Tuesday, July 29, 2014

கோவை கொடிவேரி

”ணா.. இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?”

”பவானி சாகர் டேம், பண்ணாரி, கொடிவேரி... ஓகேவா?” என்று இடினெரியை இயம்பினார் கேகேயண்ணா Krishnamurthy Krishnaiyer “நீங்க எங்க அழைச்சுண்டு போனாலும் ஓகே” என்று மனப்பூர்வமாகக் கோவை பாட்ஷாவைச் சரணடைந்தோம். வாகனம் ஜல்தியில் ஏற்பாடாயிற்று.

தென்னிந்தியர்களின் ஸர்வ டூர் சாதமான டைகர் ரைஸ் தொட்டுக்க வெங்காய வடாம், ஜவ்வரிசி வடாம் இத்யாதிகள் மற்றும் த்ரிகாலத்திற்கும் ஒத்துப்போகும் தயிர் சாதம் வித் லவ்வபில் மாவடு (”மாதா ஊட்டாத சோத்தை மாங்கா ஊட்டும்பா” என்பது பாட்டிகளின் சோற்று மொழி) என்று மதிய உணவு பெரிய பெரிய எவர்சில்வர் தூக்குகளில் ரெடி. உபயோகத்திற்குப் பின்னர் தூக்கி எறியலாம் என்றாலும் வீசுவதற்கு மனமில்லாதது போல சருகு இலை கலரில் சாப்பிடும் பாக்குமட்டைத் தட்டு, கரண்டி சகிதம் Chitra Krishnamurthy அவர்கள் ”அதிதி தேவோ பவ:”வாக தயாராக இருந்தார்கள். அன்னமிட்ட கை.

ஐராவதமாக ஒரு டெம்போ ட்ராவலர். ஏசி காஷ்மீராகக் குளிரூட்டியது. ஆளுக்கொரு அரியாசனம். நல்ல வசதி. சூரியன் உச்சத்தில் கொளுத்திக்கொண்டிருந்த போது பவானி சாகரில் கால் வைத்தோம். இறங்கிய உடன் கண்ணில் பட்ட காட்சி, கொழுத்த மீனை அறுத்து வறுத்துச் செக்கச்சேவேலென மிளகாய்ப் பொடி தடவி கடை வாசலில் டிஸ்ப்ளேக்கு வைத்திருந்தார்கள். அந்தப் பக்கமாகச் செல்லும் மீன் ப்ரியர்களுக்கு வாயூறச் செய்த ஏற்பாடு. அடுத்தடுத்து வரிசையாக மீன் கடைகள். பவானி சாகர் பார்க்கினுள் பார்ப்பதற்கு ஒண்றுமில்லை. உள்ளேயும் மணக்க மணக்க மீன் வறுக்கிறார்கள். “நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய்மணக்கும் கத்திரிக்கா.. நேத்து வச்ச மீன் கொழம்பு...” பாட்டு காதுகளில் ரீங்காரமிட்டது. நான்வெஜ் ஹோட்டல் வைத்திருக்கிறார்கள். வெயில் காயும் நேரத்தில் சென்றதால் பழுக்கக் காய்ச்சப்பட்ட சிமெண்ட் பென்ச்சுகள் உட்கார பயமுறுத்தின. பட்சிகள் கூட பறக்கக் காணோம்.

அழுக்காய் தண்ணீர் கிடந்த குளமொன்றில் யாரோ இருவர் இறங்கி குளப்பிச் சாதனை புரிந்தனர். குப்பைக்கூளமாக கிடந்ததில் சர்க்கார் பராமரிக்கும் பூங்காவென்று ஓரமெல்லாம் எழுதி ஒட்டியிருந்தது. பொடிநடையான அரைச் சுற்றுக்குள் பொடிசுகளே “ப்பா... சுத்த போர்ப்பா... வேற எங்கயாவது போவோம்...” என்று முதுகைச் சொறிய ஆரம்பித்துவிட்டனர். மேலே செல்லலாமென்றால் டேமிற்குச் செல்ல அனுமதியில்லை என்று செக்யூரிட்டி சீருடையணிந்த பொ.ப.துறை விரட்டியது. “ஏனுங்க போகக்கூடாது?” என்று வினயமாகக் கேட்டதற்கு “தண்ணியப் போட்டுட்டு போயி ரகளை பண்றாங்க...” என்று குடும்பமாக சென்ற எங்களைப் பார்த்து விடைத்தார். பொ.ப.துறை பொறியாளரிடம் ஃபோனில் “ப்ளீஸ்!” கேட்டு உத்தரவு வாங்கிய பின்னரும் செக்யூரிட்டி “ஊஹும் மாட்டேன்..” என்று சின்னக்குழந்தை மாதிரி ஒரே அடம். ”என்னை விட்டு நீ மேலதிகாரிகிட்டே போறியா? விட்டேனா பார்...” என்று ஒரு எகிறல்.

ஒருவழியாக அவரிடம் சமாதானமாகப் பேசி தாஜா (லஞ்சமில்லை!) பண்ணி அணை மேல் ஏறினோம். பிரம்மாண்டமான அணை. நிறைய கறுப்புவெள்ளைப் படங்களுக்கு டூயட் லொகேஷனாக நடித்திருக்கிறது. மதில்கட்டையிலிருந்து கீழே பார்த்தால் எங்கள் ஊர் ஐயனார் குட்டையில் கிடக்கும் தண்ணீர் போல பச்சைப் பசேலென்று (பச்சைத் தண்ணி) தேங்கியிருந்தது. மதிலிலிருந்து அந்நீருக்கு படிக்கட்டு ஒன்று செங்குத்தாக இறங்கியது. வலைஞர் இருவர் பரபரவென்று அதில் இறங்கி தோணியில் துடுப்படித்து ”சளக்..புளக்...”கென்று ஜலசப்தமிட பிரயாணித்தனர். நாங்களும் இறங்கி சம்பிரதாயப் படமெடுத்துக்கொண்டோம். அரைமணி நேரம் அணைக்கட்டிலிருந்து எட்டுத்திக்கையும் ஸ்கேன் செய்தோம். வயிற்றுக்குள் பசி மணி அடிக்க ”ம்.. போலாம்ப்பா...” என்று கிளம்பிவிட்டோம்.

பவானி சாகரிலிருந்து பண்ணாரி செல்லும் சாலையில் ஒரு போர் செட்டு தாராளமாகத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தது கண்ணில் பட வண்டியை ஓரங்கட்டினோம். முண்டாசு கட்டியிருந்த விவசாயி “அல்லாரும் உள்ற வந்து சாப்பிடுங்க...” என்று உபசாரம் செய்தார். கள்ளங்கபடமற்ற அன்பு. வேர்க்கடலை கடிபட சாப்பிட்ட புளிசாதத்துக்கு கறுக்மொறுக்கென்று கருடாம் துணை. வெங்காய வடாமின் நடுபாகம் செம்ம டேஸ்ட். வயற்காட்டில் உட்கார்ந்து சாப்பிடும் போது தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளைத் தாண்டிக் குதித்து கருமேகங்கள் படைதிரண்டு வந்துகொண்டிருந்தன. இந்த லோகேஷனில் நாக்குக்கு புளிக்காமல் தயிர் சாதம் மாவடுவோடு. திவ்யமாக இருந்தது.

“மடிவேரி எவ்ளோ தூரம்?” என்ற என் கேள்விக்கு குழுவினர் வித்தியாசமாகப் பார்த்தனர். ”அது மடிவேரியில்லை. கொடிவேரி..” என்று ஆன்லைன் எடிட்டிங் கரெக்ஷன் கொடுத்தார் கேகேயண்ணா. ”சீக்கிரம் போவலைன்னா கொடிவேரில குளிக்க முடியாது...” என்று வண்டியை உறுமினார் ட்ரைவர். ”பண்ணாரியம்மனைப் பார்க்க முடியுமா?” என்று தெய்வ சிந்தனையோடு ட்ரைவரிடம் கேட்டதற்கு “இந்த டயத்ல மூடியிருப்பாங்க... பார்க்கலாம்...” என்று பண்ணாரி கூட்ரோட்டிலிருந்து ”அதோ...”ன்னு கோயிலைக் காண்பித்தார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் திரளாகக் குண்டம் இறங்கி பிரார்த்திக்கும் அம்மன். எல்லை தெய்வம். சந்தன வீரப்பன் வணங்கிய அம்மன். காவல் தெய்வம். தவறவிடக்கூடாதென்று சாக்த வழிபாட்டிற்கு இறங்கினோம். சன்னிதி நடை திறந்திருந்தது. நெட்டித் தள்ளவில்லையென்றாலும் கூட்டமிருந்தது.

நிறைவான தரிசனம். மாலையும் கையுமாக இருவர், ”ஏனுங்... அர்ச்சினை பண்ணோனும்..” என்று மூங்கில் தட்டில் அர்ச்சனையோடும், கையிலும் இடுப்பிலுமாக பிடித்துக்கொண்டு குடும்பஸ்த்ரீயும், கையிரண்டையும் அம்மனை நோக்கி ”ஆத்தா.....”வென்று வேண்டுதலாக நீட்டியும் என்று பலப்பல மனிதர்கள், பலப்பல வேண்டுதல்களுடன், பலப்பல தினுசுகளில். பூசாரி புற்றுமண்ணை துண்ணூறாகக் கொடுத்தார். பண்ணாரியம்மனை வழிபட்டு வெளியில் வந்தால் விண்ணிலிருந்து ப்ரோக்ஷணம் செய்வது போல பொன்தூறல். நேரே மடிவேரி. ச்சே. கொடிவேரி.

”பத்து வருஷம் முன்னாடி நான் வந்தபோது இவ்ளோ கூட்டமில்லை” என்று கேகேயண்ணா சொல்லும்போது கொடிவேரியை அடைந்திருந்தோம். சாலையோரங்களில் பெருசும் சிறுசுமாக வாகனங்கள் குளித்துவிட்டு வருபவர்களுக்காகக் காத்திருந்தன. காதைத் தீட்டிக் கேட்டேன். அருவி கொட்டுவது போல “ஹோ...”வென்ற சத்தமெல்லாமில்லை. ஆளுக்கு நான்கு ரூபாய் டிக்கெட். நேரே ஷட்டர்ஸ் தெரிந்தது. இடதுபுறம் எட்டிப்பார்க்கும் போது “தோணியில போலாம் வர்றீங்களா சார்?” என்று அரை தோணியை நிரப்பி உட்கார்ந்திருந்தவரின் அழைப்பு.

தண்ணீர் வெள்ளமாக போய் சரிந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் அருவி. 4.6 மீட்டர் உயரத்திலிருந்து லாரி லாரியாய் பவானி ஆற்றுத் தண்ணீரைக் கவிழ்த்த ஒரு பெரிய ஷவர். கூவம் நதிக்கரைவாசிகளான சென்னைக்காரர்களுக்கு இப்படிக் கரைபுரண்டோடும் தண்ணீரைப் பார்த்தாலே ஒரு கிறக்கம் ஏற்படும். ரேஷனாய் ரெண்டு பக்கெட்டில் குளித்துத் துணி அலசியவர்களுக்கு இது காட்டு வெள்ளம். அப்படியே கட்டிய துணியோடு சட்டுன்னு இறங்கு என்று மனசு சஞ்சலப்படும்.

பதினேழாம் நூற்றாண்டில் மைசூர் மஹாராஜா தன் அரண்மனை யானைகளின் துணையோடு சமஸ்தானத்தில் கைதியாக இருந்தவர்களை வைத்து இந்த அணையைக் கட்டியதாக விக்கி தெரிவிக்கிறது. தற்போதைய ஓனர் தமிழ்நாடு அரசாங்கம்.

பூங்கா மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கிறது. பொதுஜனம் தான் கட்டிக்கொண்டு வந்த இட்டிலி, பிரியாணி போன்றவற்றை அப்பார்க்கில் உட்கார்ந்து தின்று க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு மிச்சம்மீதியை அடியுரமாகப் போட்டு கையலம்புகிறது. டிக்கெட் வாங்கிய இடத்திலிருந்து அருவியிலிருந்து சாரல் அடிக்கும் இடம் வரை ஐஸ்க்ரீம், பொடி தடவிய மாங்கா, மீன் என்று விற்பனை சூடாக நடக்கிறது. ஈரமான பட்டாபட்டி ட்ராயரை க்ரோட்டன்ஸ் தலைமேல் போட்டு உலர்த்துகிறார்கள். பெண்களுக்காக துணி மாற்றுமிடம் ஓரமாக இருக்கிறது. “அவனுக்கென்னடா.. ஆம்பிளைப் பிள்ளை.. கோமணம் போதும்...” என்ற சொல்லை அங்கே பலர் மெய்பித்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் மறைவில் நின்று வேஷ்டியை வாயால் கவ்விப் பிடித்து உடைமாற்றிக் கொண்டிருந்தனர். மாற்றவிடாமல் சுட்டிக் காற்று படுத்திக்கொண்டிருந்தது.

சமதர்ம சமுதாயமாக ஆண்பாலரும் பெண்பாலரும் ஸ்நானம் செய்தார்கள். நுணிக்கால் வைக்கும் போது சிலீர் என்றிருந்தது. சில பாறைகள் வழுக்கியடித்தது. இளங்காளைகளாக கூட்டமாக கொட்டமடிக்க வந்திருந்தவர்கள் “ஊய்ய்..ஊய்ய்...” என்று கள்வெறியில் கூச்சலிட்டுக் குளித்தார்கள். குற்றாலத்தின் மெஜஸ்டி இல்லாவிட்டாலும் தண்ணீரில் வேகமும் இழுவையும் இருந்தது. குனிந்து கொடுத்த முதுகை அருவிக்காரி டம..டம..டம..வென்று மசாஜ் செய்தாள். ஊர் சுற்றிய அலுப்புக்கு இதமாக இருந்தது. அரை மணிக்கும் மேலாக கண்கள் சிவக்க, விரல்நுணிகள் பூத்துப்போக அருவியில் ஆட்டம் போட்டோம். கரையேறி பத்து ரூபாய்க்கு பொடி தூவிய மாங்காய் சுவைக்கும் போது ஸ்வர்க்கம் பளிச்சென்று கண்ணில் தெரிந்தது.

அருவியில் அசராமல் குளித்தது பசியெடுத்தது. ”சத்தி ராமவிலாஸ்க்குப் போய்டலாம்”. வீட்டை விட்டு சத்தியமங்கலமிருக்கும் திசையில் லேசாக வண்டியைத் திரும்பினாலே... ஒரே பிடியாகப் பிடித்து ராமவிலாஸ்க்கு வந்துதான் போஜனம் பண்ணுவாராம் கேகே அண்ணா. பழங்காலத்து ஹோட்டலாக இருக்கக் கூடும். மன்னையில் புதுத்தெரு ஜனதா ஹோட்டல் செட்டப்பில் இருந்தது. உள்ளூராட்கள் சாயந்திர வேளையில் காப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். சட்னி ஒழுகும் வலது கையோடும் மூக்கை இடதுகையாலும் துடைத்து உறிஞ்சிக்கொண்டிருந்த பெரியவரின் இலைக்கு ரோஸ்ட் இடப்பட்டது.

வேஷ்டியும் சட்டையுமாக நெற்றிக்கு ஒற்றை விபூதித் தீற்றல் இட்டுக்கொண்டிருந்த பெரியவர் இலை போட்டார், தண்ணீர் தெளித்தார், ஆர்டர் எடுத்தார். ப்ரோட்டாவும் குருமாவும் இன்னொரு ரவுண்ட் போகச் சொன்னது. தோசை ஏ க்ளாஸ். மருமானுக்கு நெய் ரோஸ்ட். சப்ளையர்கள் எல்லோருமே தாத்தாமார்கள். பொறுமையாகக் கேட்டு அனுசரணையாகப் பரிமாறினார்கள். தடால்புடாலென்று புறங்கைக்கு சாம்பார் ஊற்றாமல், சட்னியை அளவோடும் இட்டு ராஜோபசாரம் செய்தார்கள். இலையை மடக்கிப் பிடிக்கும்படி குருமா நீர்க்கவும் இல்லாமல் கூட்டு மாதிரியுமில்லாமல் அளவான க்ரேவியாக இருந்தது. மசாலா கம்மியாக இருந்ததால் ருசிக்க முடிந்தது. கையலம்பி ஆர்டர் எடுத்த பெரியவரின் சட்டை பையில் டிப்ஸை அழுத்தும் போது “ஐயோ! நான் ஓனர்... அவாளுக்கு குடுங்கோ...” என்று உலுக்கிக்கொண்டு ஓடினார். “கல்லாவுல இருக்கிறவரும் இவரும் அண்ணா தம்பி மாதிரி இருக்கார்ணான்னு சொல்லிண்டே இருந்தேனே” என்று என்னுடைய இனங்காண முடியாத அசட்டுத்தனத்தை வாமபாகம் பிடித்துக்கொண்டாள். ”ஹெ...” என்று சிரிப்பை வழிய விட்டு எதிர்புறம் இருந்த வேணுகோபாலஸ்வாமியைத் தரிசனம் செய்துவிட்டு கோவையை நோக்கி விரைந்தோம்.

வீடுதிரும்பும் வழிநெடுக கேகேயண்ணா சித்தார்த்த பாஸு மாதிரி நிறைய க்விஸ் போட்டிகள் நடத்தினார். "Everybody wanders in this city? what is this city?" போன்று பல கேள்விகள் கேட்டு புத்தியைச் செலவிட வைத்தார். [பதில் கடைசியில்] வேனுக்குள்ளிருந்தோர் பசிமயக்கம் தெளிந்து அறிவுப்பசியெடுத்து கன்னாபின்னாவென்று அலைந்தார்கள். ஒரு கால் மணிக்கப்புறம் என்னைப் போன்றோரைக் காத்து ரட்சிக்கும் பொருட்டு Srinandan Krishnamoorthy சங்கீதம் பாட வந்தார். “கர்நாட்டிக் சாங் ஒண்ணு பாடறேன்..” என்று ஜெகன்மோகினியில் (ரைட்டா?) “சோபில்லு சப்தஸ்வர...” பாடினார். ட்ரைவர் அவ்வப்போது ஒலிக்கும் வேன் ஹார்ன் ஸ்ருதி கூட்ட, பள்ளம் மேட்டில் வேன் விழுந்தெழும்போதெல்லாம் லயங்களைக் கூட்டிக்கொடுக்க ஒரு சிறப்பான மொபைல் கச்சேரி நடந்தது. ம்யூசிக் அகாடமி ஆன் வீல்ஸ் போன்றதொரு ப்ரமை எனக்கு.

வீட்டிற்கு வந்தும் காதுகளில் சோபில்லு.. ஒலிக்க மெல்ல மெல்ல தூக்கத்தில் கரைந்தேன். இதை எழுதும் இப்போதும் ஒலிக்கிறது அந்தப் பாடல். தியாகராஜர் வாழ்க! ஸ்ரீநந்தன் வாழ்க!

கோயம்புத்தூருக்கு போய்ட்டு _________ போகலையான்னு கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கு அடுத்த பார்ட்.

ஸ்ரீநந்தன் பாடிய சோபில்லு இங்கே: https://soundcloud.com/mannairvs/wnrv4njxpgyw

சிட்டி பதில்: Rome {இந்தக் கேள்வி ஸ்ரீநந்தன் கேட்டதோ?}

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails