Showing posts with label மணிரத்ன கதைகள். Show all posts
Showing posts with label மணிரத்ன கதைகள். Show all posts

Sunday, October 22, 2017

உதவி

வாஷர்மேன்பெட் "ரெட்டி ட்ரக்கிஸ்ட்ஸ்". அதோட ஓனர் ரெங்காரெட்டிக்கு கோதாவரிக்கரை ராஜமுந்திரிதான் பூர்விகம். வெங்கலக்ஷ்மி அவருடைய ஒரே செல்ல மகள். ரெட்டிக்கு முப்போதும் பிஸினஸ். எப்போதும் துட்டு. வரவுக்கு முகமலரும் ரெட்டி செலவுக்கு துக்கப்படுவார். பைசா பெயராது. லோபி.
"டாடீஈஈஈஈ..." என்று வெலெ இளமைப் பந்தாய் துள்ளிக்கொண்டே கடைக்குள் ஓடிவந்து கழுத்தைக் கட்டிப்பிடிக்கும் போது ரெட்டி தங்கப்பல் தெரிய பெருமையாகச் சிரித்துக்கொள்வார். அவளது உடை உரசும் அருகாமையில் உட்கார்ந்திருக்கும் ராஜாவுக்கு படபடத்து ஜிவ்வென்றிருக்கும். முழிக்காதீர்கள். ராஜா, கடைப் பையன்.
அன்னிக்கு ரெட்டிகாரு ராஜமுந்திரிக்குச் சென்றிருந்தார். மீசை அரும்பிய ராஜா, மருந்து கடையில் விருந்து கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்தான். வெலெவுடன் லாலிலல்லி பாடி முதலிரவு பூக்கட்டிலில் மல்லிகை மொட்டு முகர்ந்து எதிர்பார்ப்பது வரைக்கும் ட்ரீமினான் ராஜா.
சொப்பனத்தில் எல்லை மீறப் போவதற்குள் வெங்கா புயலென உள்ளே நுழைந்தாள்.
"ராஜா.. துட்டு வேணும்... எடுத்துக்கறேன்.."
"வேணாம்.. எனக்கு அதிகாரம் இல்லை... "
"எங்க கடை.. நான் ஓனர்... ச்சும்மா.. போ.."
"ஏய்.. கல்லால கை வைக்காதே..."
"நீ யாரு கேட்க? ...ஒதுங்கு.. "
கல்லாவுக்குள் இரண்டாயிரங்களாய்க் கிடந்ததை ஒரு கொத்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். எங்கிருந்தோ ஆட்டோ ஒன்று விருட்டென்று வந்து அள்ளிக்கொண்டு மறைந்தது.
**
போதையடிமைகள் ஒதுங்க தோதான, வண்டலூர் தாண்டி ஒதுக்குப்புறமான புதர்மண்டிய பாழடைந்த கட்டிடம்.

"ஸப்பா.. எவ்ளோ கஷ்டமாப்போச்சு.. துட்டை எடுத்துட்டு வர்றத்துக்குள்ள..."
"ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கிற வெங்கா?"
"இல்லை.. இந்தாப் பிடி..."
பணத்துடன் அந்த இளைஞன் தெம்பாக நடந்தான். ராஜாவை அவன் பார்க்க வந்தபோதே வெ.லக்ஷ்மிக்குப் பிடித்துவிட்டது. அந்த பாஸ்கர் ராஜாவின் அண்ணன். கல்லூரி செலவுக்கு காசில்லாமல் திண்டாடியதால் வெ.லெக்ஷ்மி உதவியதைத்தான் நீங்களும் நானும் பார்த்தோம். சுபம்.

பொட்டலம்

பாதி ரோடுக்கு டூவீலரும் அதை அணைத்துக்கொண்டு கார்களும் நிற்கும் நெரிசலானக் கடைத்தெரு. அதைத்தாண்டி விரித்த கோமணம் போல ஒரு சந்து. சந்து கடந்தால் பிரதான சாலை. திவாகர் நாயர் டீக்கடை வாசலில் டூ வீலரில் அமர்ந்திருந்தான். கையில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. நெற்றியில் துண்ணூரும் குங்குமமும் துலங்கின. கண்களுக்கு ரே பேன்.
" நாயரே... ஒரு கட்டஞ்சாயா.." குரல் விட்டான்.
அப்போது தீபா ஒரு லுக்கோடு அவனைக் கடந்தாள். திவாவுக்கு குப்பென்று ஏறியது. ரியர் வ்யூ மிரர் காட்டிய அவளது பின்பக்க தாராளம் இவனைத் தப்புக்கு கூப்பிட்டது.
" நாயரே... சாயா கான்சேல்...". யமஹாவை உதைத்து காதைத் திருகினான். அது ட்ர்ர்ர்ர்ரென்றுக் கதறி புகைக் கக்கி மறைந்தது.
பிரதான சாலையின் பஸ் ஸ்டாப்பில் தீபா எதற்கோ காத்திருந்தாள்.
"ஏய்... ரெடியா?" என்றான் திவா.
"என்ன ரெடியா?"
" தரேன்னு சொன்னியே..."
"இங்க வேணாம். பப்ளிக்கா இருக்கு.. "
"இங்கதான் ஈஸி.. கமான்..."
"ச்சீ.. உனக்கு சொன்னாப் புரியாதா?"
"ரியர் வ்யூ மிரர்ல பார்த்தேனே.. டெம்ப்ட் ஆயிட்டேன்..."
"போடாங்.. எதுனா சொல்லிடப்போறேன்..."
"எவ்வளவு வேணுமோ காசைத் தூக்கி வீசிட்டுப்போறேன்.. வாடா போடான்னா வகுந்துடுவேன்.. ஜாக்கிரதை.."
" இப்ப வேணாம்.. சொன்னாக் கேளு..."
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி திவா தீபாவின் கையைப் பிடித்துத் திருகி பின்புறம் மாட்டியிருந்த பையை இழுத்தான். பஸ் ஸ்டாப் இரும்புப் பிடியில் பை சிக்கி ஜிப் கிழிந்து உள்ளேயிருந்த சின்னச் சின்னப் பொட்டலங்கள் தரையில் சிதறின. அதில் ஒரு கைப்பிடி திவா பொறுக்கிக்கொண்டு டூவீலரைக் கிளப்ப அரக்கப்பரக்க ஓடிய போது அருகாமையில் வந்த ஜீப்பிலிருந்து ப்ரஷ் மீசை இன்ஸ் இன்பநாதன் சிரித்துக்கொண்டே இறங்கிக்கொண்டிருந்தார்.
பின்பாரம் இல்லாத தீபா அப்போது சீனில் இல்லை.

நால்வர் மாயம்

நள்ளிரவு நெருங்கும் நேரம். தனிமையாகக் காற்று வாங்கும் கடற்கரை. உச்சியில் முழுநிலா. எழுந்து அடங்கும் வெள்ளி அலைகள். மேல் சட்டையில்லாத நான்கு சிறுவர்கள் அலை பார்த்தபடி அண்ட்ராயரோடு அமர்ந்திருக்கிறார்கள்.
”டேய்... வீட்டுக்கு ஓடுங்கடா.. மணி எத்தினியாவுது?”
அமைதி.
“டேய்... சொல்றேனில்ல..”
மீண்டும் அமைதி.
“அடிங்.. ரெண்டு போட்டேன்னா தெரியுமா?”
“ஏட்டு.... போன நாயித்துக்கிளமதானே கடையாண்ட வந்து ஒரு கிலோ மீனு வாங்கிட்டுப் போனே....”
“அதனால இன்னாடா... ரொம்ப தெனாவெட்டா?.... சுளுக்கெடுத்துடுவேன்.. பார்த்துக்க.”
“சும்மா எகிறாத ஏட்டு... அடுத்த தபா உனக்கு மீனு வாணாமா?” வளர்த்தியானவன் நெஞ்சு நிமிர்த்திக் கேட்டான்.
“ஹாங்.. திமிரா பேசுறே நீயி.. உன்னிய என்ன பண்றேன் பாரு”
“விஷ்...விஷ்”. காற்றைக் கிழித்து அவர்கள் மேல் படாமல் லத்தி சுழன்றது.
நால்வரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகக் கலைந்தனர். அங்கே கீழே கிடந்த காகிதத்தின் மேல் டார்ச் அடித்துப் பார்த்தார் ஏட்டு சண்முகம்.”பொட்டலம் கிட்டலம் விக்கறானுங்களா?” நினைத்துக்கொண்டார்.
ஒளி வட்டத்தில் தெரிந்த அந்த தினசரியில் “மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வர் மாயம்”. தலைப்பிட்டச் செய்தியை மேய்ந்தார். நிமிர்ந்து பார்த்தார். தூரத்தில் அந்த நால்வரும் தளர்நடையில் சென்றுகொண்டிருந்தார்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails