் குளித்துவிட்டுக் கடை திறக்க சைக்கிளில் பறப்பார் துரை.

துரை பேக் செய்துகொண்டிருக்கும் இதே அசார்ட்டட் பிஸ்கட்ஸின் ஒரு படி குறைச்சலான ஐட்டம் அப்போது வேறு ஒரு ரூபத்தில் கிடைக்கும். அதன் பெயர் ரொட்டித் தூளு. ஹரித்ராநதி கீழ்கரையில் ஒரு பேக்கரியின் கிச்சன் இருந்தது. கைலியும் முண்டா பனியனுமாய் இரண்டு அண்ணாக்கள் பீடிக் கை சகிதம் எப்போதும் ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒரு கண்டிப்பு கசியும். மருந்துக்கும் சிரிக்க மாட்டார்கள். “ரெண்டு ரூபாய்க்கு ரொட்டித் தூளு”ன்னு சில்லரையை நீட்டினால் பல வகை பிஸ்கட் கேக் தயாரிப்பிலிருந்து வெட்டிப் போட்ட மிச்சம் மீதியைப் பொருக்கி வைத்திருக்கும் தகர டப்பாவுக்குள் கையை விட்டு ரெண்டு பிடி ஒரு ஜவ்வுத்தாளில் போட்டுத் தருவார்கள்.

அந்தப் பிச்சைக்காரன் திருவோட்டிற்கு அவ்ளோ மவுசு. கும்பல் தூளுக்குப் பேயாய் அலையும். இதே ரொட்டித்தூளை ஒரு முறை துரையிடம் கேட்டதற்கு சுவைக்கக் கொடுத்ததுதான் ப்ளம் கேக். அன்று மலர்ந்தது அந்த பந்தம். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியிலிருந்து விலகி இருந்தது ஜீவா பேக்கரி. பள்ளி விட்டதும் அங்கு போக வேண்டும் என்று ஒரு நாள் நாக்கு கேட்டது. அதற்கு முன்னர் தினமும் வீடு திரும்பும் மகாத்மியத்தைப் பற்றி இங்கே ரெண்டு ரீல் சொல்லியாக வேண்டும்.

மன்னையில் சைக்கிளுக்கு ட்ரைவர் வைத்த ராயல் ஃபேமிலி நாங்களாகத்தானிருக்கும். நேஷனல் ஸ்கூலில் படித்த ஆறாவதிலிருந்து எட்டாவது வரை கோவிந்து எனக்கு சைக்கிள் ட்ரைவராக அருட் தொண்டாற்றினார். சம்பிரதாயத்துக்கு சட்டைக்கு நடு ரெண்டு பட்டன் போட்டிருப்பார். மேலும் கீழும் காத்து வாங்கும். அதற்கு மேல் அழுக்காக அந்த வேஷ்டியில் ஒரு நூல் இருக்காது. ஓடி உந்தி சர்க்கஸ் காட்டி வேஷ்டி அவிழாமல் சைக்கிளில் ஏறும் வித்தகர் அவர். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கல்லில் ஒற்றைக் காலை ஊன்றி பகீரதத் தவமாய் நேஷனல் ஸ்கூல் வாசல் காம்பௌண்ட் ஓரம் சாய்ந்திருப்பார். ஸ்கூல் விட்டு என் தலை வெளியே தெரிந்ததும் ”சீக்கிரம் ஒக்காரு...” என்று பேதி புடுங்கும் அவசரத்துடன் பேய்த்தனமாக ஓட்டுவார். சீட் பெல்ட் இருக்கும் சைக்கிள் அந்தக் காலத்தில் தயாரிப்பில் இல்லை. எந்தக் காலத்திலும் கிடையாது என்று இன்று புரிகிறது.

அழகப்பா தாளகத்திலிருந்து நேரே பந்தலடி தாண்டி பால் சொஸைட்டி மூ.சந்தில் திரும்பி, அரிசிக்கடை சந்து பின்புறம் வந்து, மீன் மார்க்கெட் கடந்து, தாமரைக்குளம் வழியாக உப்புக்காரத் தெரு மாரியம்மன் கோயிலை கன்னத்தில் போட்டுக்கொண்டு, சின்ன கான்வெண்ட் ஏறி, வலது பக்கம் திரும்பினால் கும்பகோணம் ரஸ்தா ஹரித்ராநதிக் கரையைத் தொட்டுச் செல்லும். இதுதான் அவரது வாடிக்கையான ராஜபாட்டை. ”இன்னிக்கிதான் கடேசி. இனிமே கேட்கப்டாது”ன்னு லட்சத்திச் சொச்சம் தடவையாக ஆட்காட்டி விரலை ஆட்டி ரெண்டு ரூபாய் தாளைக் காலமே கொடுத்திருந்தாள் பாட்டி. அன்றைக்கு கேக் ஆசையில் அவரைத் திசை திருப்பிவிட்டேன்.

பந்தலடி நெரிசலில் “இப்படி சரிப்படாது சொன்னா கேட்கிறியா?” கரகரவென்று பல்லை அரைத்து உஷ்ணமானார். காலை உந்தி முந்தி நாட்டு மருந்துக் கடையை தாண்டி ஜீவாவை ஜாக்கிரதையாக அடைந்தார். துள்ளிக் குதித்து இறங்கி கடைக்குள் ஓடி ”ரொட்டித் தூளிருக்கா?” என்ற என் பாமரக் கேள்விக்கு “ப்ளம் கேக்கு சாப்பிடு..”ன்னு பேப்பரில் சுற்றித் தின்னக் கொடுத்தவர் துரை. அன்றிலிருந்து தொடர்ந்த பந்தம். க்ரீம் கேக் வாரம் ஒரு நாள். பவானி சித்தியுடன் கையைப் பிடித்துக்கொண்டு கடைத்தெருவுக்கு போனால் இரண்டு துண்டு சோழி வடிவ பிஸ்கட் நடுவில் வெள்ளையாய் க்ரீம் நசுக்கிய பிஸ்கட் பத்து வாங்கித் தருவாள். கையில் அடக்கிக்கொண்டு வழிநெடுக கொறித்துக்கொண்டே வீட்டிற்கு திரும்பலாம்.

இரவு ஏழரை மணிக்கு ஒரு முறை அகோர பசி. அப்போதுதான் சொந்த சைக்கிள் வாங்கி ஓட்டும் பாக்கியஸ்தனாகியிருந்தேன். ஜீவாவில் கேக் வாங்கலாம் என்று நெருங்கிய சமயத்தில் சைக்கிளோடு உருட்டிக்கொண்டு கடைவாசலில் தெண்டனிட்டேன். பசியில் இரண்டு செகண்ட் ப்ளாக் அவுட் ஆனது போல இருந்தது.

ஓடோடி வந்து தூக்கி முட்டிக் கைகால் தட்டிவிட்டு, தண்ணீர் தெளித்து, குடிக்கக் கொடுத்து, இன்’பன்’ ஊட்டியவர் துரை. அப்புறம் பல நாட்கள் அங்கே கேக் மொக்கியிருக்கிறேன். கேக் வாயோடு சிரித்திருக்கிறேன். ஊர்க் கதை பேசியிருக்கிறேன். மழைக்கு ஒதுங்கியிருக்கிறேன். பசியாறியிருக்கிறேன். ருசித்து ரசித்திருக்கிறேன்......

“சாமீ.. இந்தாங்க...” துரையின் கரகரக் குரல் பின்னணியில் ஓடிய காட்சிகளை வெட்டி விட்டது. யாரது ஜீவா கேக்கரி எதிரில்.....

"எதிர்த்தாப்புல வர்றது குமாரு மாதிரியிருக்கே...”

“ஆமா... குமாருதான்...”

“சைக்கிள்ல பின்னால பொட்டி கட்டிக்கிட்டு பன்னும் கேக்கும் பிஸ்கட்டும் எடுத்துக்கிட்டுப் போவாரில்ல..”

“இப்பெல்லாம் யாரும் லைனுக்கு போவறதில்லை..”

“குச்சி ஐஸ்.. பால் ஐஸ்.. பொட்டியெல்லாம்...”

“அதெல்லாம் லைன்ல பார்க்கிறது கஷ்டம் சாமீ.. சைக்கிளை மிதிச்சு.. தெருத்தெருவா போயி... அப்படியெல்லாம் கஸ்டப்பட யாருக்கும் பிடிக்கலை.. அதோ கடை உள்ற அந்தப் பொட்டியைப் பார்த்தீங்களா? அதுல ஐஸ் இருக்கு..”

“ஓ...சரி..சரி... இப்பெல்லாம் காலையில தெப்பக்குளத்துக்கு குளிக்க வர்றீங்களா?”

“இல்லீங்க.. வீட்லயே குளிச்சுக்கிறது...”

“ஏன்?”

“குளத்துல ஒரே பாசியாயிருக்கு. நாறுது.. குப்பையா ஒதுங்குது.. ஆத்தாங்கரையிலும் தண்ணியில்லை. யாரும் ஒளுங்கா பராமரிக்கிறதில்லை. யாருங்க எந்த தொளில்ல தர்ம நியாயம் பார்க்கிறாங்க..” என்று கேள்வியாய்ப் பார்த்தார். குற்றம் செய்யும் சமுதாயத்தின் மீது ஒரு தார்மீகக் கோபம் அவர் கண்களில் தெரிகிறது. குங்குமம் துலங்கும் நெற்றியும் பளீர்ச் சிரிப்பும் என்னை பற்றிக்கொண்டது.

“வரேன் துரை...”க்கு வாயெல்லாம் பல்லாக வழியனுப்பி வைத்தார். இன்னும் பத்து வருடம் கழித்து வந்து பார்த்தாலும் துரை அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருப்பார் என்றே தோன்றுகிறது. மனசுல பாரம் இல்லாமல் நேர்மையாய் வேலை பார்த்துப் பிழைக்கிறார். என்றும் மார்க்கண்டேயனாக இருப்பதில் வியப்பில்லையே!

ம்.. முக்கியமாக ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். துரை ஜீவா பேக்கரி ஓனரில்லை. நித்ய தொழிலாளி.

‪#‎மன்னார்குடி_டேஸ்‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails