Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 4 : தவம்

இல்லற தர்மத்திலிருந்து ரவையளவு வழுவாமல் அகத்திலுள்ளோரின் அகங்களைக் கவர்ந்து சந்துஷ்டியாக கணபதி - விசாலாக்ஷியின் குடும்ப வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஒருநாள் அன்னம் பரிமாறிக்கொண்டிருந்த விசாலாக்ஷியிடம் நரசிம்மசாஸ்திரி “எந்த மந்திரங்களை உபாஸனை செய்து கொண்டிருக்கிறாயம்மா?” என்று வினயமாக விஜாரித்தார். ”கணபதி மந்திரமும் ஸ்ரீ வித்யா உபாஸனையையும் செய்துகொண்டிருக்கிறேன்...” என்ற விசாலாக்ஷியின் பதிலில் மனம் நிறைந்தார். அந்த பதில் கிடைத்த த்வனியில் ஒரு விதமான மனமகிழ்ச்சியும் அடைந்தார். ”தேவியையும் கணபதியையும் நித்யபடி உபாசிப்பது மகோன்னத சக்திகளைத் தரும் ஒன்று... தொடர்ந்து செய்..” என்று உபதேசித்தார்.

அந்த ”கணபதி உபாஸனை” பதிலில், தனக்கு தெய்வத்தன்மையை சூட்சுமமாக ஒட்ட வைத்துப் பார்ப்பதில் விசாலாக்ஷி அகமகிழ்வதைக் கணபதி கண்டு கொண்டார். தன்னுடைய நுட்பமான இலக்கிய அறிவையும் மொழியின் ஆளுமையையும் காரணிகளாகக் கொண்டு தன்னை அருளாளன் என்று விசாலாக்ஷி புகழ்வதை ஏற்கமுடியாமல் தவியாய்த் தவித்தார். தவத்தினால் பெறும் அரிய குணாதிசயங்கள் இதுபோன்ற அற்ப காரியங்களால் வந்துவிடாது என்று விடாப்பிடியாக நம்பினார். உடனே தவமியற்றத் தோதான இடத்திற்கு விரைய எண்ணினார்.

இவருக்கு சற்றே மூத்தவராகயிருந்தாலும் இவரிடம் மந்திர தீக்ஷை பெற்றவர் வெங்கட சாஸ்திரி. வீட்டிலுள்ள பெரியவர்கள் அசரும் சந்தர்ப்பத்தில் வீட்டை விட்டு தவமியற்ற செல்ல வேண்டும் என்று கணபதியும் வெங்கட சாஸ்திரியும் கலந்து தீர்மானித்தனர். எப்படியோ இதை அரசல்புரசலாகக் காதில் வாங்கிய கணபதியின் அண்ணா பீமா சாஸ்திரி “என்னை உங்களுடன் அழைத்துச் செல்லவில்லையென்றால் உங்களை வீட்டுப் பெரியவர்களிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்” என்று மிரட்டினார். அவரையும் சேர்த்து அந்த மூவரும் கண்காணாத ஒரு புனிதமான க்ஷேத்திரத்திற்கு பயணிக்க தயாரானார்கள்.

இவர்களின் தீர்மானத்திற்கு ஒத்தாசையாக ஷரவண மாதம் பிறந்தது. விசாலாக்ஷி மங்கல கௌரி விரதத்திற்காக பிறந்தகம் சென்றாள். அது 1896ம் வருடம். அன்று மூவரும் ரகஸியமாக வீட்டை விட்டுப் புறப்பட்டனர். தவ உத்வேகத்தில் விறுவிறுவென்று கால்நடையாகவே ராஜமஹேந்திரவரம் (இன்றைய ராஜமுந்திரி) அடைந்தனர். அங்கிருந்து ஒரு படகில் ஏறி கௌஷிகி நதிக்கரையில் அமைந்த பேரம்ம அக்ரஹாரத்தில் இறங்கினர். இப்பிராயணத்தில் துவண்ட பீம சாஸ்திரி தனது தவ வைராக்கியத்தை எப்பவோ இழந்திருந்தார். ”ரிஷிகள்தான் தவமியற்றுவார்கள்.. நம்மை ஒத்த பையன்கள் எவனாவது தவம் செய்வானா?” என்றெல்லாம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணபதியின் சமாதானங்களும் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காமல் பீமா சாஸ்திரி ஊருக்குத் திரும்பிவிட்டார்.

நம் கணபதி தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்களுக்கு விடாமல் பெருந்தவம் செய்தார். அதற்கு மேல் தொடர ஏனோ மனமில்லாமல் விட்டேத்தியாய் அமர்ந்திருந்த போது வெங்கட சாஸ்திரியின் பெற்றோர் அவரையும் கணபதியையும் வீடு திரும்ப லிகிதம் எழுதியிருந்தார்கள். இங்கு வந்திறங்கியதில் இருந்து வெங்கட சாஸ்திரி தனது வீட்டு மக்களோடு தொடர்பு வைத்திருந்தது கணபதிக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

கணபதி அன்றைய ஜபதப அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வெங்கட சாஸ்திரியுடன் ஊரைப் பார்க்க கிளம்பினார். சிகடம் வரை ரெயிலில் வந்தனர். ஆனால் அந்த இடத்திலிருந்து கலுவராயிக்கு நடந்துதான் செல்லவேண்டும். வாகன வசதியில்லை. கணபதிக்கு சிந்தனையெல்லாம் தவத்தை சுற்றியே வட்டமிட்டிருந்தது. வீட்டிற்கு செல்ல மனமேயில்லை. புனித காசிக்கு செல்ல ஆசைப்பட்டார். அங்கேயே வெங்கட சாஸ்திரியிடமிருந்து நழுவி இரவோடு இரவாக ராமசந்திரபுர அக்ராஹாரம் என்ற கிராமத்தை அடைகிறார்.

மறுநாள் க்ஷீராப்தி துவாதசி. பவித்ரமான நாள். அங்கிருந்த ஒருவர் கணபதிக்கு ப்ராம்மண போஜனம் செய்வித்து இரண்டு அனா தட்சிணையும் கொடுத்து சேவித்தார். தனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த காசிற்கு துசிக்கு டிக்கெட் எடுத்தார். துசியில் தீர்த்தயாத்திரைகளுக்கு உதவும் ஒரு தர்மிஷ்டரைச் சந்திக்கிறார் கணபதி. அம்மனிதர் கணபதியை அங்கு முகாமிட்டிருந்த பக்தர்களுக்கு மஹாபாரதத்திலிருந்து சாந்திபர்வத்தை உபன்யாசம் செய்யச் சொல்கிறார். கணபதியின் சொல்லாட்சியும் அர்த்தப்பூர்வமான எடுத்துக்காட்டுகளும் கதை சொல்லும் தோரணையும் அவரை ஆச்சரியமடையச் செய்கிறது. கேட்டவர்கள் பரவசமடைந்தார்கள். அவரது பாண்டித்தியத்தைப் பாராட்டி அந்த தர்மவான் ஆறு ரூபாய்கள் பரிசளிக்கிறார்.

அப்பரிசிலை வாங்கிக்கொண்டு துசியிலிருந்து முன்னிரவு நேரத்தில் தெக்கலை என்ற இடத்திற்கு வந்தடைகிறார். அங்கு அதிதியாக ஒரு வீட்டில் இரவு உணவு உண்டு சிரமபரிகாரத்திற்குத் திண்ணையில் உட்காருகிறார். அப்போது மேலும் இரண்டு யாத்ரீகர்கள் அந்தத் திண்ணையில் அவருடன் சேர்ந்துகொண்டார்கள். கையில் சீட்டுக்கட்டோடு விஸ்ராந்தியாக அமர்ந்தவர்கள் “ஏம்ப்பா... நீயும் ஒரு கை போடேன்..” என்று கணபதியையும் ஆட பிடித்து இழுத்தார்கள். சீட்டாட்டம் கன ஜோராக நடந்து கொண்டிருந்தபோது இன்னும் கொஞ்ச பேர் கையோடு கையாக விளையாடச் சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒரு வயசாளி ஜோதிடக்காரரும் அடக்கம். சீட்டுக்கட்டு விசிறியாட ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே வீட்டின் உரிமையாளர் ராமதாஸ் பந்துலு வந்துவிட்டார். சற்று நேரத்தில் எல்லோரும் சேர்ந்து சில ஜாதகங்களை எடுத்து அலச ஆரம்பித்தார்கள்.

கணபதிக்கு கை சீட்டாடினாலும் கவனம் கன சிரத்தையாக இவர்கள் ஜாதகம் அலசுவதில் இருந்தது. அந்த வயதான ஜோதிடர் குருட்டாம்போக்குக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் ஆரூடமாகச் பிதற்றிக்கொண்டிருந்தார். அவரது அழிச்சாட்டியம் எல்லை தாண்டிய ஒரு தருணத்தில் கணபதி ஊடே புகுந்து “ஏங்க இவருக்கு சுத்தமா ஜோஸியமே தெரியாது போல்ருக்கே....” என்றார் சீட்டு விளையாடிக்கொண்டே திடமாக. வெகுண்டு போன அந்த ஜோதிடர்.......
‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_4‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails