Tuesday, July 29, 2014

சாகிற வயசில்லை!

நாற்பத்திரெண்டு வயசு ஒண்ணும் சாகிற வயசில்லை. “சார்! டேட்டா சர்வர்ல ஏற மாட்டேங்குது.” என்று ஈடிபி ஹரி என்னிடம் எப்பவாவது கேட்பதுண்டு. ஆபத்துசம்பத்துக்கு ஒத்தாசை செய்ததுண்டு. இரண்டு மாசங்களுக்கு முன்னால் பார்த்த பொழுது ஈர்க்குச்சியாய் இளைத்திருந்தார். ”உடம்புக்குத் தேவலாமா?” என்றதற்கு “தெனமும் டயாலிஸிஸ் பண்ணிக்கிறேன் சார். தேவலாம்” என்றபோது கண்களில் பயமும் உடம்பில் ஒருவித நடுக்கமும் தெரிந்தது.

அமைதியாய் இருந்த ஃப்ளாட்ஸில் ஃபர்ஸ்ட் ஃப்ளோர். ஹாலில் துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஃப்ரீஸர் பாக்ஸில் கிடத்தப்பட்டிருந்தார் ஹரி. மூலையில் தென் திசையைப் பார்த்து அகல் ஏற்றியிருந்தார்கள். கண்கள் திறந்தவண்ணம் இருந்தது. ரோஸ் கலர் டீஷர்ட்டில் உலவிக் கொண்டிருந்த பையன் “ம்.. சந்தியெல்லாம் பண்ணுவேன்” என்று யாரிடமோ பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். “எத்தனாவது படிக்கிறே” என்று தேய்ந்த குரலில் கேட்டேன். ”நைன்த்லேர்ந்து டென்த் போறேன்”. மிரளாமல் இருந்தான். வாழ்க்கையின் முரட்டுத்தனங்கள் இன்னமும் தீண்டாமல் என்னை தீர்க்கமாக பார்த்தான். ஃபிரீஸர் பாக்ஸைக் கட்டிக்கொண்டிருந்த ஹரியின் மனைவியின் கண்களில் சோகம் அப்பியிருந்தது.

”இந்தப் பையனையும் இக்குடும்பத்தையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று அந்த ஹாலின் சுவரோரமாய்ச் சாய்ந்து ஐந்து நிமிடங்கள் பகவானை உளமாற வேண்டிக்கொண்டேன். ஹாலைத் தாண்டிய மறைப்பிலிருக்கும் டைனிங் டேபிளிலிருந்து சாதத்தை பிசைந்து யாருக்கோ உள்ளே எடுத்துக்கொண்டு சென்றார் ஒரு அம்மணி. ”பிரேதத்தை எப்போ எடுப்பாங்க?” என்ற கவலையில் ஒரு எண்பது வயது பாட்டி கீழே இன்னொரு பாட்டியிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தெருவில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தேன். தூரத்தில் வறண்ட ஏரியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பையனின் நண்பர்களும் அதில் இருக்கக்கூடும். நாளைக்கு இவனும் விளையாடப்போகலாம். ”எங்கப்பா இந்த பேட் வாங்கிக்கொடுத்தாரு”ன்னு அவர்களில் ஒருவன் சொல்லும்போது இவனுக்குத் தொண்டையை அடைக்கலாம். எனக்கு இப்பவே ஒரு மோத்தா கோலிக்குண்டு சட்டென்று எழும்பித் தொண்டைக் குழியை அடைத்தது.

இதுவும் கடந்து போகும். ஸ்நானம் செய்தாகிவிட்டது. சரி.. ஒரு ரிசப்ஷனுக்குப் போகணும். ராத்திரி பார்க்கலாம். பை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails