மேகங்களுடன்
ஒட்டி உரசி உறவாடும் மலையுச்சி. காற்றுப் புகா வண்ணம் அடர்ந்த காடாய்
மண்டியிருந்த பல ஜாதி மரங்கள். ஒன்றுக்கொன்று போட்டியாய் வானத்தில் ஏற
முயன்றுகொண்டிருந்தன. ஏதேதோ இனம் தெரியாத பறவைகளின் க்ரீச்சொலிகள். விண்ணைக்
குடைந்தப் பேய்க்காற்று ஒன்று சமாதானமாயிருந்த மரங்களிடையே பெருஞ் சமர்
மூட்டியது. ஒரு சமயம் ”ஹோ”வென்ற ஆரவாரமும் மறு சமயம் அமைதியுமாக தேசிய அணி
விளையாடும் ஃபுட்பால் ஸ்டேடியம் போல சப்தமாயிருந்தது அக்காடு.
மரங்களுக்குப் புடவை கட்டியது மாதிரி அதைச் சுற்றியிருந்த சிறிதும்
பெரிதுமாக வளர்ந்த பச்சைக் கொடிகள். ஆங்காங்கே கத்தரிப்பூக் கலரிலும்
சிவப்பு வண்ணத்திலும் அச்செடிகளில் பூத்திருந்தது புடவையின் எம்ப்ராய்டரி
டிசையன் போலிருந்தது.
சிகரத்திலிருந்த அம்மரக்கூட்டங்களைக் கடந்து வந்து எவ்வளவு நேரமாய் அந்தக் கரும் பாறையின் மேல் விஸ்ராந்தியாய் சாய்ந்திருக்கிறேன் என்று தெரியாது. வானுலகத்திற்கும் எனக்கும் ஒரு முழம் அளவுதான் இருப்பதாகப்பட்டது. துவக்கத்தில் ஒன்றிரண்டாய் ஆரம்பித்த மழைத் துளிகள் பூமிக்காதலியின் எதிர்ப்பேதுமில்லை என்று தெரிந்துகொண்டபின் சரமாரியாய் அவள் அங்கமெங்கும் ராட்சஷத்தனமாய் முத்தமிட ஆரம்பித்தது. பொழியும் மழை என் மேனி முழுவதையும் தொப்பலாக நனைத்தது. திறந்தவெளியில் என்னுடைய இந்தக் குளியல் காட்சியைத் தூரத்தில் மின்னலொன்று புறப்பட்டு ஆசையாய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது. காதைக் கிழித்த இடியோசையில் சிந்தனை கலைந்து அதிர்ந்தெழுந்த நான் இப்போது ஒரு யானையின் மத்தகஜத்தில் கையூன்றி அமர்ந்திருப்பது போல உணர்கிறேன். புறந்தூய்மை நீரான் அமையும். வெர்ட்டிகோ வராதவர்களுக்குக்கூட கிர்ரென்று தலைசுற்றும் உயரத்திலிருக்கிறேன். கீழே பூச்சிபூச்சியாய் ஏதேதோ தெரிகிறது. காற்றோடு கைகோர்த்துச் செல்லும் மழை இம்மலைக்கு அருகிலிருக்கும் பெருவெளியில் அந்தரத்தில் அலையடிக்கிறது. எனக்குச் சட்டென்று விசிலடிக்கத் தோன்றியது. விஷ்ஷென்ற சப்தம் அமைதியைக் குலைத்து என்னைக் கண்டித்து அமைதியாய் இருக்கச் சொல்கிறது.
ச்சே! மலைக்கு மேலே ஏறி வந்த வேலையை மறந்துவிட்டேன். இதோ பின்புறம் தட்டிக்கொண்டு எழுந்துவிட்டேன். எனக்கான பயணத்தைத் துவங்க உள்ளேன். யாருக்கும் என்னைப் பற்றிய கவலை வேண்டாம். ஏ மரமே! ஏ மலையே! ஏ மழையே! ஏ காற்றே! உங்களுக்கெப்படி உங்கள் வேலை பெரிதோ சுவாரஸ்யமோ அதுபோல எனக்கும் என் தொழில் பெரிது. சுவாரஸ்யம். கையிரண்டையும் சிலுவை யேசுவாக்கித் தலைகுப்புறக் குதித்தேன். இல்லை பறந்தேன். பாதியில் இடையில் சுற்றியிருந்த ஆடை உருவிக்கொண்டு கழன்று என்னை முழு நிர்வாணமாக்கியது. அப்படியே தரை நோக்கிச் சரிந்து கொண்டிருந்த நான் தலை முட்டிப் படாரென்று சுக்கல் சுக்கலாகி மூளை வெளியே சிதறும் போது வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்துவிட்டேன். படபடவென்று அடித்துக்கொண்டது. மணி 8:05. ”ப்ளக்” ”ப்ளக்”. இரண்டு மடக்கு தண்ணீர் குடித்தேன். மாலை தி.நகர் ”வாக்குச் சித்தர்” திகம்பரநாதன் வீட்டிற்குப் போக வேண்டும். பறப்பது போல கனவு காண்பவர்களின் வாழ்வு உச்சிக்கு போய்விடுமாம். உச்சியிலிருந்து கீழே விழுபவர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்க வேண்டும். எனக்கென்ன வேற வேலையா வெட்டியா?
#திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர்க் கற்பனை! :-)
பின் குறிப்பு: தலைப்பிற்கான இன்ஸ்பிரேஷன் தலைவர் மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்.
படத்துக்கு நன்றி: uechi.typepad.com