Showing posts with label பக்தி இலக்கியங்கள். Show all posts
Showing posts with label பக்தி இலக்கியங்கள். Show all posts

Saturday, November 17, 2012

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி

நம்பிஆரூரான் என்கிற சுந்தரரும் கழறிற்றறிவார் என்கிற சேரமான் பெருமாள் நாயனாரும் அணுக்கமானத் தோழர்கள். சேரமான் பெருமாள் தினமும் திருவஞ்சைக்களத்தில் சிவ பூஜை செய்து முடித்தபின் தில்லை நடராஜப் பெருமானின் காலில் இருக்கும் சதங்கை கிணிங் கிணிங்கென்று ஒலிப்பது அவரது காதுக்கு கேட்குமாம். அப்படி சப்தமெழுந்தால் அன்றைய பூஜையில் எதுவும் குறையில்லை என்று சந்தோஷப்பட்டு கோவிலிலிருந்து விடைபெறுவாராம் சேரமான் பெருமாள். 

ஒரு நாள் நெடுநேரமாகியும் சலங்கைச் சத்தம் கேட்கவில்லை. மிகவும் கவலையுடன் இன்று நமது பூஜையில் ஏதோ குறையிருக்கிறது என்றெண்ணி தன்னுடைய உடைவாளை உருவி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேளையில் “சேரமானே பொறு. சுந்தரனின் தமிழ்ப்பாடலில் என்னை சற்றுநேரம் மறந்திருந்தேன்.” என்று அசசீரியாய் ஒலித்து காலிலிருந்த சதங்கைகளை ஒலிக்கச் செய்தாராம் சிவனார். தான் செய்யும் பூஜையை விட அடியார் ஒருவரின் தமிழ்ப்பாடலில் இறைவன் தன்னை மறந்தான் என்ற செய்திகேட்டதும் அந்தச் சுந்தரரைப் பார்க்க விழைந்து அவருடன் நட்பு பூண்டு இறுதியில் இருவரும் கைலாயம் சேர்ந்தார்கள் என்பது பெரியபுராணக் கதை.

அந்தச் சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி என்ற ஒன்றை சைவத்திற்கு அருளிச்செய்திருக்கிறார். அதன் முதலில் வரும் அந்தப் பாடல் படிக்கப் படிக்க, படித்துக் கேட்கக் கேட்க தெவிட்டாத தெள்ளமுது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.


நடைமுறைத் தமிழில் இருப்பதால் பெரிய விளக்கமேதும் தேவைப்படாவிட்டாலும் ஒருமுறை இங்கே இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எழுவது என் கைக்குக் கிடைத்த பேறு.

பொன் எந்த வண்ணமோ அந்த வண்ணம் அவருடைய மேனியாம், கருமேங்களுக்கிடையிலிருந்து எழும் மின்னல்கள் போன்றது அவருடைய விரித்த சடையாம், வெள்ளிக் குன்றுவின் வண்ணம் என்னவோ அதுதான் அவரேறும் வாகனமாகிய விடையின் நிறம். மால்விடை என்று எழுதியதற்கு அர்த்தம், திரிபுரசம்ஹாரத்தின் போது திருமாலே அவருக்கு விடை வாகனமாக வந்தார் என்பது புராணம். கடைசியில் சேரமான் எழுதிய அந்த வரிதான் இந்தப் பாட்டின் இனிமைக்கே உச்சம். தான் சிவனைக் கண்டால் எவ்வளவு இன்பமடைவாரோ அவ்வளவு இன்பம் தன்னைக் கண்ட ஈசனுக்கும் என்றார். இறைவனையும் தன் நண்பனாக சேரமான் பெருமாள் நாயனார் இழுத்துக்கொண்ட வரலாறு இது.

இக்காலத்தில் கண்ணதாசன் போன்றோர் ”பால்வண்ணம் பருவம் கண்டு” என்றெல்லாம் மெட்டிற்கு எழுதிய காதல் பாடலும் அக்காலத்தில் “கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்று சக்கரவர்த்தித் திருமகனைக் கம்பன் போன்றோர் அர்ச்சித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

#என்வண்ணம் மாறி எவ்வண்ணம் இவ்வண்ணம் எழுதினேன்!!

Wednesday, November 23, 2011

அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்

நல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்?” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா?” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. கோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.

இருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.


மை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது?” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார்.

கொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....

மனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா?

விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.

பின் குறிப்பு:  இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.

பின் பின் குறிப்பு: நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன்.  க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails