Tuesday, July 29, 2014

வாக்களித்த வைபவம்

தம்பதி சமேதராய் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். இடது கை ஆட்காட்டி விரலில் மை வழிய எனக்கான ஆளை வோட்டிங் மெஷினில் காட்டிவிட்டேன். இருநூறு மீட்டருக்கு அந்தாண்டை டேபிள் சேர் போட்டு அமர்ந்து கொண்டு வாக்காளர்களுக்கான ”திடீர் உதவி” மையங்கள் முளைத்திருந்தன. அந்த டேபிளிலேயே அமர்ந்து ஒருவர் நாஷ்டா தின்றுகொண்டிருந்தார். ஏழு மணிக்கே சுறுசுறுப்பாக முதல் ஆளாய்ச் சென்று எங்கள் பகுதி வாக்கெடுப்பைத் தொடங்கி வைத்தார் என் அம்மா. அலமேலு. “தம்பி.. சீக்கிரம் போடா.. நம்ம தெரு பூத்ல கூட்டமில்லே... ஈஸிலேர்ந்து குடுத்த ஸ்லிப் போதும்.. எதுக்கும் வோட்டர் ஐடியும் கையில வச்சுக்கோ...” என்றச் சீரிய அறிவுருத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் பரிசளித்த புகைப்படம் அச்சடித்த வாக்காளர் சீட்டு இருந்தும் பாக்கெட்டில் வோட்டர் ஐடியோடு சென்றிருந்தேன்.

வாக்களிக்கச் சென்ற அரசுப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் முன்பே மூக்கிலால் குறுக்குமறுக்காகக் கட்டிச் சோதனைச் சாவடி போன்று தோட்டாதரணித்தனமாகத் தடுப்பு ஏற்படுத்தியிருந்தார்கள். வாக்காளர்கள் அனைவரும் சர்வ மரியாதையாக வரிசையாய்க் குனிந்து அந்தக் குச்சியைத் தாண்டி வாக்களிக்கச் சென்றது நமது ஜனநாயக ஈடுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக இருந்தது. ”எவ்ளோ பயபக்தியா ஓட்டு போடறோம்ல...” என்று மனைவியிடம் சிரித்தேன். ”ஐயே! அப்படியெல்லாமில்லை.. ஓட்டும் போடும் போதே குனிய வச்சுடுடறாங்க.. அதுக்கப்புறம் எங்க எந்திரிக்கிறது?” என்று எசப்பாட்டு படித்து தனது நுண்ணறிவை வெளிப்படுத்தினார்.

முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்று கன்னி வாக்காளனான எனது மருமான் Sabareesh Hariharan பூரித்துப் போயிருந்தான். ஓட்டளித்ததில் அவ்ளோ பெருமை! என்னிடம் “யாருக்கு ஓட்டு” என்று காலையில் ஆவலாய்க் கேட்ட அக்கம்பக்கத்தாரிடம் நான் யாருக்குப் போடப்போகிறேன் என்ன காரணம் என்று ஒரு “குட்டி மேடைப் பேச்சு” அளித்துவிட்டு உங்களுக்கு நியாயமானதை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்யுங்கள் என்று பிரஸ்தாபித்தேன்.

வாக்குச்சாவடி வாசலில் போலீஸ் பட்டாளம் காவல் காத்தது. உள்ளே வகுப்பறையெங்கும் பல பூத்துகள். பல பூத்துகளில் பல கட்சி பூத் ஏஜெண்ட்டுகள். சில பூத்து வாசலில் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம். ”ஃப்ளாட்கள் அதிகமாக இருக்கிற தெருக்களோட பூத்துகள் ரொம்பி வழியுது பார்...” என்று லாஜிக் சொல்லிக்கொண்டே சொற்ப வாக்காளர்கள் நின்ற எங்கள் தெரு பூத்தினில் பத்து நிமிடத்திற்குள் வாக்களித்து விட்டு திரும்பிவிட்டோம்.

திரும்பும் வழியில் தண்ணீர் தொட்டியைச் சுற்றிக் கட்டியிருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்த தள்ளாத வயது மாமா எழுந்திருக்க சிரமப்பட்டார். முனகினார். அழைத்துக்கொண்டு வந்த மாமி “சித்த தூக்கிவிடறேளா?” என்று உதவிக்கு அழைத்தார். கைகளைப் பிடித்து எழுப்பிவிட்டேன். “இவ்ளோ கஷ்டப்பட்டு ஓட்டுப் போடறோம்.. எதுனா செய்வாங்களா?” என்று சிரித்தேன். “இப்ப அமையப் போகும் சர்க்கார் செய்வாங்க சார்...” என்று முகத்தாமரை மலர்ந்து ஒருவர் செப்பினார். சுற்றிலும் நகரும் ஜனக் கூட்டத்தை பார்த்துவிட்டு அவருக்கு பதில் சொல்லாமல் பல்லிளித்துவிட்டு வந்துவிட்டேன். “அடுத்த தடவை ஓட்டுப் போட வருனான்னு தெர்யலை..” என்று ஈனஸ்வரத்தில் அந்தக் கால் முடியாத பெரியவர் முனகிக்கொண்டே சென்றார்.

ஓட்டளித்துவிட்டு அப்பாவின் நண்பர் எம்மார்க்கே மாமா எங்கள் வீட்டில் காஃபியை ருஜித்துக் குடித்துக்கொண்டிருந்தார். “என்ன மாமா? ஓட்டெல்லாம் போட்டாச்சா?” என்று சௌக்கியமா கேட்பது போல விசாரித்தேன். “ம்.. ஆச்சு..” என்றவரை “யாருக்கு போட்டேள்னு கேட்கமாட்டேன்.” என்று நமுட்டுச் சிரிப்புச் சிரித்தேன். “கையெழுத்துப் போடச்சொன்னா நிப்பை உடைச்சுப்புடுவான்கள்.... அது போல நிறைய பேர் நிக்கறான்கள்.. போட்ருக்கேன். பார்க்கலாம்.... யார் ஜெயிக்கறாளோ.. அவாளுக்கு ஓட்டுப் போட்ருக்கேன்னு வச்சுக்கோங்கோ...” என்று பதவிசாக நழுவிப் போனார். வாசலில் அவர் செருப்பை மாட்டும் போது துரத்திச் சென்று “எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி...ன்னு எம்பாட்டி சொல்லுவள்” என்றேன். ”ஹெஹ்ஹே...” என்று காவிப்பல் தெரிய சிரித்துவிட்டு சைக்கிளேறி பறந்துவிட்டார்.

ஓட்டு போட்டாகிவிட்டது. தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டேன். அதாவது தலை முழுகி விட்டேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails