Tuesday, July 29, 2014

ஈஷா

நீல ட்ராயர் போட்ட வெள்ளைக்காரர் வாயோரம் சட்னி வழிய வாழக்கா பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்த கடைக்கு அருகாமையில் எங்களது வண்டி ப்ரேக்கடித்தது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்திருக்கும் ஈஷாவின் பார்க்கிங் ஓரம் அது. இயற்கை உணவு, க்ரீன் டீ, தினுசு தினுசான மூலிகை மருந்துகள் என்று குடில்தோறும் தேக ஆரோக்கிய ஐட்டங்கள் வரிசையாகக் கடை கட்டியிருந்தது. பக்கத்துக் கடைகளில் அக்கா மாலாவும் கப்ஸியும் சகஜமாகப் புழங்கிக்கொண்டிருந்தது. யூனிட்டி இன் டைவர்ஸிட்டி!

தொடையில் கணு கீறும் சவுக்குக் கம்பு கட்டிய கவுண்டர்களில் செருப்பு மற்றும் கேமிரா மொபைல் போன்றவைகளை அவர்களின் பைகளில் போட்டு ஒப்படைக்கச் சொன்னார்கள். ஒரு கும்பிடு போட்டு “சார்! உங்களுடைய கேமிரா மொபைல்லாம் அந்தக் கௌண்டர்ல குடுங்க. செருப்பை இந்த பைல போட்டு இங்க கொடுங்க...” என்று வழி காண்பித்து கையில் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

முன் மண்டபம் நெட்டையாய் வளர்ந்த தென்னை மர உயரத்திற்கு விஸ்தாரமாக இருந்தது. சூர்ய குண்ட், சந்திர குண்ட், லிங்க பைரவி, தியானலிங்கம் என்று பதாகை எழுதி பக்தர்களுக்கு வழி சொல்ல அம்புக்குறி போட்டிருந்தார்கள். சலசலவென்று ஓசை வந்த சூர்ய குண்ட்டை எட்டிப் பார்த்தோம். உத்தரத்திலிருந்த சூரியனின் சுதைச் சிற்ப வாயிலிருந்து அருவியாய் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. கீழே இருந்த குளத்தில் ஆண்கள் இடுப்புத் துண்டோடு உலவிக்கொண்டிருந்தார்கள். “சூர்ய குண்ட் ஸ்நானம் ரூ. 20” என்று டேபிள் போட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் ஒரு அடல்ட் குளியலுக்கு ஆகும் செலவை விடப் பண்மடங்கு குறைச்சல்.

”வணக்கம் சார்! இதுல மூலிகைகள் கலந்து இருக்கோம் சார். நாங்க குடுக்கிற இந்த துண்டை மட்டும்தான் கட்டிக்கணும். இன்னர் எதுவும் போட்டுக்கக்கூடாதுங்க. எச்சில் துப்பக்கூடாதுங்க. தண்ணியை வாயில முழுங்கி துப்பக்கூடாது. நீச்சல் அடிக்கக்கூடாதுங்க. சத்தம் போடக்கூடாதுங்க..” என்று பல கூடாதுகளுக்குச் சத்தியம் வாங்கிக்கொண்டு ஈரத்துண்டைக் கையில் கொடுத்தார்கள். இன்னொருத்தர் இன்னரில்லாமல் கட்டிய துண்டை ஒரு தடவைக் கூட அலசாமல் கட்டுவதற்கு மனசுக்கு கூசினாலும் “ஈஸ்வரா...” என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நீருக்குள் இறங்கினோம். சத்குருவைப் போல வெள்ளைத் துண்டை மேலுக்குப் போர்த்தியவர்கள் சூர்ய குண்ட்டிற்குத் தளபதியாய்க் காவல் காத்தார்கள்.

அருவியாய் நீர் விழும் அந்தக் குளத்தின் நடுவில் வரிசையாய் மூன்று லிங்கங்கள் இருந்தது. நாகாபரணத்தோடு. இறங்கியதும் மேனியைத் தழுவிய நீரினால் ஒரு அற்புதமான உணர்வு ஆட்கொண்டது. தண்ணீரில் ஒரு அரோமா இருந்தது. தரையையும் மேலே உத்திரத்தையும் நீல வர்ணம் அடித்திருந்ததால் நீர் நீலக்கடல் போல காட்சியளித்தது. ஐந்தடிக்கு குறைவானவர்கள் மூழ்குவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

கண்களை மூடி அந்த அருவிக்குத் தலையைக் காண்பித்தேன். ஜோவென்று கொட்டிய நீரினால் காதுக்குள் “ச்சோ..”. முதுகில் இறங்கிய போது இதமாக இருந்தது. நீருக்குள் மூழ்கி மூன்று லிங்கங்களையும் தொட்டு ஸ்பரிசத்தால் மகிழ்ந்தேன். நடுவிலிருந்த லிங்கத்தின் ஆவுடைக்கு மேலே பாணத்தைக் கட்டிப் பிடிக்கும் போது திருக்கடையூரூம் மார்க்கண்டேயனும் கண்ணுக்குள் பவனி வந்தார்கள். அரைமணி குளித்துக் கரையேறிய போது டன் டன்னாய் புத்துணர்வு வந்து ஒட்டிக்கொண்டது.

தியானலிங்கத்திற்கு செல்லும் வழியில் நாரை நடக்கும் ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது. அதைக் கடக்கும் மரப்பாலத்திலிருந்து நேர்கோட்டில் இருப்பது தியானலிங்க சன்னிதி. ”ரைட் சைட் போங்க சார்! பின்னால லிங்க பைரவி சன்னிதி இருக்கு. அங்க பார்த்துட்டு இங்க வரலாம்..” என்று பிரதக்ஷிணமாக திருப்பி விட்டார்கள். லிங்க பைரவி நடை சார்த்தியிருந்தது. பக்கத்தில் கூப்பிட்டு தியானலிங்க வழிபாட்டு முறைகளை வீடியோ போட்டார்கள். “இன்னும் இருவது நிமிசத்துல தொறப்பாங்க சார்” என்று சொன்ன பெண் அங்கே வாலண்டியர்.

லிங்க பைரவி சன்னிதி வாசலில் கடலைப் பருப்புப் பாயஸப் பிரசாதம் பத்து ரூபாய்க்கு விற்றார்கள். முண்டியடித்துக்கொண்டு ஜனம் ஆளாய்ப் பறந்தது. முருகன் இட்லியில் உள்ளங்கை அளவு தொன்னை சர்க்கரைப் பொங்கலுக்கு ஐம்பது ரூபாய் தாளிப்பார்கள். பாயஸம் தேவாமிர்தம். ஏலக்காய் தட்டிப் போட்டிருந்தார்கள். வாயெல்லாம் மணத்தது. காவி கட்டிய இருவர் மொண்டு குடிக்க பிரயாசைப்பட்டார்கள்.

லிங்கபைரவி சன்னிதி வாசலில் ஒரு சிலை புது மோஸ்தரில் நமஸ்கரித்துக்கொண்டிருந்தது. வலது காலை மடக்கி, நேராக நீட்டிய இடது காலின் கணுக்காலின் மேல் வைத்தும், வலது கையை மடித்து தலைக்குக் கீழே கொடுத்தும், இடது கையை நேரே நீட்டியும் நமஸ்கரிக்க வேண்டுமாம். தாத்பர்யம் என்னவென்று கேட்க பக்கத்தில் ஆளில்லை. ஆண்கள் சாஷ்டாங்கமாகச் செய்யலாம். பெண்கள்? உடன் வந்த பெண்டுகள் பஞ்சாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்கள்.

திருவலச் சுற்றில் சந்திரகுண்ட்டும் சாம்பவி மஹாமுத்ரா செய்பவர்களுக்கான பிரத்யேக இடமும் தயாராய் இருந்தது. சந்திரகுண்ட் என்பது சூரியகுண்ட் மாதிரி மகளிருக்கான நீராடல் இடம். வலம் வந்ததும் தியானலிங்க சன்னிதிக்கு முன்னர் வாயைக் கட்டி அமரச் சொன்னார்கள். தியானலிங்க சன்னிதிக்குள் நுழையும் வாயிலை அடைகிறோம்.

தியானலிங்கத்திற்கு முன் அமர்ந்து கண்ணை மூடி வழிபடுவதற்கு முன்னர், வாசலில் உட்கார வைக்கிறார்கள். அதன் சுவற்றில் சில சிற்பங்கள் நம் கவனத்தை ஈர்க்கிறது. அக்கமா தேவி, பூசலார், கண்ணப்ப நாயனார் என்று புடைப்புச் சிற்பங்களாக மிளிர்கிறது. மிகப்பெரிய லிங்கத்தைச் சுற்றி அமர வைக்கப்படுகிறோம். மெல்லிய ஓசை கூட அந்த சன்னிதிக்குள் பேரொலியாகக் கேட்கிறது. ஐந்து நிமிடங்களில் அலாரம் அடித்து எழுப்பி தீபாராதனை காட்டி விபூதி கொடுத்து வழியனுப்பினார்கள்.

பேட்ச் பேட்ச்சாக உள்ளே செல்வதற்கு காத்திருப்பவர்களைத் தாண்டி வந்தால் தியானலிங்கத்திற்கு எதிரே வெளியே இருந்த மரத்தடியில் டிஜிட்டல் கேமிராவினால் படமெடுத்து ஆனந்தித்த கும்பல் ஒன்று கண்ணில்பட்டது. கேமிரா கவுண்ட்டரைத் தாண்டி இவர்களால் எப்படி கொண்டு வர முடிந்தது? ப்ரியாரிட்டி பக்தரோ? இதைக் கண்டு வெகுண்டு திரும்பி பிரசாதக் கவுண்ட்டரை அடைந்து எள்ளுருண்டை வாங்கி ருசியாறினோம். “யாராத்துலையாவது எள்ளுப்பொடி, எள்ளுருண்டை வாங்கிச் சாப்பிட்டா.. அவாத்துக்கு ஓடா உழைக்கணும்டா...” என்று பாட்டி பல வருடங்களுக்கு முன் மன்னார்குடி வீட்டில் சொன்னது அன்று ஈஷாவில் கேட்டது.

இரவு நேரே வீட்டுக்கு விரைந்த போது காலையில் Rajagopal Chellappan அவர்களிடம் பேசியது நியாபகத்துக்கு வந்தது. “சார்! வீட்டுக்கு வந்துட்டோம்.. வரீங்களா?” என்று கேட்ட வாயின் ஈரம் காய்வதற்குள் காரில் வந்து இறங்கினார். Chitra Krishnamurthy அவர்களின் கை வண்ணத்தில் உப்புமா கொழக்கட்டையும் வத்தக்குழம்பும் தயாராகிக்கொண்டிருக்க சாரை வரவேற்று நானும் Krishnamurthy Krishnaiyer யும் பேச்சுக்கொடுத்தோம். வல்லபா வீட்டில் ருசித்தது போலவே டேஸ்ட். ஆழ்வார்பேட்டையில் பேசியது போலவே ஹிமாலயாஸ் பற்றிப் பேசினோம். பிடிகொழக்கட்டைக்கும் விந்திய மலைக்கும் ஏதோ பிடிப்பு இருக்கிறது.

ஆரம்பத்தில் ராஜகோபால் செல்லப்பன் சார் பேசுகிறாரா அல்லது தலையை மட்டும் அசைக்கிறாரா என்று தீர்மானிக்க முடியாமல் குழம்பினோம். அவரருகே சோஃபாவில் உட்கார்ந்திருந்த நான் அவரை புதுப் பொண்டாட்டியாக உரசி உட்கார்ந்து கொண்டு செவியைத் தீட்டிய பின் அவர் வாயை மட்டும் அசைக்கவில்லை எங்களுடன்தான் பேசுகிறார் என்றறிந்தேன். “அண்ணா! சந்தேகமே இல்லை. அவர் பேசறார். பக்கத்திலே வாரும்.” என்றதும் கேகேயண்ணாவும் சேரை தூக்கிப் பக்கத்தில் போட்டு அவர் மடியில் உட்கார்ந்து பேசும் தூரத்திற்கு வந்தார். நல்ல அனுபவசாலி. நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசுகிறார்.

பேசுவதில் சப்தத்தைக் குறைத்து எனர்ஜி கன்ஸர்வேஷனில் ஈடுபட்ட அவரைக் கண்டு எனக்குப் பொறாமையாக இருந்தது. வாயைத் திறந்தாலே ஃபேக்டரி சங்கு மாதிரி அலறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டு அடுத்த பத்தாவது நொடியில் அதை உடைத்தேன். சத்தமாகப் பேசினால் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.

உல்லாஸ் சுற்றுக்காக மூன்றாவது நாளில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails