Friday, November 15, 2013

ரோல் மாடல்!

”நீ மாமா.. நீ மாப்ளே... ” என்று விஜய் டிவியில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துப் பாடியபோது மொத்த அரங்கமும் கரகோஷித்தது. தத்தம் வீட்டு சோஃபாக்களில் சாய்ந்து கொண்டு காலாட்டி ரசிப்பவர்களுக்கும் தீப்பொறி பட்ட கேஸ் அடுப்பு போல பக்கென்று அந்த சந்தோஷம் பற்றிக்கொண்டது. அதில் பாடிய திவாகர் என்பவரின் ப்ரொஃபைல் AV ஒன்றைத் திரையில் காட்டினார்கள். இதைப் பார்க்காமல் விட்டவர்கள் விஜய்டிவியின் யூட்யூப் பக்கத்தில் பகிரும்போது ஓசியில் ஆஃபீஸிலோ அல்லது குடும்பத்தினர்களை சுற்றி உட்கார வைத்துக்கொண்டு வீட்டிலேயோ பார்ப்பதற்கு பரிந்துரைக்கிறேன்.

பரம்பரையில் சங்கீதத்தின் வாசனையே தெரியாத ஒரு தினக்கூலி குடும்பத்தில் பிறந்து, சைக்கிளில் தண்ணீர் கேன் போட்டு, இராத்திரிகளில் பால் வண்டி ஓட்டி படித்து, தன்னுடைய அப்பா[கொத்தனார் வேலை செய்கிறார்], அம்மா[சித்தாளோ, பெரியாளோ], அண்ணனின்[லேத்தில் பணி புரிகிறார்] தியாகத்தினாலும் பாசத்தினாலும் மேடையேறிப் பாட வந்திருப்பதைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரக்கனுடைய மனதையும் அசைக்கும் நிஜம்! மெய் சிலிர்க்கிறது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.

உள்ளங்கையில் வைத்துத் தாங்கி, கண்ணுக்கு கண்ணாக வேளாவேளைக்கு இன்னமுது ஊட்டி, ”என்ன வேணாலும் வாங்கிக்கோ ராசா..” என்று எல்லாக் கடையிலும் பல சலுகைகள் காட்டினாலும் எவ்ளோ தூரம் முன்னுக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஸ்வயம்மை சுட்டெரிக்கும் தீராத கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

ஒருக்கால் அத்தியாவசியத் தேவைகள்தான் மனிதனின் வெற்றிக்கு அச்சாரம் போடுகிறதோ? வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தியானவன் அந்த திருப்தி சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்க மனதிருப்பதில்லையோ? நீதிபதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பின்னணிப் பாடகி சுஜாதாவின் மகள் வெளிப்படையாகச் சொன்னார் “உங்களை நான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளப்போகிறேன்” என்று. நானும் அதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் அனைவரும் பார்க்க வெட்ட வெளிச்சமான சபையில் ஒளிபரப்பிய விரகதாப ”பொன்மேனி உருகுதே”வினால் [பார்க்கவேண்டிய, கேட்கவேண்டிய வயதினர்க்கு அது அற்புதமான பாட்டு என்பதில் வேறு கருத்துக் கிடையாது. ஜானகியின் டெலிவரியும் எக்ஸ்ப்ரஷன்ஸும் எக்ஸ்ட்ரார்டினரி! ] தீட்டுப்பட்டச் சேனலுக்கு திவாகரின் இன்றைய வெற்றிப் புராணத்தால் புண்ணியாவசனம் செய்துகொண்டார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

வாழ்க!

கேஜே! ஜேஜே!

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோகா செய்யும் நுட்பத்தோடு பாடலில் கவனத்தைச் செலுத்தினேன். “மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்..... மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்” என்று தேனாய் காதில் விழுந்தது. இன்பம்! இன்பம்! செவிக்கின்பம். மனதிற்கின்பம். எதற்காக ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் என்பது பின்வரும் இரண்டு பாராக்களில் இருக்கிறது.

கர்மபலனில் நம்பிக்கையில்லாத பத்து பேரைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து, காலையிலோ மாலையிலோ சென்னையின் பீக் ஹவர் ட்ராஃபிக்கில் காரோட்டச் சொன்னால், வண்டியை விட்டு இறங்கியவுடன் மட்டையாய் மடங்கிய காலோடு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று துண்ணூறு போட்டுக்கொண்டு பயபக்தியுடன் ”இனி பிறத்தியாரை இம்சிக்கமாட்டேன்” என்று சங்கல்பம் செய்துகொள்வார்கள். போன ஜென்மத்தில் சவாரியில்லாத ஆட்டோவாய் பிறந்து நடு ரோட்டில் நடைவண்டியாய் பயணித்து படுத்தியிருப்பதன் பலனாக இப்படி அவதியுறுகிறேன் என்றும், அந்தப் பிறவியிலும் கர்ப்பஸ்த்ரீகள் ஆஸ்பத்திரியில் சென்று பிரசவிக்குமாறு சௌகரியமாக ஓட்டியதால் அட்லீஸ்ட் சென்னையிலாவது இருக்கிறேனாம். இல்லையென்றால் பெங்களூருவில் கார் ஓட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஐம்பது நிமிடங்கள் உருட்டி உருட்டி பணிஷ்மெண்ட்டாகக் கடக்கும்படி உத்தரவாகியிருக்குமாம். இவ்வாறு யாரோ மூளைக்குள்ளிருந்து எச்சரிக்கை ஓலமிட்டார்கள்!

சேப்பாயி தன் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் வெள்ளத்தில் உயிர்பிழைக்க நீந்திக்கொண்டிருக்கும் போது ”நகராச்ச்சியில...” என்று காதை அறுத்துக்கொண்டிருந்த ஒரு எஃப்பெம் சானலிலிருந்து விடுபடுவதற்கு டாஷ்போர்டிலிருந்த சிடி பௌச்சை பலங்கொண்ட மட்டும் வெறியுடன் இழுத்தேன். தற்கொலைக்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு க்ளைமாக்ஸில் தன்னைத் தூக்க வந்த ஹீரோவிடம் மேஜை ட்ராயரைத் திறந்து தனது லவ் டாக்குமெண்ட்களைக் காட்டும் உயிர்க் காதலியைப் போல இடது கையால் தட்டுத் தடுமாறி பௌச்சின் ஜிப்பைத் திறந்து ஒரு ஸிடியை எடுத்து ப்ளேயரின் வாயில் காணிக்கை போல உள்ளே தள்ளினேன். ரேடியோவின் கழுத்தை முறித்துவிட்டு அந்த க்ஷணமே ஸிடி பாட ஆரம்பித்தது. இதற்கப்புறம் முதல் பாராவில் படித்துவிட்டீர்கள். மேலே படியுங்கள். அதாவது கீழே படியுங்கள்.

இப்போது இருபுறமும் சேப்பாயியைக் கட்டி ஏறுகிறார்கள். கரையை உடைத்துச் சுழித்துக் கொண்டு வரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஆட்டோக்களும் மாநகர பேருந்துகளும் இருமருங்கும் அணைக்கின்றன. இங்கே ”இளநீரும் பாலும் தேனும்... இதழோரம் வாங்க வேண்டும்..” என்று ஸ்வரம் ஸ்வரமாய் இழுத்த வயலின்களுக்குப் பின்னர் காதுகளில் இழைய ஆரம்பித்திருந்தது. கல்லூரியில் படிக்கும்போது(?!) வீட்டிற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது சுமாராய் இருந்த தாவணி ஒன்று ஏறியதும் இந்தப் பாட்டு தலைக்கு மேலே ஒலிக்க ஆரம்பித்தது. எதற்கோ அந்தப் பெண் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு ஜன்னல் வழியாக வாய்க்கால் வரப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது. அபாண்டமாக நீங்கள் இப்போது பழி சொல்வீர்கள் என்று அப்போதே அது இறங்கும் போது என்னைப் பார்க்கவில்லை. தெய்வீகராகமோ!!

இந்த உன்மத்த மனோ நிலையில் க்ரேனே பின்னால் வந்து காரை அலேக்காகத் தூக்கியிருந்தால் கூட பாடல் சுகத்தில் பட்டமாய்ப் பறக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். பாடல் பாதி நினைவுகள் பாதி என்னை போதையூட்ட வாகன வெள்ளத்தில் சேப்பாயி அதன் போக்குக்குக் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. ”கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ.. உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ...” என்று காதலைக் கரைத்துக் காதுகளில் ஊற்றிக்கொண்டிருந்த என் ஸிடி ப்ளேயரை அஃறிணைப் பொருளாகப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. டெல்லிவாழ் ராஜபுத்திரர்கள் யாரவது சென்னை வந்து திரும்புகிறார்கள் என்ற சாக்கை வைத்துப் போக்குவரத்துக் காவலர்கள் ஒரு அரைமணி அப்படியே நம்மை நிப்பாட்ட மாட்டார்களா? திரும்பத் திரும்ப இதையே ரிப்பீட்டில் கேட்கமாட்டோமா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

சற்றுநேரத்தில் ”பெண்மையின் இலக்கணம் அவளது வேகம்..” என்ற வரிகள் வரும் போது ஹோண்டா ஆக்டிவாவில் ஒரு பெண் சரேலென்று விரைந்து சென்றாள் என்று இப்போது எழுதினால் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் பழிப்பீர்கள். சரிதான்! அப்படியாரும் அந்த வரி வரும்போது செல்லவில்லை. ஆனால், “முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி” பாடும் போது ஸ்கூட்டியில் விரைந்தது கண்ணைத் தவிர மொத்தமும் மூடிய ஒரு மாது.

”மதுவின் குடத்தை மடியில் நீ மறைத்து வைத்த மலரோ...” என்று குழையும் போது நமக்கும் ஜில்லென்று சிறகடித்துப் பறந்தது நினைவுகள். ”விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்.. தொடங்கு கண்ணா புதிய பாடம்...” கதறக் கதற காதலைச் சொட்டும் பாடல்களால் சேப்பாயியின் அங்கமெல்லாம் நனைந்துவிட்டிருந்தது. எனக்கு ஜுரம் எடுத்துவிடும் அபாயமிருந்தது. காதல் ஜுரமல்ல! இப்படி ஒன்றல்ல இரண்டல்ல... நிச்சயம் பத்துக்கு மேல் பாடல்கள் கடந்திருக்கும். காது கொடுத்துவிட்டு கண்டபடி கரைந்துகொண்டு வண்டியோட்டிக்கொண்டிருக்கிறேன்.

“இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம்..யோகம்...” என்று அனாயாசமாக பாடிக்கொண்டிருந்தார் அவர். இந்த வியாசத்தை இப்படியே நான் முடித்துவிடப்போகிறேன். ஆனால், நீங்கள் இரட்டை மேற்கோளில் இதில் எழுதியிருக்கும் பாடல்கள் எவையெவை என்றும் பாடியவர் யாரென்றும் இசையமைத்தவர் இன்னாரென்றும் ஆராய்ச்சியில் இறங்கப்போகிறீர்கள். தெரிந்த பாடல்களை கமெண்ட்டில் எழுதுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் தூங்கப் போகிறேன். காதுகளில் கேஜே..... ஸாரி! தூங்கிவிட்டேன்.

ஆணா? பொண்ணா?

ஊர்க்கோடியிலிருக்கும் சிவன் கோயில் பிரகாரத்தில் தேமேன்னு உட்கார்ந்து உண்டி வளர்த்து உயிர் வளர்த்துக் காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார் அவர். யாரோ ஒரு ஆன்மிக ப்ரமோட்டர் போகிற போக்கில் “இவருக்கு அதீத சக்தியிருக்குப்பா. சொல்றதெல்லாம் அப்டியே நடக்குது...இருவத்தஞ்சு வருஷமா புள்ளையில்லாத எங்கூரு பண்ணையாருக்கு இவரோட ஆசீர்வாதத்தால புத்திர பாக்கியம் கிடைச்சுடுச்சு..” என்று சொல்லி நமஸ்காரம் செய்துவிட்டு மக்களுக்குக் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் நிச்சயமாக சாமியார் கிடையாது. பிரகாரத்திலிருந்தாலும் ப்ளாட்ஃபாரத்திலிருந்தாலும் ஜவ்வாதும் குங்குமமும் மணக்க மணக்க பார்க்க பந்தாவாக இருப்பார். கொஞ்சூண்டு மழுமழு வெள்ளைக் கன்னங்களின் பளபளப்புக்கு நடுவே வெண் நிற தாடி ஒரு முழம் நீளத்திற்கு வளர்த்திருப்பார். வலது கையால் தாடியை உருவிக்கொண்டே வேதாந்தமாக அள்ளி வீசும்போது ரிக், யஜுர், சாம அதர்வணங்களை ஒரு 200ML ஹார்லிக்ஸ் டம்பளர்ல அடக்கிக் கரைச்சுக் குடிச்சுட்டாரோன்னு என்னை மாதிரி அஞ்ஞானிங்க அப்படியே வாய் பொளந்துடும்.

”பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஆம்பிளைப் புள்ளை பொறக்கும்னு சொன்னாரு.. அப்படியே பொறந்துச்சுடி.” என்று கண்ணாலேயே ஸ்கேன் செய்து சொன்னது போல அவ்வூர் மக்கள் அதிசயப்பட்டு அவரிடம் கருவுக்குள் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா என்று அறியும் ஆர்வத்தில் லைன் கட்டி நின்று ஆரூடம் பார்த்துக்கொண்டது. கூட்டம் வளர வளர தாக்குப்பிடிக்க முடியாமல் பக்கத்தில் ஒரு அஸிஸ்டெண்ட் வைத்துக்கொண்டார் அவர்.

சனி ஞாயிறுகளில் சன்னிதிகளில் இருக்கும் பக்தர் கூட்டத்தை விட இந்த பித்தர் கூட்டத்தால் பிரகாரம் நிரம்பி வழிந்தது சிவன் கோயில். ஒரு ஐந்தாறு மாதங்கள் சென்றது.

“நீங்க சொன்னது தப்பு” என்று ஒரு ஆள் கோபத்தோடு எரித்துவிடும்படி உள்ளே பிரவேசித்தான்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் எந்தவித பரபரப்பும் காட்டாமல் சிரித்துக்கொண்டே அஸிஸ்டெண்ட்டைப் பார்த்து “அந்த நோட்புக்கை எடுத்து வாப்பா..” என்று அருட் பார்வையுடனும் கருணாமூர்த்தியாகவும் கேட்டார்.

நோட்புக் வந்தது.

”நீ என்னிக்குப்பா வந்தே?”

“இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை”

பரபரவென பக்கங்களைப் புரட்டினார்.

“உன் பேர் என்னப்பா?”

”அறிவுடையநம்பி”

“உங்கிட்ட என்ன குழந்தைன்னு சொன்னேன்”

“ஆம்பிளை”

“உனக்கு என்ன பொறந்துருக்கு...”

“பொம்பளைப் பிள்ளை”

”இந்த நோட்டைப் பாரு.. நான் என்ன எழுதியிருக்கேன்னு”

அங்கே அட்சர சுத்தமாகப் ”பெண்” என்று எழுதியிருந்தது.

கோயிலேறி கேள்வி கேட்டவனுக்கு பகீரென்றது. நாம மறந்துட்டு இவரைத் தப்பாச் சொல்லிட்டோமோ என்று குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்ளமுடியாதவனைப் போல “சாரிங்க...”ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவர் அவன் போன திசையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். அஸிஸ்டெண்ட் வியந்தார்.

இந்த டெக்னிக் எப்படி என்று உங்களுக்குப் புரிந்ததா?

ஆயிரத்தெட்டு விளக்குகள்!

ஒன்றிரண்டு ஆடவர்கள் சட்டை, டீஷர்ட்டுகளைக் கழற்றிக் கக்கத்திலிடுக்கிக் கொண்டும் இடுப்பில் அங்கவஸ்திரமாகச் சுற்றித் துணிக் கையிரண்டையும் இடுப்பைச் சுற்றி முடிந்து கொண்டும் உள்ளே நுழைவது தூரத்திலிருந்தே கண்ணில்பட்டது. இன்னும் கொஞ்சம் நெருங்கியவுடன் துவஜஸ்தம்பத்துக்குப் பின்னால் மாட்டியிருந்த போர்டில் ”OM NAMO NARAYANA” என்று சிகப்பிலும் ”ஓம் நமோ நாராயணா” என்று பச்சையிலும் புள்ளிப் புள்ளியாய் டிஜிட்டல் எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒரே சீராக அங்கப் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தன. நெற்றியில் விபூதித் தீற்றலோடும் கொக்கி முதுகோடும் மேனியெங்கும் பக்தியோடும் நின்ற பாட்டியொருத்தி படியருகிலிருந்தே கைகூப்பிக்கொண்டிருந்தாள்.

சேப்பாயியை ரோட்டை விட்டு இறக்கி நிறுத்திவிட்டு நங்கைநல்லூர் குருவாயூரப்பன் கோயில் வாசற்படியில் நின்று என் சட்டையைக் கழற்றும் போது குத்துவிளக்குகளின் தீப ஒளியில் கர்ப்பக்கிரஹத்திலிருந்து குட்டிக் க்ருஷ்ணன் க்யூட்டாகக் காட்சியளித்தார். மேலே கழட்டாமல் சென்ற ஒரு பொடியனை “யே! ச்ச்சட்டையை கழட்டோ” என்று யானை பிளிருவது போலக் குரல்விட்டார் கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஒரு ஆகிருதியான மாமா. அவன் நடுநடுங்கிப்போய் ட்ராயரையும் சேர்த்துக் கழட்டிவிடும் அவசரத்தில் சட்டையை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டான்.

புஷ்டியான ஃபோகஸ் விளக்குகளைப் பாய்ச்சி கண் கூசச் செய்யாமல் விட்ட அந்த தேவஸ்தானத்துக்கு ஒரு முறை நிச்சயம் தெண்டனிட வேண்டும். கேரளக் கோயில் சாஸ்திரப்படி நிலைவாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். எதிரே ஒல்லி ஒல்லி விளக்குகளில் அமைதியாக சேவை சாதித்துக்கொண்டிருந்தார் உத்தர குருவாயூரப்பன். மூர்த்தி சிறிசு. கீர்த்தி பெருசு போன்ற கிளேஷக்களுக்கு அவசியமேயில்லாமல் உள்ளே காலை வைத்ததும் ஒரு அதிர்வை உணர முடிந்தது. இரா. முருகனின் விஸ்வரூபம் படித்துக்கொண்டிருப்பதால் அம்பலப்புழை கிருஷ்ணனும் ஞாபகத்துக்கு வந்தான். வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தார்கள். வலதுகைப் பக்கம் ஐந்து கிளைகளுடன் சரவிளக்கு தொங்கியது. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து முகத்திரி போட்டு எரியவிட்டிருந்ததில் குருவாயூரப்பன் அங்கமெல்லாம் வெள்ளி மின்னியது. புஷ்பாங்கி. கிரீடத்துக்கு மேலே ஒரு தாமரை.

காலுக்கடியில் ஏக தண்டில் பூத்த மூன்று தாமரைகள் போல மும்முகத்துடன் ஒரு வெங்கல விளக்கு. ஒவ்வொரு தாமரைக்கும் மூன்று முகம். மூன்றிலும் மும்மூன்று திரிகள். ஒரு பத்து நிமிஷமாவது கண்ணிமைக்காமல் பார்த்திருப்பேன். ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் “ஆதிமூலமேன்னு கதறிய கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்க நீயே நேர்ல போனியாமே.. அது சத்தியமா?ன்னு கேட்டார் பட்டத்திரி. ஆமாம்னான் குருவாயூரப்பன்” என்று நாராயணீயத்தை சேர்த்துச் சொல்லும் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் பேசுவது இப்போது எனக்கு மட்டும் சத்தமாகக் காதில் கேட்டது. ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தேன். குத்துவிளக்கின் ஒளியில் அழகு கொஞ்சும் குருவாயூரப்பன் எனக்கும் ”ஆமாம்” சொல்வது போலிருந்தது. போன பாராவின் முதல் வரியை இப்போது ”ஆமாம்” என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.

”ஓய்! ராஜம் ஐயர்....செத்தே நில்லும்..” என்ற சப்தம் என்னைக் கலைத்து சந்நிதியை விட்டு வெளியே இழுத்தது. வேஷ்டிக்கு மேலே இடுப்பில் பெல்ட்டாகக் கட்டிய காசித்துண்டோடு துளசி மாலைக் கழுத்தோடு டைனோசர் நடை நெடு நெடு ராஜமைய்யரை பிரகாரத்தில் விரட்டிக்கொண்டு ஓடிய பெரியவருக்கு சுமார் எழுபது இருக்கலாம். ஆனால் அவர் காலுக்கு இருபது என்பது ரா.ஐயரைத் துரத்திய வேகத்தில் தெரிந்தது. பிரகாரத் தூணில் சாய்ந்துகொண்டு ஒரு முட்டை சந்தனத்தை உள்ளங்கையில் தெளித்து “தீபாராதனை ஆகப்போறது...” என்று வாய்வழி குறுந்தகவல் கொடுத்தார் குருக்கள் மாமா. இடுப்பில் சிவ சிவ எழுதிய பச்சைத் துண்டு சிவாவிஷ்ணுவின் ஃப்ரெண்ட்ஷிப் அடையாளம்.

கதவை மூடிய பிறகு லோக்கல் வாலண்டியர் மாமா ஒருத்தர் “ஜெண்ட்ஸ் ரைட். லேடீஸ் லெஃப்ட்” என்று உத்தி பிரித்து விட்டு ஸ்வாமி சேவிக்கச் சொன்னார். வலதுபக்க திண்ணையில் மணி கட்டியிருந்தது. அதனடியில் ராஜமைய்யரை விரட்டிய மாமா உட்கார்ந்திருந்தார். சந்நிதிக் கதவை திறக்கும் போது மக்கள் காட்டிய ஆர்வத்தில் தெரிந்து கொண்ட அவர் உட்கார்ந்த படியே தலைக்கு மேலே இருந்த மணியை ஆட்டிய போது அவரது பக்தி ஊருக்கே தெரிந்தது. சளைக்காமல் நூறு முறை அடித்திருப்பார். அடித்து அடித்து அந்த வெங்கல மணிக்கு நாக்கு வலித்திருக்கும்!

அடுக்கு தீபாராதனை, கும்பார்த்தி என்று தரிசித்துவிட்டு பிரதக்ஷிணம் முடித்துக்கொண்டு பாதியாய் வெட்டிய வாழைப்பழத்தை பிரசாதமாய் வாங்கிக் கொண்டு நகர்ந்த போது ”அந்தக் குச்சிய வாங்கிண்டு விளக்கேத்திட்டுப் போயேன்....” என்றார் உரிமையோடு பிரசாதப் பெரியவர். பிரகாரத்தைச் சுற்றிலும் மாபெரும் எக்ஸெல் ஷீட் போல சட்டமடித்த rowவிலும் columnத்திலும் விளக்குகளை உட்கார வைத்து ரெடியாய் எண்ணெயிட்டு திரியோடு “என்னை வந்து ஏற்று” என்று கொளுத்திக்கொள்ளத் தயாராக இருந்தது. “எவ்ளோ விளக்கு?” என்று பக்தியார்வத்தில் கேட்டேன். “1008 இருக்கு... எல்லோரும் ஏத்துவா.. பயப்படாதே...” என்றார் என்னைத் தெம்பூட்டும்விதமாக. மூங்கில் ப்ளாச்சின் நுணியில் காட்டன் துணித் சுற்றி எண்ணெயில் முக்கிக் கையில் கொடுத்தார்கள். ஆளுக்கொரு குச்சியுடன் குறுக்கும் நெடுக்குமாக விளக்கேற்றத் துவங்கினோம். எங்கெங்கு நோக்கினும் நரைத்த தலையுடனும் நரைக்காத பக்தியுடனும் வயதானவர்களின் கூட்டம் குழந்தையின் ஆர்வத்தோடு விளக்கேற்றியது. ஐந்து நிமிட நேரத்திற்குள் ஊர் கூடி விளக்கேற்றிவிட்டோம்.

மன்னையில் கார்த்திகைக்கு தெப்பக்குளத்தைச் சுற்றி அகல் விளக்கேற்றியது நியாபகத்துக்கு வந்தது. ஆயிரத்தெட்டு விளக்கொளியில் குருவாயூரப்பன் கோயில் வைகுண்டமாக ஜொலித்தது. லேசாக வருடிய காற்றில் அத்தனை விளக்கில் ஆடிய தீபமும் குருவாயூரப்பனுக்கு நடன காணிக்கை செலுத்தியது போலிருந்தது. சாஸ்தா, பகவதி என்று அனைத்து சந்நிதிகளும் விளக்கேற்றப்பட்டிருந்தன. ஒரு சுற்று விளக்கேற்றி விட்டு வரும் சமயம் காராமணி சுண்டல் பிரசாதத்தோடு நின்றிருந்தார் அந்தப் பி.பெரியவர். “இந்தப் பிரசாதமும் எடுத்துக்கலாமா?” என்று தயக்கத்துடன் அல்பமாகக் கையை நீட்டினேன். “தாராளமா..” என்று கண்களில் சந்தோஷம் பொங்க அள்ளிக் கொடுத்தார்.

கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துடன் வெளியே வந்தேன். மெல்லிய குளிரடித்தது. தேங்காய்ப் பூ தூவிய வெள்ளைக் காராமணியை மென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார்போல ஒரு மடிசார் பாட்டி தனது ஆம்படையான் தாத்தாவை [பஞ்சகச்சம்] “இதை மூக்கப் பிடிக்க நன்னா சாப்டாச்சுன்னா... ஆத்துக்கு வந்தா பலகாரம் கிடையாதுன்னேன்..” என்று ஏற்ற இறக்கங்களுடன் கொத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் பக்கத்தில் நின்ற புதுமணத் தம்பதிக்கும் குபீரென்று சிரிப்பு வந்தது. உள்ளேயிருந்து குருவாயூரப்பனும் இதழ் விரியச் புன்னகைத்துக் கொண்டிருந்தான். காரைக் கிளப்பி இரண்டு தெரு நகர்ந்த பின்னும் கண்ணை விட்டு அகலாத அந்த ஆயிரத்தெட்டு விளக்குகள்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே......

மன்னையில் தனுர் மாசம் முப்பது எம்பாவாய் சொல்லிவிட்டு சாரங்கன் மாமா பொங்கலுக்காகத் நித்திரைத் தியாகம் செய்து பச்சைத் தண்ணீரில் வெடவெடக்கக் குளித்துவிட்டு கோதண்டராமர் கோயிலுக்கு ஓடுவது போல் காலங்கார்த்தாலையே ஹோட்டலுக்கு வரச்சொன்னார்கள். கேவலம் ஸ்டார் ஓட்டல் ஓசி டிஃபன் ஆசையில் ”காஃபி மட்டும் போதும்” என்று அரை டம்ப்ளர் வாயில் சரித்துக்கொண்டு ச்சீஸை நோக்கி ஓடும் அப்பாவி ஜெர்ரியாக சேப்பாயியில் ஆரோகணித்து விரைந்தேன். வழியெங்கும் பல ஸ்டாண்டுகளில் ஆட்டோக்காரர்கள் நெற்றியில் குங்குமம் (அ) துண்ணூற்றுடன் கையில் தந்தியும் வாயில் பீடியுமாக பக்திப் பழமாகச் சவாரிக்காகச் சாலையோரத்தில் காத்திருந்தது கிருஷ்ணனைக் கூடையில் ஏந்திய வசுதேவருக்கு ஒதுங்கி வழிவிட்ட யமுனை போல மௌண்ட் ரோடு காட்சியளித்தது.

ஆதியோடந்தமாக சேப்பாயியை துருவித் துருவிப் பரிசோதித்த செக்யூரிட்டியிடம் விடைபெற்று தாஜ் க்ளப் ஹௌஸில் நுழைந்தவுடனே ஒரு ரூபாய் வட்டத்துக்குள் சிகப்புக் கலர் கௌபாய் தொப்பியுடன் ஜெய்சங்கர் தலையைச் சாய்த்து துப்பறியும் சாயலிலிருகும் ஐகான் அச்சடித்த பதாகைகள் பரவலாகக் கண்ணில்பட்டன. ஊரிலிருக்கும் ஒன்பது தாஜ்ஜுகளில் எந்த தாஜ்ஜில் என்று இங்கி பிங்கி பாங்க்கி போட்டுக் குன்ஸாக தாஜ் க்ளப் ஹௌஸிற்குள் வந்திருந்தேன். அதை நிவர்த்தி செய்யும் சந்தேக நிவாரணியாக ரெட் ஹேட் லோகோ தெரிந்தது. கணினியை இயக்குவதற்கு ஆதார ஸ்ருதியாக இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் யுனிக்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ரெட்ஹேட் லைனக்ஸ் ஜாதியின் சமூகத்தார் நடத்தும் வாழ்த்துக் கூட்டம். பயப்பட வேண்டாம். இங்கு நான் சாஃப்ட்வேர் பற்றிப் பேசப்போவதில்லை. நம் இருவருக்கும் தெரிந்ததைப் பார்ப்போம்.

நித்யமும் பொழுது விடிந்து பொழுது போனால் எனது தொழிலில் நான் பல ஹார்ட்-டிஸ்க்குகளில் இதை ஏற்றி இறக்கும் போது தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்தான் ஞாபகம் வருவார். இந்த செமினாரில் அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீர்த்திகளை ஒவ்வொருவராக மேடையேறி வாழ்த்துப்பா படித்தார்கள். தூங்கி எழுந்து பல் தேய்ப்பதற்கு முன்னர் வாயில் சேர்ந்திருக்கும் கோழை எச்சிலை வைத்துக்கொண்டு முழுங்காமல் பேசுவது போல ஒரு வெள்ளைக்காரர் படே கொழகொழத்தனமாகப் பேசி வார்த்தைகளை நம் காதுக்கு வரும் முன் வழுக்கினார். ஒவ்வொரு வாசகத்தின் வாலாக வந்த ஓகே மட்டும் தெள்ளெனப் புரிந்தது.

சன்னதம் வந்தது போல சிலசமயங்களில் மேனியதிர பெருங்குரலெடுத்து ஆங்காரப்பட்டார். மெல்லிய இதமான ஏசியின் சூழலில் அலுவலக அழைப்புகள் இல்லாமல் காலையில் சுகமாகக் கண்ணை மூடுபவர்களுக்கு இவ்விரைச்சலினால் ஜன்னி வந்தது போலத் தூக்கித் தூக்கிப் போட்டது. ”இந்த ஜென்மத்தில நீ யாருக்காவது எந்த மாதிரி கெடுதல் பண்றியோ...அதே மாதிரி அடுத்த ஜென்மத்துல நோக்கும் நடக்கும்” என்று பாட்டி மிரட்டி வளர்த்தது நினைவில் வந்து உரைத்தது. அதற்கப்புறம் பின்னாலையே வந்த ஒரு பகல் கனவுக் காட்சியில் வெள்ளைக்காரனும் நானும் இடம் மாறிக்கொண்டோம். நான் மேடையில் ஏறிப் படம் போட்டேன் அவன் முதல் வரிசையில் தூங்கி வழிந்தான்.

தன் கண்ணுபடவே சொக்கி விழுபவர்களை எழுப்பும் முயற்சியில் “யாராவது கோபால் ப்ரோகிராமிங் பண்ணினவங்க இந்த திருக்கூட்டத்தில் இருக்கீங்களா?” என்று எட்டூருக்கு கேட்கும்படி இரைந்தான் அந்த வெ.கா. சட்டென்று கையைத் தூக்கிவிட்டு ”எதற்காக?” என்று திருதிருவென விழித்தவரிடம் “கோபால்..” என்றதற்கு மையமாகத் தலையை ஆட்டிவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி நொந்துகொண்டு கையை இறக்கிக்கொண்டார். பிக்கல்பிடுங்கலில்லாமல் நிம்மதியாகத் தூங்குபவர்களை ஒரு கண்ணாடிக்காரர் கையில் நிகானுடன் படம்பிடித்துக்கொண்டிருந்தார். என் பக்கம் வரும்போதெல்லாம் உதட்டைக் கடித்துக்கொண்டு பிரசவ வேதனையில் கண்ணிமைகள் மூடிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொண்டேன். மானத்தையும் சேர்த்துத்தான்.

ரெட் ஹேட்டை உபயோகப்படுத்தி பயனடைந்த பெரும் கம்பெனிக்காரர்கள் சிலரும் இந்த கோஷ்டி கானத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அப்படிப் பேசியதில் ஒரு டெக்னாலஜி பேச்சாளி ரேகாவிடம் I know சொல்லும் ரகுவரன் போல You Know சேர்த்துச் சேர்த்துப் பேசி நம்மை No No சொல்ல வைத்தார். பக்கத்தில் ஒருவர் ஹோட்டல்காரர்கள் சப்ளை செய்த ஸ்கிரிப்ளிங் பேடில் பால் கணக்கு எழுதி டேலி பண்ணிக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு மாதுவின் குரல் தேனாய் ஒலித்தது. இது கனவிலோ என்று அசிரத்தையாக இருக்கும் போது மீண்டும் சர்க்கரையாய் ஒலித்து கரும்பாய் இனித்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் ”எல்லோரும் ஒரு பத்து நிமிஷத்துக்குள் ஓடிப் போய் டீ காஃபி குடித்துவிட்டு மறுபடியும் சமர்த்தாகச் தங்களது இருக்கையில் வந்து அமருவீர்களாக!” என்று செல்லமாக ஆக்ஞை பிறப்பித்தார். இனியும் தாமதித்தால் தெவசச் சாப்பாடு மாதிரி ரெண்டு மணிக்கு மேலேதான் போடுவார்கள் போலிருக்கிறது என்று கொலைப்பட்டினியுடன் ஆஃபிஸுக்குச் சென்று ராகவனை சரவணபவனில் ஒரு மசால் தோசையும் தயிர் சாதமும் வாங்கிவரப் பணித்துச் சாப்பிட்டேன். ஒரு டபரா மாவில் ட்ரேஸிங்க் பேப்பராய் தோசை ஊற்றி அது கிழியாமல் உருளைக் கிழங்கு கறி பொதித்த கலைஞனை மனதாரப் பாராட்டினேன். கூடவே ஒரு தொன்னை தயிர்சாதமும் ரெண்டு வாயில் உள்ளேயிறங்கியது. “அடேய்! கொஞ்சம் பொறுமையாயிருந்தால் ஸ்டார் ஹோட்டலில் வயிறார சாப்பிட்டிருக்கலாமே” என்று வயிற்றுக்குள்ளிருந்து கடாமுடாவென்று கத்தின.

அடுத்த முறை எப்பாடுபட்டேணும் ஐம்புலன்களையும் அடக்கி ஒரு முனிசிரேஷ்டர் போல இந்த அரையிருட்டு ஹால்களில் தவமியற்றிவிட்டு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுதான் ஆஃபீஸுக்கு வரணும் என்று ஒரு பிரசவ வைராக்கியம் பிறந்தது.

போன வாரத்திலிருந்து எழுதவேண்டும் என்றிருந்த ஆத்திரத்தை இன்று அள்ளிக் கொட்டிவிட்டேன். என் பாரத்தை நான் இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள்.......

ஸ்நேகித சிஸ்டர்ஸ்

அப்படியொன்றும் அவர்கள் அமிர்தவர்ஷினியெல்லாம் பாடிவிடவில்லை. ஸ்ருதி பாக்ஸை திருகி விட்டு வாயைத் திறக்க ஆரம்பித்ததும் வானத்தைக் கிழித்துக்கொண்டு மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இன்று சின்னதும், பெருசும் அவர்களின் ஸ்நேகித சிஸ்டர்களுடன் எங்கள் பேட்டையிலுள்ள முருகன் கோயிலில் திருப்புகழ் கச்சேரி செய்தார்கள். சேர்ந்திசை.

திருப்புகழ் கற்றுக்கொடுக்கும் பத்மா மாமி கையில் ஜால்ராவுடன் தாளம் போட “பாதிமதியென”வும், “பத்தியால் யானுனை பலகால”முவுக்கும் போவோர் வருவோர் கேட்டுவிட்டு திருநீரும் கையுமாக இராச் சாப்பாட்டுக்குக் குக்கர் வைக்கவும், சன்னையோ, ஜெயாவையோ, கலைஞரையோ, விஜயையோ பார்க்கச் சடுதியில் பறந்தார்கள்.

மழை பெய்யும் போது திருக்கோயிலுக்குள் அகப்பட்டுக்கொண்ட பக்தர் கூட்டம் நாலைந்து திருப்புகழை போனால் போகிறது என்று உட்கார்ந்து கேட்டது.

கடைசியில் நாகராஜ் குருக்கள் ”அடுத்த வருஷம் சஷ்டிக்கும் நீங்களெல்லாம் ஒரு கச்சேரி பண்ணனும்” என்று வாழ்த்தி, பெண்டுகளுக்கு ஒரு துண்டு சாமந்திப் பூவும் தேங்காய் மூடியும் சம்பாவனையாகக் கொடுத்து மரியாதை செய்தார்.

அந்த சாமந்திப்பூ செண்பகப்பூப் போல மணத்தது. கொடுத்த தேங்காய் மூடி பிரசாதம் பூரண பொற்கும்பமே கொடுத்தாற் போலவும் எனக்குத் தோன்றியது.

டப்பாஸ்

”ஷாமீ! டப்பாசு குடு ஷாமீயோவ்....”

ரெண்டாயிரம் வாலாவைக் கொளுத்திவிட்டு காம்பௌண்ட் சுவரோரம் ஒண்டிக்கொண்டு நின்றிருந்த எனக்கு வெகு சமீபத்தில் அந்தக் குரல் கேட்டது. மேனியெங்கும் புழுதியடித்து தோலெது தோளெது என்று இனம் காண முடியாதவாறு மேலாடையின்றி இருந்த நரிக்குறவர் ஒருவர் என் பத்திக் கைக்குக் அருகில் நின்று கையேந்தினார். ஏற்கனவே இரு கையிலும் புஸ்வானமும், இரண்டு சங்கு சக்கரங்களும் இருந்தன. ஜடாமுடித் தலையும், அழுக்குத்துணியும், துர்நாற்றமும் அவரிடமிருந்து குபீரென்றுக் கிளம்ப எனக்குச் சட்டென்று கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறிய ஆதிசங்கரர் எதிரே நாய்களோடு வந்த புலையனும் மனீஷா பஞ்சகமும் நியாபகத்துக்கு வந்தன.

“இந்தா..” என்று கவருக்குள்ளிருந்த ஒரு செங்கோட்டை சரத்தை எடுத்துக் கையில் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே தெருவைப் பார்க்கத் திரும்பினார். பின்னாலேயே இடுப்பில் குழந்தையுடன் கழுத்தில் கலர்க் கலர் மாலைகளுடனும் குறத்தி பக்கத்தில் வந்தார். தட்டை, லட்டு, முறுக்கு என்று அக்குழந்தைக்கு பலகாரம் ஆகிக்கொண்டிருந்தது. மூக்கிலிருந்து சளி எட்டிப்பார்த்து லட்டுக்கும் முறுக்குக்கும் எக்ஸ்ட்ரா சுவையைக் கூட்ட உதட்டுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

“என்னா?” என்று தலையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஒரு ரூவா.. ரெண்டு ரூவான்னு எதனா குடு சாமீ!” என்று கேட்டது.

“அதென்ன டினாமினேஷன் போட்டுக் கேட்கிறே!” என்றேன் குசும்பாக.

“சரி ஷாமீ! அப்ப அஞ்சு ரூவாயாக் குடு..” என்று வெள்ளந்தியாகக் கேட்டது. இடுப்பிலமர்ந்து முறுக்குக் கடித்துக்கொண்டிருந்த கொழு கொழுக் கன்னக் குழந்தையின் கண்களில் தகதகவென்று ஒளி இருந்தது. ஒன்றும் கிடையாது போ என்று விரட்டித் துரத்த மனம் வரவில்லை.

ஐந்து ரூபாய் நாணயமொன்றை கையில் இட்டேன்.

பல்லிடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருந்த பூந்தி தெரிய குறத்தி இடுப்பிலிருந்த கைக்குழந்தை சிரித்தது.

இப்போது இந்த வருஷத்திய எனது தீபாவளிக் கொண்டாட்டங்களின் சந்தோஷம் பரிபூரணமடைந்தது.

Thursday, September 19, 2013

புகை புகையாய்.....


நீலக்கடலில் தூவிய மல்லிகை....
ஆகாய இலவம் பஞ்சு...
நுரைத்து ஓடும் பொன்னி நதி...
காதலி ஜில்லிடும் வெண்ணிலா ஐஸ்க்ரீம்...
கயிலைநாதனின் வெள்ளியங்கிரி...
வரும் புயலைக் காட்டும் வான் படம்...
வசிக்கத் துடிக்கும் குட்டி ராஜ்ஜியம்....
இந்திரலோகத்து நுழைவாயில்...
ஐராவதத்தின் பிருஷ்டபாகம்...
பனைமரம் துடைக்கும் ஒட்டடை...
செல்ல பொமரேனியன் நாய்க்குட்டி...
வாணி ஜெயராமின் “மேகமே...மேகமே...”
ஆத்திக நாத்திக வெண்தாடி...
குழந்தையின் வெள்ளை மனசு....
ஷேவிங் ப்ரஷ் தலையில் க்ரீம்...
ஒரு விள்ளல் குஷ்பூ இட்லி...
வானம் விளைத்த உப்பளம்..

கடைசியில் ஜெயித்தது:
“மேகம் ரெண்டும் சேர்கையில்....
மோகம் கொண்ட ஞாபகம்...”

Wednesday, September 18, 2013

24 வயசு 5 மாசம்

சத்யாவிற்கு அசாத்திய டைமிங் சென்ஸ். வாயாலேயே கிச்சுகிச்சு மூட்டுவதில் கில்லாடி.

காரில் வரும் போது காதல் ஜோடிகள், கல்யாணம், கத்திரிக்கா என்று பல திசைகளில் பேச்சு போனது.

பேசினதுல ஒரு சின்ன க்ளிப்.

“டெண்டுல்கரை விட அஞ்சலி அஞ்சு வருஷம் பெரியவளாம்...”

“அதனால என்ன... அப்படிதான் இப்பெல்லாம் கன்னாபின்னான்னு இருக்காங்க...ட்ரிங்கிங் டுகெதர்...லிவிங் டுகதெர்... டையிங் டுகதர்னு.... ”

”திருநீர்மலைல அம்மா பொண்ணு ரெண்டு பேருமே காதலன் கூட ஓடி வந்து கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். தாலிகட்டி படி இறங்கும் போது மாலையும் கழுத்துமா ஜோடியாப் பார்த்துக்கிட்டாங்கன்னு போன வருஷமோ என்னமோ தந்தியில படிச்சேன்.”

“நல்லவேளை. இதே ரீதியில பேத்தியும் ஓடி வந்து க்யூல நின்னு பண்ணிக்காம இருந்துதே. நீர்வண்ணப்பெருமாள் பெருமாள் பொட்டிய கட்டிண்டு இடத்தைக் காலி பண்ணிண்டு வேற ஊருக்குப் போய்டுவார்...”

“ஏன். கமல் கூட கொழந்தை பொறந்தத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிண்டார்..”

”அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரிஞ்ச இடத்துல நடந்த கூத்தை சொல்லட்டா?”

“ம்.”

“வீட்டுக்கு ஒரே பையன். லவ் பண்ணினப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழிச்சாட்டியமா ஒத்தைக் கால்ல நின்னு பண்ணிண்டான்”

“சரி..”

“தாலி கட்டின நாள்லேர்ந்து எண்ணி சரியா அஞ்சாவது மாசம் குழந்தை பொறந்தது..”

“ஐயய்யோ!!”

“வீட்ல எல்லோரும் அதிர்ந்து போய்.. ஏண்டா? ஊர்ல சிரிக்கமாட்டாங்களா? என்னாடாச்சுன்னு கேட்டாங்க..”

“அதுக்கு என்ன சொன்னான்?”

“நாந்தான் முன்னாடியே உங்ககிட்டல்லாம் சொன்னேனே.. அப்டீன்னு சதாய்க்கிறான்.”

“என்னடா சொன்னேன்னு அவனோட அம்மா அப்பா அழாக்குறையா கேட்டாங்க.”

“அவன் சொல்றான். நான் அப்பவே சொன்னேன் பொண்ணுக்கு 24 வயசு 5 மாசம்னு”.

Monday, September 16, 2013

ஊதா கலரு ரிப்பன்


நேற்று ரெண்டாம் ஆட்டம் வ.வா.சங்கம் போயிருந்தேன். புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் கிடைக்க நீங்கள் பூர்வ ஜென்மத்தில் ஐந்தாறு ஏழைக் கலாரசிகர்களுக்குச் சினிமா டிக்கெட் எடுத்துக்கொடுத்து இண்டெர்வெல்லில் கை நிறைய தீனியும் வாங்கிக்கொடுத்துத் தொண்டு புரிந்திருக்கவேண்டும். நானொரு புண்ணியாத்மா என்பது அனைவரும் அறிந்ததே. எனக்கு அந்த அதிர்ஷ்டமிருந்தது.

‘ஏ’ரோவில் பீரோ மாதிரி குஷ்பூ தனது ஸ்நேகிதகளுடன் அமர்ந்து வி.தா.வருவாயா பார்த்தபோது நானும் உடனிருந்தேன். அதாவது அவரிடமிருந்து ஐந்தாறு ரோக்களுக்கு கீழே. கலகலப்பு மசாலா கேஃப் பார்த்தபோது மிர்ச்சி சிவா என் தலைக்கு ரெண்டு ரோ மேலே அமர்ந்திருந்ததை அகஸ்மாத்தாக கண்டுபிடித்த என்னிடம் ”கூட்டத்திற்கு காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று கண்ணாலையே கெஞ்சி சீட்டோடு பொட்டலமாக முடங்கிக்கொண்டார். பிழைத்துப்போகட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னர் இன்றுதான் சத்யத்தில் சினிமா பார்க்கிறேன். ”இந்தப் படத்தோட ஹீரோயின் இன்னிக்கி நம்ம கூட படம் பார்க்க வர்றாங்கலாம்” என்று பலகணி ஏறும்போது ஜெர்க் விட்டேன். என்னுடன் வந்தவர்களும் சகபடியேறிகளும் என்னைப் பார்வையாலேயே தாயம் உருட்டினார்கள்.

ரெண்டாம் ஆட்டமானாலும் காலை மிதித்துக்கொண்டு இருட்டில் சீட் தேடும் கூட்டம் இன்னமும் தியேட்டர்களில் உலவுகிறது. அந்தக் காலத்தில் திரை மூலைகளில் கலடியாஸ்கோப் வளையல்களுக்கு நடுவே ஜிகுஜிகுன்னு டைட்டில் போடும் உத்தி போல ஏதோ ரிப்பன் ரிப்பனாக உருவித் தலைப்புப்போட்டார்கள். படம் பற்றி இன்னும் எழுதவேயில்லை. அதற்கு முன்னாலேயே இவ்வளவு ராமாயணமா என்று கூவுபவர்களுக்கு ஒரு வார்த்தை. சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களில் துணுக்குத் தோரணம் பார்த்து ரசிப்பது போல சீனுக்கு சீன் ஒட்டவைத்த பிட் காமெடிகள். அவ்வளவுதான். கதை என்ன? கலை என்ன? அப்படியெல்லாம் சாங்கோபாங்கமாகக் கேட்பவர்கள் சத்தியஜித் ரே படங்களை முக்கு கடையில் வாடகைக்கு எடுத்து வீட்டு சோஃபாவில் லேஸ் சகிதம் கண்டு ரசிக்கவும்.

சிவகார்த்திகேயன் பாய் நெக்ஸ்ட் டோர் போல இருக்கிறார். வெட்டியாக பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் தெருத் தெருவாக ஊர் சுற்றி மைனர் குஞ்சாக வலம் வருகிறார். அப்படியொன்றும் வசதியானவரும் அல்ல. காதல் மற்றும் பல படங்களில் அம்மைவட்ட மூஞ்சியுடன் கரகரத் தொண்டையுடன் பயமுறுத்தும் ”காதல்” அப்பாவெல்லாம் வேஷ்டி கட்டிய காமெடியனாகக் காட்டி பயம் தெளிய வைத்தார்கள். சிவா மற்றும் சூரி இணைந்து வரும் காட்சிகளிலெல்லாம் சூரியின் வசன பன்ச் ரசிக்கவைக்கின்றன. மீசை முறுக்கோடு வரும் சத்யராஜ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல நடித்து காட்சிக்கு காட்சி இறுக்கமாயிருக்கிறார். இந்தப் படத்தின் மொழியோடு இணைந்திருப்பது போல இல்லை. துப்பாக்கியோடு சத்யராஜ் மல்லுக்கட்டும் காட்சிகள் நம்மை பிராண்டுகின்றன.

ஸ்ரீதிவ்யாவாம். ஹீரோயின். பாவாடை சட்டையிலும் சரி புடவையிலும் சரி பாந்தமாக இருக்கிறார். ஒரு ஆங்கிளில் பாய் ஃப்ரெண்டுகளை மிரட்டும் அஞ்சலியின் சாயல் தெரிகிறது. வேலைவெட்டியில்லாத பசங்களைத் துரத்திக் காதலித்துக் கரையேறும் பெண்களைக் காட்டி இன்னும் எவ்வளவு படம் எடுப்பார்களோ தெரியவில்லை. திடீர் ஷாக் கொடுக்கிறோம் பேர்வழி என்று வைக்கும் ட்விஸ்ட் காட்சிகள் மொக்கையாக இருக்கின்றன. ஒரு நாளிரவு லதாபாண்டியும் போஸ்பாண்டியும் (நாயகி,நாயகன்) கோழிக்கூடைக்குள் மறைந்து சரசம் செய்யும்போது சத்யராஜ் பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார். நாமும் கையும்களவுமாகப் பிடிக்கப்போகிறார் என்று நினைக்கும் போது ”எங்கப்பாவுக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி” என்று முத்துப்பற்கள் தெரிய குழந்தையாய்ச் சிரிக்கிறார் ஸ்ரீதிவ்யா. சகிக்கவில்லை. ஸ்ரீதிவ்யாவின் சிரிப்பைச் சொல்லவில்லை. சீனைச் சொன்னேன்.

இண்டெர்வெல்லுக்கு அப்புறம் ஏசியை நிறுத்தி கரெண்ட் மிச்சம் பண்ணும் வழக்கம் இன்னும் சினிமாக் கொட்டாய்களில் இருப்பது புலனானது. பின்னால் அமர்ந்திருந்த சில வாலிபர்கள் வருத்தப்படும் அளவிற்கு அவ்வப்போது ஓலமிட்டார்கள். காலேஜ் ஆர்வியெஸ் கண்ணுக்கு வந்து அதையும் ரசிக்கச் சொன்னான். காதல் தோல்வியில் சிவகார்த்திகேயன் சில பன்ச் வசனங்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தேவதாஸர்கள் கரவொலியெழுப்பியும் விசிலடித்தும் தன் மனவேதனையைப் போக்கிக்கொண்டார்கள். ”திரிஷா இல்லைன்னா திவ்யா” காலத்திலும் கா.தோல்வியில் தத்துவப்பாடல் கேட்கும் க்ரூப் அவர்கள் என்று தெரிகிறது.

ஒரு சீனில் காதல் தோல்வியடைந்து விரக்தியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையே “காதல் தோல்வி மருந்து” சாப்பிடு என்று காசு கொடுப்பது முகம் சுளிக்கவைக்கும் சீனாக இருக்கிறது. குடிக்கும் போதும் புகைபிடிக்கும் போது “உடல் நலத்திற்கு தீங்கானது” என்று சப்டைட்டில் போடுவோர் இது போன்று லாகிரி வஸ்துகள் மேல் மோகத்தைத் தூண்டும் காட்சிகள் வரும்போது திரையின் பாதத்தில் “இது மனநலத்திற்கு தீங்கானது” என்று போடவேண்டும். காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்துவைத்த ஆட்டம். கிராமங்களில் நடக்கும் ஆடல்,பாடல் நிகழ்ச்சியின் ஸ்ட்ரிப் டீஸ் வகையறா யோக்யதையைத் தைரியமாகக் காண்பித்தற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

இமானின் இசை. கரகாட்டக்காரனின் முந்தி முந்தி விநாயகரே பாடலுக்கு கரோகி கொடுத்தது போல ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடல். அந்த டர்டர்ரென்று உருமும் உருமி மொதற்கொண்டு அப்படியே. ஊதா கலரு ரிப்பன் ஹிட். கேஷுவலான பாடல். ரெண்டு மாசம் கேட்கலாம். அப்புறம் காது மடங்கிக்கொள்ளும். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை. கும்கியின் வாசனை பல பாடல்களில் இருக்கிறது.

நான் கடவுளில் வரும் டிஎம்டி இரும்புக் கம்பி தேக மொட்டைத்தலையர் இந்தப் படத்தில் காது குடைந்துகொண்டே வருகிறார். எதுவும் வலுவான காரணமில்லாமல் சிவனாண்டி சத்தியராஜும் இன்ன பெயர் என்று காதில் விழாத அந்த மொ.தலையரும் அடித்துக்கொண்டு “உன் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடிடுவாடா” என்று சாபம் கொடுக்கிறார் மொ.தலையர். அதைப் பொய்யாக்க தன்னுடைய இரண்டு பெண்களையும் பள்ளிப்பருவத்திலேயே மணம் முடித்துக்கொடுக்கிறார். மூன்றாமவள் தான் படத்தின் ஹீரோயின். அவளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்.......

இதற்குமேல் படத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. நேரத்தை விரயம் செய்ய முடிந்தவர்கள் வருத்தப்படாமல் வாலிபம் பொங்கப் பார்க்கலாம்.

[முதல் பாராவில் கத்தரி விழுந்து இந்த தினமணி இணைப்பில் வெளிவந்தது. ]

Thursday, September 12, 2013

கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி? - ஒரு ரிப்போர்ட்

கொத்தவரங்காய் நறுக்குவது அப்படியொன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. பளபளக்கும் ப்ரஸ்டீஜ் ட்ரு-ப்ளேடு கத்தியும் மெல்மாவேர் தட்டையும் எடுத்துக்கொண்டு சப்பரக்கா என்று நடு கூடத்தில் உட்கார்ந்து கொண்டேன். விஜய் டிவியில் “நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி”யை சூப்பர் சிங்கி யாரோ சரியான கட்டையில் எடுக்காமல் பாடினார்கள். டார்ட் போல கத்தியை டிவியை நோக்கி வீசலாமா என்று எண்ணினேன். பொறுப்பான காரியத்தை கையிலெடுத்ததால் அதில் மனத்தை ஒருமுகப்படுத்திச் செலுத்தினேன்.

ஒத்த நீளமுடைய சரிசமமான ரெண்டு கொத்தவரங்காயை ( க்ரூப் ஃபோட்டோவுக்கு முன்னும் பின்னுமாக ஆட்களை நிறுத்துவார்களே... அது போல) நுணி ஆய்ந்து எடுத்துக்கொண்டேன். சீரிய இடைவெளி கொடுத்து பொடிப்பொடியாய் ப்ரஸ்டீஜ்ஜால் நறுக்க ஆரம்பித்தேன். இப்படிச் செய்வதால் நம் ப்ரஸ்டீஜ் என்னாவது என்று வீராப்பாய் வெட்டி நியாயம் பேசுவோர் மறுநாள் கால் வயிற்றுக்குக் கஞ்சிக்கு சிங்கியடிக்க வேண்டுமே என்று யோசித்தால் தாராளமாக வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

ரெண்டுரெண்டாய் நறுக்குவது இடுப்பொடியும் காரியமாக இருந்தது. கத்தியால் ஒரு கிலோ கொத்தவரங்காய் நறுக்குவது ஆத்து வாசல்ல காத்திருந்து யூயெஸ்ஸுக்கு பஸ் பிடித்து தேசாந்திரம் போவது போல என்று என் குருவி மூளைக்கு உரைத்தது. குடுகுடுவென்று சமையக்கட்டுக்கு ஓடிப்போய் இரும்பு அருவாமனையை எடுத்துவந்து மடக்கின காலுக்கு அடியில் கொடுத்து செருகிப் பிடித்துக்கொண்டேன். இரண்டுக்குப் பதிலாக நான்கு ஆறு எட்டு என்று ஈவன் நம்பரில் ஈவனாகக் கையிலெடுத்து அடிக்கிக்கொண்டு சரக்...சரக்.. என்று நறுக்க ஆரம்பித்ததில் நிமிஷ நேரத்தில் அரை வானாய் நறுக்கிப்போட்டுவிட்டேன். ஆச்சரியத்தில் இப்போதே கொத்தரங்காய் கூட்டு பண்ணின சந்தோஷம்.

இப்படி நறுக்குகையில் கைக்கு அடங்கிய கொத்தவரங்காய் கொத்தின் இடையில் முத்தின காய் ஒன்றிரண்டு இருந்தால் அவ்வளவு சௌகரியமாக நறுக்கமுடியாது. இளசுகளுக்கு இடையே பூந்து கலாசும் பெருசுகள் போல அந்த முத்திய கொத்தவரைகள். அடுக்கும் போதே கைக்குப் பதமாகவும் இளசாகவும் இருந்தவைகளை ஒதுக்கி டீம் பண்ணிக்கொண்டு நறுக்கினால் காரியம் சுலபத்தில் முடியும். முத்தின காய்களை களைந்து ஓரத்தில் எடுத்துவைத்து இராத்திரி பிசாசாய் சென்னை வீதிகளில் அலையும் பசுமாட்டிற்குக் கொடுத்தால் போற வழிக்குப் புண்ணியமாய் போகும்.

கறிகாய் நறுக்குவது சுலபமான வேலை என்று அலக்ஷியம் செய்பவர்களுக்கு நீதிபோதனை செய்வதற்காக சுயமாக சோதித்துப் பார்த்து இங்கு இவ்வியாசத்தை எழுதினேன். மாமியாரைச் சபித்துக்கொண்டு மாமியாரின் விரலாகக் கொத்தவரங்காயை நறுக்குவது ”அவர்களு”க்கு யானை பலத்தைத் தந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரியம் முடியும் வாய்ப்பிருக்கிறது. நம்மாட்களுக்கு அந்த யுக்தி ஒத்துவராது. தினப்படி இந்தக் கார்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டல் இன்னும் பல தத்வார்த்தமான விஷயங்கள் புலப்படலாம். அர்த்தபுஷ்டியான பல ஐடியாக்களையும் வழங்கலாம்.

ம்.. முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். கூடத்தில் உட்கார்ந்து காய் நறுக்கின இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி டஸ்ட் பின்னில் போடவேண்டும். நம்மாட்கள் வீட்டில் எவ்ளோ காரியம் செய்தாலும் இதுபோன்ற நகாசு வேலைகள் செய்யத் தெரியாமல் “அவர்கள்” வாயில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம்.

கற்றுக்கொண்டவர்கள்.. நாளை வீட்டில் காய் நறுக்கிவிட்டு பதிலுரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு அடாவடியாக கமெண்ட் இடுவோர் அவர்கள் வீட்டில் ஒட்ட நறுக்கப்படுவார்கள். நன்றி!!

Tuesday, September 10, 2013

திருக்கைலாய "லைக்" அரசியல்


கயிலாயம்.காம்மின் ரிடிசையனிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் நந்திதேவர். லேப்டாப்பில் டிசயன்களைப் பார்த்துக்கொண்டிருந்தவரை துளிக்கூடச் சட்டை செய்யாமல் உள்ளே புகுந்தார் நாரத். தோளில் தம்புராவிற்கு பதிலாக எலெக்ட்ரிக் கிடார் சாய்ந்திருந்தது. நாராயண என்று ராகமாக இழுத்துச் சொல்லாமல் “நாராயண்..நாராயண்...” என்று வெட்டிவெட்டி இழுத்த ராப் ம்யூசிக்கோடு கயிலைநாதனைக் காண உள்ளே நுழைந்தார்.

“என்ன நாரதரே! ஃபார்முலா ஒன் மைக்கேல் ஷூமாக்கர் போல ஸ்பீடாக உள்ளே செல்கிறீர்கள்?”

“மிஸஸ்.உமையாளும் அவரது ஹஸ்பெண்ட் சர்வேஸ்வரனும் உள்ளே இருக்கிறார்கள் தானே!”

“இருக்கிறார்கள். கணேஷ் சதுர்த்தியில் என்ன கலகம் புரிய வந்திருக்கிறீர்கள்?”

“கயிலாய வெப் டிசையன் ஒர்க் தலைக்கு மேலே கிடக்கும் போது என் காலை ஏன் வாருகிறீர்கள் ஐயா. கிடாரிஸ்ட் என்றால் இளப்பமா...” என்று புலம்பும் சாரு போல பேசிவிட்டு....”சிவகணங்களுக்கு எதாவது வெட்டிமுறிக்கும் வேலை தாரும். அல்லது உங்களது மத்தளத்தை எடுத்து தையத்தக்கா என்று எதாவது வாசியும். இவ்வளவு வேலையை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனி விபிமாதிரி ஹாயாக உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருக்கிறீரே...அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சமய்யா,,,” என்று கடித்தார் நாரதர்.

“ம்ஹும்... சரி...சரி.. அந்த சுடலையன் குடும்பத்துக்கு ஆச்சு. உங்களுக்காச்சு... எனக்கென்ன.. வந்தது.. இந்த ஜாவாஸ்க்ரிப்ட் செரியில்லை. சியெஸ்யெஸ் எழுதவே தெரியலை.. நான் அதைப் பார்க்கிறேன்..”

திருவிளையாடல் படத்தில் கேவிமஹாதேவன் கொடுத்த “ட்ர்ர்ர்ரெய்ங்....” என்ற பின்னணி ஒலிக்க உள்ளே நுழைந்தார் நாரதர். சிவபெருமான் லாப்டாப்பில் மும்முரமாக கூகிள் சர்ச் செய்துகொண்டிருந்தார். உமையம்மை ஐஃபோனில் சீர்காழி கோவிந்தராஜனின் “காக்கும் கடவுள் கணேசனை நினை..”யை ஓடவிட்டு பிள்ளையின் பிரதாபங்களை எண்ணியெண்ணி ரசித்துக்கொண்டிருந்தார்.

”ம்..கும்...ம்..கும்..” என்று இருமுறை முக்கி முனகி பார்த்துவிட்டு நாரதர் “நாராயண...நாராயண.... உலகைக் காக்கும் பரம்பொருளாகிய நீங்களிருவருமே கேட்ஜெட்டுகளில் மூழ்கிவிட்டீர்கள். இனி யாரிந்த பூலோகத்தைக் காத்து ரட்சிக்கப்போகிறார்களோ? திருமால் கூட சங்குசக்கரம் ஏந்தவேண்டிய இருகரங்களில் ஐஃபோன் ஒரு கையிலும் லாப்டாப் மற்றொருகையிலும் ஏந்தி சதாசர்வகாலமும் சோஷியல் நெட்வொர்க்கில் காலத்தைப் போக்குகிறார்.” என்று சவுண்ட் விட்டார்.

“நாரதா! என்ன விஷயமா வந்திருக்கிறாய். ஆக்ரோஷமான ஆகாய கங்கையை என் சிரசில் வாங்குவதுமாதிரியான ரவிவர்மா பெயிண்டிங்கை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு கணேசனுக்கு பிறந்தநாள். பழமெதுவும் கொண்டு வந்திருக்கிறாயா? நீயாகவே உன் நாடகத்தைத் துவங்கு. உன்னை கேட்க யாரிருக்கிறார்கள்...”

“நாரதா ஞானப்பழம் சூனியக்கிழம் என்று எதாவது கர்நாடகத்தனமான போட்டிகள் எதுவும் வைத்து என் பிள்ளைகளை வெறுப்பேற்றாதே. லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கல் போட்டி ஏதாவது வை. எனக்கும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.”

“அகிலமாளும் ஈஸ்வரியே! சிவபதியடைந்து கைலாயத்தில் குடியேறியிருக்கும் சீர்காழி கோவிந்தராஜரை லைவ்வாகவே உங்கள் முன் பாட வைக்கலாமே. இன்னும் ஏன் ரெக்கார்டிங்கில் 128 bitrate mp3யில் ஐஃபோனில் கேட்கிறீர்கள்”

“உன்னைக் கர்நாடகம் என்று கேட்டதற்கு என்னிடம் பாய்கிறாயா? நன்றாக இருக்கிறது”

“இல்லை தாயே! உண்மையைச் சொன்னேன். அது கிடக்கட்டும். எங்கே தங்களது தவப்புதல்வர்கள்.”

“அதானே பார்த்தேன். கலகமில்லாமல் வருவாயா? என்ன விஷயம்.”

“அம்மையே! அனைவரும் ஃபேஸ்புக்கில் நித்யவாசம் செய்கிறோம். கயிலாயம்.காம் வெப்சைட்டாகவும் நிறைய ஹிட்ஸ் பெறுகிறது. ”பூலோகத்தில் தங்களுக்குக் கிட்டாத நிம்மதிக்கு இன்றே எமலோக யாத்திரை மேற்கொள்ளுங்கள்” என்று ”Early bird" ஆஃபருடன் எமதர்மராஜன் பாசக்கயிற்றை தலைக்கு மேலே சுற்றும் விளம்பரம் வேறு. ஃபேஸ்புக்கிலும் கயிலாய பேஜ் லைக்ஸுக்கு கணபதி புண்ணியத்தில் குறைவில்லை. முறையே கௌமாரம்.காம் மற்றும் காணாபத்யம்.காம்க்குக் கூட கூட்டம் அம்முகிறது. ஏன் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மா பாடல்களை காதைச் செவிடாக்கும் டெஸிபலில் அலறவிட்டிருக்கும் தங்களது சாக்தம்.காம் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு போகிறது.”

“எதற்கு இந்த கூகிள் அனாலிடிக்ஸ் போல ஸ்டாட்டிஸ்டிக்ஸெல்லாம் கூறுகிறாய். உனக்கு என்ன வேண்டும்.”

”இப்படி வெப்சைட் காலத்தில் உங்கள் ஃபேமிலி இருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதிகம் கோலோச்சுவது யார் என்று என்றைக்காவது சிந்தித்திருக்கீர்களா?”

“ஓ! லேட்டஸட்டாக போட்டி வை என்று நான் கேட்டதற்கு ஃபேஸ்புக்கோடு வந்துவிட்டாயா? கணபதிக்கு ஹிட்ஸ் அதிகமா அல்லது ஆறுமுகனுக்கு அதிகமா என்று போட்டி வைக்கப்போகிறாயா?”

”உங்களுடனேயே பேசி எனக்கு அலுத்துவிடுகிறது அம்மையே. புத்திரர்கள் இருவரையும் அழையுங்களேன். பலப்பரிட்சை செய்து பார்த்துவிடுவோம்.”

மறுபடியும் முன்னால் சொன்னது போல திருவிளையாடல் கேவிமஹாதேவனின் “ட்ர்ர்ர்ர்ர்ரெய்ங்..” பின்னணி ஒலி இசைக்கிறது.

மூஞ்சுருவை ஸ்கேட்டிங் போர்டாக்கி கையில் கொழுக்கட்டையுடன் கணபதி உருட்டிக்கொண்டு முன்னால் வருகிறார். சைக்கிளை ஹாண்டில்பாரைப் பிடித்து தள்ளிக்கொண்டு வருவது போல பின்னால் முருகப்பெருமான் மயிலின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறார்.

“மூத்தபிள்ளைதான் எப்பவும் முதலில் வரும் பிள்ளை...” என்று சொல்லிவிட்டு கனைக்கிறார் நாரதர்.

“பிரிவினை முயற்சியை ஆரம்பித்துவிட்டாயா?” என்று நாரதரிடம் சொல்லிவிட்டு.. “இங்கே இவ்வளவு களேபரம் நடக்கிறது. உமக்கு உம் பிரச்சனைதான் முக்கியம். அவளை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை இப்போது பார்க்காவிட்டால் என்ன மோசமாகப் போகிறது. உம்.. இந்த நாரதனையும் நம் பசங்களையும் தான் பாருங்களேன். இந்த கூகிள் சர்வர்களுக்குள் ஒரு நாள் அக்னி தேவனை ஏவி விட்டு சுட்டுப் பொசுக்கிவிடுகிறேன் பாருங்கள்...அப்போதுதான் இவ்வுலகமும் எவ்வுலகமும் உய்யும்..” என்று கர்ஜித்தாள் உமையம்மை.

லாப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு சிவனேன்னு நடக்கவிருக்கும் ரகளைகளைப் பார்க்க ஆரம்பித்தார். நாரதன் நீயா நானா கோபிநாத் போல கோட்டும் சூட்டும் அணிந்து போட்டி நடத்த தயாராக இருந்தார். காலில் ஷூ வேண்டாம் என்று தனது சௌகரியத்துக்காக மரத்தாலான பாதரட்சையே அணிந்திருந்தார். இந்தப் புது மோஸ்தர் கணபதிக்கும் முருகனுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. “அண்ணா! இனிமேல் தேவலோகத்தின் புது ஃபேஷன் டிசையனர் நாரதர் தான். இதுதான் லேட்டஸ்ட் ஹிட்டாகப்போகிறது” என்று முருகன் பிள்ளையாரின் காதைக் கடித்தான்.

”முருகா... கணபதி... உங்களிருவரின் முகப்புஸ்தக பக்கத்தில் எவ்வளவு லைக்ஸ் இருக்கிறது? முருகா நீ அதிகமா அல்லது விநாயகன் அதிகமா?”

“யார் அதிகமானல் என்ன? கௌமாரர்கள் என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள். அவ்வைக் கிழவி “ஒன்று..இரண்டு..மூன்று...” என்று வரிசைப்படுத்தி என் புகழ் பாடி மகிழ்வாள்.” என்றான் முருகன்.

”எந்த பேஜிலும் என்னை முதலாகத் துதிபாடிவிட்டுதான் செயலெதுவும் துவங்குவார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை எடுத்தால் நான் நிச்சயம் முன்னணியில் இருப்பேன். இருந்தாலும் தம்பி முருகன் சொன்னது போல காணாபத்யக்காரர்கள் எனக்கு லைக்கிட்டு மகிழ்வார்கள்.”

“அடடா.. இருவருமே கான்செப்ட்டை புரிந்துகொள்ளவில்லை. உங்கள் இருவருக்கும் யாருக்கு லைக் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவர்.”

“ஒரு சந்தேகம்” என்றான் கணபதி.

“கேள் அப்பனே!” என்றார் நாரதர்.

“ஔவைக்கிழவியை நாந்தான் சேரமானுக்கும் சுந்தரருக்கும் முன்னால் யானையேற்றி கைலாயத்திற்கு அழைத்துவந்தேன். எனக்கும் முருகனுக்கும் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் அவள் இருக்கிறாள். அவளது லைக் இட்டால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?”

“நல்ல கேள்வி. ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்டாக இருப்போர் இருபக்கச் சண்டைக்கும் தூபம் போடுவார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் காரசாரமாக நடந்தால் அன்றைக்குப் பொழுது நன்றாக போகும். ஆதலால் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது”

“எனக்கும் ஒரு சந்தேகம்” என்று இடிமுழங்கும் குரலில் கேட்டான் அழகன் முருகன்.

“ம்... சூடு பிடிக்கிறது. கேளப்பா...” என்றார் நாரதர்.

”இன்றைக்குதான் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து புதிதாக நண்ப பக்தராயிருப்பர் சிலர். அவர்கள் இடும் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்வீர்களா?”

“ம்... சரிதான். அவர்களுக்கு புதிதாய் சேர்ந்ததின் கவர்ச்சி இருக்கும். அதுவும் கிடையாதுதான்...”

“மீண்டும் எனக்கொரு சந்தேகம். “ என்று கை தூக்கினான் கணேசன்.

மூஞ்சுரு கடிக்காத தூரத்தில் நின்றுகொண்டு “என்னப்பா...” என்று வினவினார் நாரதர்.

“லைக்கை வைத்து ஒருவரின் ப்ரபல்யத்தை அறிய முடியாது என்பது என் கருத்து. எவ்வளவுக்கெவ்வளவு ஷேர் அதிகமாக இருக்கிறதோ..அவ்வளவுக்கவ்வளவு அவர்களது புகழ் இப்புவியெங்கும் பரவியிருக்கிறது என்று அர்த்தம்...”

“இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்...” என்று மறுத்தான் முருகன்.

“இன்றைக்கு கணேஷ் சதுர்த்தி. அண்ணனின் படங்களும் கதைகளும் நிறைய பகிரப்படும். சஷ்டியில் பார்த்தால் என்னுடையவை அதிகமாக ஷேர் செய்யப்பட்டு கம்ப்யூட்டர் திரைகளுக்கு தீபாராதனைக் காட்டுவார்கள். வீட்டிலேயே என் படம் பேக்கிரௌண்ட் இமேஜாக உள்ள லாப்டாப்பை கரகம் காவடி போல் எடுத்து ஆடியாடிக் கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஒத்துவராது.” என்று படபடத்தான் முருகன்.

”பிள்ளைகள் இரண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நீர் லேப்டாப் திறந்து படம் தேட ஆரம்பித்துவிட்டீர். குடும்பம் உருப்பட்டார் போலத்தான்.” என்று கழுத்தை ஒடித்து தோளை உயர்த்தி இடித்துக்கொண்டாள் பார்வதி.

“முருகன் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த மாயவனுக்கு லைக்கும் ஷேரும் மலைபோல் குவிந்தது. ஆயுத பூஜையில் மிஸஸ் பிரம்மா அதிகமாகத் தென்படுவார். இப்போது என்ன செய்யலாம்?” என்று கையிலிருந்த எலெக்ட்ரிக் கிடாரை தரையில் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிவகணத்தின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு யோசிக்கலானார் மிஸ்டர். நாரதர்.

“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? எதிரிகள் லைக்குகளை சேர்த்தால் யாருக்கும் அதிகமாக வருகிறதோ.. அவர்களே ஜெயித்தார் என்று முடிவெடு...” என்று நாட்டாமை கணக்காக சொல்லிவிட்டு பார்வதியை பெருமையாகப் பார்த்தார் சிவன். இருகையாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு பழிப்பு காண்பித்து திரும்பிக்கொண்டாள் பார்வதி.

“அட்டகாசமான யோசனை... நீங்களே ஐடியாஸ்வரன்...” என்று கிடாரில் ரெண்டு ஸ்ட்ரம்மிங் கொடுத்து பாராட்டினான் நாரதன்.

”ரொம்ப அழகாயிருக்கே.... கஜமுகாசுரன் கணபதிக்கு லைக் போடுவான். சூரபத்மன் முருகனுக்கு. இந்த ரெண்டு ஓட்டை வச்சுண்டு யார் பெரியவர்னு முடிவெடுத்துடுவேளா? சிவ..சிவா..” என்று தலையடித்துக்கொண்டாள் பார்வதி.

“ஆமாம். இதுவும் சரிதானே. ” என்று கிடார் வாசித்து பூரித்துப்போனான் நாரதன்.

“இது என்னடா கொடுமையா இருக்கே. ரெண்டு பேருக்கும் ஜால்ரா.. ச்சே...கிடார் போடறே...” என்று எக்கினார் சிவனார்.

”நான் இதுக்கொரு முடிவு சொல்றேன்.. கேட்டுக்கோங்கோ...”

சிவனார் புலித்தோலை ஒருதடவை அரையில் இறுக்கிக்கட்டிக்கொண்டார். நாரதர் முன்னால் வந்து நின்றார். முருகனும் கணபதியும் தோளில் கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் நின்றார்கள். பார்வதி அட்ரெஸ் பண்ணினாள்.

“ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாங்காட்டியும் நல்லதாக எது கண்ணில் பட்டாலும் லைக் போடுகிறவன் அன்பயாஸ்டு ஃபெல்லோ. அதுபோல தன் மூலமாக இதை பலருக்கும் சென்றடையட்டும் என்று ஷேர் செய்பவனும் அதே கேட்டகரியில் வருகிறான். விசேஷத்துக்கு விசேஷம் விழுந்து சேவிப்பவர்கள் எவராயினும் குறுகியகால புண்ணியத்திற்கு அடி போடுபவர்கள். அவர்களின் பூஜைகள்...லைக்குகளை லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டு நலனில் அக்கறை கொண்டு பகிரப்படும் ஸ்டேட்டஸ் எதுவாகிலும் முன்னுரிமை கொடுத்து லைக்க வேண்டும். வீட்டிற்காகவும் பதியப்படுபவைகளுக்கும் ஸ்பெஷல் லைக்கிங்ஸ் கொடுக்கலாம். கருத்துரைக்காமல் அறிவுசார் பதிவுகளை ரெண்டடி தள்ளி நின்று பார்த்து இடும் லைக்குகளை ஆயிரமாக எடுத்துக்கொளல் வேண்டும். மொக்கைப் பதிவுகளுக்கு தேடித்தேடி லைக்கிட்டு ஆதரவளிப்பவர்களுக்கு “காலை வணக்கம்” என்ற அவர்களது ஸ்டேட்டஸிற்கு லட்சோபலட்சம் லைக்குள் கொடுத்து உற்சாகமூட்டவேண்டும்...”

அம்மாவின் இந்த அறிவுரைகளைக் கேட்டு கணேசனும் முருகனும் நெளிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் லாப்டாப்பில் படம் தேடப் போய்விட்டார். (இப்பதிவுடன் அந்தப் படத்தை இணைத்துள்ளேன்.) நாரதன் கிடாரை துவம்சம் பண்ணி ஒலியெழுப்பி ஆரவாரித்தான். கடைசியில் கணேசனும் முருகனும் கோரஸாக பின்வருமாறு பேசினார்கள்.

“நாங்கள் இருவருமே சண்டை போட்டுக்கொள்ளவில்லை. இந்த லைக் அரசியலில் நாங்கள் உள்ளே நுழையமாட்டோம். அவரவர் கர்மவிதிப்படியே லைக்கும் ஷேரும் அனைவருக்கும் கிடைக்கிறது. எங்களை கும்பிடும் பக்தர்கள் அனைவரும் ஆர்.வி.எஸ்ஸின் இந்த போஸ்டிற்கு பெருவாரியான லைக்கும் மகத்தான எண்ணிக்கையில் ஷேரும் செய்து ஆதரவளித்தால் கைலாய ப்ரதர்ஸான எங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று ஆசிகூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு அப்பாவின் இந்த ஃபோட்டோவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நாரதர், சிவன், பார்வதி மூவரும் கையில் கிடைத்த கேட்ஜெட்டை எடுத்து http://www.facebook.com/mannairvs என்ற பக்கத்தைத் திறந்துபார்த்து கல்லை எடுத்துக்கொண்டு அடிக்க பூலோகத்திற்கு ஒடிவந்தார்கள்.

Tuesday, August 27, 2013

அத்தை

அந்தக்காலத்தில் இராத்திரி கிளம்பும் வெளியூர் பேருந்துகள் அதிகாலையில் மவுண்ட்ரோடை அடைத்துக்கொண்டு சென்னையின் பிரதான சாலைகளில் வழியே ஓடி பாரீஸ் கார்னரில் ரெஸ்ட் எடுக்கும்.

மன்னையிலிருந்து சீட்டுக்கு நம்பர் போட்ட திருவள்ளுவரில் ஏறி தேனாம்பேட்டையில் இறங்கி இன்னாபா... மேலே ரெண்டு ரூவா போட்டு குடுப்பாகைலியின் பீடி நாற்றத்துடன் பேசும் மொழியையும் வியந்துகொண்டே டர்ர்ர்ர்ர்ர்..ர்ர்..ர்ர்ர்ரென்று பயணித்து எல்டாம்ஸ் ரோடு பாலசுப்ரமணியர் கோயில் வழியாக நுழைந்து ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் தாண்டி இஸபெல்லைக் கடந்து சான்ஸ்க்ரீட் காலேஜ் பிள்ளையாரையும் எதிரே அப்பர் ஸ்வாமியையும் தரிசித்துக்கொண்டு வலது ஒடித்து ஆவின் இறங்கிக்கொண்டிருக்கும் லஸ் சிக்னலுக்கு நேரே நுழைந்து கையிலையே மயிலை மயிலையே கயிலையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டால் நமது பட்டினப் பிரவேசம் பூர்த்தியாகிவிடும். அப்படியே இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது திரும்பி காய்கறிக்கடையில்லாத ஃபண்ட் ஆஃபீஸும் தினசரி கையோடு தினசரிகளை அளவளாவும் காளத்தி ஸ்டோர்ஸுக்கு முன்னால் ரைட் எடுத்து சித்திரக்குளத்தைத் தாண்டி வருவது கேஸவபெருமாள் கோயில்.

ஆட்டோ படபடபடக்க வாசலில் நின்றவுடன் கலகலவென்று வாடா...வாடா..வாடா....என்று அழைத்து பல் தேய்த்தோமோ இல்லையோ கவலையில்லாமல் கையில் காஃபி டம்ப்ளரைத் திணித்துவிடுவாள். அத்தை. அண்ட்ராயர் வயசில் லீவுக்கு என்று ஊரை விட்டுக் கிளம்பினால் மெட்ராஸ்தான் டெஸ்டினேஷன். ஒரு வாரமோ ரெண்டு வாரமோ மெரீனா பீச், பட்டாணி சுண்டல், சுதந்திரமாக கைக் கோர்த்துத் திரியும் காதல்ஜோடிகள், கற்பகாம்பாள் உடனுறை கபாலி, குடையளவு அரிசி அப்பளாம் விற்கும் தீவுத் திடல், தேவி பாரடைஸில் ஒரு படம், லோக்கல் காமதேனுவில் ஒரு படம், பாரீஸ் கார்னர் அகர்வால் பவனில் SKC என்று ஊர் சுற்றிவிட்டு மன்னைக்கு ரிட்டர்ன். அடுத்த வருஷமும் கட்டாயம் வாடாஎன்று வாஞ்சையாக கூறிவிட்டு பாரீஸ் கார்னர் மூ.நாற்ற பஸ்ஸ்டாண்டில் கமகமவென்று பாசம் மணக்க ஏற்றிவிடுவாள். அத்தை.

ஸ்கூல் டீமில் செலக்ட் ஆகிவிட்டு எட்டாவது வேகேஷன் ஹாலிடேவில் சென்னை வந்திருந்த போது BDM ஆயில் பேட் வாங்கிக்கொடுத்து அத்த...உன்ன டீவியில பார்க்கணும்என்று ஆசீர்வதித்தாள். ஊருக்கு வந்து ஹாண்டில் பக்கத்தில் தேங்காயெண்ணை ரெண்டு சொட்டு போட்டு ராத்திரி எறும்பு மொய்க்க வைத்துவிட்டு மறுநாள் ப்ராக்டீஸில் லைட்டா க்ளான்ஸ் பண்ணினாலே பிச்சுக்கிட்டு ஃபோர் போகுதுடா.. சூப்பர் பேட்டு..என்று சக கிரிக்கெட்டர்கள் சொல்லும்போது மெட்ராஸிலிருந்து அத்த உன்ன டீவியில பார்க்கணும்டயலாக் என் காதுக்கு மட்டும் ரகஸியமாகக் கேட்கும். அத்தை.

வயசாக வயசாக லீவுக்கு மெட்ராஸ் வருவது நின்று போனது. சொந்த ஊர் பொறுக்கவே நேரம் போதவில்லை. பந்துக்களின் திருமணம் காதுகுத்து சீமந்தம் கிரேக்கியம் என்று சுகதுக்க நாட்களில் மண்டபத்தின் கடைசி சேர்களில் அமர்ந்து கட்டிப் பிடித்துக்கொண்டு எப்படிடா இருக்கே! பெரிய மனுஷாஎன்று கடவாய்ப்பல் சொத்தை தெரியச் சிரிப்பாள். அத்தை.

ஏசி எடுக்கவே மாட்டேங்கிறதுடா.. யார்ட்டயாவது சொல்லேன்க்கு ஆள் அரேஞ் பண்ணி அனுப்பிவிட்டு சரியாச்சுன்னா சொல்ல மாட்டியா?” என்று சண்டை போட ஃபோனை எடுத்தால் “Lalitha Athai calling.." என்று செல்பேசி சிணுங்கும். சரியாயிடுத்துடா... இப்படியாவது அத்தைக்கிட்ட பேசிண்டிருக்கியே.என்ற திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளி, சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்களில் தம்பதியாய் போய் பார்த்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வருவதற்குதான் சமீப காலங்களில் நேரமிருந்தது. அத்தை.

கேன்சர் என்று தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருப்பாள் என்று நம்பினோம். நேற்று மாலை திடீரென்று ஹிந்து மிஷனில் ஐஸியூவில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஓடினோம். ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டிருந்தது. தேகமெங்கும் ஒயர்கள். தலைக்கு மேல் மானிட்டரில் பல்ஸ் ரேட்ஸ் தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் கோணி விலுக் விலுக்கென்று இழுத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு உன்ன டீவியில பார்க்கணும்தான் நினைவுக்கு வந்தது. சலைனுக்கு குத்தியிருந்த கையைத் தொட்டேன். ஜிலீர் என்றிருந்தது. உறைந்து போனேன். பிஸ்கெட் கேட்கும் வாண்டுகள் முட்டி மடக்கவியலாத வயதானவர்கள் என்று ஐசியூ வாசலில் உற்றார் உறவினர் கூட்டம். இங்க கூட்டம் போடக்கூடாதுஎன்று மீசைக்கார செக்கியூரிட்டி எங்களை விரட்டி தனது கடமையைச் செய்தார்.

ஹிந்து மிஷன் வாசலில் கட்டிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனியாக அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற துக்க காலங்களில் பேசாமல் தனித்து அமர்வது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. டிவியில் ஏதோ பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. கண் டிவியில் நிலைகுத்தி இருந்தாலும் மனசுக்குள் அத்தை சிரிப்பது, தலையை ஆட்டியாட்டி பேசுவது, பருப்பு போட்டு சாதம் பிசைவது, மெரீனாவுக்கு கையைப் பிடித்து அழைத்துப்போவது, “காளத்தி ஸ்டோர்ஸ்ல ரோஸ் மில்க் குடிடாஎன்று கையில் காசு திணிப்பது, கவரோடு பிடியெம் பேட் கொடுப்பது என்று அலை அலையாய் மனசுக்குள் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் டிவியில் உன்னைப் பார்க்கணும்நியாபகம் வந்தது. ஒரு வருஷத்துக்கு முன் சத்தியம் டிவியில் காமாசோமாவென்று நாம் பேசியதை சொல்லியிருக்கலாமோ என்று இப்போது மனசு அடித்துக்கொண்டது.

திபுதிபுவென்று ராஜாதான் ஓடிவந்தான். யே... அடங்கிடுத்து...என்றான். ஃப்ரீஸர் பாக்ஸுக்கும் பாடியைக் கொண்டு போக ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடுஎன்றான். துக்கம் தொண்டையை அடைக்க கேஷ் கவுண்டரில் விசாரித்தேன். வாசல்கிட்ட சூபர்வைசர் இருப்பாரு. அங்க கேளுங்க சார்என்று கம்ப்யூட்டர் தட்டப்போய்விட்டது ஷிஃப்ட் முடியும் தருவாயில் இருந்த அம்மாது. செக்யூரிட்டிகளின் பக்கத்தில் நெடிதுயர்ந்து சூப்பர்வைசர் இருந்தார். அட்ரெஸ் கொடுத்து எல்லாவற்றையும் முடித்தேன். திரும்பவும் ஐசியூவிற்கு செல்வதற்கு திரும்பும் போது செக்கியூரிட்டி கேபினிலிருந்து காற்றோடு கலந்து வந்து அது என் காதில் விழுந்தது. தேகமெங்கும் மயிர்க்கூச்சலெடுத்தது.

அத்தைமடி மெத்தையடி.. ஆடிவிளையாடம்மா..... ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா....”.

அத்தை கண் மூடிவிட்டாள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails