Tuesday, July 29, 2014

உடையாத ரகஸ்யங்கள்

மன்னையில் பாலு சார் வீட்டு டாக்டர் அங்கிள் (முத்து மாமா) தனது இடது கை கட்டை விரலை தானே வலது கையால் பிய்த்து எடுக்கும் மேஜிக் பண்ணுவார். பால்ய பருவத்தில் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார்ந்து கொண்டு டைனோசரே வாய்க்குள் டைவ் அடிக்கும்படி (。◕‿◕。) பார்த்துக்கொண்டிருப்போம். தாம்புக்கயிற்றால் தனது இரண்டுகையையும் சுற்றிக்கட்டிவிட்டு ஒரு அசால்ட்டான உதறலில் அவிழ்த்து மாயாஜாலம் காட்டுவார். கை தட்டுவோம். சீட்டுக்கட்டை கையொடிய தாறுமாறாகக் குலுக்கி ராஜாவாக மட்டும் படாரென்று உருவுவார். ராணியைக் கேட்டாலும் எல்லா பூவிலும் அதை மட்டும் சரசரவென்று உருவி ராஜாவுக்கு ஜோடியாகத் தரையில் வீசுவார். ”இங்க பார்றா...” என்று எங்கள் அனைவரின் விழிகளும் ஒருசேர மோதிக்கொண்டு பேசும். மீண்டும் கை தட்டல். எப்படி எப்படியென்று மூளை துருதுருவென்றிருந்தாலும் மெய்மறந்து ரசிப்போம். இதெல்லாம் வசீகரிக்கும் ட்ரிக். சரி! இந்தப் பாராவை அப்படியே தொங்கவிடுவோம்.

சனிக்கிழமை போரூரிலும் டிஎல்லெஃப்ஃபிலும் வாகனாதிகள் அதிகம் பயணிக்காமல் கூடு அடைந்திருந்தார்கள். சேப்பாயி சிரமமில்லாமல் ப்ரேக் கழுத்தை நெறிக்காமல் வழுக்கிக்கொண்டு ஓடினாள். நான் சுலபத்தில் வீடடைந்து ஆவி பறக்கும் கள்ளிச்சொட்டுக் காஃபியை சுடச்சுட உறிஞ்சினேன். இடது கை ரிமோட்டால் மூலையோர சோனிக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன். சானல் சானலாக தாவிக்கொண்டிருக்கும் போது ஏயெக்ஸென்னில் அழகிகள் உலவும் நிகழ்ச்சி கண்ணில் இடறியது. அதிர்ச்சியில் கை தடுமாறி சானல் மாறாமல் நின்றுகொண்டிருக்கும் போது அது ஒரு மேஜிக் ப்ரோக்ராம் என்று தெளிவாகி ஆசுவாசமடைந்தேன். “இது வரவேற்பறை தீதில்லை” என்று மூளை துரித செய்தியனுப்ப கண்ணெடுக்காமல் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆறடி நீள பொட்டிக்குள் பளபளக்கும் பட்டுத்துணிபோல ஒரு அம்மணியை படுக்க வைக்கிறார்கள். அந்தப் பொட்டியின் மேலே இன்னொரு ஆறடி நீள பொட்டியை சொருகிறார்கள். மேடையைப் பார்த்து உட்கார்ந்திருக்கும் மக்களுக்கு நேரேயிருக்கும் கதவுகளைச் சடார் சடாரென்று திறக்க இரண்டு பெண்கள் ஜெகன்மோகினி போல காலை நீட்டி அமர்ந்துகொண்டு கழுத்தை பெட்டிக்கு வெளியே நீட்டிக்கொண்டு பல்லைக் காட்டுகிறார்கள். மீண்டும் பெட்டியை மூடி மேலே தூக்கிவிட்டு இன்னொரு பெட்டியின் கதவை திறக்க ஏற்கனவே படுத்திருந்த பட்டுக்குட்டி “ஹாய்” சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறது.

மேற்படி சீனை மறுபடி போட்டு இந்த மேஜிக்கை நிகழ்த்துவது எப்படி என்று ரிப்பீட் காண்பித்து அசத்தினார்கள். மேலே சொருகும் பெட்டியின் மூடி நாற்பது பாகைக்கு வளைந்திருக்கிறது. கீழே இருக்கும் பெட்டியில் சொருகும் போது கிடைக்கும் ஒரு ஜான் இடைவெளிக்குள் ஏற்கனவே இருந்த பெண்பிள்ளை அடக்கமாகிவிடுகிறது. மீண்டும் தூக்கும் போது தலைகாட்டுகிறது.

இரண்டாவதாக பத்தடி இடைவெளியில் இரண்டு டவர்கள் போட்டிருக்கிறார்கள். ஒன்றில் ஏறி ஒரு பிகினி அழகியைக் கட்டிப்போடுகிறார் மேஜிஷியன். இன்னொரு டவரில் ஏறி அவர் ஒய்யாரமாக நின்று கொள்கிறார். கீழிருந்து வட்டமான ஒரு திரை கூண்டு போல மேலே ஏறி இரண்டு டவர்களையும் மொத்தமாக மூடுகிறது. அடுத்த நொடியில் பொத்தென்று திரை கீழே விழும் போது வலதுபுறமிருந்த டவரில் கட்டிப்போட்டிருந்த பெண்மணி இடதுபுறம் நின்ற மேஜிஷியனருகே கட்டிக்கிடக்கிறது. பார்ப்பவர்கள் திகைத்துப்போகிறார்கள்.

மேற்படி மேஜிக் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று அவர்கள் போட்டுக் காண்பிப்பதற்கு முன்பாக நான் சரியாக யூகித்திருந்தேன். அதுவேதான் நடந்தது. தெரிந்தவர்கள் கமெண்ட்டில் எழுதவும்.

அடுத்ததாக மேடையில் ஆறடி உசர சுவர் எழுப்பினார்கள். முகத்தில் பேய் மாதிரி வரிகள் இட்டுக்கொண்ட அயல்நாட்டு பிசி சர்க்கார் கையிலிருந்த முட்டையை அந்தச் சுவற்றில் விசை கொடுத்து அமுக்கினார். சுவர் லபக்கென்று முழுங்கிவிட்டது. சுவற்றுக்கு அந்தப் பக்கம் சென்று அதைத் தடவி முட்டையை உருவி எடுத்துக்கொண்டார். எடுத்த முட்டையை உடைத்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் மஞ்சள் கருவைப் போட்டு அந்த முட்டை ஒரிஜினல் என்று நிரூபித்தார். அடுத்து வந்ததுதான் ஹைலைட். அந்த சுவற்றின் ஒரு பக்கத்தில் அவரே நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளிவந்து சித்து வேலைக் காட்டினார். அவர் சுவற்றினுள் நுழையும் போதும் வெளிவரும் போதும் ஒரு திரை வைத்து லைட் ஃபோகஸ் செய்து நிழலாகக் காண்பித்து வேடிக்கை காட்டினார்கள். திரைமறைவில் நடக்கும் நாடகத்தை கேமிராவின் இன்னொரு கோணத்தில் காண்பித்து அதே மேஜிக்கைப் புஸ்ஸாக்கினார்கள்.

இப்படி காஃபி குடித்துக்கொண்டு வீட்டு சோஃபாவில் விஸ்ராந்தியாக உட்கார்ந்து பார்க்கும் போது இந்த ட்ரிக் புரிகிறது. நேரில் பார்க்கும் போது அந்த பிகினி அழகிகள் மேடையின் இந்தப்புறமும் அந்தப்புறமும் நடந்து கவனத்தைக் கலைக்கும் தருணத்தில் நிழல்மறைவாக சில காரியங்களை முடித்துவிடுகிறார்கள். ஆனால் இதிலும் பங்குபெறுபவர்களின் அசுர சாதகமும் கைதேர்ந்த தேர்ச்சியும் கழுகுப் பார்வையும் தொடர்வண்டி கோச்சுகள் போன்ற ஒருமித்த நிலையும் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

தொங்கிக் கொண்டிருக்கும் முதல் பாராவை இங்கே இழுப்போம். அந்த வயசில் லைவ்வாக பார்த்த சின்னஞ்சிறு வித்தைகள் கொடுத்த பொட்டி பொட்டியான சந்தோஷங்கள் இப்படி ஏயெக்ஸென்னின் “ப்ரேக்கிங் மேஜிஷியன்ஸ் கோட்” உடைத்த பொட்டிகள் மாதிரி “பச்” என்று மொச்சு கொட்டும்படி இல்லை. பொட்டி மேஜிக்கில் உள்ளூர நடக்கும் சங்கதிகளைத் தெரிந்து கொண்டால் அந்த ஜோஷ் இருப்பதில்லை. மன்னை கீழப்பாலத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது காடா விளக்கில் காட்டப்பட்ட தெரு மேஜிக்குகளும் அப்படியே கட்டிப்போட்டவைதான். ரகஸ்யங்கள் உடையாத வரையில் எதிலுமே அதீத சுவாரஸ்யமிருக்கிறது. கொண்டாட்ட வாழ்வின் ரகஸ்யமும் இந்த ரகத்தவைதான் என்று தத்துவார்த்தமாக இந்த வ்யாசத்தை முடித்துக்கொள்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails