Showing posts with label அச்சு. Show all posts
Showing posts with label அச்சு. Show all posts

Thursday, September 16, 2010

பக்.... பக்.... சூப்பர் பக்...

இந்த பக் கடிப்பதற்கு முன்:
இது நான் எழுதி இரண்டாவதாக அச்சு ஊடகத்தில் வெளி வருவது. முன்னதாக ஒரு கதை, இப்போது இந்தக் கட்டுரை. தற்போது கடைகளில் கிடைக்கும் சூரியகதிர் இதழில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. நமது ப்ளாக் மக்களுக்காக இதோ...


bugbug

இந்தியா சுகாதாரத்துக்கு பேர் போன நாடு என்று அனைவருக்கும் தெரிந்த கதை தான். சாப்பிடும் இடத்திலேயே கழுவவும், கழுவின இடத்திலேயே படுத்துறங்குவதுமாக வாழ்க்கையை அசால்ட்டாகவும் அழுக்காகவும் கழிக்கும் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இந்தியாவில் விசேஷ மருத்துவம் செய்துகொள்ள படை படையாய் வெளிநாட்டிலிருந்து வெள்ளை, சிகப்பு, கருப்பாக அனுதினமும் வந்திறங்குகிறார்கள். என்னதான் இத்திருநாட்டின் வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு மருத்துவ வசதிவாய்ப்புகள் மங்கலாக இருந்தாலும் வெளிநாட்டவருக்கு இங்கே செய்து தரப்படும் வசதிகள் தாராளம் தான். படுக்கையில் லாவண்டர் வாசனையோடு குளிர் சாதன வசதி பொருத்தப் பட்ட டீலக்ஸ் அறைகள் எல்லா கார்பொரேட் மருத்துவமனைகளிலும் அந்நிய நாட்டவர்க்கு அப்போதே தயார் நிலையில் உள்ளன. இன்பச் சுற்றுலாவிற்க்காக குடும்பம் குட்டியோடு நாம் வெளிநாடு சென்றால் அவர்கள் மருத்துவச் சுற்றுலாவிற்க்காக இந்தியா வந்து ஆஸ்பத்திரி வாசலில் இறங்குகிறார்கள்.

இப்படி இருதயமோ, கை கால் மூட்டு சிகிச்சையோ, குடல் கல்லீரல் போன்ற உடலுறுப்புகளில் கோளாறுகள் இருப்பவர்கள் தங்கள் வியாதிகளை சொஸ்த்தப்படுத்திக்கொண்டு லண்டன் திரும்பியவுடன், சிலரை அந்நாட்டு உள்ளூர் வைத்தியர்கள் பிடித்து சோதனை செய்து இவர்களுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு "பெப்பே" காட்டும் ஒரு வித அடங்காப்பிடாரி உயிர்மம் வளர்வதாக ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். கைக்காசையும் பர்சையும் பதம் பார்க்காமல் எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வரும் இந்த வெள்ளைக்கார ம.சுற்றுலா பயணிகளின் மூலமாக இந்தியாவிற்கு வரும் வருமானத்திர்க்கு இந்த ஆய்வு முடிவுகள் பெரிய ஆப்பு வைத்திருக்கிறது.

இந்த Super Bug - கிற்கு நாமகரணம் சூட்டியிருப்பது பற்றி லண்டன் கார்டிஃப் பல்கலைக்கழக ப்ரோஃபசர் வால்ஷ், "எந்த ஊரிலிருந்து இது பிறந்து பரவுகிறதோ அந்த ஊரின் பெயரை இந்த கிருமிக்கு வைப்பது முறையே" என்று நாம் சிதம்பரம், பழனி, டில்லி பாபு என்று பெயர் வைப்பது போன்று கூறுகிறார். 1997 ல் Verona Integron encoded metallo-beta-lactamase 1 (VIM1) என்று பெயர் கொண்ட உயிர்மம்  இத்தாலியின் வெரோனா நகரத்திலிருந்து புறப்பட்டது. The German Imipenemase1 (GIM1) என்ற இந்த பாக்டீரியா 2002 ல் ஜெர்மனியிலிருந்து உலகத்திற்கு இறக்குமதி ஆயிற்று. அதுபோல இந்த சூப்பர் பக் (Super Bug) எனப்படும் இந்த உயிர்மத்திர்க்கு New Delhi metallo-beta-lactamase, or NDM-1 என்று நம்நாட்டின் தலைநகர பெயரை இணைத்து இட்டிருக்கிறார்கள். இந்த NDM-I சுய உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் மிக ஸ்ட்ராங்கான ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கூட வேலை செய்ய விடாமல் செயலிழக்க செய்துவிடும் என்கிறார்கள். இன்னொரு தொல்லை என்றால் மற்ற பாக்டீரயாக்களுடன் தோளில் கை போட்டு தோழமை கொண்டு அதனோடும் ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுமாம்.
 
 இது ஒரு தொற்று வியாதி. ஒருவருக்கொருவர் உடலால் உரசிக்கொண்டால் இது பட்டென்று மற்றவருக்கு தொற்றிக்கொள்ளும். வழக்கமான ஜுரம், குமட்டிக்கொண்டு வருவது, உடம்பு முழுக்க சிறு சிறு சிவப்பு கொப்பளங்கள் தென்படுவது, நல்ல காய்ச்சல் போன்றவை பொதுவாக இந்த வியாதியின் அறிகுறிகளாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். சில கேஸ்களில் இது H1N1-ஐ விட பன்மடங்கு வீரியம் மிகுந்ததாக இருக்கிறது என்றும் கருத்து நிலவுகிறது. உடலில் இந்த நோய் தீவிரமடைந்தால் ஒவ்வொரு உடலுருப்பாக செயலிழந்துகொண்டு வந்து முடிவில் இந்நோய் தாக்கியவருக்கு வெகுவிரைவில் மரணம் சம்பவிக்கலாம் என்று இந்நோயின் வீரியம் மற்றும் தீவிரம் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆனால் சில விஷயாதி இந்திய மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்நீச்சல் போடும் பாக்டீரியாக்கள் முதன் முதலில் பெனிசிலின் கண்டுபிடித்த 1940 ம் வருடத்திலிருந்து நடக்கும் விஷயம்தான் என்று தெகிரியமாக சொல்கிறார்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே இது போன்ற பாக்டீரியாக்களின் கொட்டத்தை அடக்க உதவும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு மற்ற தேசங்களைவிட பத்தில் ஒரு பங்குதான் என்று பல புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்ந்த மருத்துவர்கள், உடனடி கவனிப்பு, தேர்ச்சி பெற்ற நர்சுகள், சகல வசதிகளும் கூடிய மருத்துவமனைகள் என்று மருத்துவத் துறையின் அணைந்தது பிரிவுகளிலும் கொடி கட்டி பறக்கிறது இந்தியா. இதோடு மட்டுமல்லாமல் மருத்துவத்தோடு கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் என்று பலவழிகளிலும் சுற்றுலா வரும் பன்னாட்டவரையும் கட்டி இழுக்கிறது நம்நாடு. 2008-ல் ஒரு ஸ்வீடன் தேசத்தவருக்கு இந்தியாவில் நடந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்டபோது கண்டுபிடித்த இந்த பாக்டீரியாவிற்கு நம் தலைநகரத்துடன் சேர்த்து இந்தப் பெயர் வைத்துவிட்டார்கள். இதற்கிடையில் சமீபத்தில் ஜப்பானில் NDM-I பாக்டீரியா தாக்கிய ஒருவரை விரட்டி கண்டுபிடித்திருக்கிறார்கள்.


பல உலக நாடுகளின் அலறல்களை செவிமடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த ஆட்கொல்லி பாக்டீரியாவை எதிர்த்து உலக நாடுகள் போராடவேண்டும் என்றும் அதற்க்கான நடவடிக்கையில் முழுமூச்சில் இறங்க வற்புறுத்தி உள்ளது. எல்லா நாடுகளும் கீழ்காணும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு பணித்துள்ளது.
  1. அயராத தொடர் விழிப்புணர்வோடு கூடிய கண்காணிப்பு
  2. தேவைக்கேற்ற அளவு ஆன்டிபயாடிக் உபயோகம்
  3. மருந்து சீட்டு இல்லாத ஆன்டிபயாடிக் விற்பனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை
  4. ஆஸ்பத்திரிகளில் நோய் தொற்றாவண்ணம் சுத்தமாக கை கழுவுதல் போன்ற செயல்கள் முழு உறுதியுடன் பின்பற்றப்படவேண்டும்.
நம் நாட்டு விஞ்ஞானிகள் இந்த பாக்டீரியா சாம்பிளை வெளிநாட்டுக்கு (தி லான்செட் என்ற மருத்துவ இதழ்) அனுப்பி உள்ளூர் அரசியல்வாதிகளால் நன்றாக சூடு பட்டுக் கொண்டார்கள். பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த Super Bugஐ அழிப்பதற்கு கிட்டத்தட்ட மருந்து கண்டுபிடித்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறார்கள். பெண்கள் பார்த்து "அயய்யே.." என்று அலறி ஓடும் கரப்பான் பூச்சிகளில் மூளையும், நரம்பு மண்டலமும் சேர்ந்து அமைக்கும் ஒன்பது மாலிகுயூல்கள் இந்த வியாதிக்கு எமனாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆராய்ச்சி தொடர்கிறது.

நன்றி சூரியகதிர். அட்டகாசமாக படம் போட்ட சூரியகதிர் வரைகலை நிபுணருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஸ்பெஷல் பின் குறிப்பு: நான் வெள்ளை கோட் மாட்டிய டாக்டர் அல்ல. எப்பயாவது வெள்ளை சட்டை போடும் என்ஜினியர். பல இடங்களில் படித்து தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே கட்டுரையாக பகிர்ந்தேன்.

Wednesday, September 1, 2010

நானும் ஒரு எழுத்தாளி

நாய் சேகர் வடிவேலு போலீஸ் ஜீப்பில் அழும்பாக தொற்றிக்கொண்டு, "யே நானும் ரௌடிதான்யா.." என்று அழுக்கு கோட்டு போட்ட அரை பாடியை வெளியே காட்டி தொங்கிக்கொண்டு கையாட்டி டேசனுக்கு புறப்பட்டதை போல இந்த டைட்டிலை எனக்குள்ளே ஒன்றிரண்டு முறை படித்துப் பார்த்தேன். அட. அசல் அப்படியே இருக்குதுப்பா.  இந்த நாய் சேகர் உதாரணத்தையும் பிரபல எழுத்தாளர்கள் இணையத்தில் கட்டி உருண்டு புரண்டு சண்டை இடுவதையும் யாரும் கனவில் கூட சம்பந்தப்படுத்தி பார்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடைய ராட்ஷச ஷாப்பிங் என்ற சிறுகதை இவள் புதியவள் என்ற பத்திரிக்கையில் இந்த மாதம், அதாவது செப்டெம்பர்  2010 இதழில் வெளிவருகிறது. சூரியகதிர் என்ற அரசியல் மாதமிருமுறையின் பெண்களுக்கான பத்திரிகை இவள் புதியவள். எடுத்தவுடனேயே ஒரு மகளிர் பத்திரிக்கையில் என் கதை இடம் பெறுவது நான் செய்த பாக்கியமே. தாய்க்குலங்களின் பேராதரவுடன் வெற்றி நடை போடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, உங்கள் வாழ்த்துக்களுடனும் தான். என் கதைக்கு ஒரு ஓவியரை வைத்து இரண்டு படம் போட்டு.....இரண்டு பக்கத்துக்கு... என்னமோ நடக்குது..
 
கதை பெயரில் தர்மபத்தினி பெயரை சேர்த்து சங்கீதா ஆர்.வி.எஸ் என்று பயபக்தியோடு ஆரம்பித்திருக்கிறேன். நம்முடைய ஞான சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி எல்லாமே அவங்கதான். (அப்பாடி! முடிஞ்ச வரைக்கும் ஐஸ் வச்சாச்சு.. இனிமே "இந்த உலகத்தோட ஒட்டுறவே இல்லாத மாதிரி எப்பப்பாத்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே காலத்தை கழிங்க..." என்கிற இடி இருக்காது என்ற நம்பிக்கையில்...).  கூட்டத்துல யாராவது வாத்தியார் சுஜாதா அப்படின்னு பேர் பெற்றார் என்பதற்காக இவன் சங்கீதா என்று வைத்திருக்கிறான் என்று நினைக்காதீங்க. இது சும்மா ஒரு ட்ரை. பாடப் பாட ராகம் மாதிரி, எழுத எழுத ஏதோ வர மாதிரி ஒரு நினைப்பு. பார்க்கலாம். இதோ அந்த அச்சில் பதிந்த பக்கங்கள்..

shop1

shop2

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எனக்கு முதலார்வம் ஊட்டிய அலுவலக நண்பர் ரவி, சதா சர்வ காலமும் வீட்டில் கணினி முன் அமர்ந்த போதும் பொறுமையாக சகித்துக்கொண்ட என் மனைவி மற்றும் மக்கள், அடிக்கடி பின்னூட்டமிட்டு தெம்பூட்டிய அனைத்து பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பின் குறிப்பு: அச்சு ஊடகத்தில் எழுத ஆரமிச்சாச்சு. நாட்டு மக்களை இனிமேல் ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails