Tuesday, July 29, 2014

ப்ளாக் தண்டர்

மே ஜூன் என்று கத்திரியில் பொசுக்கும் வெய்யிலில் சொம்பு சொம்பாக அளந்து குளித்த மக்களுக்கு ஒரு நாள் அருவிக் குளியல் பத்தாது. “நேத்திக்கி கொடிவேரி. இன்னிக்கி ப்ளாக் தண்டர் போவோம்” என்று ஜரூராக வண்டியைக் கிளப்பினோம். காலை டிஃபனாக மல்லிப்பூ இட்லி, மிளகு பொங்கல் மற்றும் மெது வடை சாப்பிட்ட ஹோட்டலில் கல்லாவுக்குப் பக்கத்தில் ஒரு நூதன விளம்பரம். ”சில்ரையா தொன்னூத்தஞ்சி ரூவா கொடுத்தீங்கன்னா நூறு ரூவாயாத் தருவோமுங்க” என்று பின்னால் இருந்து குரல் வந்தது. வெள்ளையும் சொள்ளையுமாக மினிஸ்டர் வொயிட்டில் இருந்தவர் “உங்கிட்டே இருக்கா?” பார்வையுடன் நெருங்கி வந்தார். “இங்க அவ்ளோ சில்லரைத் தட்டுப்பாடுங்களா?” என்று ஒரு பிட்டைப் போட்டேன். அவ்ளோதான். சில்லரை குலுங்குவது போல ஆர்பிஐக்கே தெரியாத பல சில்லரை விஷயங்களைக் கலகலவென்றுக் கொட்டினார்.

அவர் எனக்களித்த பிரசங்கத்தில் ஒரு சிறு துண்டு. “இதுக்குப் பேரு பணத்தைக் கொடுத்து பணம் சம்பாரிக்கிறது. இதெல்லாம் ஒரு கலை.”. ஒரு கட்டத்துக்கு மேலே கண்ணை மட்டும் திறந்து காதை மானசீகமாக மூடிக்கொண்டேன். பில்கேட்ஸிடம் மூட்டை மூட்டையாய் புழக்கடையில் இருக்கும் பில்லியன் கணக்கிலிருக்கும் டாலர்களை ஒண்ணு மேலே ஒண்ணா காசாக அடுக்கினால் அது விண்ணைத் தொடும் என்று அனாதி காலத்தில் படித்த ஃபார்வேட் மெயில் கல்லாவுக்கு மேல் விஸ்வரூபமெடுத்து நின்றது. ”ஒரு நாளைக்கு எவ்ளோ சில்லரை இந்த ஹோட்டலுக்குத் தேவைப்படும்” என்று அவரை நான் சம்பிரதாயமாகப் பத்திரிக்கைப் பேட்டியெடுக்க ஆரம்பிக்கும் போது காஃபியைக் குடித்துவிட்டு வெளியே வந்த என் பந்துக்கள் என்னைச் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி காரில் தள்ளிக் கடத்தினார்கள்.

ஃப்ரெஷ்ஷாகப் பன் bake செய்து சதும்பத் தடவிச் சாப்பிடுமளவிற்கு மேட்டுப்பாளையத்தில் ட்ராஃபிக் ஜாம். ஒரு சிக்னலில் கோக்குமாக்காக நான்கு உப வழிகள். நாற்புறங்களிலிருந்தும் ஒரே நேரத்தில், ஒரு தாய் மக்கள் போலக் கூட்டமாய்ச் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கடைசியில் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்னும் புத்தரின் சித்தாந்தப்படி பொறியில் எலியாய் மாட்டிக்கொள்கிறார்கள். விசில் அடித்தும் ஊர்த்துவ தாண்டவம் ஆடியும் போலீஸ்காரர் வாங்கிய காசுக்கு மேல் உழைத்துக்கொண்டிருந்தார். மெயின் ரோட்டிலிருந்து சடாரென்று விலகி லெஃப்ட்டும் ரைட்டுமாய் மேட்டுப்பாளைய சந்துபொந்துகளில் நுழைந்து ப்ளாக்தண்டருக்குள் சென்று வெற்றிவீரனாய் நிறுத்தி, மடக்கிய ரியர்வ்யூ மிரரை நிமிர்த்தி விட்டார் ட்ரைவர் அண்ணன். சில தெருக்களில் டவேராவை அவர் செலுத்திய தோரணையில் அந்தத் தெரு பெருத்து வழிவிட்டு வண்டி கடந்தபின் மூல நிலையை அடைந்தது ஆச்சரியமான விஷயம்.

ப்ளாக் தண்டர் டிக்கெட் கவுண்டர்களில் காற்று வாங்கியது. நண்டு சிண்டு நார்த்தங்காய்ககளுடன் உள்ளே நுழையும் போது கோமாளி வேடத்திலிருந்த சித்திரக்குள்ளர் ஒருவர் கைகுலுக்கி வரவேற்றார். அவரது சிரிப்பில் சுஜாதா ஜோக்கரை வைத்து எழுதிய மைக்ரோ கதையொன்று ஞாபகம் வந்தது. மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் வீரர்கள் கிங் ஃபிஷர் பியர் விளம்பரத்திற்கு “உல்லால்லே..” பாடி வருவது போல ஒரு குழு சட்டையில்லாமல் அரை நிஜாருடன் பஜனை ஊர்வலமாய்ச் சென்றது. கையில் ஜால்ரா இல்லாமல் கின்லே போத்தலுடன்.

தண்ணீர் விளையாட்டுகள்தான் பிரதானம். ஜிகுஜிகுவென்று மாப்பிள்ளையாய் உள்ளே நுழைபவர்கள் அரை நொடியில் ஆண்டிக்கோலம் பூணுவதற்கு உடை மாற்று அறைகள் பிரத்யேகமாக திறந்தபடியே இருக்கின்றன. பெண்களுக்குத் தனி அறை? இல்லையில்லை. கண் காணாத இடத்தில் தனி பில்டிங். இதையெல்லாம் தாண்டி நுழைந்ததும் கண்ணில் பட்டது Thrillanium என்கிற திகில் படக்காட்சி. ஹிருதய பலகீனமானவர்கள், இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் வரவேண்டாம் என்று நிறைய விளையாட்டுகளில் முன்னெச்சரிக்கை போர்டு வைத்துவிட்டார்கள். எனக்கு எவ்வளவு கொதிக்கிறது பார்க்கலாம் என்று சென்றேன்.

ரயிலில் நாம் பயணிப்பது போன்ற ஒரு எம்பெக் வீடியோ. உட்கார்ந்திருக்கும் சீட்டைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்குகிறார்கள். பயப்பிராந்தி வருகிறதோ இல்லையோ மாசமான புள்ளைத்தாச்சி மாதிரி வாயிலெடுக்க வருகிறது. அந்த மினி அரங்கத்தில் ஏசி இல்லை. நான்கு பக்க கதவும் திறந்திருக்கிறது. ரொம்ப பயந்து அலறிய என் பெண்ணிடம் “வாசல் பக்கம் இந்த வீடியோ போட்ட ஆள் இருக்கார். பார்த்துக்கோ. பயம் போய்டும்..” என்று திரையிலிருந்து எழுந்த அலறலையும் மீறி காதில் கத்தினேன். சிம்பிள் லாஜிக். சமாதானமடைந்தாள். கதவடைத்துக் கட்டிப்போட்டு ஃபிலிம் காட்டினால் ஒருக்கால் என்னைப் போன்ற இளகிய மனம் படைத்தோர் பீதியடைக்கூடும்.

அந்த மரப்பாலத்தைக் கடக்கும் போது ஒரே க்ளோரின் ஸ்மெல். காலுக்குக் கீழே வாய்க்கால் மாதிரி தண்ணீர் ஓடுகிறது. நன்னீரல்ல என்பது தெளிவு. அதற்கு லேஸி ரிவர் என்று பெயர். வெள்ள காலத்து ஆபத்துசம்பத்துகளில் உபயோகப்படும் காற்றடைக்கப்பட்ட டயர் போன்றவைகளுக்குள் உட்கார்ந்து மிகவும் பிரயர்த்தனப்பட்டுக் கையாலே தண்ணீரைத் தள்ளித் தள்ளி மிதந்து கொண்டிருக்கிறார்கள். தனது வயிற்றில் காலம்காலமாகக் காற்றடைக்கப்பட்ட மத்திம வயது வாட்டசாட்டமான ஆளொருவர் குனிந்து குனிந்துத் தண்ணீரைத் தள்ள முயன்று தோற்றுப்போய் இரைப்பெடுத்துத் தேமேன்னு உட்கார்ந்துகொண்டார்.

அதையும் கடந்து போனால் ஒரு பெரிய நீச்சல் குளம். அதன் நடுவில் ஒரு சறுக்கு மேடை. வயசு வித்யாசமில்லாமல் அதன் மேலேறி தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்து நனைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். ”மகளிரும் குழந்தைகளும் மட்டும்” என்ற கண்டிப்பானப் போர்டுக்குக் கீழேயே கட்டிளம் வாலிபர் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பவர்களுக்கு உதவி புரிந்துகொண்டிருந்தார். ஸ்டாஃப்ஃபாம். ஆடவர்களுக்கு ஐந்து பத்து மாடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் சருக்குவது போன்ற வீரவிளையாட்டுகள்தான்.

ஒரு ரப்பர் தக்கை ஒன்றை தூக்கிக்கொண்டு நாலைந்து மாடி லொங்கு லொங்கென்று ஏறினோம். சராசரி ஆள் அகலமுள்ள நான்கு சருக்குமரங்கள் இறங்கி, ஏறி, இறங்கி, ஏறி, இறங்கி ஒரு தண்ணீர்க் குளத்துக்குள் தலைகுப்புறக் குதித்தது. நாம் குப்புறப் படுத்துக்கொண்டு நெஞ்சோடு அந்தத் தக்கையை அணைத்துக்கொண்டால் முட்டிக்கால் வரை வருகிறது. காலால் பின்னால் உதைத்துத் தள்ளிக்கொண்டால் அடுத்த பத்து பதினைந்து நொடிக்குள் அந்த க்ளோரின் குட்டைக்குள் தண்ணீர் மூக்கிலேற விழுவீர்கள். இது ஒரு விளையாட்டு.

தனது லவ்வர் பெண்ணோடு லவ்வர் பாய் ஒருத்தர் எங்களுக்கு முன்னால் அப்பெண்ணிற்கு அக்குட்டைக்குள் விழுவதற்கு க்ளாஸ் எடுத்தார். அது “ஊஹும்..ஊஹும்..” என்று செல்லமாக உதறியது. இவர் விடாமல் கையைப் பிடித்து பலாத்காரமாய் வற்புறத்த, ஒரு முறை குனிந்துவிட்டு ”நா.. மாட்டேன் போ...” என்று ஏறிய படிகள் வழியே இறங்கி திபுதிபுவென்று ஓடியது. “இந்தக் குளத்துக்குள் குதிப்பதைவிட இவனோட சம்சார சாஹரத்தில் குதிப்பது ஈஸின்னு நினைச்சு ஓடுதோ...” என்று நான் என் ஷெட்டகனிடம் சற்று உரக்கக் கேட்டது அந்த லவ்வர் பாய் காதில் விழுந்துவிட்டது போலிருக்கிறது. தொபேர் என்று நெடுஞ்சான்கிடையாகப் படுத்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று வழுக்கிக்கொண்டு போய் தண்ணீர்க் குட்டைக்குள் விழுந்தான். இறங்கிப் போன பெண் கையைப் பிடித்து அவனை அக்குட்டைக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சி.

இந்த க்ளோரின் மண்டலத்தில் சுழற்றி விடப்பட்ட யூஸ்டு நீரில் அனைவரும் ஜலக்ரீடை செய்கிறார்கள். ஒரு குடையின் கீழ் பொருத்தப்பட்டிருந்த இருபது முப்பது பெரிய ஷவர்த் தொகுப்பிலிருந்து “ஜோ”வென்று நவம்பர் மழையாய்ப் பெய்துகொண்டிருந்த நீருக்கடியில் கும்பலாகக் குளித்துக்கொண்டிருந்த இருபாலரும் தையதக்காவென்று ஆடிய பின்புதான் பின்னணியாக “பொதுவாக எம்மனசு தங்கம்” ஓடுகிறது என்றறிந்தேன். ஆயிரம் ஆம்பிளைக் கண்கள் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்தும் சில பெண்பிள்ளைகள் ”மேகம் கருக்குது..” ஜோதிகாவாவும், ”நன்னாரே..” ஐஸ்வர்யா ராயாகவும் தொப்பலாக நனைந்து ஆடியது மனதை ஏனோ நெருடியது. ”நீங்க ஏன் சார் அங்கே பார்க்கிறீங்க?” என்று என்னுடன் மல்லுக்கு வருகிறவர்கள் கொஞ்சம் நிற்க. ஈஷாவில் சந்திரகுண்ட் இருந்தது போல தனிமையான பகுதியாக இருந்தால் அவர்கள் உல்லாசமாக இருக்கலாமே! சமூகநலன் கருதி அட்லீஸ்ட் ஆடாமலாவது குளிக்கலாம். புண்ணியம் இருவருக்கும்.

வளைந்து வளைந்து இறங்கும் ஒரு அருவிப் பாதையில் காற்றடித்த போட்டில் இருவர் அமர்ந்து சறுக்கும்படியான ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. மேலிருந்து கீழே அந்தக் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த பாதையில் தண்ணீர் போட்டை இழுத்துக்கொண்டு செல்கிறது. ஒருமுறை இதில் ஆனந்தித்தவர்கள் அந்த போட்டை அவர்களுக்குச் சாசனம் எழுதிக் கொடுத்தது போல கையோடு எடுத்துக்கொண்டு மீண்டும் மலையேறுகிறார்கள். இரண்டு முறை போட் பிச்சையெடுத்துப் பார்த்துக் கிடைக்காததால் “ஏம்பா.. நீங்க இதை முறைப்படுத்தக் கூடாதா?” என்று யூனிஃபார்ம் போட்ட பையனிடம் கேட்டேன். எங்கிருந்தோ இன்னும் ரெண்டு யூனிஃபார்ம் ஆட்களைக் கூட்டி வந்து ஒழுங்குபடித்தி க்யூவில் நிற்க வைத்து ’போட்’டளித்தான் அவ்வள்ளல். சிலரது வாழ்க்கைப் படகு சம்சார சாகரத்தில் படும் இன்னல்களைப் படம்பிடிப்பது போன்ற இந்த விளையாட்டில் நிறைய குடும்பஸ்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆறுதல் தேடினார்கள்.

குற்றால அருவியை செட் போட்டு கொட்டினார்கள். நல்ல வேகம். ஜில்லென்று ஊற்றியது. குனிந்து நின்றால் முதுக்கு மசாஜ். கூட்டமான கூட்டம். காசு கொடுத்துக் குளித்துக்கொண்டிருந்தார்கள். ஜட்டியுடனும் கையில் டிஜிட்டல் கேமராவுடன் படம்பிடித்தவரின் கோணம் எனக்குச் சரியாகப்படலை. கேமிராவின் கண் வி(வ)காரமாகன இடத்தில் பார்ப்பது போன்றிருந்தது. அவரது முதுக்குப் பின்னால் பத்து நொடிகள் ஸ்டெடியாக நின்றேன். விருட்டென்று திரும்பிப் பார்த்தார். கேமிராவை அணைத்து பாலீதின் கவருக்குள் போட்டுக்கொண்டு யாரிடமோ ஒப்படைக்க சிட்டாகப் பறந்துவிட்டார்ர். இங்கிருந்து மேலே இரண்டாவது பாராவில் நான் ஏன் இவர்களை இப்படி ஆட்டம் போடக்கூடாது என்று சொன்னேன் என்பது நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் அய்யனார்க் குட்டையில் தலையைத் தூக்கி ஊறுபவைகளாக நின்றுவிட்டு கரையேறி துணி மாற்றிக்கொண்டு கோவைக்குத் திரும்பினோம். பெரியநாயக்கன்பாளையத்தின் லெக்ஷ்மி மில்ஸ் தாண்டி விவேகானந்தா வித்யாலயாவின் பார்க் நேர்த்தியாக இருந்தது. சித்த நேரம் உட்காரமாட்டோமா என்ற தாபத்தை உண்டு பண்ணியது. அதற்கு முன்னர் ஆனந்தாவில் வயிற்றுக்கு ஈந்தோம். சரவணபவன் கோம்போ கலாச்சாரம் கோவை வரை சென்றுவிட்டது. ஆனந்தாவில் பல கோம்போக்கள் விற்றார்கள். நாலு இட்லியைச் சாம்பாரில் தோய்த்துச் சாப்பிட்டுவிட்டு இருப்பிடம் அடைந்தோம்.

படுக்கையில் படுத்து தூக்கம் கண்கள் சொருகும் போது குணா கமல்ஹாசன் “பெந்தடால்” சொல்வது போல “க்ளோரின்..க்ளோரின்...” என்று உதடுகள் உளறியது. மூக்கும் அதை உணர்ந்தது. ”சாகரமளவு தண்ணிக்கு எவ்ளோ கிலோ க்ளோரின் வாங்கி கரைச்சுருப்பாங்க” என்ற வானத்து நட்சத்திரம் எண்ணும் பணி போன்ற கேள்வி நினைவுக்கு வந்து தூக்கத்தைக் கலைத்தது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails