Showing posts with label போஜனப்ரியா. Show all posts
Showing posts with label போஜனப்ரியா. Show all posts

Friday, April 4, 2014

போஜனப்ரியா

யாராவது டைனிங் ஹாலை அகஸ்மாத்தா எட்டிப் பார்த்தால் கூட அவ்ளோதான். போச்சு. கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து உள்ளே பந்தியில் விட்டார்கள்.

சாயங்கால நேரத்தில் டிஃபன் போய்க்கொண்டிருந்தது. ஹோட்டல் வாசலில் மெனு போர்டு வைப்பது போல சமையல் காண்ட்டிராக்டர் டைனிங் ஹால் ஜன்னலில் பிரதானமாகப் பதாகை கட்டியிருந்தார். இன்ன தேதி இன்ன வேளைக்கு இன்னன்ன ஐட்டங்கள் என்று காலக்கிரமமாக இருந்த சாப்பாட்டுப் பட்டியலை ஒரு மாமா வரிவரியாக நெட்ரு பண்ணிக்கொண்டிருந்தார். இவர் வாயைக் கட்டமுடியுமா என்று பார்த்த நெடுநெடு மாமியின் வாயை எந்தக் கொம்பனாலும் கட்டமுடியாது என்பது அவரது பேச்சில் தெரிந்தது.

நான் நுழைந்த நேரத்திற்கு அசோகா ஹல்வா, பாதாம் ஹல்வா என்று ரெண்டு ஸ்வீட். சுவற்றோர பந்தியில் இருபத்திச் சொச்ச பேர் மலபார் அடை வித் அவியல், மைசூர் போண்டா, சட்னி என்று வயிற்றை வஞ்சனையில்லாமல் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கைக்கும் வாய்க்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருந்தது. கடைக்கோடியில் தண்ணீர் தெளித்த ஏடுகளில் உட்காரவைத்து “சார்! ஹல்வாஆஆஆ...” என்று குழிக்கரண்டி முழுக்க வழித்து வலது கைக்கு எட்டுமிடத்தில் பரிமாறினார்கள். ஆட்காட்டி விரலால் ஹல்வாக்களைத் தடவி வாயில் வைத்துக்கொண்டேன். திடீரென்று இருதயத்தில் பக்கென்று இருந்தது. இடது பக்கத்தில் அமர்ந்திருந்த வாமபாகத்தின் விழியீர்ப்பில் உண்டான மின்சாரம் என்று தெளிந்து அவாசராவசரமாக அவர் இலைக்குப் பார்சல் பண்ணிவிட்டேன். பதிலுக்கு ஒரு “கட்டிச் சமத்து”ப் பார்வை பார்த்தாள். அல்வாவாய் நெஞ்சினித்தது.

எச்ச பத்து ஆன கைக்குக் காஃபி கிடையாது என்று ஹாலோரத்துக் கவுண்ட்டரில் வாங்கிக் குடிக்கச் சொன்னார்கள். பூந்தி தேய்க்கும் பெரிய ஜாரணி கரண்டியின் ஒன்றரை மடங்கு உசரத்தில் இருந்தார் அவர். இடுப்பில் மடித்துக் கட்டிய காவி வேஷ்டி. கையில் காஃபி நிறைந்த வால் பாத்திரம். தோளில் ஒரு சிகப்புக் கலர் காசித்துண்டு. அரை மொட்டைத் தலையில் ஆயிரமாயிரம் வெள்ளி முடி. கல்யாணத்தில் கால் வைக்கும்
அனைவருக்கும் அவர் போட்ட காஃபிதான்.

“ஷுகர் இல்லாமே வேணுமே”. ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் பெல்லாரி உறித்துக்கொண்டிருந்த பவளவாயர் ”இவ்ளோ சின்ன வயசிலேயேவா?” என்று ஐயோபாவப்பட்டு என்னை பாதாதிகேசம் ஸ்கேன் செய்தார்.

“கேன்ல இருக்கிறதே அரை ஷுகர்தான் இருக்கும்.” என்று பல் தெரிய சிரித்துவிட்டு ஆகாசத்துக்கும் பூமிக்கும் காஃபியை ஆற்ற ஆரம்பித்தார். வானத்திலிருந்து வலதுகை பாத்திரத்திலிருந்து வால்பாத்திரத்தில் விழுந்த காஃபி ஸ்கூட்டர் நம்மிடத்தில் கிளம்பி தெருமுனைக்கு செல்வது வரை காதில் விழும் “டர்ர்ர்ர்ர்ர்ர்”ரொலியாக கேட்டது.

“ஒரு சித்தெறும்பு தூக்கிண்டு போற ஷுகர் கூட இருக்கக்கூடாது மாமா” என்றேன். என்னுடைய கடுமையான விரதத்தைப் பாராட்டும் விதமாக என்னை ஊடுருவிப் பார்த்த சங்கீதாவின் கண்களை என்னால் ஜென்மஜென்மாந்திரத்துக்கும் மறக்கவே முடியாது. இப்புண்ணிய பாரதத்தில் சமத்துகளுக்காக கொடுக்கப்படும் பத்ம விருதுகள் எதாவது இருந்தால் மேடம் என்னை உறுதியாக சிபாரிசு செய்திருப்பார்கள்.

ஸ்ட்ராங்க் காஃபி. நாக்கில் லேசான கசப்பு. காஃபி குடித்த கையோடு அவரிடம் “ஸ்வீட் மாஸ்டர் யாரு?”ன்னு கேட்டேன். ”உக்கிராணத்துல இருக்கார்” என்றவரை “நான் பார்க்கணுமே....” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கேட்டேன். சமையற்கட்டினுள் நுழைவதற்கு முன்னரே சூரியனை எட்டித் தொடும் தூரத்திலிருப்பது போல தகித்தது. பெரிய இலுப்பச்சட்டியில் தேங்கியிருந்த எண்ணெய்க் கடலில் பூந்தி போட்டுக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ மூக்கினுள் சர்க்கரைப் பாகு வாசனை வெள்ளமெனப் புகுந்தது. ராண்டம் ஷுகர் ஐநூறைத் தொட்டதைப் போல தலையை கிர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. “உங்களைப்
பார்க்கணுமாம்” என்று காண்பித்துவிட்டு காஃபி கவுண்ட்டருக்கு விரைந்தார் ஜாரணி கரண்டி.

ஸ்வீட் மாஸ்டருக்கு கை குலுக்கினேன். என் கையிலும் எண்ணெய் பிசுக்கு ஏறியது. இரத்தக்காட்டேரி மனுஷ்ய ரூபத்தில் வந்தது போல வாயெல்லாம் வெற்றிலைக் காவி. உதட்டோரத்தில் ஒரு சொட்டு வழிந்திருந்தது. சுகந்த சுண்ணாம்பைக் கிரிக்கெட் பந்து அளவுக்கு உருட்டி உள்ளே தள்ளியிருக்கிறார். வாய்க்கு டியோடரண்ட். “ஸ்வீட் சூப்பரா இருக்கு! பஜார்ல கடை வச்சீங்கன்னா பிச்சுக்கிட்டுப் போகும்” என்று மனதார வாழ்த்தினேன். “நன்றி” சொல்லக் கூட நாணப்பட்டு வேஷ்டி நுணியைத் தூக்கி முகத்தைத் துடைத்துக்கொண்டார். அறுபது வயதிருக்கலாம். இதுவரை லட்சோபலட்சம் ஸ்வீட் செய்திருப்பது அவரது கேஷுவல் அப்ரோச்சில் தெரிந்தது.

திருவிடைமருதூர் மகாலிங்கத்தைப் பார்த்துவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்தோம். இரவு சாப்பாட்டிற்கு சொற்ப கூட்டமே இருந்தது. பேரன் பேத்தி கண்ட இள தாத்தா பாட்டிகள் அங்கே ஒரு குட்டி ராஜ்ஜியம் அமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகாமையில் கிடைத்த இரண்டு இளம் இலைகளில் நானும் அவளும் பதவிசாய் அமர்ந்தோம். இரண்டு வாய் அமைதியாகச் சாப்பிட்டப் பக்கத்து மாமா சன்னதம் வந்தது போல நிமிர்ந்து “யாருய்யா அது...” என்று ஹாலதிரக் குரல் விட்டார்.

பரிமாறும் கூட்டம் பதைத்தது. “என்ன மாமா? என்ன வேணும்?” என்று இருவர் வாளிகளில் சாம்பாரோடும் ரசத்தோடும் வந்துவிட்டார்கள். அவர் கண்கள் ஊறுகாயாய் சிவந்திருந்தது. வந்த வேகத்தில் தலையில் கொட்டி அபிஷேகம் பண்ணிவிடுவார்களோ என்று பயந்தேன். “பந்தியை கவனிக்காமே கூடி நின்னு அரட்டையடிச்சுக்கிட்டிருக்கீங்க... உம்.. நா யாருன்னு தெரியுமா? இல்ல.. யாருன்னு தெரியுமான்னு கேக்கறேன்..” என்று எகிற ஆரம்பித்துவிட்டார். எச்சிலைக்கு முன்னால் ருத்ரதாண்டவம். பிபி பேஷண்ட் போலிருக்கிறது. கை கால் கரண்ட் கம்பியைப் பிடித்தது மாதிரி உதறியது. அவருக்கும் சாம்பார் கரண்டி பிடித்தவருக்கும். காண்ட்ராக்டர் சஃபாரி சூட்டில் ஓடி வந்தார். வாழை இலைகளுக்கு ஓரம் நறுக்கி செம்மைப் படுத்திக்கொண்டிருந்தவர் கத்தியாதிபாணியாக அங்கே வந்தார். கூட்டம் களை கட்டியது.

“நான் பேசிப்பார்க்கட்டுமா?” என்று மேடத்திடம் அடிக்குரலில் ரகஸ்யமாக உத்தரவு கேட்டேன். “வேண்டாம்” என்று கட் அண்ட் ரைட்டாக அதே டெஸிபலில் கட்டளையிட்டார்கள். பக்கத்தில் லௌட் ஸ்பீக்கராய் சத்தம். பொறுக்கமுடியாமல் ”நான் பேசறேனே” என்று பார்வையால் மீண்டும் கெஞ்சினேன். “ஐயோ.. மிஞ்சாதே..” என்று பதிலுக்கு அவளும் பார்வையில் கண்டித்தாள். ”உருளை...” என்று வந்தவரை ”மாமாக்கு போடுங்கோ...” என்று அவர் பக்கம் திருப்பினேன். இதே உத்தியை அடுத்தடுத்த வாளி, பேசின், கூடை என்று விதவித பாத்திரங்களில் வந்தவைகளை திருப்பிவிட்டேன். கையில் பதார்த்தத்தோடு தாண்டுபவனெல்லாம் ஒரு கரண்டி அந்த இலைக்கு சாய்த்துவிட்டுச் சென்றான்.

கோஸு அடுக்கிக்கொண்டிருந்தவர், முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டிருந்தவர், ஆயில் டின்னை உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருந்தவர் என்று பல அணியில் இருந்தவர்களும் ஒரு சேனையாய்த் திரண்டு போர்புரிய வியூகம் அமைத்து நின்றார்கள்.

ஒரு பத்து நிமிட சத்தத்துக்குப் பிறகு “சார்! நீங்களே சொல்லுங்க...” என்று என்னை நாட்டாண்மையாக்கித் திரும்பினார். ”இவ்ளோ நாழி வாயை அடைத்து உட்கார்த்தி வைத்திருந்தவன் வாயை அனாவசியமாய் குச்சி எடுத்து நோண்டுகிறாரே” என்று அவள் விசனப்பட்டது என் மூளைக்கு ப்ளூ டூத்தில் ட்ரான்ஸ்ஃபர் ஆயிற்று.

வேட்டை கிடைத்ததே என்று முதலில் அவர் பேசப் பேசச் சிரித்தேன். இரண்டு நிமிடங்களுக்கு ஆச்சா போச்சோவென்று அவர்களைத் திட்டினார். “நாடு எப்படிங்க உருப்படும்?” என்கிற தேசியநலக் கேள்விகளும் இதில் அடக்கம். கடைசியில் நான் ரெண்டு வாசகம் அவரிடம் பேசினேன். வாயே திறக்காமல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ எழுந்துவிட்டார். நான் என்ன கேட்டேன் என்று கேட்கிறீர்களா?

“உங்க இலையில எல்லாமே இருக்கே! இன்னும் உங்களை எப்படி கவனிக்கணும் மாமா?”

அடைக்கும் உண்டோ தாழ்!

சாஸ்திரத்துக்கு ஒரு வெல்ல அடை சாப்பிட்டேன். ஊத்துக்குளி வெண்ணை தடவி. ஏழெட்டு உப்பு அடை மளமளவென்று உள்ளே இறங்கியது. பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமில் நட்ஸ் போட்டா மாதிரி கடிக்குக் கடி காராமணி வாயில் நிரடியது. பல்லு பல்லாய்ப் பதித்த தேங்காயோடு காராமணியும் அரைபட்டு உப்படையின் சுவையை அமிர்தத்துக்கு ஒரு படி மேலே தூக்கியது. தொட்டுக்க முருங்கைக்காய் சாம்பார். வாய்க்கு அதிர்ஷ்டம். சிம்பிள் டிஃபன் ஆனால் பவர்ஃபுல்.

வருஷம் முழுக்க நாம தாஸனதாஸனாய்க் கொடுத்த மரியாதைக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பதில் மரியாதை கிடைக்கும். ஒரு நெருங்கிய உறவுக்காரரிடம் ”என்ன.... மரியாதை கிடைச்சுதா?”ன்னு ஃபோனில் ராகமாக விஜாரிக்கும் போது சொன்னார் “அப்படியெல்லாமில்லைடா.. இப்பவெல்லாம் அகஸ்மாத்தா கல்லிலியோ கட்டையிலியோ தடுக்கிண்டாக் கூட என் கால்ல மட்டும் விழுந்துடக்கூடாதுன்னு உஷாரா இருக்காடா. பக்கத்துல சுவத்தையோ மரத்தையோ கெட்டியாப் பிடிச்சுக்கிறா...” என்றார். “கால்ல விழுந்தா நீங்க காலாண்டு பெட் ரெஸ்ட்தான் ஓய்..” என்று முணகிவிட்டு “பாவம்... ஒரு அடிப்படை மரியாதை கூட கிடைக்கிலியே” என்று அங்கலாய்த்தேன். உம். கண்டிப்பா கடைசில் “த்சொ..த்சொ..” உண்டு.

”சண்டை போட ஆளில்லைன்னா வாழ்க்கை சுரத்தா இருக்காதுன்னு சத்தியவானைப் போய் எமன்ட்டேயிருந்து மீட்டுண்டு வந்தாடா சாவித்திரி...” என்றெல்லாம் ஊரில் ஒய்ஃபிடம் உதை வாங்கும் அண்ணாக்கள் சிலர் அபவாதம் பேசிக் கிண்டலடிப்பார்கள். ஆத்தில் எவ்வளவு மொத்து விழுந்தாலும் காலரைத் தூக்கிவிடும் கேஸ்கள். நான் அந்த ஜாதி இல்லை. இன்று வெல்லடை உப்படை எப்படியிருந்தாலும் நொட்டை சொல்லாமல் சாப்பிடவும். “நாக்கை இழுத்து வச்சு அறுக்க...” என்று திட்டு கிடைக்கும். ஜாக்கிரதை. பகவத் பிரசாதம் உடம்புக்கு நல்லது.

“தீர்க்க சுமங்கலி பவ:” என்ற ஆண்களுக்கான ஆசீர்வாதங்கள் நிரம்பும் ”ஹாப்பி காரடையான் நோன்பு!”

சேவை செய்!

”சேவை நாழி துருப்பிடிக்காத வீட்டில் ஒரு நாழியும் வயிற்றிக்கில்லை தீது”ன்னு ஒரு மூதுரை ஊர் வழக்கில் உண்டு. ”என்னடா கதையிது” என்று நெற்றி சுருக்குபவர்கள் இதையே மூதுரையாகக் கொள்க. மூஞ்சி கை கால் அலம்பி இடுப்பில் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு “என்னம்மா டிஃபன்?” என்று சாப்பிட உட்கார்ந்தால் சுடச்சுட சுருள் சுருளாய் மெத்மெத்தென்று சேவை. என்னையறியாமல் குஷியில் “மானிட சேவை துரோகமா?” என்று சற்று உரக்கவே பாடிவிட்டேன்.

சர்க்கரைக் கொட்டிக் கலந்து செய்யும் வெல்ல சேவை இலை சம்பிரதாயமான முதல் ஐட்டம். சேவையின் சூட்டுக்கு சர்க்கரை கொஞ்சம் ஜலம் விட்டுண்டு சேவையின் ஒவ்வொரு இழையையும் தித்திப்பில் குளிப்பாட்டியிருந்தது. பார்க்கும்போதே இனிப்பாக இருந்தது. நாக்கு ஊறிச் சப்புக்கொட்டினாலும் நேக்கு கிடையாது.

அடுத்த ஏனத்தில் மஞ்ச மசேர்னு இருந்த எம்பிளச்சம்பழ சேவையில் வயிற்றுக்குச் சேவையை ஆரம்பித்தேன். “புழுங்கரிசியில பண்ணினேன்டா” என்ற அம்மாவின் இதழோரத்தில் சிறு புன்னகை. ”காலுக்கு நடுப்பற வச்சுக்கோடா” என்று அடுப்பிலிருந்து சுடச்சுட உருண்டை பாலை கரண்டை பேட்டில் கொண்டு வந்து நாழியின் வாயில் தள்ளுவாள் பாட்டி. ”உங்க கொள்ளுப் பாட்டி வாலாம்பாளுக்கு அவாத்திலேர்ந்து சீரா வந்ததாம்....” என்று பாட்டி சொல்லும் போது நாழியின் மேலே மரியாதை ஏற்பட்டு பக்தியாக பிழியத் தோன்றும்.

புஜபல பராக்கிரமனாக நாக்கைத் துருத்திக்கொண்டு நிமிஷமாய்ப் பிழிவேன். ஆரம்பத்தில் “ப்ர்ர்ர்..ர்ர்..” என்றெல்லாம் வரும் அபான வாயு சப்தத்தில் “பாட்டி.. நீ சொல்லுவியே... செல்லக்கு_வே பல்லிடுக்கில பூந்தாயே.. அதுதான் இது...” என்ற போது ”படவாப் பயலே”ன்னு சிரித்த பாட்டியின் முகம் தட்டில் தோன்றியது. ”மோர்க்கொழம்பு உட்டுக்கோடா....” என்று தட்டிலிருந்து பாட்டியின் குரலுக்குப் பதிலாக “கொழம்புதான் இருக்கு.. மோர்க்கொழம்பு பண்ணலை...” என்று அம்மாக் குரல் பக்கத்தில் கேட்டது.

வறுத்த கடலைப் பருப்பு ஒன்றிரண்டு கடைவாய்ப்பல்லில் அரைபட்டு எ.சேவையின் ருசியை இன்னும் இரண்டு மடங்கு ஏற்றிற்று. இக்கணம் என் இஷ்ட தெய்வம் நேரில் தோன்றி “என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டால் “வறுத்த கடலைப் பருப்புப் போட்ட சேவையும் தொட்டுக்க மோர்க்குழம்பும் தரும் அட்சயப்பாத்திரம் தா” என்று தெண்டனிடுவேன். ஊரில் ஒரு முறை சேவை தேவப்பிரசாதமாக இருந்த போது “இன்னும் கொஞ்சம்....இன்னும் கொஞ்சம்”என்று பறக்காவெட்டியாகத் திண்டினேன். பதிலுக்குப் பாட்டி கேட்டாள் “நா வீட்டுக்குதான் சேவை பண்ணினேன். இந்த வயசுல என்னால நாட்டுக்கா பண்ண முடியும்?” டைமிங்கில் அசத்துவாள் அப்படி!!

மிளகு சேவை வாய்க்கு ஆரோக்கியமாக இருந்தது. வாய்க்குள்ளே இண்டு இடுக்கெல்லாம் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணினா மாதிரி ஒரு ஜிவுஜிவு சுகம். ”ஸ்..ஸ்ஸ்ஸ்”ஸென்று ஜில்லுக்கு காற்றை இழுத்து ”ஃபூ” என்று ஊதும் போது வாயிலிருந்து ட்ராகன் போல தீப்பொறி பறந்தது. மிளகு காரம் புரைக்கு ஏறாமல் இருக்க தேங்காய் சேவைக்குத் தாவினேன். பொன்நிறமாக வறுபட்ட முந்திரி வாய்க்கு அகப்பட்டது. இந்திரன் தோட்டத்து முந்திரியோ என்றெண்ணும் படியாக அம்முழு முந்திரி அமைந்தது. “ராவேளையில ரொம்ப தேங்கா வாண்டாம்டா....” என்பாள் பாட்டி. “சாதா சேவை கொஞ்சம் இருக்கு.. போட்டுண்டு கொழம்பு இல்லைன்னா மோர் ஊத்திக்கோ....” என்று அம்மா சொன்னாள்.

இப்படியாகப்பட்ட சேவாலோகத்திலிருந்து மனசேயில்லாமல் எழுந்திருக்கும்போதுதான் அதைப் பார்த்தேன்.

பாத்திரத்தில் சேவைகள் தீர்ந்துகொண்டிருக்கும் போது மூலையோர டிவியில் சீரியல் சேவைகளாகக் கதாபாத்திரங்கள் வழியாகப் பிரஜைகளைப் போட்டுப் பிழிந்துகொண்டிருந்தார்கள்.

#வயிற்றுக்கும்_சேவை_செய்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails