Tuesday, July 29, 2014

ஜய வருடப் பிறப்பு

உத்துப் பார்த்தால் ஒரு நிமிஷத்தில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வேப்பம்பூக் கொத்து பத்து ரூபாய். ஃபண்டாஃபீஸ் மார்க்கெட்டில் நேற்றைக்கு வாங்கினேன். அரையாழாக்கு சைஸில் இருந்த சிறுமி விற்ற ஆழாக்கு சுண்டைக்காய் பத்து ரூபாய். நீட்டுப் புடலை முப்பது ரூபாய்க்கு சொல்லி முப்பது ரூபாய்க்கே கொடுத்தது அந்த பொக்கை ஆத்தா . இருக்கிற ரெண்டு மட்டையை உரித்தால் மடித் துணி உணர்த்தும் கழி சைஸ் வரும் ஒரு முழம் சைஸ்(மானஸா கை முழம்) வாழைத்தண்டு பத்து ரூபாய். பாலாஜி அருண் ரீச்சபிளாக இல்லை. கறிகாய்ப் பையோடு கபாலியை ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வந்தேன்.

முருகன் சன்னிதியில் பங்குனி உத்திர கற்பூரார்த்தி ஆனது. வெள்ளிக்கவசத்தில் மினுமினுத்தார் முருகப்பெருமான். நிறைவான தரிசனம். இரண்டு பேர் தூணுக்கு விபூதியால் வெள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். கற்பகாம்பாள் கருணை புரிவதில் மும்முரமாக இருந்தாள். ஏகக் கூட்டம். தள்ளுமுள்ளுவில் குருக்கள் கையால் தாழம்பூக் குங்குமம் கிடைத்தது. சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனைத் தரிசித்துவிட்டு உமையைத் தரிசிக்க வேண்டும்.

மயிலாப்பூரில் மாமிக்களின் அதிகாரத்திற்கு ஏற்ப அம்பிகைக்குப் பிறகு சிவனைத் தரிசனம் செய்ய பாரிகேட் அமைத்து வழி கொடுத்திருக்கிறார்கள். “சர்வ மங்கள மாங்கல்யே...” ஒரு முறை மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். வலம் வந்து கபாலியைத் தரிசித்தேன். நாகாபரணத்தோடு கம்பீரமாகக் காட்சியளித்தார். விபூதி வாசம் மூக்கில் ஏறி பக்தியில் கண்ணிரண்டையும் மூட வைத்தது. “நமஸ்தே அஸ்து பகவன்....” சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டேன். சொற்ப பக்தர்களுடன் ஏகாந்தமான தரிசனம்.

புன்னைவன நாதரைத் தரிசித்துவிட்டு சனீஸ்வர பகவான் சன்னிதிக்கு அருகில் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஐயாவைப் பார்த்து ”வணக்கமய்யா” என்று கைகூப்பினேன். கூப்பிய கரத்தைப் பிடித்து “நல்லாயிருக்கீங்களா?” என்று அவரது ட்ரேட் மார்க் சிரிப்போடு கேட்டார். அவரது புதல்வியார் என் மனைவிக்கு மீனாக்ஷி காலேஜில் ஈவினிங் பிரின்ஸியாக இருந்தவர். “நல்லாயிருக்கியாம்மா?” என்று அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தார். “கச்சேரி இருக்கு. வந்து பாருங்க...” என்றார் பெரியவர். பேரனின் தோளைப் பிடித்து நிமிர்ந்த வில்லாய் நடந்து சென்றார்.

சிறிது நேரத்தில் தபேலாவை குமுக்குவது கேட்டது. பிள்ளையாருக்கு கும்பிடு போட்டுவிட்டு திரும்பினேன். ஸ்கர்ட்டும் பேண்ட்டுமாய் Blondeக்கள் சிலர் மல்லிப்பூச் சூடிய அறுபதடிக் கூந்தலை முன்னால் விட்டு ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துச் சிரித்தார்கள். “ஈஸ்வரா....”.

முதல் வரி மேட்டருக்கு வருவோம். அண்ட்ராயர் வயசில் ”சர்க்கரையைத் தின்ன புள்ளையார் எறும்பைப் பிடிச்சு அதுக்குள்ளேயே போட்டு பச்சடின்னு சொல்றியா? வ்வே...வ்வே..”ன்னு புது வருஷப் பிறப்பில் பாட்டியிடம் மல்லுக்கு நிற்பேன். வேப்பம்பூப் பச்சடி வருஷப்பிறப்பு ஸ்பெஷல். ஜீராப் போளியும்தான். “ரெண்டு அச்சு வெல்லம் போட்ருக்கேன். புளி குத்தியிருக்கேன். ஒண்ணும் தெரியாதுடா.. நாலு விரலால தோச்சு நாக்குல வச்சு நக்கிடு.”ம்பாள். வேப்பம்பூ ரசத்தை எறும்பு ரசம்மின்னுதான் சொல்லுவேன்.

வேப்பம்பூ பச்சடி. ஜீராப் போளி. வடை. கடலைப் பருப்புப் பாயஸம். ஜய வருஷம் பிறந்தாச்சு! ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!! திங்கட்கிழமை பிறந்திருக்கும் இப்புத்தாண்டிற்கு திங்கள்தான் அதிபதி. எல்லா மண்டேயும் அனுக்கிரஹம் நிறைந்த மண்டேக்களாக அனைவருக்கும் என் மனமார்ந்த ஜய வருஷ புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா வளமும் எல்லோரும் பெற பிரார்த்திக்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails