Tuesday, July 29, 2014

கணபதி முனி - பாகம் 2 : குழந்தைப் பருவம்

தெய்வக் குழந்தைகள் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவைப் போல பால்யத்தில் பல லீலாவினோதங்களை நிகழ்த்துவார்கள் என்பது உலக வழக்கு. நரசிம்ம சாஸ்திரியும் கணபதி வ்யவஹாரத்தில் அப்படியே நம்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு நேர்மாறாக நடந்தது.

குழந்தை கணபதிக்கு பிறந்ததிலிருந்தே சீக்கான சீக்கு. அடிக்கடி சுகவீனம். கல்லீரல் மண்ணீரல்களில் தொடர் உபாதை. மாதத்தில் பாதி நாட்கள் விட்டு விட்டு ஜுரம். இதோடு சேர்த்து கொடிய வலிப்பு நோய் வேறு. எப்போதும் பிடித்து வைத்த பிள்ளையார் போல ஒரேயிடத்தில் உம்மென்று மந்தமாக உட்கார்ந்திருந்தார். உறவினர்கள் நரசமம்பாவின் சூரியதேவன் கொடுத்த அக்னிக் கலசக் கனவை நினைவுபடுத்தி “சொப்பனத்தில வந்தா மாதிரி அப்படி ஒன்றும் அதிசயமா எதுவும் நடக்கவில்லையே!” என்று தொங்கு முகத்துடன் திண்ணையில் அமர்ந்து கவலைப்பட்டார்கள். நரசிம்ம சாஸ்திரி கவலையில் ஆழ்ந்தார்.

ஆறு வயதாகும் போது ஒருநாள் வழக்கம் போல கணபதிக்கு வலிப்பு ஏற்பட்டது. குழந்தை விலுக்விலுக்கென்று இழுத்துக்கொண்டு துடியாய்த் துடித்தான். அவ்வழியே சென்ற கிராமத்து வயசாளி இதைக் கண்டு பரிதாபப்பட்டு “கரெண்ட்டு சாக் வெச்சா சொஸ்தமாயிடும்பாங்க...வெச்சுப் பாருப்பா...” என்று குருட்டு உபாயம் சொன்னார். சூரியநாராயணரையும் துண்டி கணபதியையும் மனமார ப்ரார்த்திக்கொண்டு நெற்றியிலும் வயிற்றிலும் மின்சாரத்தால் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் நரசிம்ம சாஸ்திரி. தெய்வபலத்தால் பிழைத்தார் கணபதி. அப்போதிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கணபதியிடம் ஒரு சுறுசுறுப்புத் தீயாய் தொற்றிக்கொண்டது. எல்லா பாடங்களிலும் துறுதுறுவென்று சூட்டிகையாக விளங்கினார். புத்தி கூர் தீட்டப்பட்டது.

கிராமத்துப் பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்த கணபதியின் சித்தப்பா ப்ரகாஸ சாஸ்திரிதான் அவருக்கு பிரதான குரு. அக்ஷராப்பியாசம் பூர்த்தியான பிறகு வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தைதான் பூர்வாங்கமாகக் கையிலெடுத்தார். பால காண்டமோ சிவ சஹஸ்ரநாமாவோ எத்தனை பக்கமாக இருந்தாலும் ஒரு தடவை படித்ததை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அக்ஷரம் பிசகாமல் திரும்பச் சொல்லும் திறன் கணபதிக்கு இயற்கையாகவே இருந்தது.

பத்து வயதே நிரம்பிய பாலகனாக இருந்த பொழுதிலும் பல காவியங்கள், கணிதம் வான சாஸ்திரம் போன்றவைகளில் சுலபமாகப் பாண்டித்யம் பெற்றார். அச்சிறுவயதிலேயே அவருக்கு பஞ்சாங்கம் கணிக்கத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சுலபத்தில் பஞ்சாங்கம் கணித்து எழுத புது முறையைக் கையாண்டு அவரது ஆச்சாரியர்களை அசத்தினார். சுத்திப் ப்ரக்ரணம் என்று எளிய முறை பஞ்சாங்கம் கணிப்பதை எப்படி நிறுவுவது என்று புரியும்படி எழுதினார். இந்த அற்புதங்களெல்லாம் பத்து வயதில்!! அநேக குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கும் தின்பண்டங்களுக்கும் அழும் வயதில் இது போன்ற பல அபாரமான செயல்களை நிகழ்த்திக் காட்டினார். ஒரு பானைக்கு ஒரு சோறாக ஒன்று கீழே..

ஜ்யோதிஷத்தில் அவர் பிறவி மேதை. பக்கத்து வீட்டிலிருந்த ஒரு சிறுமிக்கு ஜாதகப்படி நாளைக்கு ஆபத்து என்று எச்சரித்தார். கணபதியின் ஜ்யோதிஷ வித்வத் தெரிந்த அந்தச் சிறுமியின் தந்தை சுதாரித்துக் கொண்டார். மறுநாள் சூர்யோதயத்திலிருந்து பெண்ணை கண்கொத்திப் பாம்பாக பாதுகாத்தார். வீட்டின் சமீபமாக ஓடிக்கொண்டிருந்த கால்வாய்க் கரையருகே விளையாடிய அந்தச் சிறுமி எப்படியோ அதில் விழுந்துவிட்டாள். தண்ணீரில் இழுவை அதிகம் இருந்ததால் அச்சிறுமியை அடித்துக்கொண்டு வளைந்து வளைந்து பூதாகார நாகமாய் விரைந்தது கால்வாய். நல்லவேளையாக ஆண்டவன் அருளால் சற்று தூரத்தில் நாணல் புதர் ஓரத்தில் சுயநினைவற்று ஒதுங்கிய சிறுமியைக் கரையோரமாகத் துரத்திக் கண்டுபிடித்து தூக்கி வந்து காப்பாற்றினார்கள். அவருக்கு கணபதி கையெடுத்துக் கும்பிடும் தெய்வமாகத் தெரிந்தான்.

பத்து வயதிலேயே சமஸ்கிருதத்தில் காவியங்கள் இயற்றும் புலமை பெற்றார் கணபதி. தனது குரு ப்ரகாஸ சாஸ்திரியின் எதிரில் சம்மணமிட்டு அமர்ந்து ஒரு மணி நேரத்தில் ”பாண்டவ திருதிராஷ்ட்ர சம்பவா”வை முப்பத்து நான்கு ஸ்லோகங்களில் கடகடவென்று எழுதி அசத்தினார். ஆறு வயதில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத சொத்தைப் பிள்ளை என்று ஊரார் எண்ணிய கணபதியின் பத்து வயதிலேயே அவரது அபார திறமைகளைக் கண்டு உள்ளம் பூரித்தனர் நரசிம்ம சாஸ்திரியும் நரசமம்பாவும். இளம் பிராயத்திலேயே குரு ப்ரகாஸ சாஸ்திரியை மிஞ்சிய பலே சிஷ்யனானார் கணபதி முனிவர்.

கணபதி பிறந்து நான்காவது வருடத்தில் அன்னபூர்ணா என்ற தங்கையும் அதற்குப் பின்னர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிவராம சாஸ்திரி என்ற தம்பியும் பிறந்தார்கள். மீண்டும் நரசமம்பா கர்ப்பவதியானார்கள். இம்முறை வயிற்றுக்குள் இரட்டையர்கள். பிரசவிக்கும் நேரம் நெருங்குகிறது. மேனியெங்கும் நோக படுக்கையில் கிடந்த நரசமம்பா கணபதியை அழைத்து தனது பிரசவம் பற்றித் திக்கித் தடுமாறி ஆரூடம் கேட்கிறார்... கணபதி கண்ணை மூடி பட்டென்று சொன்னது அப்படியே நடந்தது. கணபதி சொன்னது என்ன?

[இன்னும் வரும்....]

#காவ்ய_கண்ட_கணபதி_முனிவர்_அத்தியாயம்_2

#கணபதி_முனி

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails