Tuesday, July 29, 2014

எழுத்தாளர் வீட்டுக் கல்யாணம்

எழுத்தாளர் இரா.முருகன் சார் பையன் கல்யாணம் என்று சென்னை நகரமே இரண்டு நாட்களாகத் திமிலோகப்படுகிறது. எங்கே பார்த்தாலும் ட்ராஃபிக் ஜாம். சென்னையின் ஒட்டுமொத்த வாகனாதிகளும் கல்யாணக் களை வந்த டிநகரையேக் குறிவைத்து ஜானுவாசம் போல நகர்ந்துகொண்டிருந்தனர். நண்பர்கள் எல்லோரும் மண்டபத்தில் குவிந்து விட நானும் என் மனைவியும் ஜோடிப்புறாயிரண்டு கூட்டத்தைத் தவற விட்டு தடுமாறியதைப் போல தவியாய்த் தவித்தோம். ரொம்ப ஓவரா இருக்கோ? ஃபுல்ஸ்டாப். “க்ரேஸியும் கமலும் நாளைக்குதான் வராளாம்” மண்டபத்தை அடைவதற்குள் அனன்யாவின் கிசுகிசு SMS.

மண்டபத்திற்கு கொல்லைப்புறம் வசிக்கும் அனன்யா என்கிற ”நேரந்தவறா காரிகை”யைத் தவிர்த்து ”ஏழு மணிக்கெல்லாம் டாண்ணு இருக்கணும்” என்று சூடமேற்றிச் சத்தியம் செய்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மண்டபம் சேர்ந்தோம். எத்தனை மணிக்குன்னு குழுமினோம்ணு டயம் சொல்லத் தெரியலை. கிண்டிக்கு முன்னாலிருந்தே ஜியெஸ்டி ரோட்டில் அடிக்கு ஒரு போலீஸ் அலெர்ட்டாக நின்றுகொண்டிருந்தது. “ஏர்போர்ட்லேர்ந்து அம்மா வர்றாங்க போல...” என்றாள் வாமபாகம். “முருகன் சார் வீட்டுக் கல்யாணத்துக்கா?” என்ற என்னுடைய யதார்த்தக் கேள்விக்கு “ஆமாம்” என்று பட்டென்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பாவப்பட்ட பெண் ஜென்மம். எவ்ளோதான் பொறுத்துப்போகும்.

தியாகராய நகர் பிரதேச மண்டபங்களில் ரெண்டு மாருதி 800ம் ஒண்றரை ரேவோ மின் காரும் வைக்குமளவுக்கு விஸ்தாரமாகப் பார்க்கிங் இருக்கும். மண்டப ஓர சந்தில் அங்கே குடியிருப்போர் சபிக்கா வண்ணம் சேப்பாயியைப் பத்திரப்படுத்திவிட்டு வெற்றி வீரனாய்த் திரும்பினால் வீகேயெஸ் காரை ஒதுக்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார். கடைகடையாய் ஏறி நண்பர்களின் சார்பில் கிஃப்ட் வாங்கிக்கொண்டு வந்த மஹானுபாவர். ச்சே. நுழைந்ததும் டைனிங் ஹால் கண்ணில்படும் மண்டபங்கள் மணமக்களைக் கூடப் பார்க்கவிடாமல் மனதைக் கெடுத்துவிடுகின்றன. முதல் மாடியில் ராதிகா பார்த்தசாரதி மேடமும் அனன்யாவும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது ரிசப்ஷன் கலகலப்பையும் மீறி க்ரௌண்ட் ஃப்ளோரில் காதில் கேட்டு அந்தப்பக்கம் இழுத்தது. தினம் ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை என்று ஃபேஸ்புக்கையே பிரித்து மேயும் நெய்வேலி இலக்கியச் சுடர் ஈஷா மாலாவும் தனது எழுத்துப்பணியை ஒரு நாள் நிறுத்திவிட்டு கல்யாணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தார்கள். மௌளி அண்ணா அமைதியாக தூணுக்குப் பின்னால் மறைந்திருந்தது தெரியாமல் “மௌளி அண்ணா எங்கே?” என்று கண்கள் பூக்கத் தேடிக் கண்டடைந்தேன். கையில் புத்தகமில்லாததால் கூட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.

கிஃப்ட் கொடுத்து ஜோடியை வாழ்த்தி ஃபோட்டோ வீடியோ எடுத்துக்கொள்ள ஸ்க்யூ பண்ணின S போலக் க்யூ ஹால் நீளத்துக்கு நீண்டிருந்தது. “ரொம்ப நாழியாகுமோ?”

“இல்ல ஆர்வியெஸ். இந்த ரோல இதுக்கு மேலே ஆட்கள் சேரலை. அதனால ஒரு பத்து நிமிஷம் இருந்தோம்னா மேடைக்குப் போய்டலாம்” என்று மௌளி அண்ணா நம்பிக்கையூட்டினார். இரண்டு நிமிடத்தில் இருபது பேராய் அந்த வரிசை அசுர வளர்ச்சியடைந்தது. டின்னர் முடித்துவிட்டு வந்து கிஃப்ட் கொடுக்கலாம் என்று “போர்த்திக்கொண்டு படுத்தல், படுத்துக்கொண்டு போர்த்தல்” தத்துவத்தைக் கடைபிடிக்க ஏகமனதாக ஒத்துக்கொண்டு பந்திக்குப் பறந்தோம். பசித்த புலியாக ரிசப்ஷன் ஹாலிலேயே கட்லட்டைப் புசித்துக்கொண்டிருந்த வல்லபானந்தமயீக்கு இந்த முடிவில் கொள்ளை சந்தோஷம்.

கைக்கும் வாய்க்கும் உக்ர சண்டை நடக்கும் டின்னர் ஹாலில் மிருதங்கிஸ்ட் ஈரோடு நாகராஜனைச் சந்தித்தோம். புன்னகை பூக்கூடையாய் நிரம்பிய முகம். ஜென்மாந்திர பழக்கம் போல பேசத் தொடங்கிய கணத்திலிருந்து பச்சென்று ஒட்டிக்கொண்டோம். ப்ரவாகமாய்ப் பேசினார். சிறிது நேர லோகாதய அரட்டைக்குப் பின்னர் டின்னருக்குள் இறங்கினோம். டொமேடோ சூப்பிலிருந்து விருந்து ஆரம்பம். பாஸுந்தியை எப்படிச் சொட்டுச் சொட்டாகச் சாப்பிட்டால் நாக்கிலிருந்து தித்திப்பு இறங்க லேட்டாகுமோ அந்த அளவு ஸ்பூனோடு இலையிலிருந்த கப்பிற்குள்ளிருந்துச் சுண்டி இழுத்தது. “உங்களை நம்பி மூணு ஜீவன் இருக்கு. உங்க நல்லத்துக்கு சொல்றேன்..” என்று மௌளி அண்ணா சோதர பாசத்தில் அக்கறைப்பட்டதில் ஒரு ஸ்பூன் மட்டும் நாக்கில் வைத்துக்கொண்டேன். இதை எழுதுவும் வரை நாவினிக்கிறது. நினைத்தாலே இனிக்கும்.

இரண்டு முறை பிஸிபேலாபாத் உ.வறுவல் தொட்டுக்கொண்டும், ரசஞ்சாம், தெத்தியோன்னத்தோடும் மெல்லக் கரையேறினேன். ”சோத்தால அடிச்ச சுவரு”ன்னு கைலாய ப்ராப்தியடைந்த என் சாரதா பாட்டி முதுகுப்பின்னாலிருந்து காதில் ரஹஸ்யம் பேசினாள். எனக்கு நானே சிரித்துக்கொண்டேன். ஈரோடு நாகராஜ் அவர்களின் சிஷ்யகோடி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட கிருஷ்ணர் கருமமே கண்ணாக சாப்பிட்டதில் சப்ளையர்கள் அவரை மொய்த்துப் பண்டமிட்டது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நண்பர்கள் அனைவரும் தயாராய் இருக்க மணமக்களுடன் ஃபோட்டோவும், இடமிருந்து வலதாகக் கேமிராக் கண் ஸ்லோமோஷனில் நகர வாயெல்லாம் பல்லாக வீடியோவும் எடுத்துக்கொண்டோம். முருகன் சார் கையில் பில் ப்ரைசன் புஸ்தகம் தஞ்சமிருந்தது. மாப்பிள்ளைக்கு இன்னொருதரம் கை நீட்டியது போது “லுங்கி டான்ஸ்...லுங்கி டான்ஸ்..” என்று முணுமுணுத்துப் பாடி சிரித்துக்கொண்டே கை குலுக்கினார். அவர் பார்த்த திசையில் அவரது ஸ்நேகிதர்கள் அந்தப் பாடலுக்கு அலுக்கிக்குலுக்கி முதல் மாடி அதிர நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தார்கள். மேடையிலிருந்து இறங்கும்போது என் நடை நர்த்தனமாகியதை அதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்கவில்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் இதுபோன்ற சந்தோஷங்கள் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்திக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

எங்கள் கும்பலிலிருந்து தப்பிய ஜேயார் சாருக்கும் அலுவலகத்தை தனது சுண்டி விரலில் கோவர்த்தனகிரியாகத் தூக்கும் ராசகோபாலனாருக்கும் இந்தக் கல்யாணப் பதிவு சமர்ப்பணம்!

#எழுத்தாளர்கள் ப.ரா, ஜெயார், வல்லபா, அனன்யா போன்றவர்கள் பக்கம் பக்கமாக எழுதிச் சிலாகித்த அஷ்வின் கல்யாண வைபோகம் இந்த ஆர்வியெஸ்ஸாலும் கிறுக்கப்பட்டது என்று சரித்திரத்தில் இடம் கிடைக்கட்டும் என்ற நப்பாசையில் ஜய வருஷம், வைகாசி மாசம், இருபத்து ஒன்றாம் திகதி எழுதப்பட்டது

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails