Tuesday, July 29, 2014

வயிறாயணம்

டின்னருக்கு தோசைதான் டிஃபன். மிருதுவான தோசையை மூன்று விரலால் வலிக்காமல் விண்டு விண்டு இலையோரத்தில் சிற்றாராய் ஓடிக்கொண்டிருந்த மணத்தக்காளி வெத்தக் குழம்பில் தோய்த்து தோய்த்து வக்கணையாக இறக்கினேன். தோசையின் வெதுவெதுப்பான சூடும் வெத்தக்குழம்பின் புளிப்பு+உறைப்பு+மணத்தக்காளியின் துளி கசப்பு+அரை அச்சு வெல்லத்தின் அசட்டுத் தித்திப்பு சேர்த்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ருஜியை வர்ணிக்க வார்த்தையில்லைப்பா...

எவ்ளோ விள்ளல் எவ்ளோ குழிக்கரண்டி வெத்தக்கொழம்புன்னு கணக்குவழக்கில்லை. பாட்டியாயிருந்தா தோசை வார்த்து வார்த்து கை அசந்து போய் “டேய் தம்பி! வயிறா வண்ணாஞ்சாலயாடா”ன்னு தோசைக் கரண்டியை சூலமாக்கி மிரட்டியிருப்பாள். நாக்கும் வாயும் வாகனத்தின் முன் சக்கரம் பின் சக்கரம் மாதிரி அப்படியொரு ஒத்துழைப்பு. துளிக்கூட அசரவேயில்லை. கடைசியில் குழம்பாறு வத்திப்போச்சு. வட்ட வட்ட தோசையால் வயிறு முட்ட முட்ட நிறைஞ்சுபோச்சு. தரையில் கையை ஊன்றாமல் ஸ்டடியாக எழுந்தாச்சு.

லைஃப்ல போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடுதான். திரும்ப திரும்ப நேரம் தவறாமல் மொசுக்குற விஷயமும் சாப்பாடுதான். கழைக்கூத்தாடியின் குட்டிப் பொண்ணு கம்பி மேலே நடக்கும் போது “பாவம்! எல்லாம் வயித்துப் பொழைப்புக்கு”ன்னு பரிதாபப்படுவார்கள். காஃபி, டீ, சமோசா, பஃப், தமிழ்நாடு தாலி, பட்டர் நாண், ஜூஸ், பர்கர், பிட்ஸா என்று நாள் பூராவும் வெகுவாக கவனிக்கப்படுவது வயிறுதான். சென்ஸிடிவ் வயிறு வாய்த்தவர்கள் “இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று ஔவைப் பாடலை ஒவ்வொரு விருந்துக்கு பின்னரும் ஜெலுசில்/ஈனோவோடு நினைவுகூர்வார்கள்.

ஆண்களின் சாமுத்ரிகா லட்சணப்படி உருண்டை வயிறர்கள் குபேரனைப் போல செல்வந்தர்களாகவும், அதே பேய் உருண்டை காலை நோக்கி இறங்கி பிரசவ நேரம் நெருங்கிய கர்ப்பஸ்திரீகள் போலிருந்தால் ஓட்டாண்டியாகி விடுவார்களாம். வயிறில்லாமல் அந்த இடம் நேராக துடைத்து விட்டாற்போல இருந்தால் அவர்களுக்குப் பிக்கல் பிடுங்கலற்ற வாழ்வாம். எங்கேயோ படித்தது.

புஸ்தக அலமாரியில் கையைவிட்டு குன்ஸாகக் கிடைத்தது வாத்தியாரின் “ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்”. புக் கிரிக்கெட் மாதிரி பொசுக்கென்று பக்கத்தைத் திருப்பினேன். வலது பக்கத்தில் போல்ட் பண்ணி போட்டிருந்த பேயாழ்வாரின் நா.தி.பி பாடல்.

மண்ணுண்டும்-பேய்ச்சி-முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுந்த வெகுண்டு ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
வயிற்றினொடு ஆற்றா மகன்

எத்தனை சாப்பிட்டாலும் மறுபடி இன்னமும் ஏதாவது சாப்பிடக் கொடேன் என்று ஏங்குவது வயிறு. வயிற்றுக்காக பல வேஷங்கள் போடுவதை பஜ கோவிந்தத்தில் சங்கரர் “உதர நிமித்தம் பகுக்ருத வேஷம்” என்கிறாராம். உலகங்களையெல்லாம் எடுத்து உண்டு, பேய்ச்சியின் பாலையும் உண்டான். அவள் உயிரையும் உண்டான். அதிலும் திருப்திப்படாமல் ஆய்ச்சியின் வெண்ணெயையும் உண்டு அவளால் கயிற்றில் கட்டப்படுகிறான்.

என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசு டொட்டொய்ங்னு கீழே தொங்காமல் நிமிர்த்திக் காப்பது ஒரு சாண் வயிறு.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails