Tuesday, July 29, 2014

காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றமே!

”வேதகிரி என்னும் திருக்கழுக்குன்றம் தான் இப்படி வேதமே மலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “வேத வேத வேத மஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!” என்கிறார் தெய்வத்தின் குரலில் மஹாபெரியவா. அந்த வேதகிரீஸ்வரனைத் தரிசிக்க நேற்று கோஷ்டியாகப் படையெடுத்தோம்.

வீகேயெஸ்ஸும், ஆர்வியும் குடும்ப சகிதம் கோயிலுக்கு வந்திருந்தார்கள். அனன்யா மஹாதேவன் ஒரு எவர்சில்வர் தூக்கு மெது வடையோடு (ஐயப்ப சாமிக்கு வெங்காயம் போடாமல் ஸ்பெஷலாக ஒரு டப்பா) வந்திருந்தார். கெஞ்சு தமிழில் சாப்பிட வாங்க என்றும் ந்யுமராலஜிக்காரர்களின் கிடுக்கிப்பிடி ஆட்டுவிப்பால் ஆங்கிலத்தில் SAPPDA VANGA என்று பாஷை தெரியாதவன் பேசுகிற மாதிரி எழுதிய விடுதியில் மூணரை மணிக்கு காஃபிக்கு நிறுத்தினோம். பில்லும் டிஃபனும் காஃபியும் ஓகே! வாங்கி சாப்பிடலாம். செங்கல்பட்டு வரை பம்பர் டு பம்பர் ட்ராஃபிக். பக்கத்துக் காரில் பெர்முடாஸ் போட்டுக்கொண்டு பாப்கார்ன் கொரிப்பது பர்ஃபெக்ட்டாக தெரிகிறது.

செங்கல்பட்டில் புகுந்து கோணல்மாணலாக பேருந்துகள் நின்ற பஸ்ஸ்டாண்ட்டை சர்வ ஜாக்கிரதையாகக் கடந்து நேரு சிலை தாண்டிய அடுத்த லெஃப்ட் கல்பாக்கம் செல்லும் சாலை. மேம்பாலம் ஏறி இறங்கி ஒரு பதினைந்து நிமிட அழுத்தலில் புணருத்தாரணம் செய்வதற்கு கீற்றில் மறைத்த வேதகிரீஸ்வரர் கோபுரம் மலை உச்சியில் தெரிந்தது. வழிநெடுக இருபுறமும் பச்சைத் திட்டுகள். நடுவில் ஏதோ மூலிகைப்பண்ணை வந்தது. நேரே மலைக்கோவில் வேதகிரீஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த பிள்ளையார் கோயில் பின்புறம் சேப்பாயியையும் கூட வந்த இரு வெள்ளையம்மாக்களையும் நிறுத்தினோம். ரூ.25 பார்க்கிங் டிக்கெட். கக்கத்தில் கேஷ் பேக் சொருகியவர் பாய்ந்து வந்து வசூலித்தார்.

மலைப்பாதை வாசலில் மல்லியரும்பு தொடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பல டினாமினேஷன்களில் டிக்கெட் கிடந்தது. மலையேற ரெண்டு ரூபாய், டிஜிடல் கேமிரா ஐம்பது ரூபாய், வீடியோ கேமிரா இருநூற்று ஐம்பது ரூபாய் என்று மனப்பாடமாய் ரேட்டுகளை ஒப்பித்தது. “அஞ்சு மணிக்குதான் தொறப்பாங்க...” என்று கைவேலையாக இருந்தது. கஷாயம் உடுத்திய ஒரு கிழவனார் மலைப்பாதைக் கதவை திறந்துவிட்ட போது மணி நாலே முக்கால். எங்களது திருக்கோஷ்டியில் எல்லா வயதிலும் பக்தர்கள்.

ஒண்ணாவது படிக்கும் குட்டியோண்டு மேதாவிலிருந்து பொறியியல் முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் தம்புடு ஹரி கிச்சு வரை மாணவச் செல்வங்களும், ஆர்வியின் தாயார், வல்லபாவின் தாய் தந்தையார் என்று பெரியவர்கள் வரிசை ஆரம்பித்து என்னைப் போன்ற யுவன் வரைக்கும் அடங்கிய கதம்பக் குழு. ஐநூறு படிக்கட்டுகள். அழும் குழந்தைகளுக்கு காட்பரீஸ் கொடுப்பது போல நூறு படிகள் சாய்மானமாக போட்டு உள்ளே இழுத்துவிடுகிறார் வேதகிரீஸ்வரர். கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கொடுத்தவர் கடைசி நூறு படிகளில் நம் பக்தியை அளந்தார்.

கடை நூறு படிக்கட்டுகள் நேரே விண்ணுக்கு முட்டிக்கொண்டு செங்குத்தாக நின்றது. வேதகிரீஸ்வரனை வேண்டிக்கொண்டு மஹா தேவவும்.. மஹா வேதவும் மனசுக்குள் சொல்லிக்கொண்டே ஏறினேன். ஆர்வியின் அம்மாவிற்கு வைராக்கியம் ஜாஸ்தி. வயதில் பெரியவர். “இவ்ளோ தூரம் வந்துட்டு மலையேறாம எப்டி ஆத்துக்கு போறது?” என்று ஈஸ்வர பக்தியில் ஏற ஆரம்பித்தார். மலையில் ஏற்றி விடுவதும் வாழ்க்கையில் கை தூக்கி விடுபவனும் அவனல்லவோ? ஹிருதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடுவது போல இரைத்தது. மணிவாசகப் பெருமான் நாயினும் கடையேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டது நியாபகம் வந்தது. ஐநூறைக் கடந்தால் ஆனந்தமாக இருந்தது.

ஜில்லென்று காற்று. கண்ணுக்கெட்டிய இடங்களிலெல்லாம் சிறுசிறு குன்றுகள். போர்செட் வைத்திருக்கும் தெம்புள்ள விவசாயிகள் சிலர் பயிரிட்ட பச்சைச் சதுரங்கள். பச்சைச் செவ்வகங்கள். பூச்சி பூச்சியாய் நகரும் மனிதர்கள். பாட்டரி பொம்மை போல் ஓடும் பஸ்கள். தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரரின் ராஜ கோபுரங்கள். சங்கு தீர்த்தம். பெரிய குளத்தில் சென்னையின் அடிபட்ட சாலைகளில் தேங்கியிருக்கும் குட்டை போல நீர் கிடந்தது. குளத்தோர வறண்ட பிரதேசங்கள் குட்டிக் குட்டி கிரிக்கெட் மைதானமாகியிருந்தது. எதிலும் உச்சத்தில் இருப்பது எப்போதும் சுகம்தானே! கிறக்கத்தில் ரசித்துக்கொண்டிருக்கும் போது முதுகுக்குப் பின்னால் ”கிர்க்..கிர்க்...” என்ற சப்தம். திரும்பினால் இரண்டு வானரங்கள் கையில் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிச் சுற்றி வந்தது.

வேதகிரீஸ்வரர் நிறைவான தரிசனம். வெள்ளி நாகாபரணத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தரிசனம் கண்டவுடன் மலையேறிய அலுப்பு அறுத்துக்கொண்டு போனது. கர்ப்பக்கிரஹத்தில் வேதகிரீஸ்வரருக்குப் பின்னால் சோமாஸ்கந்தர் சிற்பம் இருக்கிறது. பூப்போட்டு வைத்திருந்தார்கள். “சோமாஸ்கந்தருக்கு தீபாராதனை காமிங்கோளேன்.. தரிசிச்சிக்கிறோம்...” என்று விண்ணப்பம் போட்டார் வீகேயெஸ். ஒரு தடவை தட்டைச் சுற்றினார். ”ஈஸ்வரா..” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டோம். பேண்டும் சட்டையுமாய் ஒரு இளைஞன் சத்தமாக திருமுறை படித்தான். திருத்தமான தமிழில். கற்சுவர்களில் எதிரொலிக்க சத்தமாக. தமிழ் வேதம் காதில் ஒலிக்க தீபாராதனை பார்த்தது கயிலையில் ஏறி ஸ்வாமி தரிசனம் பண்ணிய நிறைவைக் கொடுத்தது.

சர்க்கரைப்பொங்கல் நெய்வேத்தியம் பண்ணி வட்டமிடாத கழுகுகளுக்குப் பதிலாக பக்தர்களுக்குக் விநியோகித்துக் கொண்டிருந்தார் மொட்டையடித்த சிவநேயர் ஒருவர். யாவர்க்குமாம் ஒரு பச்சிலையில் வைத்துக் கொடுத்ததை ஓரத்தில் வைத்துவிட்டு ஃபோட்டோ பிடிக்க உட்கார்ந்ததில் ஏறிய போது சுற்றிச் சுற்றி வந்த குரங்கார் அவரது வயத்துக்கு எடுத்துக்கொண்டார். ஆஞ்சநேயருக்கு சிவப்பிரசாதம்.

சடசடவென்று இறங்கிவிட்டோம். “வாழ்க்கையிலும் சரி.. மலையிலும் சரி.. ஏற்றது கஷ்டம்... ஆனா ரெண்டுத்துலயும் இறங்கறது ரொம்ப சுலபம்.... மடமடன்னு இறக்கிவிட்டுடும்...” என்று ஜெயகமலாவிடம் தத்துவார்த்த ரம்பம் போட்டேன். ”ஹி...ஹி..” என்று சிரித்து சகித்துக்கொண்டார்கள். இறங்கிய இடத்தில் 1913, பிப்ரவரி மீ(மீயின் சுழியில் சாட்டையைப் போல இன்னும் ரெண்டு மூணு சுழி போட்டு) என்று தேதியிட்ட ஒரு சுவாரஸ்யமான கல்வெட்டு. சென்னை திருவட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையார் கோவில் வீதி 11வது நெ வீட்டிலுள்ள ம.வடமலை கிராமணி மனைவி ம. செல்லம்மாள்..... என்று யாரோ மலைக்கோயிலுக்கும் தாழக்கோயிலுக்கும் எழுதி வைத்த காலை சந்திக்கான நிவந்தம் ஒன்று. சிறுகதைக்கு தேறும் என்று எண்ணிய போது இரா. முருகன் சார் விஸ்வரூபத்தில் நாலைந்து அத்தியாயங்களை இதே திருக்கழுக்குன்றத்தில் மகாலிங்கைய்யனை வைத்துப் பின்னிப் பெடலெடுத்தது நினைவில் முட்டியது. அவரது புனைவில் வந்த மாட்டு வண்டி வருகிறதா என்று அனிச்சையாகத் தேடினேன். அவரது எழுத்தின் பலம்.

ராஜகோபுர வாசலிலிருந்து பார்க்கும் போதே பக்தவத்சலேஸ்வரர் சீரியல் பல்புகள் “சிவ..சிவ..” மினுக்க கடாட்சம் புரிய காத்திருந்தார். ஓதுவாரோடு உள்ளே நுழைந்தோம். ”மஹேஸ்வராய நம: சம்புவே நம: சசிசேகராய நம:” என்று சிவாச்சாரியார் வில்வார்ச்சனை செய்தார்கள். சிவமே.. சிவமே.. என்று மனம் குழைய சன்னிதியில் நின்றோம். சம்பந்தரின் ”தோடுடையானொரு...”வை ஓதுவார் கம்பீரமாக பாடினார். குரலில் வயது தெரியவில்லை. பிசிறில்லாமல் இருந்தது. மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரர் சன்னிதியிலும் ஒரு இளைஞர் பாடினார். சன்னிதிக்கு சன்னிதி இப்படி தேவாரமொலிக்கத் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஸ்வாமி சன்னிதி திருவலம் வந்தபின் கண்ணாடி போட்ட ஒரு பேழைக்குள் சங்குகள் வைத்திருந்தார்கள். “கடல்லதான் சங்கு பிறக்கும். இந்த க்ஷேத்திரத்தில சங்கு தீர்த்தத்தில் பன்னெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை சங்கு பிறக்குது. ரெண்டாயிருத்து பதினொன்னுல பிறந்தது இது...” என்று லேட்டஸ்ட்டை மேல் கண்ணாடியில் குத்திக் காட்டினார். “கும்பிட்டுக்கோங்க....”. உள்ளங்கையகல சங்கு அது. வெண்சங்கின் வளைவுகளில் இளஞ்சிவப்பு வரிகள் ரேகையாய் ஓடியிருந்தது. சங்கே முழங்கு!

மண்டபத் தூண்களில் உளி விளையாடியிருந்தது. சிலைகளுடன் பேச வல்லபா சென்ற போது நான் ஓதுவாரிடம் கொஞ்சம் ஸ்தல புராணக் கதை கேட்டேன். “இப்போ நீங்க பார்த்த சங்கு ரொம்ப விசேஷம். மார்க்கேண்டய மகரிஷி இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட பாத்திரமில்லாம தவிச்சப்ப... சிவபெருமானே சங்கு உற்பத்தி செஞ்சு தந்தாரு.. அதிலேர்ந்து பன்னெண்டு வருஷத்துக்கு ஒரு சங்கு இந்த சங்கு தீர்த்தத்துல பொறக்குது... சங்கு பொறக்கப் போவுதுன்னா குளத்துல குபுகுபுன்னு நுரை பொங்கும்... அதான் அடையாளம்.. நீங்க மலைக்கோயில்லேந்து பார்த்தேன்னு சொன்னீங்களே.... அந்தக் குளம் தான் சங்கு தீர்த்தம்..”

“இப்போல்லாம் கழுகு வர்றதில்லைன்னு கேள்விப்பட்டேன்...”

“ஆமாங்க.. ராமேஸ்வரத்துல ஸ்நானம் செஞ்சுட்டு திருக்கழுக்குன்றத்துல சாப்பிட்டுட்டு காசியில அடைக்கலம் ஆவும்னு கர்ணபரம்பரையா சொல்லுவாங்க.. சமீபமா வர்றதில்லீங்க.. பூசா விருத்தான்னு ரெண்டு முனிவருங்க சாபத்துனால கழுகா இங்க பறந்தாங்க... ”

”ராமேஸ்வரத்துலேர்ந்து காசிக்கு போற என்ரூட்ல கழுக்குன்றத்துல இறங்கி லன்ச்சா?”

சிரித்தார்.

”அந்தச் சுதைச் சிற்பத்தைப் பார்த்தீங்களா.. மணி வாசகப் பெருமான் தலைமேலே சிவபெருமான் கால் வச்சுக்கிட்டிருக்காரு பாருங்க..”

”ம்... இதுக்கெதாவது வரலாறு இருக்குங்களா?”

“ஆமா.. திருப்பெருந்துறையில மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீக்கை (தீக்ஷை) அருளினாரு... மணிவாசகப்பெருமான் சிதம்பரத்துல முக்தி அடையறதுக்கு முன்னாடி இங்க கழுக்குன்றில இன்னொரு தடவை தீக்கை அளிச்சாரு... அதை மணிவாசகப் பெருமானே குரு தரிசனம்னு திருவாசகத்துல ‘கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே...’ன்னு பாடியிருக்காரு.. கணக்கு இல்லாத திருக்கோலமாம்... ரெண்டு அர்த்தம் வருது.. ஒண்ணு... எண்ண முடியாம நிறையா திருக்கோலம்.. இன்னொன்னு அடிமுடி காண முடியாம கணக்கில்லாத உயரமா நின்ற திருவுரும்னும் அர்த்தம் வரும்.. ”

பெரியவரின் விளக்கம் நிறைவாக இருந்தது.

“இந்த தலத்துல ஈசன்கிட்டேயிருந்து சுந்தரருக்கு பொன் கிடைச்சுது..”

“சுந்தரர்தான் ஈசனோட கஜானாவைக் காலி பண்ணினவர் போல.. பொன்னார் மேனியனேன்னு ஐஸ் வச்சு காசு பார்த்தவர்.. காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளியில.. அப்புறம்.. முருக நாயனார் சரித்திரத்துல வர்ற திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்ல பொன் செங்கல்.. அப்புறம் விருத்தாசலத்துல பன்னீராயிரம் பொன் வாங்கி திருவாரூர் கமலாலய்த்துல எடுத்துக்கிட்டதுன்னு எல்லா இடத்திலேயும் சிவனை அரிச்சு அரிச்சுப் பொன் வாங்கி செலவு செஞ்சவரு... சிவனோட செல்ல பக்தர்...”

வாய் விட்டுச் சிரித்தார் ஓதுவார். “ஒண்ணுமே வேணாம்னு ஒரு துண்டோட திரிஞ்ச பட்டினத்தாரும் கழுக்குன்றத்தைப் பத்தி ’கழுக்குன்றிலீசா உயிர்த்துணை நின் பதமே’ன்னு பாடியிருக்காரு... அருணகிரியாரும் தேவேந்திரனின் அமராவதி மாதிரி அழகோடு விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளேன்னாரு திருப்புகழ்ல... ”

கலைவண்ணம் கண்ட சிலா ரூபங்களை கண்டு மகிழ்ந்த திருக்கோஷ்டியினர் சேர்ந்து கொள்ள திருவலம் வந்தோம். ஆர்வி வாய் திறக்காமல் சிவபக்தியுடன் வலம் வந்தார். திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதியில் பாலாலயம் செய்திருந்தார்கள். அத்தி மரத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து அலங்காரம் செய்திருந்தார்கள். திவ்ய தரிசனம். போன வாரம் திருவொற்றியூரில் திரிபுரசுந்தரி. இந்தவாரம் கழுக்குன்றில் திரிபுரசுந்தரி. புண்ணியம் செய்திருக்கிறோம்.

திரிபுரசுந்தரி சன்னிதிக்கு எதிரே பிரத்யக்ஷ வேதகிரீஸ்வரர் சன்னிதி. “மலைக்கு மேலே ஏற முடியாதவங்க இங்கேயே வேதகிரீஸ்வரரை தர்சனம் பண்ணலாம். மலையில இருக்கிற வேதகிரீஸ்வரரை இந்திரன் பூஜை பண்றான். மலைக்கோயில்கர்ப்பக்கிரஹம் சில சமயம் மின்னல் தாக்கிப் பொத்துப்போயிடும். அப்டி ஆகியிருந்தா அன்னிக்கி இந்திரன் வந்து பூஜை பண்ணியிருக்கான்னு அர்த்தம்.. மின்னல் தாக்கறதை ஊர்ல இருக்கிற என்னைப் போல சிலர் பார்த்திருக்கோம். மறுநாள் கர்ப்பக்கிரஹத்துக்குள்ள நுழையவே முடியாது.. அப்படியே தகிக்கும்...” என்று ஆச்சரியமான தகவலைத் தந்தார்.

நடன சபாபதி சன்னிதிக்கு வெளியே தூணில் வடித்துள்ள மஹிஷாசுரமர்த்தினி சிலா ரூபம் சிற்பவேலைப்பாட்டின் உன்னதம். அந்தப் பக்க தூண்கள் ஒவ்வொன்றிலும் ஒரு அற்புதம் காணக் கிடைத்தது. “பல்லவர் காலமோ?” என்று பெரியவரை வினவினேன். “உலகளந்த சோழபுரம்னு கல்வெட்டு இருக்கு... சோழர், பாண்டியர், பல்லவர்னு எல்லா காலக்கட்டத்திலும் கைங்கர்யங்கள் நடந்திருக்கு...கல்வெட்டுகள் இருக்கு... ” என்றார்.

கொடிமரமருகே நமஸ்கரித்து ஓதுவாருக்கு மன நிறைவுடன் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டோம். வெளியே இப்போது இருட்டியிருந்தது. சிவசிவவென்று மழை தூற ஆரம்பித்தது. இருபது நாற்பது என்று வண்டி வேகம் பிடிக்க சில நொடிகளில் ஊர் பின்னால் போயிருந்தது. சித்தமெல்லாம் சிவமயமாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது “அடுத்த வாரம் எந்த கோவில்ப்பா?” சின்னவள் கேட்டாள். அடுத்த வாரம்.....

#திருத்தல_யாத்திரை

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails