Saturday, April 28, 2012

புல்லட் பாண்டி

இதிலிருக்கும் அனைத்தும் முகநூலில் பகிர்ந்துகொண்டது. இங்கே திண்ணைக் கச்சேரியாக மலர்கிறது. இதுவரை ப்ளாக் லோகத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தோடு தலைக் காட்டாமல் இருந்த என்னுடைய அதிரடி போஸ் ஒன்று கீழே இருக்கிறது. பார்த்து இ(து)ன்புறவும்!!
********* மின்சாரம் ஜாக்கிரதை *********
அவசரம் அவசரமாக ரெண்டு பேரும் ஓடி வந்தனர். புஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தது. சுற்றும் முற்றும் யாராவது வருகிறார்களா என்று ஜாக்கிரதையாகப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்தால் புருஷன் பொண்டாட்டி போல இருந்தது. இப்போதே அந்த வேலையை செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தது போல இருந்தார்கள். ரொம்பவும் அவசரப்பட்டார்கள்.

“நடு ரோடாயிருக்கே”

“....”

“பரவாயில்லை”

“......”

“சீக்கிரம் திற”

“வேணாங்க.. யாராவது பார்த்துடப்போறாங்க”

“ச்சே! உங்கூட ஒரே ரோதனையாப் போச்சு. தொறங்கறேன்..”

“வேண்டாங்க.. பயமாயிருக்கு”

“நாளைக்கு ரெய்டாம். சமூக ஏற்றத்தாழ்வுகள் கூடாதுன்னு யாருக்குமே கரெண்ட் இல்லைனு ஒழிச்சுட்டாங்களாம்... இவ வந்துட்டு...” என்று
அவன் அவள் கையைப் பிடித்து ஆத்திரத்தோடு இழுத்தான். கையிலிருந்த பெட்டியைத் திறந்து 2080 மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆணையை மீறி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த அந்த மின்சார பேட்டரியை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிம்மதியாக இருளில் வீடு போய்ச் சேர்ந்தனர்.

“உங்க வீட்ல ஏதோ வெளிச்சமா இருந்திச்சு!” என்று விஜாரித்த பக்கத்துவீட்டும்மாவைப் பார்த்து தம்பதி சமேதராய் “ஒன்னுமில்லையே!” என்று சொல்லிவிட்டு முப்பத்திரண்டையும் காட்டிச் சிரித்தார்கள். பனைஓலை விசிறியை கட்டில் ஜன்னலருகில் கட்டி கயிறு போட்டு இழுத்தார்கள். கதவைத் திறந்து கொண்டு காற்று அடித்தது.

2081-ல் நாட்டில் மொத்தமாக மின்சாரம் என்பதே ஒழிந்து அனைவரும் உடலுழைப்பில் சர்வ காரியங்களையும் செய்து க்ஷேமமாக வாழ்ந்தார்கள். :-)

********புல்லட் பாண்டி ஆர்.வி.எஸ்!!************* 


வடக்குத்தெருவில் கோப்லி வீட்டில் இதை விடப் பெரிதாக ஆஜானுபாகுவான ஒரு “டப்...டப்..டப்..” இருந்தது. சேப்புக் கலர். பின்னால் ரோட்டைப் பெருக்கும், மேடைத் திரை போல ஒரு ஃப்ளாப். மார்பளவு 40க்கு மேல் உள்ளவர்கள் கையை சாதாரணமாக விரிக்கும் தூரத்தில் ஹாண்டில் பார். ரமேஷ் வடகரையில் வண்டியை ஸ்டார்ட் செய்தால் நாலு கரைகளும் கதறும். நல்ல ஆகிருதியான சரீரம் படைத்தவர்கள் இதை லாவகமாக அடக்கி ஆண்டால் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

என்னைப் போல் பூஞ்சையான தேகம் கொண்ட தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் பக்கத்தில் நின்று சிரித்துக்கொண்டே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம். அஸ்வமேதக் குதிரையை அடக்கியாள்வது போன்ற திறனும் பலமும் இதை ஓட்டுவதற்கு அக்காலத்தில் தேவைப்படும். ஆம்ப்ஸ் பார்த்துதான் உதைக்கவேண்டும். சரியான உதையில்லையென்றால் ரிட்டர்ன் அடித்து அது நம்மை திரும்ப உதைத்துக் கால் முட்டியைப் பேத்துவிடும். ரெண்டு நாள் நடமாட முடியாது.

என்னுடைய இளமை பிராயத்தில் இஸ்திரிப் போட்ட உடுப்புடன் மீசை முறுக்கிய கண்டிப்பு ரத்தம் பாயும் போலீஸ்காரர்கள்தான் புல்லட் வைத்திருப்பார்கள். கலவரமான இடங்களுக்கு போலீஸ் அதிரடி விஜயம் செய்யும் போது போலீஸ் வரும் பின்னே புல்லட் சத்தம் வரும் முன்னே! காதில் ஒலிக்கும் டப்..டப்..டப்.. போக்கிரிகளை எஸ்கேப்..எஸ்கேப்.. என்று துரத்திவிடும்.

அன்றைக்கு நான் எடுத்துக்கொள்ளாத அந்த ஃபோட்டோவை இன்றைக்கு அதன் மேல் ஏறி எடுத்துக்கொண்டேன். ஓ.கே! :-)

*******அடங் கொய்யாலே ***********
”மூணு பத்து ரூவா”

“மூணுதானா?”

மேல்சட்டை போடாமல் வலமிருந்து இடம் போட்டுக்கொண்ட பச்சைச் துண்டை பிடித்துக்கொண்டே பொக்கை வாயால் சிரித்தார். முன் பற்கள் காவியடித்திருந்தது. சொற்ப கொய்யாக்கள் தள்ளுவண்டியில் இங்குமங்கும் சிதறியிருந்தன. புன்னை மரத்தடி நிழலில் முதுகை மரத்திற்கு முட்டுக்கொடுத்து கொட்டாவியுடன் ஆவியற்று உட்கார்ந்திருந்தார். இரண்டாம் முறை பேரம் பேச மனது வரவில்லை. பொதுவாக இதுபோல சாலையோரக் கடைகளில் என்னுடைய நெகோஷியேஷன் ஸ்கில்ஸை உபயோகிப்பதில்லை.

“சரி குடுங்க” என்று பத்து ரூபாய் சலவைத் தாளை நீட்டினேன்.

வாங்கி கல்லாவாக மாற்றப்பட்ட பச்சைக் கலர் ப்ளாஸ்டிக் டப்பாவில் கிடந்த சில்லரைகளோடு போட்டுக்கொண்டார்.

“உஹும்... மொளகாப் பொடி வேண்டாம். கட் பண்ணி மட்டும் கொடுங்க” என்றேன்.

கட் பண்ணிக்கொண்டே “என்னோட சின்ன வயசில 400 ரூபாய்க்கு ரெண்டு காளை மாடு வாங்கிடலாம். இப்போ ஒரு கோளிக்குஞ்சு கூட வாங்க முடியாது”. மூன்றையும் அறுத்துக் கூறுபோட்டார்.

“தெரியுமா?” நிமிர்ந்து புருவம் நெறித்துக் கேட்டார்.

”நீங்க சின்னப்புள்ளையா இருந்தப்ப மாடு ரேட் என்னான்னு எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்ப கோழிக்குஞ்சு ரேட்டு என்னான்னும் எனக்குத் தெரியாதுங்க பெரியவரே!”ன்னேன். சிரித்தேன்.

“நல்லாத்தான் பேசுறே!” சர்ட்டிஃபிகேட் கொடுத்து காந்தி சிரிப்புச் சிரித்தார். செங்காயாக இருந்த ருசியான கொய்யாவைக் கடிக்கும் போதுதான் நேற்று எனக்கும் என் நண்பருக்கும் இரண்டு இன்ச் உசர வாமன பேப்பர் கப்பில் 6 ரூபாய்க்கு டீயும் 7 ரூபாய்க்கு காஃபியும் அரை இன்ச் நுரையடித்துக் கொடுத்த டீ மாஸ்டர் ஞாபகம் வந்தது. கொய்யா கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. பரவாயில்லை பத்து ரூபாய்!!

********** சீரியல் அரக்கன் **********
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் டி.வி சீரியல்களுக்கு பித்தம் உச்சத்தில் ஏறி விடும். தாத்தா பாட்டியிலிருந்து மாட்டுப்பொண்கள் மதனிக்கள் என்று அனைவருக்கும் திங்கட்கிழமை வரை வாயில் மெல்ல அவல் கொடுக்கவேண்டும் என்பதற்காக குதறி எடுத்துவிடுகிறார்கள்.

நாலு லோல் பட்ட குடும்பங்களை வைத்து சமுதாய சீரியலாக நகர்த்திக்கொண்ட்ருந்த தங்கமான தங்கம் குடும்பத்தினர் திடீரென்று விட்லாச்சார்யா படத்தில் வருவது போல அத்தனை பெரிய ஸ்வர்ணமால்யாவை மறையவைத்துவிட்டனர். மாமியாருக்கு பச்சிலை பொருக்கப் போன மருமகப்பிள்ளையை கற்பாந்த காலத்திலிருந்து வரும் கதை போல “நாதா! நீங்கள் என்னை மணம் முடிக்கவேண்டும்” என்று கைகளை பின்னலிட்டு கழுத்தை ஒடித்து கஷ்டப்பட்டு வெட்கப்பட்டு கேட்கிறார் ஸ்வர்ணமால்யா!

அவர் நாககன்னிகையாம்... கிராஃபிக்ஸ்ஸில் படமெடுக்கும் பாம்புகளை திரை முழுவதும் நிரப்பி மிரட்டுகிறார்கள். சாதா கண்ணுக்கே கேப் வெடிக்கும் துப்பாக்கி என்று தெரியும் ஒரு வஸ்துவை டுப் டுப் என்று அவர் சுட வழக்கம் போல பாம்பு மறைந்து ஒரு மூலையில் திடீரென்று ஸ்வர்ணமால்யா தோன்றி ஹாஹ்ஹாஹா.. என்று வில்லிச் சிரிப்பு சிரிக்கிறார்.

இந்த எபிசோட்லேர்ந்து தங்கத்து டைரக்டர் இராம.நாராயணன் சாரா?

கெட்டுது போ! இனி வெள்ளிக்கிழமை சீக்கிரம் வீட்டிற்கு போகக்கூடாது என்று நினைக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷிது!! :-)

****** சேங்காலி டச் *********
எவ்வளவோ ராஜால்லாம் மண்ணோடு மண்ணாப் போய்ட்டாண்டா, எத்தனை பல்லக்கு உளுத்து மண்ணாப் போய்டுத்து... பல்லக்குல உட்கார்ந்த எத்தனை சரீரம் எரிஞ்சு சாம்பலா போய்டுத்து... இந்த சரீரம் வெறும் மண் கூடுடா பகுகுனா... ’நான்’னு நினைச்சுக்காதடா.... ஏமாந்துடாத... இது மாயைடா... இத நம்பி ஏமாந்துடாதேன்னு... ப்ரம்மம் தாண்டா சத்யம்.....ன்னு அம்மா அப்பாட்டக்கூட வாயைத் திறக்காத ஜடபரதர் பகுகுன மஹாராஜாவுக்கு பிரம்ம ஞானத்தை போதிக்கிறார்....

#சேங்காலிபுரம் அனந்தராமதீக்ஷிதர் ஜடபரதர் உபாக்யானத்தில்...
##”சுர்”ரென்று உரைக்கும் உண்மை. கேட்டதலிருந்து இதே வரிகள் சுற்றிச் சுற்றி வருகிறது.

********** ஆட்டோத்துவம் **********
ஒரு இடத்தில் அகஸ்மாத்தாக முந்திவிட்டேன் என்று என்னை ரேஸடித்து சேஸ் செய்து பலமாக ஒலியெழுப்பி மீடியேட்டரோடு சேர்த்து என்னை அணைத்து அந்த வெற்றிக் களிப்பில் முன்னால் சென்ற ஆட்டோவின் முதுகில் எழுதியிருந்த ஆட்டோத்துவ வாசகம்:

“விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவன் விட்டுக்கொடுப்பதில்லை”

#சரிங்கண்ணே!

********** அழுகையும் சிரிப்பும் ***********

அம்மாவிடம்
அடிவாங்கும் பிளாட்பார
சிறுமியின் அழுகையில்
சிரிக்கிறது
அது விற்கும் டோரா புத்தக அட்டை!

#தி.நகரில் பார்த்தது!

******** செல்மொழி *********
”ச்சுச் ஆப் ஆயிருக்குடி”ன்னு சொல்லிக்கிட்டுப் போன பெண்ணொருத்தி தினக்கூலியாகத்தான் இருக்கவேண்டும். ஒயர்கூடை வலது கையிலும் அசப்பில் ப்ளாக்பெர்ரி போன்று ஒரு செட் இடது கையிலும் அடக்கியிருந்தாள்.

“டவரு கிடைக்காம இருக்குங்க்கா” என்று சொன்ன மஞ்ச ஜாக்கெட் பெண்மணியும் கையில் சிகப்புக் கலரில் நோக்கியா போன்ற ஒரு வஸ்துவை கவர் போட்டு வைத்திருந்தாள்.

“வாசலிலே பூசனிப்பூ வச்சுப்புட்டா..வச்சுப்புட்டா”ன
்னு வீதிக்கே கேட்கும்படி வைத்துக்கொண்டு போன கைலி ஆசாமி அந்த பாட்டையும் மீறி “உன் செல்லேர்ந்து போடு. டவரு கிடைக்குதான்னு பார்க்கலாம். உன்னோடதில பாலன்ஸ் இருக்குல்ல” என்றார்.

“ட்ரை பண்றேன்” என்றாள் அந்த மஞ்ச ஜாக்கெட்.

“இப்ப காலு வெயிட்டிங்ல போவுது” ம.ஜா சிரித்தது.

டவரு, பாலன்ஸ், ச்சுச் ஆஃப், செல், ட்ரை, கால் வெயிட்டிங் என்று சகலரும் பேசும் இந்தியாவின் தேசிய மொழி “செல் மொழி”!
-

Tuesday, April 24, 2012

மன்னார்குடி டேஸ் - முதல் கல்யாணம்!


அது ஊரடங்காத பொதுப்பரிட்சை மேகங்கள் சூழ்ந்த பின்னிரவு நேரம். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட மாடிப்படி ஓரம். எதிரே தெப்பக்குளம் அமைதியாக மறுநாள் காலைக்கு காத்திருந்தது. வீடுதோறும் மாணவக் கண்மணிகள் எப்படியாவது உருப்போட்டாவது தேறிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தது ஆங்காங்கே எரிந்த ஓரிரு விளக்குகள் காட்டியது. ஆனால் கால்குலஸும் சைன் தீட்டாவும் காஸ் தீட்டாவும் அவர்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. ஷீட்டிற்கு அடியில் ஓரத்தில் வாய்க் கட்டப்பட்ட கரி சாக்குமூட்டை. அதை ஈஷிக்கொண்டு அதன் மேல் உப்புமூட்டை போல சாய்ந்து சரிந்திருந்தான் அப்பு. கொஞ்சம் வெயிட்டான பாடி.

”இது என்ன சொல்லு?” அழி ரப்பர் மேல் பென்சிலால் ஏதோ பூச்சி போலக் கிறுக்கியதைக் காண்பித்தான் அப்பு. கேட்கும்போது அவனது கண்கள் ஒளிர்ந்தது. அருங்காட்சியகத்திலிருந்து எடுத்து வந்த அபூர்வப் பொருளாக அரை மணி நேரமாய் ஒன்றும் சொல்லாமல் ரப்பரைக் காட்டிக் காட்டி சிரித்துக்கொண்டே அழிச்சாட்டியம் செய்தான். நான், அப்பு, ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் என்ற நால்வர் கூட்டணியாய் மாடியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தோம். அடியேன் சயின்ஸ், அப்பு வொகேஷனல் ஸ்ட்ரீம், ஸ்ரீதர் காமர்ஸ் ஸ்ரீராம் எங்களுக்கு ஒரு வருஷம் சின்னவன். பொழுதுபோக்குக்கு கம்பெனி கொடுப்பதற்காக எங்கள் கூடாரத்திற்கு வந்தவன். 60 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை. மைக்கேலில் காமேஸ்வரன் ”ச்சே பழவரிசி!” என்று கடிக்கும் ஆர்வத்தில் “என்னடா?” என்றேன்.

அப்பு அன்று நிலைகொள்ளாமல் இருந்தான். “என்னன்னு சொல்லேன்!” என்று கேட்டவன் முகத்தில் டன்டன்னாய் வெட்கம் வழிந்தது. ரூஜ் பூசாமல் கண்ணங்கள் சிவப்பானது போன்ற ஒரு தோற்றம். சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்திருந்ததாலும் சிமெண்ட் பால் ஊற்றி வழிக்காத தரை காலைப் பதம் பார்த்துவிடும் என்பதாலும் காலால் கோலம் போடாமல் கட்டுண்டு இருந்தான். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வாடிக்கையாக இரவு பத்து மணிக்கு மேல் தலைக்குக் கொடுக்கும் (பொதுவாக படிப்பதற்காக எடுத்துவரப்படும்) ஒரு குயர் தலைகாணி சைஸ் அக்கவுண்டன்சி நோட்டால்  அவன் தலையில் ஓங்கிப் போடும் வெறியில் இருந்தான். அப்புவின் சுண்டி விரல் நீள ரப்பரில் ஏதோ கிறுக்கியிருந்தது. அதைக்காட்டி சொல்லேன். நீ சொல்லேன் என்று ”புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” டீஸர் ஆட் போல கேட்டதாலும் காலையிலிருந்து தகித்த வெய்யில் வேறு கட்டியிருந்த வேஷ்டியின் உள்ளே தாராளமாகப் பரவி ப்ருஷ்ட பாகத்தைச் சூடாக்க ஸ்ரீதர் ஏகக் கடுப்பானான். அந்த நேரத்தில் மொட்டை மாடியில் ஏன் இருந்தோம் என்பதை அடுத்த பாராவிலேயே சொல்லிவிடுவது உத்தமம். 

ஊரில் எங்கள் பத்தாம் நம்பர் வீட்டு மாடியும் மாடிப்படியையும் என்னைப் போன்ற திராபை பூட்டகேஸுகளையே பரீட்சையில் தேற்றி வாழ்க்கைப் படியில் ஏற்றிவிடும் என்பது கற்பாந்த காலத்திலிருந்து எங்கள் வீட்டில் உட்கார்ந்து படித்தவர்கள் நம்பிக்கையின் பேரில் கொடுத்த ராசி சர்ட்டிஃபிகேட். மேலும் எனக்கே நான் படிப்பது புரியாத காலத்திலும் என்னை நம்பி நான் சொல்லிக்கொடுப்பதை செவிமடுக்க நாலைந்து பாதை மாறிய ஆடுகள் என்னிடம் தானாய் வந்து சிக்கின. கற்றுக்கொடுக்கும் சாக்கில் பாடங்களை புரிந்து கொள்ள பிரம்மப்ரயர்த்தனப்பட்டேன். பொதுநலத்தில் சுயநலமாய் என்னுடைய அறிவையும் விருத்தி செய்துகொள்ள ஏதுவாய் அமைந்தது. இப்படியாக நாங்கள் படிக்கலாம் என்று புஸ்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கும் அந்த வேளையில் தான் அந்த ருசிகரச் சம்பவம் நடந்தது. ஸ்ரீதருக்கு ப்ளஸ் டூவிலேயே ப்ரஷ் மீசை. அப்புவிற்கு அப்போது அரும்பு மீசை. எனக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் பூனை ரோமங்களாக வெட்கத்தோடு எட்டிப்பார்த்த மீசை. ஆசைப்படுவதற்கு மீசை போதும் என்று நினைக்கிறேன்.

விஷயம் இதுதான். பக்கத்துவீட்டில் புதிதாக குடிவந்த பாரதிக்கு அப்புவைக் கண்டதும் பிடித்துவிட்டது. அவனும் மராத்தி. அந்தப் பெண்ணும் மராத்தி. இருவரும் மிடில் க்ளாஸ். இருவர் வீட்டிலும் விசேஷத்திற்கு ஐங்கிரிமண்டி செய்வார்கள். வந்த ஓரிரு நாட்களிலேயே கண்ணும் கண்ணும் தீப்பொறி பறக்க உரச “143” என்பதை ரப்பர் விடு தூதாக காதலாய் எழுதி அவனிடம் அவளே கைப்படச் சேர்ப்பித்துவிட்டாள். அப்போதிலிருந்து அந்தச் சின்ன ரப்பர் அவனுடைய லப்டப்பை அதிகப்படுத்திவிட்டது. “என்னடா இது ரப்பர்ல எழுதினா லேசா கையால தேச்சாலே அழிஞ்சுடுமே! அதுமாதிரி உன்னோட காதலும்...” என்று வாயாலேயே காத தூரம் ”காதலும்”மை இழுத்து செண்டிமெண்ட் அஸ்திரம் ஒன்றை ஏவி விட்டான் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் கூர்மையான அம்பு வரிகள் அப்புவைப் பாடாய்ப்படுத்தியது. தனது காவியக் காதல் அரும்பும்போதே அதைக் கசக்கிவிட்டானே என்று ரொம்பவும் குறைப்பட்டான். சோகத்தில் அன்றிரவே அவனுக்கு ஒரு முழம் தாடி முளைத்துவிடும் அபாயம் இருந்தது. ”ரப்பரைப் பேப்பர்ல போட்டு அழிக்காம பத்திரமா வச்சிருந்தா ஐ லவ் யூ என்னிக்குமே அழியாதுடா!” என்று தோளைத் தட்டி நான் சொன்ன தேற்றுதல் மொழிக்கும் பக்கத்திலிருந்த ஸ்ரீராம் கேலியாய் மறுமொழியளித்தான். “ஆமாம்டா. அவன் சொல்றதும் நியாயம்தான். எதாவது நாலு வார்த்தை உருப்படியாப் படிச்சா பிரயோஜனமா எழுதினா தப்பும் தவறுமா வந்தா பேப்பர்ல அழிப்போம். சும்மா புஸ்தகத்தோட பாரதி பஜனை பண்ணிண்டுருந்தா ரப்பருக்கு என்ன வேலை இருக்கப்போகுது? பத்திரமா பாக்ஸுக்குள்ள இருக்கப்போற வஸ்துல இருக்கிறது அழிய சான்ஸே இல்ல” என்று மேலும் வெறுப்பேற்றி இதயம் ரத்தம் வர பிராண்டினான்.

முதல்நாள் ராத்திரி ஏகத்திற்கு வெறுப்பேற்றினாலும் மறுநாள் மாலை அப்புவின் காவியக் காதலை எங்கள் குழுவிற்கு அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்தான் ஸ்ரீராம். அப்படி ஒன்றும் மன்மத சொரூபனாக இல்லாத அப்புவிற்குதான் முதலில் ஆள் செட் ஆனது பற்றி தெருவிற்குள் ஒரே குசுகுசுப் பேச்சு. நிறைய வயது வந்த பசங்களின் நெஞ்சம் அப்பளமாய் நொறுங்கியது. தெருவில் பேண்ட் போட்ட நிறைய ரோமியோக்களுக்கு டாவடிக்க தங்களுக்கு ஒரு ஃபிகர் இல்லையே என்று கழுத்துவரைக்கும் குறை. அப்புவை அடித்துவிடும் விரோதமாகப் பார்த்தவர்களுக்கு தங்களுக்கும் காதல் கைகூடாத வருத்தமே தவிர அவன் மேல் பழி ஒன்றும் இல்லை. பனிரெண்டாம் வகுப்பிலேயே இறுதித் தேர்வுக்கு முன் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு பாஸ் ஆனான் அப்பு.

ஒரு வருடம் காதல் கடலில் சந்தோஷமாக நீந்தினான். அவ்வப்போது பெரிய அலையாக வந்த சிலர் இடர்களை துணிகரமாச் சந்தித்தான். மாமலையும் ஓர் கடுகாம் போல மாஅலையும் ஓர் துளியாம் என்று ஜாம்ஜாமென்று காதலித்தான். சைக்கிளில் எம்பி மிதிக்கும்போது, கிரிக்கெட் விளையாட பேட்டைத் தூக்கி ஸ்டம்பை கார்ட்வீலிங்காக கழலவிட்டு அவுட் ஆகும்போது, ராமர் கோயிலில் பிரசாதம் வாங்கித் திங்கும்போது, படிக்கும்போது, தூங்கும்போது, குளிக்கும்போது என்று சதா சர்வநேரமும் அந்த மீசையில்லா பாரதியின் நினைவாகவே அவளின் பக்தனாகியிருந்தான். ஒருநாள் அவன் அந்தக் காதல் சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டபோது நாங்கள் கல்லூரியின் முதலாண்டு இறுதியில் இருந்தோம். வேப்பமர அடியில் மதில்கட்டையில் உட்கார்ந்து தென்றல் காற்று வாங்கிக்கொண்டிருந்த ஒரு சந்தோஷமான இரவு நேரத்தில் ஸ்ரீராம் ஆரம்பித்த இந்த சம்பாஷனைக்கு பதில் அளித்தவன் அடியேன்.

“டேய்! அப்பு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கான்”

“ஓஹோ! சரி...சரி...”

“அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க”

“ம்.. தெரியும்”

“நாமெல்லாம்தான் அவனுக்கு திக் ஃப்ரெண்ட்ஸ்”

“ஆமாம். யாரில்லைங்கறா?”

“அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாமா?”

சடாரென்று தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அதுவரை அமைதியாய் இருந்த தெப்பக்குள அலைகள் ராட்சத உயரத்திற்கு எழும்பி என்னை அதனுடன் அழைத்துக்கொண்டது போல ஒரு உணர்வு.

“அவங்க அப்பா அப்படியே கொத்தா உன் சட்டையைப் பிடிச்சு தூக்கி குளத்துக்குள்ள போட்டுடுவாரு. தெரியும்ல”

“வெங்குட்டு. அதெல்லாம் விடு. எனக்கு நீச்சல் தெரியும். அப்பு தாலி கட்டிட்டான்னா அப்புறம் எல்லாரும் ராசியாயிடுவாங்கடா. நோ ப்ராப்ளம்”

“உஹும். இது ஒத்து வராது. இன்னும் அவனுக்கே அந்த வயசு வரலை. விட்டுடலாம். அவங்க அம்மா திட்டுவாங்கடா. எனக்கு பயமா இருக்கு”

“அப்புக்கு நாம பண்ணாம யார் பண்ணுவாங்க ஆர்.வி.எஸ்” என்று அந்த க்ஷணமே 1000 காதல் ஜோடிகளை கரம் சேர்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என்ற ரட்சகர் ஒருவரின் தீர்மானக் குரல் ஸ்ரீராம் பின்னாலிருந்து கேட்டது. ஸ்ரீராமை மீறி அவன் தலைக்கு மேலே எட்டிப்பார்த்தேன். குரல் வந்த திக்கிலிருந்து தலையை நீட்டினான் அந்தத் திட்டத்தில் ஸ்ரீராமின் கூட்டாளி ராஜா. எம்டிஜே. ராஜா என்று இனிஷியலோடு அழைக்கப்பட்ட அப்பையன் ”ஆந்தை” என்றும் செல்லமாக அழைக்கப்பட்டான். நாங்கள் உட்கார்ந்து பல சத்விஷயங்கள் பேசி பொழுதுபோக்கிய குளத்தோர மதில்கட்டையில் ஈ காக்கா இல்லையென்றாலும் பான்பராக் வாயோடு பராக்கு பார்த்துக்கொண்டு மதிலே சரணாகதி என்று காலம் தள்ளிக்கொண்டிருந்தபடியால் அப்பெயர் வாய்க்கப்பெற்ற புண்ணியவான்.

பேசிக்கொண்டிருக்கையில் சீட்டிலிருந்து எட்டாத சைக்கிளிலிருந்து பொத்தென்று கீழே குதித்து ஸ்பாட்டுக்கு அப்பு வந்து இறங்கியதும் விஷயம் தீவிரமடைந்தது. அவனுடைய எதிர்காலம் ஒளிமயமாவது எங்களின் கையில்தான் இருக்கிறது என்று கையைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். இன்றைக்கு ஒருவரின் காதலுக்கு உதவி செய்தால் ஏழேழ் பிறப்பிற்கும் நம்முடைய காதலுக்கு கை தூக்கிவிட யாராவது உதவுவார்கள் என்கிற எதிர்கால எதிர்பார்ப்பிலும் நட்புக்கு இலக்கணம் தேடித்தரவும் மூவரும் சித்தமானோம். என்னதான் உள்ளுக்குள்ளே உதறல் எடுத்தாலும் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கவேண்டும் என்று மதிலுக்கு கீழே எங்களுடைய எந்தக் காரியத்திற்கும் சாட்சியாய் உறையும் கோதண்டராமரை உளமாற சேவித்தேன். ”ப்ராஜெக்ட் அப்பு” என்கிற கல்யாண சங்கதிக்கு தயாரானோம்.

”இதான் ப்ளான்” என்று ஸ்ரீராம் கல்யாணத் திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கும்போதே குகையினுள் பச்சை, சேப்பு, மஞ்சள் என்று குண்டு விளக்குகள் மாறி மாறி எரிய அதனடியில் பார்பர் ஷாப் ரோலிங் சேரில் உட்கார்ந்திருக்கும் பழங்காலப் படங்களில் வரும் வில்லன் போலத் தெரிந்தான். ஸ்ரீராம் தாவாங்கட்டைக்கு அடியில் சிகப்பு விளக்கு எரிந்தது. “டீச்சர்! உங்க வீட்டுப் பையனா இப்படிப் பண்ணினான்” என்று வீட்டுப் படியேறி நாலுபேர் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் இருந்த என்னை தட்டி “என்னடா புரிஞ்சுதா?” என்று கேட்டான் ஸ்ரீராம். அப்பு கல்யாண அவசரத்தில் இருந்தான். ராஜா பான்பராக் அதக்கியதால் ஏற்பட்ட முயக்கத்தில் சாய்மானமாக நின்றான். விபரீதக் கனவு கலைந்து எழுந்து “ஹம்.... என்ன சொன்னே?” என்றேன்.

“காலையில நீதான் அப்புவை வீட்லேர்ந்து வெளிய அழைச்சுக்கிட்டு வர்றே. என்ன?” என்று என் சட்டை மேல் கை வைத்து அதட்டினான்.

“அழைச்சுக்கிட்டு வந்து........”

“முக்குல மணி டீக்கடை தாண்டி வந்துடு..”

“அப்புறம்?”

“லொடலொடா கவர்ன்மெண்ட் பஸ் இல்லாம வேற எந்த ப்ரைவே கும்பகோணம் பஸ் வந்தாலும் ஏத்திவிட்டுடு. அப்புறமா நாங்க பார்த்துக்கிறோம்”

“ம்.. சரி”

ராஜாவும் ஸ்ரீராமும் மும்முரமாக திருக்கல்யாண ஏற்பாட்டில் குதிக்கும் முன் “கல்யாணம் எங்கேடா?” என்று இக்காதலை சேர்த்துவைப்போர் சங்கத்தில் நானும் ஒருவன் என்கிற தார்மீக உரிமையில் தைரியமாகக் கேட்டேன்.

“சுவாமிமலையில...”

“அங்க யார்டா மத்ததெல்லாம் அரேஞ்ச் பண்ணுவாங்க?”

“நானும் ஸ்ரீராமும் விடிகாலையில கணேசால கிளம்பறோம். நீ ஒரு ஒன்பது மணிக்கா அப்புவை பஸ் ஏத்திவிடு” என்று பலகாலம் ப்ளான் செய்தது போல இருவரும் சாதாரணமாகப் பேசினார்கள். அப்பு திருமண ஆர்வத்தில் கை கால்களில் புதுரத்தம் பாய துருதுருவென்று இருந்தான். எனக்கு வெலவெல.

“பாரதி எப்படி வருவா?” அப்பாவித்தனமாகக் கேட்டேன். என்னுடைய கேள்விக் கணைகளால் துணுக்குற்ற ராஜா திருவிளையாடலில் நக்கீரனை எரித்த சிவாஜி போல என்னைப் பார்த்தான்.

“அதெல்லாம் பேசியாச்சு. அவங்க வீட்ல இதுக்கு சப்போர்ட்டு. அவங்க அங்க அழைச்சுக்கிட்டு வந்துடுவாங்க.” இதுவரைக்கும் ஒரு ஐம்பது பேருக்கு கல்யாணம் பண்ணிப்  பார்த்தவன் போல சகஜமாகப் பேசினான் ஸ்ரீராம். விவரமாக கல்யாண காரியங்களைப் பற்றி பேசப்பேச அப்புவின் கண்களுக்கு விடுவிடுவென்று வளர்ந்து பூமிக்கும் ஆகாசத்துக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றான் ஸ்ரீராம். அவன் வாயிலிருந்து “ஜெய் ஸ்ரீராம்!” என்று வராததுதான் பாக்கி.

இங்கே என் மனசுக்குள் மத்தளம் அடித்தது. பலஹீனமான எனது இருதயம் மாட்டிகொள்வோமோ என்று திக்திக்கென்று அடித்துக்கொண்டது.

“நா அவனைக் கூப்பிடும்போது அவங்கம்மா எங்கடா போறீங்கன்னு கேட்டா என்னன்னுடா சொல்றது?” என்று அப்பாவியாய்க் கேட்டேன். எம்டிஜே ராஜா “கெக்கேக்கே” என்று எக்காளமாக வில்லன் சிரிப்பு சிரித்தான். இரண்டு வீரதீரப் புலிகளின் நடுவில் மாட்டிக்கொண்ட ஆடுபோல பயந்தேன்.

“ம்.. உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணிவைக்க அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லு. உஹும். இது சரிப்படாது. இவன் கெடுத்துடுவான் போலருக்கே அப்பு” என்று மாப்பிள்ளை பையன் வயிற்றில் புளியைக் கரைத்தான் ஸ்ரீராம்.

“வெங்குட்டு. உன்னைத் தான் நம்பியிருக்கோம். நீ ரொம்ப நல்லவன்னு எங்கம்மா உன்னைத்தான் நம்புவாங்க. வாடா வெளியில போவோம்னு கூப்பிடு. அப்படியே வந்துடறேன். ப்ளீஸ்டா” கெஞ்சும் குரலில் கேட்டான் அப்பு. பாரதியைக் கரம் கோர்க்கும் வைபவத்தை எதிர்நோக்கியிருந்தான். கல்யாணம் அவன் கண்ணை மறைத்தது.

மத்திமமாகக் தலையாட்டினேன். “நீ வருவியா இல்லையா. கரெக்டா சொல்லு. அதுக்குத் தகுந்தாப்ல நாங்க ஏற்பாடு பண்ணனும்” என்று சுதியை ஏற்றி கறாராகக் கேட்டான் ஸ்ரீராம்.

“சரி” என்று ஒத்துக்கொண்டதற்கப்புறம் அன்றைக்கு இராத்திரி தூக்கம் வரவில்லை. பிரச்சனை என்று வந்தால் மன்னையின் எந்த மூலையில் ஓடிப்போய் ஒளிந்துகொள்வது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டே படுத்திருந்ததில் பொழுது விடிந்துவிட்டது. வாசற்படியில் உட்கார்ந்து காஃபி குடிக்கும்போது தூரத்தில் வடகரையில் அப்பு வீடு கல்யாண சலனமில்லாமல் அமைதியாக இருப்பது தெரிந்தது. ஸ்ரீதர் அப்பா இன்ஸ்டிட்டியூட்க்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். “குட்மார்னிங் சார்”ன்னேன். காஃபி ட்ராப் ட்ராப்பாக் ட்ரிப்ஸ் போல உள்ளுக்குள் இறங்கியது. பயமாக இருந்தது. குளித்து ஸ்வாமி கும்பிட்டேன். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாப்பிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு என்னுடைய ஹெர்குலஸில் ஏறி காதல் சேவகனாய் அப்பு வீட்டிற்கு அதிரடியாய் விஜயம் செய்தேன்.

வாசலில் அப்பு அப்பா தமிழ்ப் பேப்பரில் மூழ்கியிருந்தார். இருட்டாக உள்ளே தெரிந்த ரேழியில் அவன் அம்மா போல ஒரு உருவம் சேரில் வீற்றிருந்தது. அவர்களது ஒரு கூட்டுக் குடும்பம். அண்ணா, மாமா என்று ஒரு வீட்டிற்குள் ஒரு மராத்திய காலனியே கதம்பமாகக் குடியிருந்தது. கொல்லைவரை நீண்டிருக்கும் வீட்டில் இடம் வலதாய் பல ரூம்கள். பல சொந்தங்கள்.

“கிளிங்..கிளிங்...” மணியடித்தேன்.

மணியோசை கேட்டு “மே ஜான்ந்தா” என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே துள்ளி வந்தான் அப்பு.  அரையில் ஒரு கைலியும் மேலுக்கு ஒரு கட்டம் போட்ட சட்டையும் போட்டுக்கொண்டு தன்னுடைய பிரியமானவளின் இதயத்தை கொள்ளையடித்த திருடன் அதற்கொப்ப காஸ்ட்யூமில் வெளியே வந்தான்.

தாலிகட்டப் போகிறவனின் கட்டம் போட்ட சட்டையும் லுங்கியும் என்னை லேசாக உலுக்கியது. “உனக்கு ட்ரெஸ்ஸு?” வார்த்தைகள் காற்றோடு காற்றாக கரைந்து அவன் காதுகளுக்கு மட்டும் எட்டும் ஃப்ரீக்குவன்ஸியில் ரகஸியமாகக் கேட்டேன்.

“இந்த ஜவ்வுத்தாள் பைக்குள்ள இருக்கு” என்று பாலிதீன் கவரை ஆட்டிக் காண்பித்தான். பயத்துடன் கலந்து அவன் முகத்தில் கல்யாணக் களை தாண்டவமாடியது.

“என்னடா?” உள்ளிருந்து நாகுண்ணா குரலால் எங்களை எட்டினார். மறுபடியும் எனக்கு உதறல் எடுத்தது.

“ஒன்னுமில்லைண்ணா” என்று கொல்லைக்குக் கேட்கும் வரை பெருங்குரலெடுத்து பிளிறினான் அப்பு.

“ம் போலாம்” என்று தயக்கத்துடன் நான் மிதித்த சைக்கிளை தள்ளிவிட்டு பின்னால் ஏறிக்கொண்டான். எனது தர்மம் தவறாத சைக்கிள் இச்செயலுக்கு நடுங்கியது. பேலன்ஸ் செய்து தெருமுனையில் இருக்கும் மணி டீக்கடை தாண்டி மறைவாக அவனை இறக்கினேன். அப்பு கண்களாலேயே நன்றி நவிழ்ந்தான். அவனுடைய குடும்ப உறுப்பினரை ஒத்த உடல்வாகு கொண்ட ஒருவர் ரேஷன்கடை பக்கமிருந்து வர “வெங்...” என்று மென்று முழுங்கி என் பின்புறம் ஒதுங்கினான். சைக்கிள் திரும்பவும் ஒருமுறை நடுங்கியது. இதற்கப்புறம் நான் எங்கு தொலைவது என்று நினைத்துக்கொண்ட என் மனக்கண்ணில் மன்னை ஒரு முறை வீதிவீதியாய் வலம் வந்தது. பதுங்குகுழி அமைத்துக்கொண்டு படுத்தால் ஒழிய மன்னையில் ஒளிய ஓரிடமில்லை.

“வரேண்டா வெங்குட்டு. தேங்க்ஸ்!” கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு பஸ் ஏறினான் அப்பு. பஸ் மேலப்பாலம் திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரே கீழப்பாலம் இருக்கும் திக்கில் சைக்கிளைச் செலுத்தினேன். யாராவது தென்படும் ஆண் பெண் ஜோடியைப் பார்த்தாலே அப்பு பாரதி நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸ்டாண்ட் சந்திப்பில் மூவாநல்லூர் நண்பர் ஒருவரை பார்த்தேன். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் கார்மேகம் போன்ற திருமேனி. கரகர என்று கிழிக்கும் குரல். “ஊர்ல ஒரு கட்டுப்பாடு வேணாம். இளுத்துக்கிட்டு ஓடிட்டான். விரட்டி கும்மோணத்துக்கிட்ட புடிச்சிட்டோம்ல. அந்தப் பயல விட அந்த ஓடுகாலிய விட ஒதவி செஞ்சப் பயல கரண்ட் கம்பத்துல கட்டி பின்னிப்புட்டோம்ல. இனிமே ஒளுக்கமா இருப்பானுவ” என்று ஆவேசமாக பேசினான். உள்ளுக்குள் உடுக்கை ஒலி கேட்டது.  நாகுண்ணா விரட்டி வந்து என்னைப் பிடித்து அவர்கள் வீட்டு தூணில் கட்டுவது போன்ற ஒரு பிரமை எனக்கு.

மதியம் வரை வீட்டிற்கு திரும்பாமல் எப்போதோ ரோட்டில் சிரிக்க மட்டும் செய்த பல ஸ்ட்ரீட் நண்பர்களை தரிசனம் செய்தேன். கையைப் பிடித்துக்கொண்டு நாலு வார்த்தை உளறினேன். பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு எட்டுப் போய் நாலு கவளம் உருட்டிப் போட்டுக் கொண்டு திரும்பிவிடலாம் என்று மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எங்கள் ஏரியாப் பக்கம் சென்றேன். வீட்டினுள் நுழையும் முன் பாட்டி சத்தமாகக் கேட்டாள்.

“அப்பு எங்கேடா?”

“ஏன்? தெரியலையே” எனக்கு நடிக்க வராது என்பது அப்போது தெரிந்தது.

“காலேலேர்ந்து காணுமாமேடா. அவன் அண்ணா வந்தார். உன்னைக் கேட்டார்.”

என் காலுக்கு கீழே சக்கரம் முளைத்தது. குடுகுடுவென்று கொல்லைப்பக்கம் கிணற்றடிக்கு ஓடினேன். கை கால் கழுவிவிட்டு “பசிக்கிறது. சீக்கிரம் சாதம் போடு” என்று தள்ளாத வயதிலிருக்கும் பாட்டியை விரட்டினேன்.

சாதத்தை வாரி வாயில் அடைத்துக்கொண்டேன். பருக்கைகள் வெளியே சிதற “மொள்ளடா” என்றாள் பாட்டி. நாகுண்ணா சைக்கிள் மிதிக்க மிதிக்க அது ஒரு அலாதியான ம்யூசிக் போடும். காதுகளில் பின்னணி இசையாக அவர் சைக்கிளின் மெல்லிசை ஒலித்துக்கொண்டே இருந்தது. “ஒரு டம்ப்ளர் மோர் குடு” கல்லோரலில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த சொம்பில் இருந்து ஒரு டம்ப்ளர் என் வயிற்றுக்கு மோர் வார்த்தாள் பாட்டி.

“வெங்குட்டு... யே... வெங்குட்டு” வாசலில் நாகுண்ணாவின் காத்திரமானக் குரல் கேட்டது. சற்றுமுன் அடித்த மோர் நிமிஷத்தில் வியர்வையாய் பொங்கி வெளியே வழிந்தோடியது. வாசலில் எட்டிப் பார்த்தேன். வியர்க்க விருவிருக்க நாகுண்ணா சீட்டிலிருந்து பாலே நர்த்தனம் ஆடி காலை எங்கள் வீட்டு வெளி வாசற்படியில் ஊன்றி நின்றுகொண்டிருந்தார்.  சீட்டிலிருந்து அவர் கால் தரை தொடாது. குதித்துதான் தரையிறங்கலாம் என்ற உயரம் வரை வளர்ந்திருந்தார்.

“என்னண்ணா?”

“அப்பு எங்கடா?”

“தெரியாதே!”

”உங்கூடத்தானே காலேல வந்தான்”

“தெரியாதுண்ணா”

சந்தேகமாக என்னை ஊடுருவிப் பார்த்தார். கண்ணுக்கு கண் மோதவிட்டார். தலையை தழைத்துக்கொண்டு “அண்ணா கொஞ்சம் அவசரமாப் போகணும்” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டேன்.

சாயந்திரம் வரை ஊர் சுற்றினேன். சுவாமிமலை நிலவரம் தெரியவில்லை. பாரதியும் வீட்டிலில்லை என்கிற விபரம் நிச்சயம் இன்னேரம் தெரிந்திருக்கும். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மனசு அலைபாய்ந்தது. ஆறு மணிக்கு தெருவிளக்கு போட்டதும் கட்டின பசு போல வீதியில் நுழைந்தேன். வடகரையில் அப்பு வீட்டைப் பார்த்துக்கொண்டே பெடலுக்கு வலிக்காமல் மிதித்துக் கொண்டிருந்தேன். கலவரமாக எதுவும் கண்ணில் படவில்லை. வீட்டு வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போடும் போது பாட்டி கேட்டாள்.

“ஏண்டா அப்புக்குட்டியாத்துக்குப் பக்கத்தாத்து பாரதியையும் காணுமாமே”

“அப்படியா! ஐயய்யோ என்னாச்சு” என்று போலியாகப் பதறினேன்.

“திருட்டுப்பயலே! உங்கூடத்தான் அப்பு வந்தானாம். நீதான் சைக்கிள்ள அழச்சிண்டு போனியாம். அவாண்ணா வந்தார். ரொம்ப வருத்தப்பட்டார். என்னடா ஆச்சு” உண்மையை வரவழைக்காமல் விடமாட்டேன் என்கிற ரீதியில் குறுக்கு விசாரணையில் இறங்கினாள் என் பாட்டி. எஃப்பிஐ தோத்துது.

நான் என்ன சொல்வது என்று திணறிக்கொண்டிருக்கும் போது ஆபத்தில் மாட்டிவிட்ட ஸ்ரீராம் ஆபத்பாந்தவனாக வருவது தெரிந்தது.

“என்ன பாட்டி சௌக்கியமா?” குசலம் விசாரித்தான்.

“எல்லாரும் சௌக்கியந்தான். என்னடா நீயும் இவனும் சேர்ந்துண்டு திருட்டுக் காரியம் பண்றேள்” என்று குரலை உசர்த்தினாள்.

“ஒன்னுமில்லை பாட்டி” என்று அசிரத்தையாக பதில் சொல்லிவிட்டு என்னிடம் குனிந்து “அப்பு வந்துட்டாண்டா. வடக்குத் தெருக்கு வா” என்று என் காதைக் கடித்தான்.

“என்னடா குசுகுசுன்னு”  என்ற பாட்டியிடம் ஒன்றும் சொல்லாமல் என்னுடைய சைக்கிளில் அவனும் நானும் விரைந்தோம். தெருமுனை செல்லும்போது என்னுடைய பயம் விஸ்வரூபமெடுத்து என்னை ப்ரேக் போட வைத்தது.

“நீ போடா. நா வரலை” நான் ஜகா வாங்கினேன்.

“வாடா” தரதரவென்று சைக்கிளோடு இழுத்தான்.

“நா எதுக்கு வரணும். விடுடா. ஏற்கனவே நாகுண்ணா ரெண்டு தடவை தேடிட்டுப் போயிருக்கார்” வெடுக்கென்று அவனிடமிருந்து விடுபட்டேன்.

“நீ எதுக்கு வரணுமா? ஆரத்தி எடுக்கத்தான்” என்று அந்தப் பய வேளையிலும் அந்தப் பயல் ஜோக்கடித்தான்.

சைக்கிளை திருப்பி குடுகுடுவென்று ஓடி தள்ளிக்கொண்டு ஏறி தேரடிப்பக்கம் விரைந்தேன். இரண்டு நாட்கள் அப்பு வீட்டிற்கு நேரே ஒரு மானசீக லக்ஷ்மன் ரேகா வரைந்து தாண்டாமல் எனது திருவீதியுலாக்களை சற்றுக் குறைத்துக்கொண்டேன். ஒரு வாரம் கழிந்து எல்லாம் சகஜ நிலைமைக்கு வந்தவுடன் அப்பு அம்மாவே வழியில் பார்த்துக் கூப்பிட்டுக் கேட்டார்கள். “என்னடா! கல்யாணம் பண்ணிவக்கிற அளவுக்கு நீங்கல்லாம் வளர்ந்துட்டேளா?”. பதில் சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்தப் முழிந்து  ”ஹி..ஹி..” என்று வழிந்தேன்.

சென்ற மாதம் ஒருநாள் ஸ்ரீதர் ஃபோன் பண்ணினான். பரஸ்பரம் இருவரும் ஒரு சில சௌக்கியமாக்களுக்குப் பிறகு “அப்புட்ட பேசினியா”ன்னு சாதரணமாகக் கேட்டேன். ”ஹே ஆமாம் சொல்லனும்னு இருந்தேன். போன வாரம் பேசினேன். எப்படி இருக்கே!”ன்னு விஜாரிச்சேன். நல்லா இருக்கேன்னான். அப்புறம் குழந்தைகள்ளாம் எப்படியிருக்குன்னேன்.  “ம் நல்லாயிருக்கான்” ன்னான். “ஓ! பையன் இல்ல.. எப்படியிருக்கான். எந்த ஸ்கூல்”ன்னேன்.  “பி.ஈ செகண்ட் இயர் படிக்கறான்”ன்னான். அப்புறம் தான் ஞாபகம் வந்தது. நம்ம செட்லயே மொதல்ல கல்யாணம் பண்ணின்டவன் அவன் தான்ல!!

ஸ்ரீதர் பேசிமுடித்து ’டொக்’கியபின் புகைய ஆரம்பித்த இந்த கொசுவர்த்தி அணைவதற்குள் எழுதிவிட்டேன்.

பின் குறிப்பு: இது வெள்ளிவிழா அத்தியாயம். மன்னார்குடி டேஸ் எழுத ஆரம்பித்து 25 வது எபிசோடோக கல்யாணத்தில் முடித்துவிட்டேன். மேற்கண்ட படத்தில் அந்தப் பெரிய வேப்பமர நிழலில் இருப்பதுதான் அந்தப் பிரசித்திப் பெற்ற மதில் கட்டை. அதன் கீழ் இருப்பது அ/மி. கோதண்டராமர் திருக்கோயில்.

-

Saturday, April 7, 2012

ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம்

ரொம்ப நாளைக்கப்புறம் ”ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்” என்ற மந்திர ஸ்பீக்கர்கள் தூணுக்குத் தூண் ஒலிக்க நங்கைநல்லூர் ஆதிவ்யாதி ஹர விஸ்வ ரூப பக்தாஞ்சனேயரின் திவ்ய தரிசனம் வாய்க்கப் பெற்றேன். எப்போதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் கோவில்.

செல்லும் வழியெங்கும் தள்ளு வண்டியில் மாவடு விற்கிறார்கள். கொஞ்சம் காம்போடு. காம்பு கிள்ளியது விலை குறைச்சல். மாமாக்களும் மடிசார் மாமிகளும் படி படியாக கேரி பேக்கில் சுமந்து செல்கிறார்கள். ”மாதா ஊட்டாத சோத்தை மாங்கா ஊட்டும்பா” என்ற பழமொழி சொல்லிச் சிரித்த ஒன்பது கெஜம் பாட்டி மங்களகரமான தீர்க்க சுமங்கலி. சினிமா டைரக்டர்கள் யார் கண்ணிலாவது அம்புட்டால் அமுக்கி சதாபிஷேகம் செய்து கொண்ட பணக்கார ஐயர் கேரக்டருக்கு ஆம்படையாள் வேஷம் கொடுத்துவிடுவார்கள். அடுத்த தீபாவளிக்கு டீவிக்கு டீவி பேட்டி கொடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் கூட்டம் அம்முகிறது. இவையனைத்தையும் மீறி ஸ்வாமி சின்மயானந்தா ட்ரஸ்ட்டின் மொபைல் புக் ஸ்டோர் பிரதானமாக என் கண்ணில் பட்டது. “ஷார். ப்ளீஸ் விஜிட் அஸ் ஷார்” என்று வடக்கத்திப் பையன் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கேட்டான். தூரத்தில் என்னைப் பார்த்தவுடனே கொக்கி போட தீர்மானம் செய்தவன் போல தோன்றியது. “வில் ஹாவ் தர்ஷன் ஃப்ர்ஸ்ட், ஆன் மை ரிடர்ன் டெஃபெனட்லி ஐ வில் விஸிட்” என்று அந்த ரஜினி ஸ்டைல் கேசம் கொண்ட விற்பனைப் பையனிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு நகர்ந்தேன். காவிப் பற்களில் ஸ்நேகமாகச் சிரித்தான்.

இங்கே 2/3/4 வீலர்களை விடவேண்டாம் என்று கண்டிப்புடன் சொன்ன போர்டுக்குக் கீழே அனைத்து வாகன டினாமினேஷனிலும் நிறுத்தி அந்த போர்டுக்கு அழகு காண்பித்திருந்தார்கள். காலணிக்கு என்று செய்யப்பட்ட பிரத்தியேக ஷெல்ஃப் அலம்பி துடைத்து விட்டாற் போல இருந்தது. அனைவரும் சௌகரியமாக செருப்பு ஜோடிகளை தரையில் விசிறி எறிந்து கழற்றி மாட்டிக்கொண்டார்கள். நால்வரில் இருவர் காலால் பாண்டி விளையாடி செருப்பு மலைக்குள் தங்களது ஜோடிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கோயிலில் இம்முறை பாண்ட் போட்ட டீன் ஏஜ் பெண் பிள்ளைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. கூடவே “யே அவன் என்ன சொன்னான் தெரியுமா” என்ற வம்பும் இருந்தது. கோதண்டராமர் சன்னிதியில் வெளியில் நின்று அஷ்டோத்திரம் ஒருவர் சொல்ல கடமையாய் ஒரு பட்டர் மாமா கர்பக்கரஹம் அருகே உட்கார்ந்து துளிசிதளத்தை ராமர் காலடியில் வாயைத் திறக்காமல் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். சேவிப்பவர்கள் கண்ணத்தில் போட்டுக்கொண்டு நகர்ந்தார்கள்.

கால் மேல் கால் ஏறாமல், தோளுக்கருகில் ”ஸ்...ஸ்” என்று உஷ்ண மூச்சு விடாமல், ”சந்நிதியை விட்டு நில்லுங்கப்பா. மத்தவங்க எல்லாம் சாமி பார்க்க வேண்டாமா?” என்று அதிகாரக் கூச்சலில்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தார் விஸ்வரூப ஆஞ்சநேயர். “புத்திர் பலம் யசோ தைர்யத்தை” ஒரு நான்கு முறை சொல்லி கண்ணத்தில் போட்டுக்கொள்ளும் போது தோளில் மோதிக்கொண்டே சென்றார் ஒரு பக்தகோடி. இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சென்னைக்கும் தென்னிலங்கைக்கும் இருக்கும் தூரம் காலியாகக் கிடந்தது. சில ப்ரஹஸ்பதிகளுக்கு இடிபாட்டோடு சுவாமி தரிசனம் செய்தால்தான் மனசு திருப்தியடையும்.

கற்பூரம் தட்டிப்போட்ட தீர்த்தம் ஒரு உத்தரணி குடித்துவிட்டு வேணுகோபாலனை தரித்தேன். ஹரித்திராநதி தெப்பக்குளத்தின் நடுவில் வீற்றிருக்கும் வேணுகோபாலன் நினைவில் வந்து வேணுகானம் வாசித்தார். குங்கும பிரசாத்தை அள்ளக்கூடாது என்பதற்காக சுண்டி விரல் நுழையும் ஓட்டைக்குள் அடைத்துவைத்திருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த அந்த லோக்கல் ஐன்ஸ்டீன் வாழ்க! ஆஞ்சநேயரின் உதவியுடன் எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டேன். வடைமாலையிலிருந்து உருவிய வடை பிரசாதமாகக் கொடுத்தார்கள். ஆளுக்கு இரண்டு. வெளியே சென்று சாப்பிடவும் போர்டுக்கு கீழேயே வாயூறிய ஆவலில் நாலு பேர் கடித்துச் சாப்பிட்டார்கள். “வெளியே போய் சாப்பிடுங்க சார்” என்ற செக்கியூரிட்டிக்கு வேலை கொடுத்தார்கள்.

சின்மயானந்தா இளைஞன் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான். தீவிரவாதியிடம் சரணடையும் அப்பாவி போல நேரே மொபைல் புத்தக நிலையத்துக்குள் நுழைந்தேன். சின்மயானந்தா என்னை ஆட்கொண்டார். ஆறுக்கு நான்கில் இருந்த மூன்று பக்கத்தை கண்களால் துழாவினேன். சின்மயானந்தரின் “கைவல்யோபநிஷத்தும் நீதிக்கதைகளும் வாங்கிக்கொண்டேன். “தேங்க்யூ ஷார்” சொன்னான் அந்த இளைஞன்.

“வீட்ல அவ்ளோ புக் இருக்கு. இன்னமும் ரெண்டா?” என்று இடித்த என் தர்மபத்தினியிடம் “இது போன்ற விஷயங்களுக்கு வாங்கும் சக்தி படைத்தவர்கள் சப்போர்ட் செய்தால் தான் அவர்களுக்கு என்கரேஜிங்காக இருக்கும்” என்று சாதுர்யமாகப் பேசி சேதாரத்திலிருந்து தப்பித்தேன். ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம்.
பட உதவி: indianewsreel.com
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails