Friday, August 19, 2016

சென்னையின் வரவேற்பு நாள்

சென்னைக்கு நேற்று கல்யாண வரவேற்பு நாள். கட்டியிருக்கும் எல்லா மண்டபத்திலும் திறந்திருக்கும் அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் ஓளிவெள்ளம் பாய்ச்சி கைகுலுக்கி வீடியோவுக்கும் ஃபோட்டோவுக்கும் சிரித்து, வெஜ். பிரியாணி, உருளை கறி, பூரி, கோபி மஞ்சூரியன் வயிறுபுடைக்கச் சாப்பிட்டுக் கூட்டம் சாலையெங்கும் நிறைந்து நகர்ந்துகொண்டிருந்தது. ஏற்கனவே சேப்பாயி இல்லாமல் நான் சென்னை வீதிகளில் லோல்படுவது இப்பேஸ்புக் சமூகம் அறிந்ததே!
ஊபர் மற்றும் ஓலா போன்ற சகாயத்துக்கு கார்ச் சேவையில் தன்னை அர்பணித்திருக்கும் கம்பெனிகள் முகூர்த்த நாட்களில் மூக்கு வேர்த்து 1.8x அல்லது 2.0x மடங்கு கூடுதல் கட்டணம் என்று வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். அது 1.5x க்கு இறங்கிவருமா என்று நாக்கைத் தொங்கப்போடுவதை விட நேரத்திற்கு செல்வது சாலச்சிறந்தது. பர்ஸை அவர்களிடம் முழுதாகக் கொடுத்துவிட்டு "அபிவாதயே" செய்து நமஸ்கரிக்கலாம் என்று திடசித்தப்படுத்திக்கொண்டு சவாரிக்கு இறங்கிவிட்டேன். பிரம்மச்சாரிகளுக்கு முன்பயிற்சி போலவும் கிரஹஸ்தர்களுக்கு ”அந்த நாளை” ஞாபகப்படுத்துவது போல ஜானவாசமாய் டாக்ஸி நகர்ந்தது. முன்னால் யாராவது மடிசார் மாமி தட்டு தூக்கிக்கொண்டு போகிறார்களா என்று எட்டிப்பார்த்துக்கொண்டே வந்தேன்.
"பாக்யதா லக்ஷ்மி பாரம்மா..." சாக்ஸஃபோனில் கத்ரி கோபால்நாத் வாசித்துக்கொண்டிருக்கும்...சாரி... சாக்ஸ் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது நானும் சங்கீதாவும் வேகுவேகென்று லீலா பேலஸுக்குள் நுழைந்தோம். We 2 were 2 late. அப்போதும் ஒரு பத்து பேர் ஜிகினாத்தாள் சுற்றிய கல்யாணப் பரிசோடு மணமக்களை வாழ்த்துவதற்கு வரிசையில் நின்றிருந்தார்கள். நிம்மதி.
ஐநூறு பேருக்கு மேல் கால் நீட்டி விஸ்ராந்தியாக உட்காருமளவிற்கு பிரம்மாண்டமான ஹால். நாற்காலிகளுக்கு கம்பீரமாக வெள்ளைச் சட்டைப் போட்டுவிட்டு தங்கக் கிரீடம் மாட்டியிருந்தார்கள். மேடையில் ஏறும் போது ஒவ்வொருவரையும் முன்னால் வந்து வரவேற்று மணமக்களுக்கருகில் சென்று அறிமுகப்படுத்தினார். "இவர் மேல ஒரு கண் வெச்சுக்கம்மா..." என்று சங்கீதாவுக்கு சிக்னல் கொடுத்தார்.
"வந்துகிட்டேயிருக்கேன்... லஸ் தாண்டியாச்சு... இன்னும் பத்து நிமிஷம்... அஞ்சு நிமிஷம்.. முக்கு திரும்பிட்டேன்.." என்று ரன்னிங் கமென்ட்டரி கொடுத்ததால் நண்பர்களுக்கு பசி வலுத்து டின்னரில் இருந்தார்கள். பரபரப்பாக இறங்கிவந்தால் ஹரிகிச்சு அஜ்ஜு சகிதம் வல்லபா, பிரமிள் ஆவி உள்ளே புகுந்த ஆர்வி, வாழ்ந்து போதீரேயை எழுதிக்கொண்டிருக்கும் முருகன் ஜி, தம்பதி சமேதராய், வாத்தியாரின் இளவல் ஜேயார் சார், கல்கி வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் அவரது மனைவியுடன் என்று குழுவாக இலக்கிய விசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இரும்பு அடிக்குமிடத்தில் ஈயாய் கொஞ்ச நேரம் படபடப்புடன் இருந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் யாரோ ஒரு நாகராஜு ஆசாரிக்குக் காசு கொடுத்து அவர் டிஃபன் வாங்கித் தின்றதை எழுதியிருந்தேன். அதையொத்த கதையொன்றை முருகன் ஜி ஒரு தேர்ந்த கதைசொல்லியின் பாணியில் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். என் கண் முன் விரிந்த காட்சிகள் உங்களுக்கும் தெரிய, இதை அவர் எதாவது ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு நாலு பக்கச் சிறுகதையாகவாது தரவேண்டும் என்பது அடியேனின் விருப்பம்.
தலைக்கு தொப்பியும் கையில் திருப்பியோடும் தயாராக இருந்த தோசை நளன் ஒருவர் பக்கத்தில் போய் நின்றதும் சுடச்சுட வார்த்துப் போட்டார். வெஜ். பிரியாணி அமோகம். வெங்காயத்தோடு காரத்தில் உருட்டிய உருளைப் பந்துகள். புஸ்ஸென்று பெருத்த பூரியும் அதற்குத் தொட்டுக்கொள்ள சாஹுவும். காய்கறி சாலட்டுகள், ஓரங்களில் டிசையனாய் வெட்டப்பட்ட வெள்ளரி, தயிர்வடை, ஆப்பிளுக்கு வெள்ளையடித்த சாலட்... ஒரு டயாபடிக்காரனுக்குக் கண்ணுக்கு எதெல்லாம் தெரியக்கூடாதோ அதெல்லாம் தட்டுப்பட்டது. ஒரு அறை முழுக்க டெஸர்ட் என்று "சீஸேம்" சொல்லி திறந்துவிட்டு அலிபாபா குகைப் போல இனிப்புச் சொர்க்கம் காட்டினார்கள்.
நேரம் விரைவாய்க் கரைந்து போக வெளியில் வந்தோம். நடுவில் கைபோட்டு மறைத்து பெரிய பெரிய பரிசுப் பெட்டிக் கொடுத்தார்கள். அதில் டிஆர்ரெஸ்ஜியின் அன்பும் சேர்ந்து கனத்தது. ராமகிருஷ்ணன் என்ற நண்பர் "ஃபேஸ்புக்ல உங்களோட போஸ்ட்டெல்லாம் படிப்பேன். அட்டகாசம்" என்று கைகுலுக்கி நெஞ்சார வாழ்த்தினார். பரிசுப்பெட்டியுடன் அந்த வாழ்த்துப்பெட்டியையும் வாங்கிக்கொண்டு திருப்தியாகத் திரும்பினேன்.
ஒரு அற்புதமான மாலைப் பொழுது!! மணமக்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்க!!

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பானதோர் மாலைப்பொழுது.

மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails