ஷங்கர் என்ற அல்சேஷன் நாயொன்று என்னுடைய அரைடிராயர் வயதில் என்னை விடக் கொழுகொழுவென்று எனக்கு மேல் வளர்ந்து எங்களது வீட்டில் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது. வாசலில் கட்டிப்போட்டிருப்பது தெரியாமல் பதவிசாகப் படுத்திருக்கும். “ஐயா” என்று யாராவது கதவில் கைவைத்தால் விரலை ஃபிங்கர் சிப்ஸாக சாப்பிடும் ஆர்வத்தில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு எகிறும். வாசலில் நிற்பது பிச்சைக்காரரா அல்லது காய்கறிக்காரரா என்பது அதன் விதவிதமானக் மாடுலேட்டட் குரலில் கொல்லையில் நமக்குப் புரியும்.
கூர்மையான கொத்தும் பார்வை. பொசு பொசுவென்று வால். கருப்பும் செம்பைட்டையுமான நிறம். பூச்சி போல தேசலாக யாரவது மானிடர்கள் அகப்பட்டால் அப்படியே அபேஸ் பண்ணிவிடும் பசிப் பாய்ச்சல். தகப்பனார் காலையில் வாக்கிங் அழைத்துப்போகும் போது கொலைக் குற்றவாளிகளைக் தேடிக்கண்டு பிடிக்கும் தொனியில் அவரை இழுத்துக்கொண்டு வேலி காம்பௌண்ட் சுவரோரம் மோப்பம் பிடித்துக்கொண்டே அவரை இழுத்துக்கொண்டு ஒதுங்கும். வருவதைப் பார்த்தாலே பத்தடி தூரத்திற்கு அதன் வழியில் எதிரில் எவரும் நிற்க அஞ்சுவர்.
நாய் நன்றியுள்ள விலங்கு என்பதைத் தவிர அதனிடம் சில நப்பித்தனங்கள் அதிகம்.
1. சொந்தக்காரக் கூட்டமாக இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளாக இருந்தாலும் ஒரு நாய் மற்ற நாய்களை விரட்டிவிட்டுதான் எச்சிலையிலோ ரோட்டோர பழையதிலோ வாயை வைக்குமாம். எல்லைத்தகராறு மட்டுமல்ல சொந்தத்தகராறும் உண்டு.
2. தெருவோர சாக்கடைக்கு அருகில் நின்று தான் தின்றதை வாயிலிருந்து உமிழ்ந்து மறுபடியும் தின்னும் எச்சி புத்தி நிறைய உண்டு.
3. சுத்தமாக காய்ந்து போன எலும்புத்துண்டாக இருந்தாலும் வாயில் கவ்வி கடிக்குமாம். அப்போது தனது பற்களிலிருந்து வழியும் ரத்தத்தை அந்த எலும்புத்துண்டிலிருந்து வழியும் ரத்தமாக எண்ணி ருசித்துச் சாப்பிடுமாம்.
இந்நாயின் செய்கைகளை நமது வாழ்க்கைக்கு உதாரணம் காட்டி இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில்...
அறநெறி தவறி அழிந்தவர்கள் வாழ்வில் கண்ட துன்பங்களைச் சந்தேகமின்றி அறிந்த நெஞ்சே; உமிழ்ந்த எச்சிலை மறுபடியும் உண்ண விழைபவர்கள் போலே அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் நிதம்நிதம் போராடுகிறாய் கலங்குகிறாய்; முன்னோர்கள் சிவகதியடைந்த வாழ்வைப் பின்பற்றாமல் நெஞ்சே, என்னை உன் இஷ்டத்திற்கு இழுத்து இழிந்த நாயை விடக் கேவலமாக இருக்க வைத்த உன்னை நான் அடைந்து என்ன பயன்? என்று கேட்கிறார்.
தலைப்பிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வரி உடலும் உள்ளமும் நலந்தானா. இந்த ப்ளாக் சரித்திரத்தில் இவ்வளவு நாள் கடையை மூடிவிட்டு நான் வனாந்திரம் சென்றதில்லை. சிட்டுக்குருவி தலையில் எட்டு மூட்டை அரிசியை ஏற்றிவிட்டாற் போல இருபது நாட்களாக வேலை அதிகம். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு அடாசு கணினிக்கு ஒன்பது பேர் இழுபறி போட்டி. ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தும் ஆசுவாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. மிக்ஸர், ஓமப்பொடி வகையறா ”வாய்மூடா” தீனியைக் கொரிப்பது போல இந்த ஃபேஸ்புக் வேறு பிசாசாய் பிடித்துக்கொண்டது.
அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களையும், க்ஷேம லாபங்களையும் ஓரிரு வரிகளில் சுளுவாக முகப்புஸ்தக சுவரில் கிறுக்கி நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள ”உரித்த வாழைப்பழம்” சாப்பிடும் சௌகரியத்தில் இருப்பதால் பிறவிச் சோம்பேறியான நான் அங்கேயே கொட்டாய் போட்டு குடியிருந்துவிட்டேன். 2012-ல் நிறைய எழுத வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறேன். பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.
சென்ற ஆண்டும் பம்பரமாக சுற்றி பல வேலைகள் பார்க்கவேண்டியதாயிற்று. வழக்கம் போல வீட்டிலும், ஆபீஸிலும் என்னை ஸகித்துக்கொண்டவர்களுக்கு ஒரு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். வருஷாரம்பத்தில் இன்னென்ன இப்படியிப்படி செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தாலும் ஜெட் வேகத்தில் காலம் இறக்கை கட்டிப் பறக்க நிறைய மனோரதங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் இருபுறமும் ஆவேசமாகக் கட்டியணைத்து வரும் வண்டிகளுக்கு முத்தமிடாமல் சென்றுவருவது கம்பி மேல் நடக்கிற காரியம். 2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.
செடன் ஜாதிக் கார் வாங்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. மாருதி கம்பெனிக்காரர்கள் மூலைக்கு ஒரு சர்வீஸ் செண்டர் ஓப்பன் செய்தும், இந்திய ரோடுகளின் தர நுட்பங்கள் அறிந்தவர்கள் என்பதாலும் அவர்களிடமே டிசையர் வாங்கி என் டிசையரை பூர்த்திசெய்துகொண்டேன்.
சென்ற ஆண்டின் இறுதியில் சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. முகப்புஸ்தக நண்பர்கள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புத்தகப் புழுவாக இருப்பவர்களின் சங்காத்தம் கிடைத்திருக்கிறது.
இதற்கு மேல் எழுத இப்போது நேரமில்லை. பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து மாங்காடு காமாக்ஷி தரிசனம். இப்போது கண்ணைச் சுழற்றுகிறது. இந்த வருடத்தில் நிறையவும் நிறைவாகவும் எழுத முயல்கிறேன். கருத்துரைத்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் நெஞ்சுக்கினியவர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
WISH YOU A HAPPY & PROSPEROUS
NEW YEAR
பின் குறிப்பு: இப்பதிவின் பூர்வாங்கத்தில் இருப்பது அடியேன் கிளிக்கிய 2011-ன் கட்டக் கடைசி சூரிய அஸ்தமன வானம். ”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.
என் ஸீமந்த புத்ரி வினயா பத்து தடவை கீழே இருக்கும் வாசகத்தை படபடவென்று என்னை சொல்லச் சொல்லி நாக்கை சுளுக்க வைத்தாள்.
வாழைப் பழத் தோல் வழுக்கி கிழவன் கிழவி குழியில் விழுந்து எழுந்து அழுதனர்!!
தமில் வால்க!! போன வாசகத்தை வழுக்கிச் சொன்ன நாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.
பத்து தடவை படுவேகமா சொல்லி ரிகார்ட் பண்ணி முகப்புஸ்தகத்தில் வலையேற்றுபவர்களுக்கு ஒரு ஆரூடம் சொல்கிறேன்
ஏழேழு ஜென்மத்துக்கும் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழியும்........
கொழுப்பைப் பார்ர்ர்ரா....... கடைசி வாசகத்திலும் எவ்வளவு “ழ”ன்னு..... கொழுப்புல ஒரு ’ழ’... ச்ச்சே.... பொழப்பைப் பாருங்கப்பா...
மீண்டும் இன்னொரு ‘ழ’.... உன்னையெல்லாம் பழுது பார்க்கனும்யா...
இவன் பழக்கவழக்கமே வேண்டாம்ப்பா இவனைக் கழுமரத்தில ஏத்துங்கப்பா என்று பழிசுமத்தி ஏற்றிவிடாதீர்கள்.
என்ன பொழுது போகலையான்னு கேட்பவர்களுக்கு.....
தமிழினிது.... குழலினிது... யாழினிது.... :-))))
கழுகுக் கண்ணால் வெறித்து கழுத்தை நெறிக்க ஓடிவரும் தோழர்களிடம் ஒரு வார்த்தை...
நான்
ஒரு அப்பழுக்கற்ற பழுத்த பழம்... கல்லடி படலாம்... ஆனால், கழுத்தை
நெறித்தால் பூமிக்கு கனமழை வழாது... ச்சே... வராது.. மழுப்புகிறேன் என்று
நினைக்காதீர்கள்.
மழுமழுன்னு
ஷேவ் பண்ணிக்கிட்டா கூட ஐன்ஸ்டீனுக்கெல்லாம் “ழ” வராது. அப்புறம் எதுக்கு
நாக்க இவ்ளோ பெரிசா நீட்றார்!! பாவம் இந்த மனுஷனுக்கு இழுக்கு!!
#பார்க்கலாம் எவ்ளோ தமிழ் மழலைகள் கழனி, பழனி, மழு, புழு, கழி, மழி, பிழி என்று பல “ழ”வைக் கமெண்ட்ல போடறீங்கன்னு.....
கொழுகொழு மாதிரி இரட்டைக் கிளவிகள் கூட எழுதலாம்.
எல்லாம் உங்க சுழி...
நம்ம டாஸ்மாக்கின் சொந்தபந்தங்கள் மாதிரி சொல்லனும்னா... குழ் நைழ்...
வெட்டி வேலை...
பின் குறிப்பு: முழு மூச்சாக உட்கார்ந்து எழுதுவதற்கு நேரமில்லை. காதல் கணினி வேற பாதியில் இருக்கு. முகப்புஸ்தக நண்பர்களிடம் பகிர்ந்தது. உங்கள் பார்வைக்கும்...
சர்வர் குண்டு போட்டதைத் தொடர்ந்து அடுக்கடுக்காக நிறைய வேலைகள். என் கர்மவினைப் பயன் குறுந்தொடர் ஒன்று ஆரம்பித்தாலே தலைக்கு மேலே வெள்ளம் போல ஆளை மூழ்கடிக்கும் வேலைகள் வந்துவிடுகிறது. பகவான் உங்கள் எல்லோரையும் என் எழுத்தில் இருந்து காத்து ரட்சிக்கிறார் என்று நினைக்கிறேன். வாழ்க வையகம். இராப்பொழுதுகளில் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று பாடிய பட்டினத்தார் படித்துக் கொண்டிருக்கிறேன். காதறுந்த ஊசியை டவுனான சர்வரும் என்று மாற்றிப் போட்டு படித்தால் கூட பட்டியின் வாசகம் எனக்கு முழுமை அடைகிறது. சர்வரின் தொல்லையால் பட்டினத்தடிகளை நாடவில்லை. அடிக்கடி என் சிந்தை வேதாளம் அந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கும். படித்ததிலிருந்து மனதை நிரப்பிய சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
உண்டதே உண்டு உடுத்தியதே உடுத்தி உரைத்ததே உரைத்து கண்டதே கண்டு கேட்டதே கேட்டு கழிந்தன நாளெல்லாம்.
- திருவெண்காட்டுத் திருவிசைப்பாவில் பட்டினத்தார்
#இந்த ஒரு வாரம் இப்படித்தான் கழிந்திருக்கும் என்று பட்டினத்தார் என்றைக்கோ பாடிட்டு போய்ட்டார்! முக்காலமும் உணர்ந்த ஞானி அவர்.
பின் குறிப்பு: சனிக்கிழமை ப்ளாக் வெறிச்சோன்னு கிடக்கக் கூடாதுன்னு ப்ளாக் சாஸ்த்திரங்கள் சொல்வதால் வளவளான்னு இல்லாமல் சின்னதா இந்தப் பதிவு. ஆனா இந்த டோஸ் நிச்சயம் ஒரு ரெண்டு மூணு நாள் தாங்கும்னு நினைக்கிறேன். பின் நவீனத்துவ தலைப்பு வைத்ததற்கு மாப்பு தாருங்கள். பட்டினத்தாருக்கு நன்றி.
இன்றைக்கு அப்பாக்கள் தினம். கதை, கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு திராணியில்லை. அதனால் இந்த அப்பாவியின் ஒரு அப்பாக் கட்டுரை ஜல்லி.
ஆயிரம் அப்பாக்கள்
கண்ணை உருட்டி முறைத்துப் பார்க்கும் அப்பா.
பெல்ட்டை உருவி பட்டையைப் பேர்க்கும் அப்பா.
தோளில் கை போட்டுத் தோழனாய் சில அப்பா.
தனது செய்கைகளினால் ஆசானாய் சில அப்பா, அசடாய் சில அப்பா.
மகனைப் பார்த்து முகம் நிமிர்த்தி பேசாமடந்தை அப்பாக்களும் இந்த யுகத்தில் உண்டு.
எதற்கும் சிரித்துக்கொண்டு டேக் இட் ஈசி அப்பாக்கள் சிலர்.
வார நாட்களில் காலை மாலை பணிகள் கழுத்தை நெரிக்க ஞாயிற்றுக்கிழமை அப்பா.
குழந்தை தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு உப்புமூட்டை சுமக்கும் இப்போது அப்பாவான புது அப்பா!
தான் சுமந்த குழந்தைகள் தன்னைச் சுமக்கும் குழந்தையான வயசாளி அப்பா.
ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா.
சொத்துள்ள அப்பா, சொத்தையான அப்பா.
குமாரப்பா, மாரப்பா, பங்காரப்பா, செல்லப்பா, கிட்டப்பா, கண்ணப்பா, திம்மப்பா, பட்டப்பா, குட்டியப்பா, வீரப்பா, ராஜப்பா, அப்பாதுரை, அப்பாசாமி, பக்கத்து வீட்டு வாண்டுவின் அப்பா... பிள்ளையாரப்பா......... ஸ்... அப்பப்பா எவ்வளவு அப்பாக்கள். பெரியப்பா, சிற்றப்பா, ஒன்றுவிட்ட ரெண்டுவிட்ட பெரிய சிற்றப்பாக்கள் என்று அப்பாக் கூட்டம் நிறைய குடும்பங்களில் ஏகத்துக்கும் உண்டு.
எல்லா அப்பாக்களுக்கும் இன்று எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்.
இந்த சரக்கோட, கொஞ்சம் சினிமாவையும் கலந்து டாடீஸ் ஸ்பெஷல்..
பெல் பாட்டம் பீச் காற்றில் அலைபாய பாக்யராஜ் பட "டாடி டாடி ஓ மை டாடி" பாடல்:
ரெண்டு ஆண் சிங்கங்களுக்கு அப்பாவான பின்னும் அர்விந்த் சாமி எல்லா அப்பாக்களின் ஆசையை சொல்லும் விதமாக பொட்டப்புள்ள பெத்துக் குடு என்று பாடும் பம்பாய் பாடல்..
அப்பா பெயரச் சொல்லி கூப்பிட்டு கல்லூரி வகுப்பை விட்டு கார்த்திக் அழைத்து வரும் ரேவதி... அப்புறம் 05:15ல் ரெஸ்டாரெண்டில் அப்பாவுக்கு பயந்து மறைந்து கொள்ளும் போது மிஸ்டர் சந்திரமௌலி என்று கலாய்க்கும் கார்த்திக். எண்பதுகளில் காதல் காட்சிகளில் புரட்சி ஏற்படுத்திய சீன் இது.
இரு இமயங்கள் அப்பா-மகன் வேஷத்தில் நடித்த தேவர் மகனில் இருந்து ஒரு காட்சி
பின் குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்சா அப்பா பதிவு... அப்பாடி....
இந்தப் பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் சிலருக்கு தமிழில் உப்புமா, தெலுங்கில் உப்பிண்டி, கன்னடத்தில் உப்பிட்டு என்றால் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் "பிடிக்காத வார்த்தை". காதை மூடிக்கொண்டு காத தூரம் ஓடிவிடுவார்கள். ஏன் என் சுற்றம் நட்பில் நிறைய பேருக்கு அதைக் கண்டால் ஒருவித அஜீரண அலர்ஜி. அதையே தாரளமாக அரைப்படி சர்க்கரை சேர்த்து ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு கேசரி பவுடர் கொஞ்சம் தூவி இறக்கினால் ரவை மிச்சம் வைக்காமல் அந்தக் கேசரியை எல்லோரும் தட்டை நக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். எனக்கு ரவா உப்புமா ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணம் ஆன புதிதில் என் தர்மபத்தினி கொழகொழன்னு கூழ் மாதிரி கிண்டின "ரவா உப்புமா" (எ) "ரவா பேஸ்ட்" ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடடா.. என்ன ருசி. என்ன ருசி. அல்வா போல தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பதிலுக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்தேன். "பிடிச்சிருக்கா?" என்று கையில் கரண்டியோடு ஒரு எதிர்பார்ப்பில் கேட்டபோது மூணு வயசு மானஸா மாதிரி கை ரெண்டையும் சிறகாக அகல விரித்து "அவ்ளோ பிடிச்சிருக்கு"ன்னு மனமாரச் சொன்னேன்.
ராத்திரி பதினொன்னரைக்கு பொட்டியும் கையுமாக வந்திறங்கும் திடீர் விருந்தாளிகளுக்கு பசிப்பிணி தீர்க்கவல்லது ரவா உப்மா. பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு பனிரெண்டுக்கு காலை நீட்டிப் படுத்து குறட்டை விடுவார்கள். செய்வதும் ஈசி, உண்பதும் ஈசி. ஜீரணமும் ஈசி. தொட்டுக்க ரெண்டு ஸ்பூன் சர்க்கரை எதேஷ்டம். முதல்நாள் ராத்திரி மாங்காய்த் தொக்கோடு ரவா உப்புமாவை பிசிறி சாப்பிட்ட என்னுடைய உறவினர் ஒருவர் மறுநாளும் நாக்கைச் சப்புக் கொட்டி அதே காம்பினேஷன் ரிப்பீட்டு கேட்டார். ரவா உப்புமா இந்தக் கால ஃபாஸ்ட் ஃபுட்டுக்கேல்லாம் தலைவன்.
அரிசி நொய் உப்புமா வித் கத்திரிக்கா கொஸ்த்து தேவாமிர்தமா இருக்கும். வெங்காய சாம்பார் கூட அதன் பொருத்தமான ஜோடிதான். ஒரு சமயம் கோயில் குளம் என்று மாயவரம் பக்கம் சுற்றியபோது ஊருக்கு வெளியே வாசலில் "டிபன் ரெடி" போர்டு போட்ட சிற்றுண்டி ஹோட்டலில் போய் உட்கார்ந்து ஆசையாய் "இட்லி"ன்னு கேட்டா "ஒரு அரை மணி ஆவும்"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு அழுக்கு கையை உள்ளே விட்டு தம்ளர்ல தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அகாலத்தில் "வேறென்ன இருக்கு?" என்று பசியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஈனஸ்வரத்தில் முனகியதில் வந்த பதில் "உப்பூ......மா...". ஒரு கட்டு கட்டினேன்.
என்னுடைய உறவினர் வட்டத்தில் காற்றடித்தால் பறந்து மாயமாய் மறையும்படி ஒல்லியாக ஒரு மாது இருப்பார். கை, கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருக்கும் நவீன அணிகலன்களின் எடை அவரை காற்றிடம் இருந்து காப்பாற்றும். கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவை புரியும் கிம்புருடர்கள் கழுத்தில் கிடக்கும் மாலை எலும்பாக இருப்பார். "தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இரு" என்று அடிக்கடி எச்சரிப்பேன். ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் முதல்நாள் முகாமில் சாப்பிடுவதற்கு தட்டை ஏந்தி "எனக்கு உப்புமா.." என்று கும்பலாக நீட்டியபோது "நீ உப்புமா" என்று நான் சொன்னதற்கு வெகு நேரம் யோசித்தார். "கிண்டல்" என்று புரிந்தும் அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தபோது அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி "உப்பு", சிரித்துக்கொண்டே "மா" என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன். சற்றுநேரம் வரை மலங்கமலங்க விழித்தது தட்டை கீழே போட்டுவிட்டு கொலைவெறியோடு என்னை துரத்த ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.
"அது ஒரு உப்புமா கம்பெனி சார், எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடிப் போய்ட்டானுங்க" என்று இகழ்வோர் ஏன் உப்புமாவை உபயோகிக்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. கொஞ்சம் கத்திரிக்கா, தக்காளி, உருளைக்கிழங்கை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு கடுகு தாளிச்சுக் கொட்டி கிளறி இறக்கினா "கிச்சடி நல்லா இருக்கு.. கிச்சடி பேஷா இருக்கு"ன்னு ஐந்தாறுமுறை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். "இன்னிக்கி ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கலை?" என்று சிரம் தாழ்த்தி அனேக கோடி நமஸ்காரங்களுடன் பவ்யமாக கேட்டால் கூட "ச்சே. இந்த உப்புமா பொறாத விஷயத்துக்கு ஏன் இப்படி கூச்சல் போடரான்"ன்னு சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். ஒதுக்கித் தள்ளட்டும், இருந்தாலும் "உப்புமா பொறாத விஷயம்" என்று சொல்லவேண்டுமா?
சாம்பாரில் வெல்லம் கரைத்து தித்திப்பாக சாப்பிடும் கர்நாடக தேசத்தில் "ரவா பாத்" என்று ஸ்டைலாக பெயர் வைத்து விற்கிறார்கள். பணி நிமித்தம் பெங்களூரூ செல்லும்போதெல்லாம் ரவா பாத்தும் கொஞ்சம் இனிப்பு தூக்கலாக இருக்கும் சாம்பாரும் சேர்ந்து வயிற்றை நிரப்புகிறது. அங்கே பந்தியில் பாயசத்திற்கு பதில் சாம்பார்தான் முதலில் இலையில் வைப்பார்களோ? ஆயாசமாக இருக்கிறது.
இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக சாட்டையடியாக இந்த வாரத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் நாக்கு செத்துப் போன இந்திய கும்பலுக்கு வடிச்சு கொட்டும் Floyd Cardoz என்பவருக்கு சமையல் போட்டியில் $100,000 பரிசு கிடைத்துள்ளது. நியூயார்க் நகரத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்த தப்லா என்ற இந்திய உணவு உபசரிக்கும் ஹோட்டலில் பணிபுரிந்தார் ஃபிளாயிட். தப்லா இப்போது யூனியன் ஸ்கொயர் ஹாஸ்பிடாலிட்டி குரூப்பிடம். கான்சரில் இறந்த தன் தந்தையின் நினைவாக தான் கெலித்த பரிசுத்தொகை முழுவதையும் கேன்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்படி ஒரு உன்னதமான நோக்கத்திற்கு உதவிய உப்புமாவை இனிமேல் யாரும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பார்களா?
ஐரோப்பிய அமெரிக்க இத்தாலிய பீட்ஸா பாஸ்தா போல ஒரு ஆறு மாதத்தில் "டயல் எ உப்புமா" என்று சிகப்பு கலர் பொட்டியை டூவீலர் பின்னால் கட்டிக்கொண்டு அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் கொண்டு வந்து பொட்டலமாய் கொடுத்துவிட்டு போவார்கள். கெட்டிச் சட்னி சாஷேக்களில். "பிச்சூஸ் உப்மா இஸ் மை ஃபேவரிட் ஃபுட்" என்று கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்ட திரையுலகக் கனவுக் கன்னி யாராவது பனியனோடு கவர்ச்சியாக விளம்பரங்களில் வருவார்கள். "சூப்பி உப்புமா" என்று குடிக்கலாம் சாப்பிடலாம் வகையறா வெளியிடுவார்கள். உப்புமாவை நீர்க்க காண்பித்து காஜோலை உறிஞ்சி சாப்பிட வைத்து விளம்பரப் படுத்துவார்கள். இட்லி தோசைக்கு பதில் திஹாரில் உப்மா பரிமாறப்படலாம். வேண்டாத மாப்பிளைக்கு தான் மாமனார் வீட்டில் உப்புமா கிண்டி போடுவார்கள் என்ற எண்ணம் மாறுவது திண்ணம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இனிமேல் உப்மா பிக்கப் ஆயிடும்.
பின் குறிப்பு:இந்த உப்புமா மேட்டரை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மேற்கண்ட பாராவில் நான் அறிவித்துள்ள வியாபார உத்தியை பயன்படுத்தி தொழில் தொடங்குவோர் எனக்கு ராயல்டி வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பட உதவி:www.sailusfood.com மற்றும் archives.starbulletin.com
1. மளிகை சாமான்
ஒருத்தனுக்கு சாமியக் கண்டாலே வேப்பங்காயா பிடிக்காதாம். நீங்க நினைக்கிற மாதிரி சாமிங்கறது பக்கத்து வீட்டு ஆசாமி இல்லை. கோவிலில் இருக்கும் கும்புடுற சாமி. ஆனால் அவன் பொண்டாட்டிக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தியாம். எப்போப் பார்த்தாலும் ஸ்லோகம், ஜபம், தபம்ன்னு பக்தி பழமா இருப்பாளாம். இவன் நாஸ்திகனா இருந்தாலும் பொண்டாட்டியோட பக்தியை குத்தம் குறை சொல்லாம அவ இஷ்டத்துக்கு சாமி கும்பிட விட்டுட்டானாம்.
ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.
அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம். இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.
அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.
இது எப்படி இருக்கு?
********************
*******************
2. அமெரிக்கனுக்கு விடுதலை
அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.
"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.
"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.
அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.
"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.
ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!
பின் குறிப்பு: உங்களோட பக்கத்துல உட்கார்ந்து அரட்டை அடிக்கறா மாதிரி ஒரு பதிவு எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த ரெண்டு குட்டிக் கதை மூலமா தீர்த்துக்கிட்டேன்.
என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகள் ஆபிசில் உழைத்துக் கொட்டிவிட்டு அக்கடான்னு கிளம்பி வீட்டிற்கு சென்று ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு கட்டையை நீட்டலாம் என்ற எண்ணத்தில் மின்னல், இடி மற்றும் மழை மூன்றும் நேற்றிரவு இறங்கியது. மாலை ஆறு மணியில் இருந்தே குழாயடி சண்டை போல கடமுடாவென்று வானத்தின் ஒரு மூலையில் இருந்து கருவிக்கொண்டிருந்தன.
ஆங்காங்கே கலைந்து கிடந்த தொண்டர் மேகங்களை தலைவர் மேகம் கை பிடித்து ஒரு கூட்டமாக அழைத்து வந்தது. திரண்டு வந்த மழை மேகங்கள் கொஞ்சநஞ்சம் தெரிந்த சூரியனை மிரட்டி உள்ளே போகச் சொல்லிவிட்டு பூமியோடு ஒரு காட்டு யுத்தம் நடத்தியது. வானம் பார்க்க நின்ற அவ்வளவு இடங்களும் அழுக்கு தீர ஆசையாய்க் குளித்தன. ஆனாலும் ஒரு மணிநேரக் குளியல் கொஞ்சம் அதிகம் தான்.
சேப்பாயி குளித்துவிட்டு மங்களகரமாக நின்றது. மழைக்கு நனையாமல் ஓடிவந்து ஏறிக்கொண்டேன். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மழை அலம்பி துடைத்த ரோடில் வண்டி வழுக்கிக் கொண்டு ஓடியது. ஆங்காங்கே யானைக்கு பள்ளம் பறித்தது போல பொறி இருந்த ரோடில் கழுகுக் கண்ணாக பார்த்து குறி தவறாமல் ஓட்டினேன்.
CMBT என்ற தரைவழி பன்னாட்டு முனையம் ஒன்று கோயம்பேடு என்ற திவ்ய க்ஷேத்ரத்தில் இருக்கிறது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தலத்தைக் கடந்து தான் நான் என் உறைவிடம் செல்ல வேண்டும். ஆங்கே நட்டு வைத்திருக்கும் சிக்னல் கம்பங்களை ஏதோ துணி காயப் போடும் கொடிகம்புக்கு சமமாக மதித்து பேருந்து ஓட்டுனர்கள் கட் அடித்து ஓட்டுவார்கள். சிக்னலின் சிவப்பும், மஞ்சளும், பச்சையும் திருவிழாவுக்கு கோயிலுக்கு கட்டிய சீரியல் பல்புகள். சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் போலீசு "இவர்கள் இவ்ளோ சாமர்த்தியசாலிகளா?" என்ற வியப்புடன் மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். நேற்றைய ராட்சஷ மழை நேரத்தில் அந்தக் கோயம்பேடு பேருந்து நிலையம் குருஷேத்ரம் போல காட்சியளித்தது.
கோயம்பேடு முனையத்தில் இருந்து வெளியூர் செல்லவும், உள்ளூர் பஸ்கள் முனையத்திற்கு உள்ளே செல்லவும் ஏகநேரத்தில் எத்தனித்தன. எப்போதுமே கோயம்பேடு யார் அரசாட்சியில் வருகிறது என்று உள்ளூர் வெளியூர் டிரைவர்கள் மத்தியில் ஒரு மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருக்கும். நேற்று மழையை சாக்காக வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தனது ரதங்களை முகத்திற்கு முகம் நிறுத்தி மழை சாட்சியாக அடித்துக் கொண்டார்கள்.
ஒரு நானூறு மீட்டர் தூரத்தை கேவலம் இரண்டே மணி நேரத்தில் கடந்தேன். இதுபோல சுற்றமும் சூழமும் கட்டியணைத்துக் கொண்டு நடுவீதியில் நிற்கும் நேரத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையே இருக்காது. ஆட்டோ அன்பர்கள் தன் மூக்கை நுழைத்து பத்து பேரை ஏற்றி தொப்பை பெருத்த தனது வாகனத்தை கிடைத்த கேப்பில் அவசரமாக திணிப்பார்கள். இரண்டு காலையும் பப்பரக்கா என்று பரப்பிக்கொண்டு, பத்து வருஷமாக சென்னையில் வண்டி ஓட்டினாலும் பத்து நாளைக்கு முன்னால் தான் டூ வீலர் பழகியது போல, கார் போகவேண்டிய இடைவெளியில் இருசக்கர வாகனம் ஓட்டும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் கோஷ்டி அடிக்கும் லூட்டி அலாதியானது. காலை மடக்கி வண்டிக்குள் வைக்கும் பொது மறுபடி ப்ரேக் அடித்து ஒரு ஆட்டம் ஆடி காலைப் பரப்பிக்கொள்வார்கள். லைசென்ஸ் கொடுத்த ஆர்.டி.வோவை பசித்த புலி தின்னட்டும். வாத்தியாருக்கு நன்றி.
இன்னும் சிலர் கிடைத்த சந்தில் சிந்து பாடும் இளஞ்சிட்டுக்கள். ரோடு ரோமியோக்கள் ஒரு கழைக் கூத்தாடியின் லாவகத்தோடு வண்டியோடு ப்ரேக் டான்ஸ் ஆடி கோதாவில் நுழைவார்கள். நம்முடைய கார்க் கண்ணாடியை உரசி பக்கத்தில் வந்து நின்று ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போல ஜன்னல் ஊடுருவி உற்று நோக்குவார்கள். நேற்றைக்கு ஒரு இருசக்கரானாதி வயிற்றை பிடுங்கிய பசியில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து எதிர்திசை கையேந்தி பவன் பரோட்டா கடைக்கு சென்றுவிட்டார். தன் பங்கிற்கு அந்த நூறடி ரோடில் இரண்டடி அவர் எடுத்துக்கொண்டார்.
பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாமல் எல்லா பேருந்துகளும் திணறிக்கொண்டிருக்க, அவற்றின் உள்ளே நிற்க திராணியில்லாமல் கையில் பெட்டியோடும், இடுப்பில் புட்டிப்பால் குடிக்கும் குழைந்தையோடும் அட்சதை போல பெய்துகொண்டிருந்த மழையில் இறங்கி நடந்தார்கள். சமூக நலனை கருத்தில் கொண்டு ரோடோரத்தில் பள்ளம் நோண்டிய ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் செயற்கரிய செயலில் ஒருவர் பையோடு கீழே விழுந்து அந்த சாக்கடை சமுத்திரத்தில் முழுகி முத்தெடுத்தார்.
பஸ் ஸ்டாண்டில் பாலிதீன் கவர் மூடி பானி பூரி விற்கும் வடக்கத்திய இளைஞர்கள் சிலர் அந்த மழை நீரை சுவை நீராகக் கருதி பானியுடன் பானியை கலந்து கரையேறி சென்றார்கள். நாளைக்கு வெய்யில் அடித்தால் நனைந்த பூரி இன்னும் சுவையாக இருக்கலாம். ஒரு மாதிரி வாசனை அடித்தால் பேர் பாதி விலையை குறைத்து விற்பனையை கூட்டலாம். மதியூக விற்பனையாளர்கள் ஜெயிப்பார்கள்.
பதினொன்று முப்பதிற்கு என்னுடைய நன்நடத்தை காரணமாக ரிலீஸ் செய்தார்கள். முக்கி முனகிய சேப்பாயி எடுத்தாள் ஒரு ஓட்டம். இரண்டு நாட்கள் முன்னால் ஏதோ வெளிநாட்டு சதியில் சாலையோர பெருமரத்தின் கிளை ஒன்று முறிந்து என்னுடைய சேப்பாயியின் முகத்தில் விழுந்து அழகுச் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த துர்ப்பாக்கிய நிலை இன்றும் நேரக்கூடாது என்று பயந்து சாலையை பார்த்த நேரத்தை விட அண்ணாந்து பார்த்து வண்டி ஒட்டிய நேரம் தான் ஜாஸ்தி. நல்லவேளை எங்கள் பேட்டையில் நான் நுழையும் வேளையில் ஊர் அடங்கியிருந்தது.
வகைவகையான இலவசங்கள் அள்ளித் தரும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் வெள்ளை வேஷ்டி சட்டை மகோத்தமர்கள் இதுபோல பொது அவலங்களை களைவதற்கு முயற்சி எடுத்தால் அவர்கள் வீட்டில் இரவோடு இரவாக பொன் விளையும். இது அகஸ்தியர் அவரது ரஸவாத புத்தகத்தில் எழுதியிருக்கும் ரகசியக் குறிப்பு.
பின் குறிப்பு: இதுபோல மராத்தான் இன்ச்சிங் காம்பெடிஷன் போட்டிகளின் போது கொரிப்பதர்க்கோ குடிப்பதற்கோ கையில் ஏதோ சரக்கு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது நேற்றைய இராக்கூத்தில் நான் கற்ற நீதி!
பட உதவி: vinodvv.posterous.com (இது நேற்றைய மழையில் எடுத்தது அல்ல. இருந்தாலும் எல்லா மழைக்கும் பொருத்தமான சாலைப் படம். என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த ப்ளாக் எழுதுபவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்(பார்ப்பதற்கு) மும்முரமாக இருப்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் ஏதாவது கிறுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (செமி மற்றும் ஃபைனல் பற்றிய கட்டுரையாக இருக்கலாம்!)
அதுவரை உங்களுக்கு தற்காலிக விடுதலை!
இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற கனவுகளுடன்......
தென் தமிழ் நாட்டின் ஒரு மூலையில் கிரிக்கெட் விளையாடிய...
பாவம் ஒரு பொண்ணா அவளும் என்ன தான் செய்வா. உன் கூட மாரடிக்கறதே அவளுக்கு வேலையாய்ப் போச்சு.
இதே வேற யாராவது செஞ்சிருந்தா அவ்ளோதான். ஈவ் டீசிங்க்ல புக் பண்ணி மாமியார் வீட்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி வூடு கட்டி கவனிச்சுருப்பாங்க.
நான் அப்படி என்ன பண்ணினேன்னு மீசையை முறுக்கி கேக்கறியா. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். கல் நெஞ்சக்காரன் நீ.
அவ யார் தெரியுமா? அவளோட ஸ்டேடஸ் தெரியுமா உனக்கு? அவங்க வீட்ல அவ சொல்றதை தான் எல்லோரும் கையை கட்டி எதிர் பேச்சு பேசாம அடக்கமா கேக்கறாங்க. அவளுக்கு அவ்ளோ மருவாதி. நீ கொஞ்சம் கூட மதிக்காம அவ கைலயே ராங்கு காட்ற!! உம்..
முந்தாநாள் பாத்ரூம்ல போய் கதவை தாழ் போட்டு குளிக்க போயிருக்கா. நீ என்ன பண்ணின... என்ன பண்ணின... சீ. நினைக்கவே கூசுது. கதவுக்கு பின்னாடி மறைஞ்சு நின்னு உன் வேலையை காட்டியிருக்கே. சீ.ச்சீ... வெட்கம் கெட்டவனே.. அவ எப்படி அலறினா தெரியுமா.. ராஸ்கல்ஸ். உங்க குடும்பத்துக்கே வெட்கம் மானம் கிடையாதே.. உனக்கு எப்படி இருக்கும்?
சரி. அதை விடு. உன்னைக் கண்டாதான் பிடிக்கலைன்னு தெரியுது இல்ல. அப்புறமும் பெட்ரூம்ல உனக்கு என்ன வேலை. அடுத்தவங்க படுக்கையறைக்குள்ள நுழையறது அநாகரீகம் அப்படின்னு தெரியாது. அதுவும் எப்ப? ராத்திரியில. ஒரு கல்யாணம் ஆன பொண்ணோட அந்தரங்கமான அறையில நுழைஞ்சு அந்த நேரத்தில அவங்க மனசை காயப்படுத்தறதில உனக்கென்ன லாபம். உம். சொல்லு. அவங்களுக்கெல்லாம் ஒரு ப்ரைவசி வேணாம். உன்னை மாதிரி ஒரு மானங்கெட்டவன் இந்த உலகத்திலயே கிடையாது.
அன்னபூரணி வாசம் செய்யும் இடம் அடுக்களை. அங்க கூட அவ நிம்மதியா இருக்க முடியலையே. அவ பின்னாடியே போய் நின்னு உன்னோட துஷ்டத்தனத்தை அங்கேயும் கொண்டு போய் காமிக்கற. முந்தாநாள் வாங்கின நான்-ஸ்டிக் தவா. உன்னைக் கண்ட எரிச்சல்லையும் பயத்துலையும் பதறிப் போய் தூக்கி அடிச்சு... இப்ப அது Non-Usable தவா.
இன்னொரு விஷயமும் கேட்கனும். ஏதோ கொஞ்சம் ஆயாசமா ஆனந்தமா பால்கனியில நின்னுருக்கா. நிக்கக் கூடாதா? பாவம் இல்லை. நீ என்ன பண்ணின. பாவி.. ஏதோ fairy மாதிரி உல்லாசமா பறந்து வந்துருக்க. அவளுக்கு அப்டியே சப்தநாடியும் அடங்கிப் போச்சு. உன் கிட்டேயிருந்து தப்பிச்சா போதும்ன்னு விழுந்தடிச்சி ஓடியிருக்கா. நாளுக்கு நாள் உன்னோட அராஜகம் தாங்க முடியலை.
எனக்குத் தெரியும். ஊழிக் காலம் வந்தாக் கூட நீ ஒழிய மாட்டே!! இப்ப அடிக்கறேன் ஹிட்டு..
ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை. வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?
இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.
உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை.
இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)
ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!
எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..
ஒரு வீடு இருவீடானதும் ஒன்று இரண்டான கார், டீ.வி, பொண்டாட்டி.. மற்றும் இத்யாதி..இத்யாதிகள்...
நாட்டுக்கே ராஜா! எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!!
(நாட்டு ராஜா என்ற தலைப்பை பார்த்தவுடன் ராசாவை நம்பி மக்கள் ஏமாந்தால் கம்பெனி பொறுப்பல்ல..)
இனி காட்டு ராஜா...
இவருக்கு நான் ஒன்றும் அறிமுகம் தரத் தேவையில்லை. நீங்களே பாருங்களேன்.
இது பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் வசிக்கும் காட்டுவாசிகள். Survival என்ற அமைப்பினர் இப்படியும் இங்கே வாழ்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டிருக்கிறார்கள். பேட்டியில் ஒரு வயசாளியும் தேக்குமரத் தேகம் கொண்ட ஒருவரும் வெள்ளை மனிதர்கள் வந்து மரங்களை வெட்டி கொள்ளை கொண்டு போனது பற்றி பேசுகிறார்கள். பெரியவர் முகத்தில் என்ன ஒரு ஆக்ரோஷம். பெண்டு பிள்ளைகள் கள்ளம் கபடம் இல்லாமல் சுற்றித் திரிகிறார்கள். பேட்டி காண்பவரும் சப் டைட்டிலிலும் இந்தியன் என்றே விளிக்கிறார்கள். சிகப்பிந்தியர்கள் என்றாவது போட்ருக்கலாம். காடு அமோகமாக உள்ளது. நீர்வீழ்ச்சியும், விண்ணைத் தொடும் மரங்களும், செடிகொடிகள் நிறைந்த ஒளிபுகா அடர்ந்த பசுமை நிறைந்த காடுகளும், மாசற்ற சுற்றுப்புற சூழ்நிலையும், இயற்கை உணவுகளும்... நாமதான் இதை விட்டுவிட்டு ரொம்ப தூரம் வெளியில் வந்துவிட்டோமோ!!
அமேசான் காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்..
இக்கரைக்கு அக்கரை பச்சை! இந்தக் காடுக்கு அந்தக் காடு சொர்க்கம்!!
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க் சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.
இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி... (நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.
உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே.. மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.
பார்வை ஒன்றே போதுமேஇதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன். ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.
இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்... இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.
பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.
பட குறிப்பு: ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒரு நல்ல கேமேராவினால் என்னைக் கூட அழகாக படமெடுத்த அந்த புகைப்படக்காரரை இருகை கூப்பி வணங்குகிறேன்.
ஒரு குருவிற்கு நித்யமும் திவ்யமாக சேவகம் செய்துகொண்டிருந்தான் சிஷ்யகேடி ஒருவன். எவ்வளவு செய்தும் அவன் பணிவிடைகளில் திருப்தியுறாத குரு அவனை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஒரு கரடியை சேவகத்திற்கு வைத்துக்கொண்டார். முதல் வேலையாக அவர் நிம்மதியாக தூங்குவதற்காக கரடிக்கு கொசு விரட்ட சொல்லிக்கொடுத்தார். இந்த வேலையை பார்த்து விட்டு அதற்குப் பிறகு ஆயில் மசாஜ் செய்து கைகால் பிடித்து விட கற்றுக்கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தார். அது நன்றாக ஈ கொசுக்களை விரட்டியது. இவரால் ஆசிரமத்தை விட்டு விரட்டப்பட்ட சிஷ்யகேடியின் நண்பன் அது கொசுவிரட்டும் போது கையில் ஒரு தடிக்கம்பை கொடுத்து விரட்டுவதற்கு மற்றும் அடிப்பதற்கு கள்ளத்தனமாக அசுர கோச்சிங் கொடுத்தான். கரடி மிக சுலபத்தில் கற்றுக்கொண்டு கர்லா கட்டை சுழற்றுவது போல சுற்றி நன்றாக விரட்டியது. ஆசிரமத்தில் பணியாளாக சேர்ந்தது அடியாளாக மாறிவிட்டது. குரு அகமகிழ்ந்து கரடிக்கு கம்பு சுழற்ற கற்றுக்கொடுத்தவனை கண்டுபிடித்து முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
குரு ஒரு நாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கி சிரமபரிகாரம் எடுத்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல் கரடி கட்டையோடு காவல் காத்தது. ஒரு கொசு கரடிக்கு மிகவும் ஆட்டம் காட்டியது. விரட்ட விரட்ட தொலையாமல் சுற்றி சுற்றி வந்து வெறுப்பேற்றியது. டென்ஷன் ஆன கரடி கட்டையை தூக்கிக் கொண்டு துரத்தியது. கடைசியில் பறந்து களைத்துப் போன அந்தக் கொசு தூங்கிக் கொண்டிருக்கும் குரு முகத்தில் போய் ரெஸ்ட் எடுக்க அமர்ந்தது. கட்டையால் கொசுவைப் பார்த்து ஓங்கி ஒரே போடுப் போட்டது கரடி. கொசு, குரு இருவரும் ஒரே நேரத்தில் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.
சிஷ்யகேடி ரெண்டுபேரும் சந்தோஷமாக பர்ணசாலைக்கு வெளியே ஸ்வீட் ஊட்டிவிட்டுக் கொண்டு கொண்டாடி கை குலுக்கிக் கொண்டார்கள்.
இதனால் விளங்கும் நீதி? ஆசிரமக் கதை சொல்லிவிட்டு நீதி சொல்வது முரண்நகையாக இருந்தாலும்....
ஆசிரமத்தில் யார் யார் எவர் கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது குருவிற்கு அவசியம் தெரிய வேண்டும்.
தூங்கும் போது பணிவிடைக்கு மிருகத்தை வேலைக்கு வைக்கக் கூடாது. எதுக்கும் பிரயஜோனம் இல்லை!!
பிடிக்க கமெராதான் வைப்பார்கள் என்று இல்லை கதை முடிக்க கரடியையும் வைக்கலாம்.
பின் குறிப்பு: துக்கடா என்று சில பெரிய விஷயங்களை ராஜி தனது கற்றலும் கேட்டலும் வலைப்பூவில் எழுதியிருந்தார். உடனே நினைவுக்கு வந்ததை உங்களுடன் பகிர்ந்தேன். நீதியின் புல்லட் பாயின்ட்கள் நாட்டை நாறடித்த சமீப கால எந்த சம்பவத்துடன் துளிக்கூட தொடர்பில்லை என்பதை மீண்டும் ஒரு முறை வலியிறுத்தி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.
அப்பாடா ஒழிந்தான் எதிரி! இவ்வளவு காலம் பதிவுலகை பிடித்து ஆட்டிய ஏழரை நாட்டு சனி விலகியது, பின்னூட்டத்தில் நக்கலடிக்கும் பிசாசு ஒழிந்தது, பாட்டு கூத்து என்று பதிவெழுதி ப்ளாக்கில் எந்தொரு சத் விஷயங்களின் சாரமே இல்லாமல், இலக்கியமே இல்லாமல், இலக்கணமே தெரியாமல் நம்மையெல்லாம் பீடித்த ஒரு வைரஸ் இன்றோடு அழிந்துவிட்டது என்று தலைப்பை பார்த்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று டி.கே. பட்டம்மாள் குரலில் (தோ பார்டா.. இங்கேயும் பாட்டு...) நீங்கள் துள்ளிக் குதித்து சந்தோஷத்தில் மிதப்பது என் அஞ்ஞானக் கண்களுக்கு இங்கிருந்தே தெரிகிறது. அப்படி எல்லாம் ஒரு விடுதலை உங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் சீக்கிரத்தில் கிடைக்காது.
ஊரில் ரொம்ப வருஷங்களுக்கு டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி எந்த கொட்டாய்க்கு ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க போனாலும் சரியாக நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு படத்தை பாதியில் நிறுத்திவிட்டு சகலகலாவல்லவனில் கமல் மோட்டார் சைக்கிளில் சர்க்கஸ் காண்பிக்கும் பாடலைப் போட்டு எல்லோருக்கும் எஸ்.பி.பி ஹை எவரிபடி.. விஷ் யூ அ ஹாப்பி நியூ இயர்... என்று புத்தாண்டு வாழ்த்துப் பாடுவார். இதே பதிவில் கடைசியில் நானும் இதை செய்திருக்கிறேன். இரவு பனிரெண்டு தான் என்று இல்லை உங்கள் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் கொண்டாடலாம்.
நடு ராத்திரி வரை கண் முழித்து குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்து மணி சரியாக பனிரெண்டு அடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெப்பக்குளத்தின் நாலு கரையையும் சுற்றி வந்து சைக்கிள் மணியை டிங்கிடிங்கி "ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்" என்று வாழ்த்துக் கூச்சல் இடுவர். எந்த வீட்டில் இருந்தும் மருந்துக்கு ஒரு ஆள் கூட வந்து எட்டிப் பார்த்து எதிர் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். வயதான பெருசு யாராவது தூக்கம் வராமல் அர்த்தராத்திரி அற்ப சங்கைக்கு எழுந்து வந்தால் "போக்கத்தவங்களா போய் படுங்கோடா... நடு ராத்திரில கூச்சல் போட்டுண்டு..." என்று சொல்லிவிட்டு கொட்டாவி விட்டு தூங்கிக் கொண்டே சாலையை கடந்து திண்ணையில் போய் சரிந்துவிடுவார்கள். பனிரெண்டு மணிக்கு தான் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இல்லை. நிதானமாக பாப்பையா பட்டிமன்றம் பார்க்கும் போது சொன்னாலும் அது புத்தாண்டு வாழ்த்துதான்.
குடிமன்னர்கள் "மாப்ள.. இன்னிக்கிதான் இந்த வருசத்தோட கடேசி நாள்.. ஃபுல்லா அடிடா.." என்று கார வேர்க்கடலையும் கையுமாக ஆஃப் ஃபுல் என்று நெப்போலியன் மான்க் வாங்கி நண்பர்களுக்கு சுதி ஏத்தி விட்டு மட்டையாக்கி மடக்கி வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் விட்டு வருவார்கள். நம் நாட்டில் ஜனநாயகத்தை பார்க்கவேண்டும் என்றால் டாஸ்மாக் பாரில் பார்க்கலாம். அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள். அன்னதானத்தை விட சிறந்தது பாரில் சிகரெட் தானம். இல்லேன்று வருவோர்க்கு வாரி வழங்கி அவர்களை ஊக்குவிப்பார்கள். வருகிற புத்தாண்டில் பாருக்கு வெளியே உள்ள பாரிலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓர் குலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புத்தாண்டில் ஸ்வாமி பார்க்க கோவிலுக்கு போவது மற்றுமொரு முக்கியமான விஷயம். முண்டியடித்துக் கொண்டு புத்தாண்டு காலையில் பார்த்தால் தான் நமக்கு அருள் புரிவார் இல்லையென்றால் "போடா.. அசடு... முதல் தேதி பார்க்கவில்லை.. அதனால் சொர்க்கத்தில் உனக்கு சீட் இல்லை" என்று விரட்டிவிடுவார் என்று எண்ணிக்கொண்டு பெரியவர், சிறியவர், வயதானர் முடிந்தவர் முடியாதவர் என பார்க்காமல் ஏறி மிதித்துக் கொண்டு ஸ்வாமி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வது. இப்படி ஸ்வாமி கும்பிட்டால் நிச்சயம் அருள் புரிய மாட்டார். அப்புறம் அந்த ஒரு நாளைக்கு மட்டும் தான் ஸ்வாமி தரிசனம் செய்வது போல அப்படி ஒரு அலப்பறை. அன்று முழுக்க எப்ப வேண்டுமானாலும் சேவிக்கலாம். கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் ஆலயத்தில் தரிசனம் செய்வது உகந்தது. உள்ளம் திருக்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் கணக்காக தேமேன்னு வீட்டில் உட்கார்ந்திருக்கும் சில ப்ரஹஸ்பதிகளும் உண்டு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. போய் ஒருமுறை கடவுளர்க்கும் ஹாப்பி நியூ இயர் சொல்லலாம். தப்பில்லை.
அப்புறம் சிகரெட் பிடிப்பதை விடுவது, தண்ணியடிப்பதை தவிர்ப்பது, புத்தாண்டில் டைரி எழுதுவது என்று புதுப்புது அரிய முயற்சிகள் எல்லோரும் செய்வதுதான். சிகரெட்டை விட சிறந்த வழி நினைக்கும் போது அக்கணமே புகைக்கும் கிங்க்ஸ்சை காலடியில் போட்டு நசுக்குவதுதான். குடும்ப வாத்தியாரிடம் (ப்ரோஹிதர்) சென்று நாள் நட்சத்திரம் பார்த்தெல்லாம் புகையை நிறுத்த முடியாது. வருஷத்தின் கடைசி ராத்திரி 11:59 ஒரு சிகரெட் பிடித்துவிட்டு மறுநாள் காலை 11:59 க்கு கையில் வத்தி ஏற்றி வைத்த நிறைய போதை அடிமைகளை பார்த்திருக்கிறேன். டைரி எழுதுவது என்பது புத்தாண்டு தொடக்கத்தின் ஒரு தவிர்க்கமுடியாத சம்பிரதாயம் என்று எடுத்துக்கொண்டு பலர் பல நல்ல டைரிகளை கோழிக் கிறுக்கல் கிறுக்கி பாழ் பண்ணி விடுவார்கள். முதல் இரண்டு நாட்களுக்கு இஸ்திரி கணக்கு, "இன்று பேருந்தில் சென்ற போது என் காலை ஷு காலால் ஒருவன் மிதித்தான்" என்று நிகழ்வுகளையும் சேர்த்து வாழ்வும், அன்றாட கணக்குவழக்குகளையும் ஒரு வாரம் எழுதிவிட்டு தூக்கி பரண் மேல் போட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் முதல் பக்கத்தில் உள்ள முகவரி, தொலைபேசி எண், எல்.ஐ.ஸி பாலிசி நம்பர், கார் நம்பர், டிரைவிங் லைசென்ஸ் நம்பர், பாஸ்போர்ட் நம்பர் இத்யாதி இத்யாதிகளை மட்டும் நிரப்பி பத்திரமாக பெட்டியில் வைத்திருப்பார்கள். டைரியில் கணக்கு எழுதுவது எவ்ளோ அபாயகரமான செயல் என்று தற்போதைய சி.பி.ஐ ரெய்டுகளின் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் எதிலும் எழுதி வைக்காத ஒரு சர்வ சுதந்திர வாழ்க்கை வாழுங்கள். மகிழ்ச்சியில் முகிழ்த்திருங்கள்.
இந்தப் புத்தாண்டில் தாத்தா, அம்மா, ஐயா, தளபதிகள், அன்னை, தில்லியில் இருக்கும் ஜீக்கள் (இது அரசியல் ஜீக்கள் நமது பதிவுக் கும்மி ஜீக்கள் இல்லை), தோழர்கள் என்று சகலரும் மக்கள் நலனுக்கு ஒன்றாக சேர்ந்து பாடுபடவேண்டி அந்த இறைவனை வேண்டுவோம். ஓட்டுக்கு பைசாவிற்கு பதிலாக வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வி வழங்கச் சொல்லி கேட்கலாம்.
என்னை நேரடியாக தொடர்பவர்கள், மறைமுகமாக தொடர்பவர்கள், வாழ்த்துபவர்கள், வைபவர்கள் என்று எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வழக்கமா எல்லோரும் சொல்றா மாதிரி மீண்டும் அடுத்த வருஷத்தில் சந்திப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நான் சொன்னதோட நிறுத்தாம எஸ்.பி.பியும் சொல்றார் கீழே பாருங்க...