Showing posts with label கொலு. Show all posts
Showing posts with label கொலு. Show all posts

Thursday, December 15, 2016

கொலு 2016: சரஸ்வதி தேவியுடன் ஒரு உரையாடல்

”மகனே ஆர்வியெஸ்.. யாரெல்லாம் உன் வீட்டுக் கொலுவுக்கு வந்தார்கள்?”
”ஏன் தாயே?” (சரஸ்வதி சபதம் சிவாஜி குரலில்.. ஏற்ற இறக்கத்துடன்...)
“சொல்லப்பா.. அவர்களுக்கெல்லாம் நானொரு கிஃப்ட் வைத்திருக்கிறேன்”
“சுண்டி விரல் நுழையுமளவிற்கு குங்குமச் சிமிழா?”
“உம்... உன் அதிகப்பிரசங்கித்தனத்தைக் காட்டாதே... சொல்வாயா? மாட்டாயா?”
“சொல்கிறேன் தாயே... கிஃப்ட் என்னவென்று சொன்னால் இந்தப் பொடியன் தன்யனாவேன்...”
“கிஃப்ட் கடைசியில் சொல்கிறேன். நீ ஆட்களைச் சொல்... ”
“எனது அலுவலக நண்ப பாஸ் ரவீந்திரன் வந்தார்... அவருடன் அவரது மனைவி ஸ்ரீவித்யா இரண்டு மகள் செல்வங்களும் உடன் வந்தனர்...”
“என்னைப் பார்த்து என்ன சொன்னார்?”
”குழந்தையின் ஆர்வத்துடன் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார் தாயே... மிகவும் சிலாகித்தார்... ”
“ம்.. அப்புறம்?”
“கோயமுத்தூரிலிருந்து அன்னலெக்ஷ்மி வந்திருந்தார்...”
“என்ன அன்னலெக்ஷ்மியா? அது ஹோட்டலாயிற்றே..”
“நோ... நீங்கள் சகட்டுமேனிக்கு அப்டேட்டடாக இருக்கிறீர்கள்... இவர் நடமாடும்....”
“இழுக்காதே... அறுக்காதே... யாரெனச் சொல்....”
“சித்ரா மன்னி... கூடவே எங்கள் மன்னார்குடிச் சொந்தங்கள் இருவரும்...”
“அவர்கள் யார்?”
“நெற்றியில் விபூதி மணக்க பாலா முகுந்தனும் அவரது தர்மபத்தினி க்விட் காரோட்டியாகவும்.....”
“ஓ... சரி..சரி.. அப்பம் நன்றாக இருக்கிறது... யார் கைவண்ணம்?”
“அம்மாதான் தாயே... சங்கீதா இன்னும் நன்றாக....”
“அடச்சே... என்னிடமே... உன் டகால்டியா?”
“இல்லையில்லை..தண்டமிடுகிறேன்... அப்பத்தை வைத்து உங்களுடைய விளையாட்டா?”
“சரி.. பிழைத்துப் போ.. பின்னர் யாரெல்லாம் வந்தார்கள்?”
“அலுவலகத்திலிருந்து ஜெயஸ்ரீ வந்தார்கள்... ”
“நான் பார்க்கவில்லையே?”
“ஆம் தாயே... இம்முறை தேர்வடமளவிற்கு கழுத்தணிகலனும் பிடி கொழுக்கட்டையளவு காதணிகளும் போடாமல் வந்தார்கள்... உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்காது..”
“சரி.. ரொம்ப வாராதே... மாட்டிக்கொள்வாய்.. பின்னர்...”
“பாண்டியராஜ் என்னும் மதுரைக்காரர்... என்னுடைய அலுவலகக்காரர்.. வந்தார்.. சென்றார்.. அவரது சுட்டி மகளுடன்... ‘நமக்கு கொலுவெல்லாம் பளக்கமில்லை சார்... என் வைஃப்தான் கம்பராமாயணம் படிச்சுட்டுதான் தெனமும் சாப்டுவாங்க.. சாமியெல்லாம் அவ்வளவு பிடிக்கும்....”
“ஓ.. பரவாயில்லையே... பேஷ்..பேஷ்...”
“ஆனால்.. க்ளைமாக்ஸாக... பாண்டியின் மனைவியார் பதறிப்போய் தடுத்து...”சார்...அது சுந்தரகாண்டம்...” என்று சிரித்தபின்.. பாண்டிக்கு கண்ணிரெண்டும் வெளியே வந்துவிட்டது..”
“பாண்டியை ஓட்டுகிறாயா? வேறு யாரெல்லாம் வந்தார்கள்...”
“ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து...”
“தெரியுமே....”
“ஏனிப்படிச் சிரிக்கிறீர்கள்? யாரது... சொல்லுங்கள் பார்ப்போம்..”
“அடப் பொடியனே... ஸ்ரீநிவாசனும் வல்லபாவும்தானே.... “
“எப்படி கரெக்டாக சொன்னீர்கள்...”
“பின்ன... உன்னைப் பார்க்க ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து கமலஹாசனா வருவார்?”
“சரி தாயே... “
“எல்லோருக்கும் சுண்டல் கொடுத்தாயே..குறையில்லையே...”
“இல்லையில்லை.. கொடுத்தேன்.. வல்லபாவும் சங்கீதாவும் இவ்வுலகம் கிடுகிடுக்க ஒரு கார்யம் செய்தார்கள்... இன்னமும் நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்..”
“இருவரும் சமத்தாயிற்றே.. சாமர்த்தியசாலிகளாயிற்றே... நீ எதைச் சொல்கிறாய்?”
“பதாகஸ்.... அர்த்த பதாகஸ்...சூசி.. கத்தரிமுககா.. கபீத.. போன்றெல்லாம் கொலுவுக்கு முன்னால் பரத அபிநயம் பிடித்தார்கள்...இதைத் தன் ஊனக்கண் கொண்டு பார்க்க முடியாத வீகேயெஸ்.. தன்னுடைய கேமிராக் கண் கொண்டு க்ளிக்கினார்... வெளியில் விடாமல் ரகசியம் காத்து வைத்திருக்கிறார்...”
“அடக் கிரஸ்தாஸ்ரம கிறுக்கே... நன்றாகத்தானே செய்தார்கள்.. உன்னுடைய கிண்டலுக்கு அளவில்லையா? அவ்வளவு நெஞ்சுரமா உனக்கு? ம்....”
“சாரி தாயே... கட்டி ஏறாதீர்கள்.. நாவடக்கம் நல்லதுதான்... வல்லபாவின் தாயரே ரசித்துக்கொண்டிருந்தார்கள்.. “
“ம்.... அந்த மரியாதை இருக்கட்டும்..... அப்புறம்...”
“மண்டலியிலிருந்து சுவாஸினிகள் இருபது பேர் வந்து முப்பெருந்தேவியரின் புகழ் பாடினார்கள்... திவ்யமாக இருந்தது... குறிப்பாக சரஸ்வதியாகிய உங்களைப் பற்றி...”
“ஐஸ் வைக்காதே... மேலே.. போ.. இன்னும் யாரார்?”
“டிஸியெஸ் முரளி ஜகன்னாத் அவர்கள் தன்னுடைய ட்வின்ஸ் புத்ரிகள் விலாஸினி விகாஸினியுடன் வந்தார். இரட்டையர்கள் அற்புதமாக பாடினார்கள்... உங்களுக்குக் கேட்டிருக்குமே...”
“ஆமாம்.. பின்னர்...”
“தண்டபாணி தன்னுடைய பிள்ளைகளுடன் வந்தார்... எங்கூர் ஹரித்ராநதி பையன்... பக்கத்து வீட்டில் நான் பார்த்து வளர்ந்த பையன்.. சமர்த்து... தொழில் பக்தி மிக்க பையன்....”
“எனதருள் கிடைக்கட்டும்.. அப்புறம்?”
“டியார்ஸி மாமா வந்தார். வழக்கமான அவரது ஹாஸ்யமான பேச்சால் கவர்ந்தார். உப்பு தூக்கலான் லெமன் ஜூஸில் மெய் மறந்தார். நாற்பது வயதில் அறுபது நாடுகள் பார்த்த அவரது பையனைப் பற்றிச் சொன்ன போது எனக்கு முன்னே உலகம் சுற்றியது....”
“அவர் பெரிய பொறுப்பில் இருந்தாலும் உன்னை எட்டிப் பார்த்திருக்கிறார்.. வெரி குட்.. அடுத்தது யார்.. அடுத்தது யார்.. என்று நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? சொல்லப்பா...”
“எங்கள் பேட்டையில் வசிக்கும் கோமதி ராஜாராம் அவர்கள் ராஜாராமுடன் வந்திருந்தார்கள். பஜனையில் தன்னை அர்பணித்துக்கொண்ட ராஜாராம் சாரிடம் பேசுவதற்கு எவ்வளவு இருக்கிறது!!! முதியோர் இல்லங்கள் பற்றி அவர் சொன்ன ஒரு தகவல் நெஞ்சை அரிக்கிறது. பிறகு சொல்கிறேன்...”
“தெரியும்.. இதைப் போன்று தன்னிடம் திராணியிருந்தும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் கயவர்களுக்கு தக்க பாடம் வைத்திருக்கிறேன்... உம்.. நீ மேலே சொல்...”
“பிரதீபா கோவிந்தராஜன், சந்தனா, வித்யா மாதவன், நித்யா என்று இஷ்டமித்ர பந்துக்களின் விஜயம் மகிழ்ச்சியாக இருந்தது...”
“ஆமாம்... நல்லது.. அப்புறம்...”
“நீண்ட நாட்களுக்குப் பிறகு நாராயணஸ்வாமி மாமா வந்திருந்தார். “அடுத்த கொலுவுக்கு படி கட்ட நானும் வந்துடறேன்...” என்று அவர் சொன்ன போது எனக்குப் புல்லரித்தது. எழுபத்து ஐந்து வயது இளைஞரின் சுறுசுறுப்பு... ஆஹா...”
“இதைப் போன்றோர்களின் நட்பு உனக்கு ஃபேஸ்புக் அளித்த வரம்... யாரையாவது விட்டுவிட்டாயா.. இவ்வளவுதானா?”
”ஜெகன்மாதா.. இவ்வுலகில் உனக்குத் தெரியாத ஒன்று நடக்குமா? என்னை வைத்து திருவிளையாடலா? யாரார் வந்தார்கள் என்று என் வாயாலேயே பட்டியலிடவைத்தீர்களே... தங்களது விளையாட்டே விளையாட்டுதான்.... “
“ஹா..ஹா.. உனக்கு ஞாபக சக்தி இருக்கிறதா என்று சோதித்தேன். பரவாயில்லை.. பாடங்கள் உன் புத்தியில் பதியாத போதும்... பரிவர்த்தனைகள் பதிகிறது.. உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் வராதவர்கள் வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு வீட்டிலேயே லாப்டாப்பில் உன்னுடைய கொலு பார்த்தவர்கள் என்று சகலமானவர்களுக்கும் என்னுடைய அருட்கடாட்சம் உண்டு. அதுதான் எனது கிஃப்ட்.”
”அனந்தகோடி நமஸ்காரங்கள் தாயே”

Thursday, September 29, 2011

எங்க வீட்டுக் கொலு



இந்த கொலுப் படிக்கு நிச்சயம் ஒரு எழுபது வயது இருக்கும். ஒன்பது படி. மேலேர்ந்து முதல் படியில் வலது ஓரத்தில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் லக்ஷ்மிக்கு ஒரு அறுபது வயது இருக்கும். என்னுடைய அம்மாவின் சிறுவயதில் வாங்கிய லக்ஷ்மியாம். ஐந்தாவது படியில் இடது கோடியில் ஸ்டைலாக நிற்கும் நளனுக்கும் நிச்சயம் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அப்புறம் செட்டியார், தசாவதாரம், மரப்பாச்சி போன்றவர்களும் இந்தக் கொலுவில் வயதானவர்கள் தான். ஆனால் பொலிவுடன் இருக்கிறார்கள். சரியா?



மேற்கண்ட படத்திலிருப்பவை புதிது. புதிதென்றால் ஒரு ஐந்து வருடத்திற்குள் வாங்கியது. மன்னார்குடி ராஜகோபாலன் கருட சேர்வை. பக்கத்தில் ரிஷபாரூடராக சிவபெருமான் அருள்பாலிக்கும் ப்ரதோஷ அபிஷேகக் காட்சி. வலதுபுறத்தில் ராதேகிருஷ்ணர் காதல் ஊஞ்சல் ஆடுகிறார். அவருக்கு முன்னால் ஒரு கல்யாணம் நடக்கிறது. வீதியின் முனையில் தள்ளுவண்டியில் காய்கறி வருகிறது. இக்காலத்தில் காண முடியாத காட்சி.

இந்த கொலுவிற்கான முன்னேற்பாடுகளை இங்கே அழுத்திக் காண்க.

முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை இங்கே எனது ப்ளாக் தோழர்களுக்காக.......

இப்படங்களை உபயோகிப்பவர்கள் இந்த பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்தால் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் பெறுவார்கள்!! :-)

எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!

-

Tuesday, September 27, 2011

மாடவீதி பொம்மைகள்

திருமகள் கால் பிடித்துவிட ஜுவல்லரி வாசலில் ஹாயாக சயனகோலத்தில் இருந்தார் விஷ்ணு. ஜுவல்லரி ஷட்டர் தலையை முட்ட ஆதிக்கு கொஞ்சம் டென்ஷன். நாராயணனின் நாபியிலிருந்து ஒரு கம்பி கிளம்பியிருந்தது. ஆனால் அதில் லோட்டஸ் அண்ட் ப்ரம்மா மிஸ்ஸிங். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த யேசுபிரான் மாதிரி வைக்கோல் சுற்றி கீழே கிடந்தார் வெண்ணை கிருஷ்ணர். காமதேனுக்களும், கோபிகா ஸ்த்ரீகளும், முனி புங்கவர்களும் தங்கள் செட்களை விட்டு தனித்தனியே இரைந்து குவிந்திருந்தார்கள். ஆதி சங்கரர் செட்டில் சிஷ்யர்கள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். மடியில் லெக்ஷ்மியை அமர வைத்துக்கொண்ட நரசிம்மர் செட்டியாரைப் பார்த்து கர்ஜித்துக்கொண்டிருந்தார். மீராவின் தம்புராவை எடுத்து கைக்கு சொருகிக்கொண்டிருந்தார் ஒரு நவராத்திரி பக்தர்.

இவையெல்லாம் நேற்று முன் தினம் மாடவீதியில் கண்ட நவராத்திரி கொலு பொம்மைக் கடை காட்சிகள். கபாலீஸ்வரர் கோவில் முன்னால் வண்டி நிறுத்துவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. சென்னைக்கு இருசக்கரம் தான் தலை சிறந்த வாகனம்.அதுவும் கஜமுகனின் வாகனம் போன்று இருத்தல் நலம். பாதி இடங்களில் இரண்டு சைக்கிளை தலையோடு தலை சேர்த்து வைக்கும் அகலம் தான் தெரு. அதிலும் நாலு வீடுகளில் பக்க நிறுத்தானை போட்டு நடு வீதிவரை வாகனம் நிறுத்தி துணி காயப் போட்டுவிடுகிறார்கள். மீதி வீடுகளில் மக்கள் வாசலில் நின்று வம்பளக்கிறார்கள்.

“அப்டியே முன்னாடி வா”

“கொஞ்சம் லெப்ட்ல போ”

“ரைட்டு ஒடி”

”ஏ..ஏ.. பேக்கில பாரு”

“அங்க நிக்காத”

“அப்டியே ஷ்ட்ரெயிட்டா ரிவர்ஸ் வா”

“ம்..ம்.. போதும்...போதும்... நிப்பாட்டு”

என்ற அபரிமிதமான மரியாதை பொங்கி வழியும் ஏக வசனங்களில் உதவி பெற்று வண்டியை ராசி சில்க்ஸ் அருகில் விட்டு வருவதற்குள் கை தனியாக கழண்டு விட்டது. டோக்கன் கொடுக்காமல் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அடுத்தாளை திட்டுவதற்கு கிளம்பிவிட்டார் அந்த இள வயது டோக்கனர்.

போன வருடம் கொலு வைக்க முடியாதலால் (ஒரு அபர காரியம்) இந்த வருடம் நவராத்திரி பட்ஜெட் டபுள். வீட்டிற்கு நவராத்திரி விஜயம் செய்வோருக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சரோஜாதேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா, முழுத் தேங்காயைப் போட்ட உடன் பொத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் கூடை, பத்து ரூபாய் வெங்கடாஜலபதி தங்கச் சிலை, தட்டு மாதிரியும் இல்லாமல் பேசின் மாதிரியும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் பாத்திரம் (லேடீஸுக்கே அது என்னவென்று விளங்காது), ராகவேந்திரர் லாமினேட்டட் படம் (அசப்பில் ரஜினி மாதிரி இருக்கும் ப்ரிண்ட்), ஆஜானுபாகுவான ஆகிருதியான மாமிகளுக்கு சுண்டி விரல் கூட நுழைக்க முடியாத சில்வர் ப்ளேட்டட் குங்குமச் சிமிழ் என்று சகலமும் கொடுத்தாயிற்று.

“..ண்ணா.. காசு கூடப் போனாலும் பரவாயில்ல, இந்த தடவை டிஃப்ரெண்ட்டா எதாவது வாங்கறோம்” என்று என்னையும் செலக்‌ஷன் கமிட்டியில் சேர்த்துக்கொண்ட என் மனைவியின் மதியூகத்தை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் அடங்கா! வார்த்தைகளுக்கும் அடங்கா!!

திரும்பவும் சிமிழ், தட்டு, அடுக்கு விளக்கு, அண்டா விளக்கு, சின்ன குத்துவிளக்கு மொதற்கொண்டு பார்த்தாயிற்று. அம்மணி பார்த்தவைகளை வாங்குவதென்றால் சம்பளக் கவரை திருவாளர் கடைக்காரரிடம் கொடுத்து சேவித்துவிட்டு பொருட்களை வாங்கி வரவேண்டும். இப்போது நிச்சயம் களத்தில் இறங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. தர்ம நியாயங்கள் தோற்றுப் போகும் போது எம்பெருமானின் அவதாரம் போல உள்ளே இறங்கினேன். கையைக் கடிக்காமல் பட்ஜெட்டிற்குள் எது அடங்கும் என்று மூளையைக் கசக்கி கடையை இரண்டு ரவுண்டு வந்தேன். மருத்துக்குக் கூட ப்ளாஸ்டிக் ஜாமான் இல்லாத பரிசுத்தமான சுற்றுச்சூழலுக்கு ஆத்ம நட்புக் கடை. ஷேமமாக இருக்கவேண்டும்.

ஒரு ஐட்டம் எடுத்து ”இதுல ஐம்பது வேணும்” என்றால் “மொத்தமே இங்க இருக்கிறது தான் சார்!” என்று நெட்டித் திரும்பி அடுத்த கஸ்டமரை பார்க்க சென்று விட்டது அந்த நீலச் சட்டை பொடிசு. கடை முழுக்க காஸ்ட்லி ஐட்டங்களை நிரப்பி பொதுச் சேவை புரிந்துகொண்டிருந்தார் அந்தப் புண்ணியவான். இங்க்லீஷ் பாட்டு பாடி “போயிட்டு வரேன் தம்பி” என்று விளக்குமாறும் கையுமாக வீடு கூட்டும் பெண்மணி நடிக்கும் விளம்பரத்தில் வரும் ஆங்கிலம் போதிக்கும் நிறுவனரும் அங்கே வந்திருந்தார். அவரும் நாலைந்து எடுத்துப் பார்த்து கையைக் கடிக்க போட்டுவிட்டு போய்விட்டார்.

மாட்டிக்கொண்ட நான் நூறு ரூபாய்க்கு கொஞ்சம் கம்மியாக ஒரு வெண்கல விளக்கை எடுத்து பார்த்தேன். கொஞ்சம் தேய்த்ததில் அந்தப் பெண் வந்து ”என்னா சார் தேச்சுப் பார்க்கிறீங்க?” என்றது. “இந்த அற்புதவிளக்கின் உள்ளேயிருந்து பூதம் வந்தால் கொஞ்சம் பணம் கேக்கலாம்னு இருக்கேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ”இந்த விளக்கு பேர் என்ன?” என்ற கேள்விக்கு ”குபேர விளக்கு” என்று வந்த பதிலால் திருப்தியடைந்து “ஒரு ஐம்பது கொடுங்க” என்று வாங்கிக்கொண்டால் “..ண்ணா இது கூட நல்லாயிருக்கில்ல” என்ற குரல் வந்த திக்கில் வேறு டிசையனில் ஒரு விளக்கை கையில் பிடித்து கை விளக்கேந்திய காரிகையாக நின்றுகொண்டிருந்தாள் என் மனைவி.

அந்த விளக்கு அப்புறம் ஒரு சின்னத் தட்டு என்று கொலுவுக்கு “வச்சுக் கொடுக்கும்” சாமான்கள் பையை நிரப்ப அந்த தெய்வீகக் கடையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தும் “இந்த வருஷமும் புது பொம்மை எதாவது வாங்கனும்” என்று கையில் பிரம்பு இல்லாமல் கண்டீஷனாக சொல்லிவிட்டார்கள்.


மாடவீதி ஜேஜேயென்று இருந்தது. எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டிருந்தார்கள். வாண்டுகள் பொம்மை பார்க்க பெருமளவில் குவிந்திருந்தார்கள். காதுக்கும் மூக்குக்கும் வைர வைடூரியம் அணிந்திருந்த செல்வச் சீமாட்டிகள் செண்ட் வாசனையுடன் “அத்த எடுப்பா! இத்த எடுப்பா.. அந்த ஓரம் லெஃப்ட்ல.... ஹா..ஹாங்.. ஜஸ்ட் அபோவ் தட்” என்று என்னை போன்ற ரெண்டாம் கிளாஸிடம் இங்க்லீஷில் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஸ்வாமி பெயர் சொல்லிக் கேட்டால் சட்டென்று எடுத்து தந்துவிடப்போகிறார்கள். சிலரது டாட்டா சுமோவும், ஸ்கார்ப்பியோவும் அந்த இரண்டு முழம் ரோட்டில் அவர்களுக்காக அந்தக் கடையெதிரில் காத்திருந்ததுதான் உட்சபட்ச அயோக்கியத்தனம்.

மாடவீதி சரவணபவன் மாஸ்டருக்கு அன்றைக்கு நிச்சயம் தோசை வார்த்துப்போட்டு கைக்கு மாக்கட்டு போடவேண்டியிருக்கும். கடை உள்ளே சாப்பாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடை வாசலில் குருக்ஷேத்திரத்தில் படைத் தேர்கள் போல வாகனங்கள் கொடிபிடித்து நின்றுகொண்டிருந்தது. வாசலில் நின்றிருந்த அந்த நேபாள ரெஃப்ரி டிராஃபிக் ஜாமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பம்பரில் அடிபடாமல் இன்னொறு வண்டியின் டிக்கியில் நசுங்கி மக்கள் கொலு பொம்மை பார்த்தார்கள். வாங்கவில்லை. வாங்கியவர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல். காதெங்கும் துளை போட்ட பெரிய அம்மா ஒருத்தர் “கடசீ நாளைக்கு வந்தா பேர் பாதி விலைக்கு வாங்கலாம்” என்று வாடிக்கையாளர் தந்திரம் சொல்லிக்கொண்டே போனார். பக்கத்தில் அதை செவிமடுத்தது அவருடைய மாட்டுபொண்ணாக இருக்கவேண்டும். பொதுவெளியிலாவது தலையாட்டி வைப்போமே என்று பூம்பூம் ஆட்டிக்கொண்டே பின்னால் சென்றது.

இந்த முறை பரவலாக ஆலிங்கனங்கள் கண்ணில் பட்டது. வருடாவருடம் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளே செல்லமுடியாதபடி கடை விரிக்கும் வாடிக்கை பொம்மைக்காரர் “போன தடவை ஆலிங்கனம் இருக்கா இருக்கான்னு கேட்டாங்க. ஆஞ்சநேயர்-பிள்ளையார் மட்டும்தான் போயிருக்கு. ராமரு-குகன், சுதாமா-கிருஸ்ணரு அல்லாம் அப்டியே இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டார். அன்னபூரணியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கேட்டால் யானை விலை குதிரை விலை சொன்னார். கொஞ்சம் மார்டனாக சொல்லவேண்டும் என்றால் ஐ-7 ப்ராஸஸர் விலை சொன்னார். வேண்டாம் என்று நகர்ந்தால் குரலை உயர்த்தி கட்டி இழுத்தார். “நீங்க கேளுங்க” என்றார். பாதிக்கு பாதி கேட்டால் பேரம் படியுமா? என்ற ஆசையில் கேட்டதற்கு “சார்! அநியாயமா கேட்காதீங்க.. நாங்களும் லாபத்துக்காகத் தானே உட்கார்திருக்கோம்” என்றவருக்கு அதே பதிலை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிச் சொன்னேன் ”உட்கார்ந்திருக்கோம்”க்கு பதிலாக “நின்னுக்கிட்ருக்கோம்”னு.

பத்து பதினைந்து கடைகளில் ஸ்கான் செய்து பாண்டுரங்கர், ரஹ்மாயி மற்றும் அன்னபூரணி மூவரையும் வீட்டிற்கு அழைத்துவந்தாயிற்று. போன வருடம் ஸ்கிப் ஆனதை இந்த வருடம் ஈடு கட்ட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார்-ஷங்கர் காம்பினேஷன் பட பட்ஜெட் போல வீட்டு சுப்ரீம் சக்தி கொலு மெகா பட்ஜெட் போட்டுவிட்டார்கள்.

ஆங். ஒரு விஷயம். நிறைய தேடிப்பார்த்துட்டேன். இந்த வருஷம் கொலு ஸ்பெஷல் என்று நிச்சயம் இந்த மகானின் பொம்மை புதிய வரவாக இருக்கும் என்று நினைத்தேன். உஹும். இல்லை. பெருச்சாளிகளுக்கு எதிராக போராடும் அந்த நிகழ்கால மகான் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம்.

இப்பதிவிற்காகப் படமெடுத்தது பாம்பல்ல ஆர்.வி.எஸ் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ?

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails