Showing posts with label டிட்பிட் பதிவு. Show all posts
Showing posts with label டிட்பிட் பதிவு. Show all posts

Tuesday, January 3, 2012

சேவா ரத்னா!

”சேவைகள் பல புரிந்தவரே!” என்று அரசியல்வாதிகளுக்கு வைத்திருக்கும் பேனர்களைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்புடன் பிச்சுமணி மாமா, எங்கம்மா மற்றும் என் சோதரியின் ஞாபகம் தான் வருகிறது.

எலும்பிச்சம் சேவை, மிளகு சேவை, தேங்காய் சேவை, வெல்ல சேவை என்று விதம்விதமாக வாய்க்கு வக்கனையாக சேவை செய்பவர்களுக்கு “சேவா ரத்னா” என்று அவார்ட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
1. பிச்சுமணி மாமா - எங்கள் ஊரின் பிரதான சமையற்கலை வல்லுனர்; எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான நளபாகராக இருந்தவர்.

2. சேவைப் படியில் உருண்டையாக மாவை இட்டு நான் ஏறி நின்று பிழிந்து தர பல சேவை தயார் செய்யும் எனது தாயார்.

3. “தம்பி இன்னிக்கி எங்காத்ல சேவை” என்று வாஞ்சையோடு கூப்பிட்டு பரிமாறும் என் அக்காள்.

#இவங்களுக்கெல்லாம் நானும் மவுண்ட்ரோட்ல பேனர் வைக்கலாம்னு இருக்கேன்.

##எச்சேவை புரிணும் அவர்களுக்கு பகவான், எம்பெருமான் மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சேவை சாதித்து அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.
பட உதவி: http://ashwini-spicycuisine.blogspot.com/
பின் குறிப்பு:  ப்ளாக்குலகத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அக்கப்போர்களையும், துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.

Friday, December 9, 2011

வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்

”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.

இந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் "It's Funny" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.

“சார்! வாங்க வாங்க. கிளம்பலாமா?” என்று உற்சாக வரவேற்பளித்தார் அந்த பிக் கஸ்டமர்.

“போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த எஞ்சினியர்.

“இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.

உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.

“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.

அது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.

“இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.

வெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.

“பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.

“நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.

“இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.

கையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.

பக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.

“ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.

மறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.

கடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.

“இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா?”

“ம்”

சாவியைத் திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி..கிர்...” வண்டி உதறியது.

திரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.

எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.

வண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.

“பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.

எஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா!” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.

“நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.

மறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.

“காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.

“என்ன?”

“வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக நேரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.

கஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)
பின் குறிப்பு: மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.
-

Tuesday, December 6, 2011

தக்காளிக்காரன்

 
ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார்! உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.

10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.

இதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.

பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.

”அச்சச்சோ! ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.

அதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....

“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”
பின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.
பட உதவி: http://www.insidehobokenrealestate.com/
-

Tuesday, November 29, 2011

அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு

ஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது. இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ் நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக் கூப்பிட்டாங்க....

ஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர் குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.

“சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா?” ன்னு சோகமாக் கேட்டாங்க.

“மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே! அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.

##இதனால் விளங்கும் நீதி என்னான்னா
1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.
பின் குறிப்பு: பெருசா எழுத முடியலை.  மற்றுமொரு டிட்பிட் பதிவு.
பட உதவி: oceanstateclassifieds.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails