Sunday, October 22, 2017

பொன்வீதி


”ஹா.. இதெல்லாம் இணைய எழுத்துப்பா..” என்று ஈஸிசேரில் காலை நீட்டிச் சாய்ந்துகொண்டு பகடி செய்யப்படும்..சரி.. வேணாம்.. நையாண்டி செய்யப்படும் Blogல் 2011ம் வருடம் பிள்ளையார் சுழி போட்டேன். நம்ம சுவர் நம்ம எழுத்து என்றிருக்கும் இக்கால ஃபேஸ்புக் போல அக்காலத்தில் கிடைத்த இணைய ஸ்லேட்டு ப்ளாக். நாம என்ன இலக்கியம் படைக்கும் பெரிய எழுத்தாளரா? மனசுல பட்டதைத் தட்டச்சு செய்து ஏற்றிவிட்டு கமெண்ட்டுகளுக்காகக் காத்திருப்போம். அங்கே லைக் அவஸ்தை இல்லை. பின்னூட்டக் கருத்துகள் முக்கியம். அவைதான் எழுத்தை ஊக்குவிக்கும் டானிக்.
இராத்திரி பத்து பத்தரைக்கு திறந்து பார்த்தால் குட்டோ ஷொட்டோ பின்னூட்டமாய்க் கிடக்கும். சகலருக்கும் பதில் சொல்லி ”பதில் மரியாதை” செய்துவிட்டு அடுத்த இலக்கியப் பணி(!) யை சாவகாசமாக மேற்கொள்வோம். இந்தக் காலக்கட்டத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் பலர் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருந்தார்கள். வித்யா சுப்ரமண்யம், ரிஷபன், சுந்தர்ஜி, அப்பாதுரை என்று பெரிய எழுத்தாளப் பட்டாளமே அங்கே குடிகொண்டிருந்தது. ஆரோக்கியமான பல விவாதங்கள், கருத்துகள் என்று கச்சேரி பலமாக இருந்தது. அப்படியிருந்த குழுமத்தில் நானொரு பொடியன். பக்கவாத்தியம். எழுத்தாளர்களின் எடுபிடி.
பூர்வ பீடிகை போதும். அங்கே ஸ்நேகிதமாகக் கிடைத்தவர் மோகன்ஜி அண்ணா. சாஸ்தா பக்தர். பெருவழியில் பல தடவை ஐயப்ப தரிசனம் செய்தவர். ப்ளாக்கில் அறிமுகமாகி சமீபத்தில் அவருடைய சஷ்டியப்தபூர்த்தியில் நமஸ்கரித்தும் விட்டேன். கொஞ்சம் திஜா, லாசரா, ஜேகே என்று ஜாம்பவான்களின் கலவையில் தனி முத்திரையோடு எழுதுபவர் மோகன் ஜி. சிறுகதைகளின் விற்பன்னர். நறுக்கென்று முடித்து நிறைய நேரம் யோசிக்கவைப்பார். எழுத்தாள யோக்யதாம்சங்கள் அனைத்தும் இருந்தும் தனது முதல் சிறுகதைத் தொகுதியை அண்மையில்தான் வெளியிட்டார். தொகுப்பின் பெயர் “பொன்வீதி”. மொத்தம் இருபத்தோறு கதைகள்.
”பச்சமொழகா” என்றொரு கதை என்னுடைய விசேஷ விருப்பம். ராஜாமணி என்ற திருவிடைமருதூர்க்காரர் எழுபதுகளில் அம்பத்தூர் தொ.பேயில் மெஸ் திறக்கிறார். வாடிக்கையாளராக மது என்ற வலங்கிமான் ஆள் தினம் அங்கே சாப்பிடுகிறார். ராஜாமணி கொஞ்சம் முன்கோபி. சாப்பிடுபவர்களில் ஒருவர் “என்னப்பா வடைக்கு சௌரி வச்சிட்டியே” என்று கேட்க அவர்கள் முன்னிலையில் தனது மனைவியை அடித்துவிடுகிறார். மதுவுக்கு பொல்லாத கோபம். “போய்யா.. நீயுமாச்சு. உன் கடையுமாச்சு... கைப்புள்ளைக்காரிய அடிக்கிற நீயெல்லாம் மனுஷனா...” என்ற கோபத்தில் வந்துவிடுகிறார்.
ராஜாமணி அவர் வீடு தேடி வந்து இரவு புலம்பி.... “இல்லாத மனுஷன் என்னத்த பண்ணுவான் சார்... வாழ்க்கையை பகிர்ந்துண்டவகிட்டதானே கோபத்தைக் காட்டமுடியும்...” என்று மன்றாடி திரும்பவும் மெஸ்ஸுக்கு சாப்பிட மதுவை அழைக்கிறார். சமாதானம் செய்து அனுப்பிவிட்டு மறுநாள் போகலாம் என்று முடிவெடுத்த போது காலையில் மதுவின் தந்தை இறந்த செய்தி வந்து இடியாக இறங்க ஊருக்குச் சென்றுவிடுகிறார். பின்னர் ஒரு மாதம் கழித்து வந்து பார்த்தால் ராஜாமணியின் கடை அங்கே இல்லை. அந்த வீட்டின் உரிமையாளர் மாமியிடம் விஜாரித்த மதுவுக்கு....”போன மாசம் ஒரு நாள் ராத்திரி கையை எரியிற விறகால தீச்சிண்டு... என்னை மன்னிச்சுக்கோ..மன்னிச்சுக்கோ.. மன்னாடினான். அவ அழறா கொழந்த அழறது.. ச்சே..ச்சே... இடத்தை விட்டுக் கெளம்புன்னேன்.. கொடக்கூலி குடுக்க காசில்லை.. இந்தப் பாத்திரமெல்லாம் இங்கே இருக்கட்டும்...ன்னு போனவன் இன்னும் திரும்பலை.. இன்னம் நாலு நாள் பார்த்துட்டு இதையெல்லாம் கடையில போட்டுடுவேன்..”
இதன் க்ளைமாக்ஸில் ஒரு வரி... “நிமிர்ந்து தனித்து நின்ற சட்டுவம் நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து விழித்தது”
*
அடுத்து தத்த்தி... என்கிற தாசரதி. சமர்த்து போறாத பையன். ரைஸ் மில் வேலை. ஒரு மத்தியான நேரத்தில் ஆஞ்சநேயர் கனாவுல வரார். தத்த்தி கால் பிடிச்சுவிடறான். அய்யாதுரை என்கிற நாஸ்திகர் புல்லட்டில் அந்தப் பக்கமாக வரும்போது ஆஞ்சநேயர் அந்த நாஸ்திகரின் புல்லட்டில் ஏறிப் போய்விடுகிறார். தத்த்தியிடம் “என் பக்தாளுக்கு என் வால் தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போகிறார். அய்யாதுரையின் மனைவிக்கு ஏகபக்தி. பின்னாளில் ஆஞ்சநேயர் ஏறிய புல்லட்டுடம் ஆஞ்சநேயருக்கும் கோயில் கட்டி வடைமாலைத் தேர் இழுத்து கோலகலமாகக் கொண்டாடுகிறார்கள். தத்த்தியை ரொம்ப நாட்களாக பார்க்காத தீனதயாளு மீண்டும் ஊருக்கு வருகிறார்.

ஆஞ்சநேயர் படத்தில் ஸ்வாமியின் காலின் கீழே இன்னொரு ஸ்வாமிகளின் படம். யார் என்று உற்றுப்பார்த்தால் தத்திரிஷி ஸ்வாமிகள் என்று பெயர் போட்டிருக்கிறது. அட நம்ம தத்த்தி..
*
அருணகிரி பற்றி எழுதிய “காமச்சேறு” என்றொரு சிறுகதை மோகன் அண்ணாவின் பக்திரசத்துக்கு எடுத்துக்காட்டு. எவரும் சிலாகிக்கும் கதை. இப்படி எழுத ஆரம்பித்தால் எல்லாக் கதைகளையும் சிறுகுறிப்பாக எழுதிவிடுவேன். கதைகளில் அவருடைய சொல்லாடல்கள் என்றும் புதியவை. பிரத்யேகமான பாணி. புத்தகம் வேண்டுவோர் மோகன் அண்ணாவை மோகன் ஜிதொடர்புகொள்ளலாம். வானவில் அனுபவத்துக்கு நான் உத்திரவாதம். அண்ணாவின் நட்பு எனக்கு வரம்! நண்பர்கள் படித்து இன்புறவும்.

1 comments:

ஸ்ரீராம். said...

நானும் அல்ரெடி படிச்சுட்டேன், பகிர்ந்தும் விட்டேன். வச்சு அப்பப்போ மறுபடி மறுபடி படித்து ரசிக்கவேண்டிய புத்தகம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails